குமுதம் 360 பார்வை தொடரில், இந்த வாரம் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரியின் ஜோக்கை, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பியிடம் சொன்னதை பற்றி சொல்கிறார். இப்போதும் எந்த ஒரு பெரிய பத்திரிக்கைகளிலும் அதை விலாவரியாக எழுத முடியாது என்கிறார். யாராவது புதிய தமிழ் வானம் அல்லது புதிய தமிழ் பூமி என்ற பத்திரிக்கைகளில் சுஜாதாவை எழுத அழைக்கலாம். ஜோக் வெளிவந்தால் சரி.
கமலின் அப்பு குள்ளமான ட்ரிக்குக்கு அடுத்தபடியான ஒரு தமிழ் நாட்டு கேள்வி, மெக்ஸிகோ சலவைக்காரி தான். கமல் கூட, அப்புவைப் பற்றி ஏதோ டீவி தொடர் எடுக்கப்போவதாக சொல்கிறார். சுஜாதா…ம்ஹும். பிடி கொடுக்கிறபாடில்லை. தெரிந்தவர்கள் மெயில் எழுதி அனுப்பலாம். உண்மை என்றும் நிருபிக்க முடிந்தால், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூன்றாம் பாகம் பரிசு.
பார்வை 360யிலிருந்து –
மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் என்று நீங்கள் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அது என்ன ஜோக்?’ என்று திடீர் என்று கேட்டார்.
நான் அதிர்ந்துபோய், ‘அது கொஞ்சம் ஒரு மாதிரியானது. உங்களிடம் போய் சொல்வதா என்று தயக்கமாக இருக்கிறது’ என்றேன்.
‘சொல்லுங்க.’
‘சொல்லிவிடுவேன்’ என்று பயமுறுத்தினேன்.
‘சொல்லிப் பாருங்க.’
சொன்னேன்.
சற்று நேரம் உறைந்துபோய் மௌனமாக இருந்தார். அதன் பின் கண்ணில் நீர் வரச் சிரித்தார். அடுத்த வாரம் அரசு பதில்களில் அதைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தெரிந்துவிட்டது என்று கோடி காட்டி எழுதியிருந்தார்.
இப்போதுகூட எனக்கு அந்தச் சம்பவத்தை யோசித்தால், சங்கடமாக இருக்கிறது. அவ்வளவு நல்ல மனிதர், பக்திமான். அவரிடம் போய் அந்த கச்சடா ஜோக்கைச் சொன்னோமே என்று. ஆனால், அவர் அதற்காக என்னை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாகக் கருதவில்லை. மெ.ச. ஜோக் முதலில் ப்ளேபாய் பத்திரிகையில் வந்தது. அதை ஒருமுறை வசந்த் சொல்ல ஆரம்பித்து, கணேஷ் தடுத்து செக்ஸ் அதிகம் இருப்பதால் அதை சொல்லாமலேயே விட்டுவிட்டான். அதன் பின் அதைப் பற்றிய உபகதைகள் பல தோன்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இன்றும் அதை மரியாதைப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது.