அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்

ashokamitran theeranadhi

ashokamitran theeranadhi

தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி.

தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட வேண்டும் என்ற கவலையை முன்வைக்கிறார். சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் தனக்கு உவப்பாக இல்லாத போதிலும், அது அவருடைய தனிப்பட்ட சாய்ஸ் என்கிறார்.

எளிமையும், கவலையும் கலந்த ஒரு ஆழ்ந்த அனுபவ பகிர்வு.

எனக்குள் நான் – பாலகுமாரன்

balakumaran.jpg

“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.

உங்களுக்கு பாலகுமாரனை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தவற விடக்கூடாத ஒரு monologue பேட்டி இது.

இந்த முப்பது நிமிடத்தில் ஆன்மீகம், இறைவன், குருநாதர், குடும்பம், வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய பேசினாலும், தான் படைப்பாளியான கதையை சொல்லும் அந்த ஐந்து நிமிடம் மிக சுவாரசியம். மேலிருக்கும் வார்த்தைகளை அவர் egoவோடு சொல்லவில்லை என்பது பார்த்தால் புரியும். ஆறு பாகம் உடையார் எழுதி முடித்ததை பற்றி சந்தோஷப்படுகிறார். 237 நாவல்களும் மணிமணியான நாவல் என்கிறார்.

இன்றுவரை குமுதம் வெப் டீவி, ஆனந்த விகடனை தாண்டி செல்ல வேண்டும் என்ற குமுதத்தின் ஒரு மார்கெட்டிங் முயற்சி என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று நிதானமாக பல வெப் டீவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் அதில் உள்ள ஆர்வம் தெரிகிறது. ரவி பெர்னாடின் பேட்டிகளில் கொஞ்சம், மற்றவரை பேச அனுமதிப்பாராயின் நலம். இன்று பார்த்த கவிஞர் வாலியின் பேட்டியிலும், அன்று பார்த்த பா ராகவனின் பேட்டியிலும் அவர் நடுநடுவே பேசியதால் சில சுவாரசியங்கள் மிஸ்ஸிங். மற்றபடி, வெப் டீவியிலும் மெகா சீரியல்கள் வந்துவிடாமலிருந்தால் சரி.

எம்.எஸ் – வாழ்வே சங்கீதம்

எம் எஸ்

ஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்கிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது என்று நன்கு அறிந்து தான், அவர் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை இந்நூல் பட்டியலிடுகிறது.

எம்.எஸ் ஒரு child prodigyயாக அறியப்பட்டதிலிருந்து துவங்கி ‘ஹரி தும் ஹரோ’ பாடலை காந்தி நேயர் விருப்பமாய் கேட்டது, தன் பட்டமான Nightingale of Indiaவை சரோஜினி நாயுடு எம்.எஸ்சுக்கு கொடுத்தது, மீரா திரைப்படத்தை First Day First Show பார்க்க மனைவி எட்வினாவுடன் லார்ட் மவுண்ட் பாட்டன் வந்தது, ‘நான் இப்போ வீணை கத்துக்கிட்டேன். அடுத்த தடவை மெட்ராஸ் வரும் போது உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு எந்தரோ மகானுபாவுலு வாசித்து காட்ட ஆசை’ என்று அப்துல் கலாம் சொன்னது, ஜோதிகாவின் ஆர்.எம்.கே.வி புடவை போல ‘எம்.எஸ் புளு’ புடவை பிரபலமாகியது என்று ஏகப்பட்ட ‘அட’ சொல்ல வைக்கும் நிகழ்ச்சிகள்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக எம்.எஸ் வாங்கிய விருதுகள், தன் இசை வாழ்வின் நடுவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் கல்கி கார்டன்ஸ் பங்களாவை விற்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு சிறு வாடகை வீட்டுக்கு ஜாகை போக வேண்டிய கட்டாயம் என்று ஒரு roller coaster வாழ்கையின் sneak peak தான் இந்த புத்தகம். புத்தகத்தை சுவாரசியமாக்க ஆங்காங்கே சற்று அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டதோ என்று நினைக்க வைத்தாலும், எம்.எஸ்சை பற்றி அதிகம் தெரியாமல் அதை சொல்ல முடியாதென்பதும் உண்மை. பின்னிணைப்பாக, இந்த புத்தகம் எழுத உதவிய நூல்களை பட்டியலிட்டிருப்பதற்கு வீயெஸ்வி மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி.

எம்.எஸ்சும் இசையும் ஒன்று தான் என்றாலும் தன் இசை மூலம் இதுவரை அவர் தர்மமாக வழங்கியது மூன்று கோடி என்று படித்தால் அசராமல் போவீர்களா ? அறுபது ரூபாயும், மூன்று மணி நேரமும் இருந்தால் கபி அல்வித நா கேஹனா பார்ப்பதை விடுத்து தமிழன் படிக்க வேண்டிய கட்டாய புத்தகம்.

புத்தகமும் தமிழும்

குமுதம் டாட்காமில் ரவி பெர்னாட்டின் பேட்டிகளில், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பா ராகவனுடனான பேட்டி ஐந்து பாகங்களாக காணக்கிடைத்தது.

தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்புத் தொழிலின் தற்போதைய போக்கு பற்றி சற்றே அலசினார்கள். ரவி பெர்னாட் கொஞ்சம் குறுக்கிட்டு் அடுத்த கேள்விக்கு தாவாதிருந்தால் இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் கிடைத்திருக்கும். பா ராகவன் எப்போதும் ஒரு convictionனுடன் பேசுகிறார். தமிழ் புத்தகங்கள் இன்னும் நிறைய விற்கபோகிறது, தமிழ் புத்தக நேர்த்தி அதிகமாகியுள்ளது, அ-புனைவுகளை[non-fiction] மக்கள் விரும்புகிறார்கள் போன்ற சில முக்கிய குறிப்புகள் பேசப்பட்டன.

என்னுடய take-aways இரண்டு, தமிழில் குழந்தை புத்தகங்கள் விற்க கிழக்கு படிப்பகத்தில் ஒரு கிளை பிரிவு உருவாக்கப்படுகிறது. தமிழ் content, புத்தகங்கள் தவிர இனி மற்ற மீடியா முலமாகவும் வெளிவர உள்ளது.

நல்ல பேட்டி, கெட்ட கத்திரி.

சென்னையிலிருந்து புத்தகங்கள் – 1

என்ன தான் சென்னையிலிருந்த போது தமிழ் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தாலும், அமெரிக்கவாசியான பின்பு தான், தமிழ் இலக்கிய ஆர்வம் பிய்த்துக் கொள்கிறது. தெரிந்தவர்களில் யார் வருவதாய் தெரிந்தாலும், உடனே ஒரு ஜிமெயில் பறக்கும். புக்ஸ் வாங்கி வர முடியுமா ? முடிந்தால், இந்தா பிடியுங்கள் லிஸ்ட். பலர் புத்தகம் தானே, டான்டெக்ஸ் இல்லாத வரை சரியன்று ஒத்துக் கொண்டு வாங்கி வருவார்கள். சிலர், இவன் யாருடா சுத்த கேணையா இருக்கான் என்று ஜகா வாங்குவார்கள். தப்பில்லை. என்னை பொருத்த வரை, வாங்கி வந்தால் சரி, இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது இண்டர்நெட்டு.

எனக்கு புத்தகம் வாங்க நண்பர்களை நான் செலுத்துமிடம், New Book Lands. முன்பொரு முறை சுஜாதாவிடம் கேட்ட பொழுது, அவர் சொன்ன இடம் இது. என்ன சார், லாண்ட்மார்கில வைரமுத்துவை தவிர தமிழ் புத்தகமே இல்லை. எனக்கு தெரிஞ்சு சென்னையில நல்ல த்மிழ் புக்கு கடையே இல்ல போல இருக்கு, என்று குறைப்பட்டுக் கொண்ட போது, அப்படியெல்லாம் இல்லை நம்ம T.nagar New Book Lands இருக்கு என்றார். தேசிகனிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு, ஒரு மே மாத சனிக்கிழமை வெய்யிலில் மண்டை காய்ந்து சென்றேன். சற்றே வழுக்கையும் சிரித்த முகமுமாய், ஒருவர் வாங்க வாங்க என்றழைத்தார். ரைட்டர் சுஜாதா சார் தான் இங்க என்னை அனுப்பினார் என்றேன். அவர் பக்கத்தில் இருந்த அந்த காஷியர் பெண்ணிடம் ஏதோ சொல்ல, வந்தது சில்லென்று ஒரு டம்ளர் மோர். முதலில் நான், சுஜாதா பெயரை namedrop பண்ணியதால் தான் மோர் கொடுத்தார்கள் என்று நினைத்தேன். எனக்கு பிறகு ஊதுபத்தி விற்க வந்தவருக்கும் மோர் கொடுத்த போது தான், அட எல்லாருக்கும் கொடுக்கிறாங்க என்று புரிந்தது.

புக்லாண்ட்ஸின் மானேஜர், ஸ்ரீனிவாசன், சிரித்த முகத்தினன். தமிழ் புத்தக வாசம் கொண்டவர். எந்த புத்தகமாயிருந்தாலும், எங்கிருந்தாலும் சரி, வாங்கித்தருவார். New Book Landsசுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக புத்தகம் வாங்குவீர்கள். நர்மதா பதிப்பகத்தின் ஒரு அங்கம். அங்கு புத்தகம் வாங்க சென்ற என் அருமை நண்பன், இவனுக்கு நாம புக்கு வாங்கி அனுப்பி கட்டுபுடி ஆகாது, இந்த கடையில கேட்டு பார்ப்போம் என்று விசாரிக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன பதில் எனக்கும் பிடித்திருந்தது.

முதல் முயற்சியாக ஒரு 15 புத்தகத்தின் லிஸ்டை orders@newbooklands.comக்கு அனுப்பினேன். அவர்கள் புத்தகத்திற்கும் + அஞ்சல் செலவாக ஒரு 150 இந்திய ருபாயும் கட்ட சொல்லி ஒரு creditcard பாங்க் லிங்க்கு அனுப்பி, நான் செலுத்தி, புத்தகம் சென்னையிலிருந்து கிளம்பியது. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. 80 நாட்கள் கழித்து. அத்தனை வெயிட் செய்ததால் புத்தகங்களை கட்டிக் கொள்ளாத குறை. விசாரித்து பார்த்தால் புத்தகங்கள் வந்தது கப்பலில் என்று தெரிந்தது. புத்தகம் வாங்கித் தள்ளும் ஆசாமியாய் இருந்து, கொஞ்சம் வெயிட் செய்ய முடியுமாயின், அஞ்சல் செலவை மிச்சப்படுத்தி இன்னும் இரண்டொரு புத்தகங்கள் sneek-in செய்ய முடியும். போன வாரம், அடுத்த பெரிய லிஸ்டும் கொடுத்து புத்தகங்களும் கப்பலேறி விட்டன.

திரை கடலோடி வந்த பர்ஸ்ட் லிஸ்ட் புத்தகங்கள் –

கற்றதும் பெற்றதும் 1 – சுஜாதா [டாய்லெட்டில் கை தவறி தண்ணியில் விழுந்ததற்காக replacement] [விகடன் பிரசுரம்]
அசோகமித்திரன் பதிப்புலகம் – ஞாநி [கலைஞன் பதிப்பகம்]
ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா [சுஜாதாவின் well researched. magnum opus.] [உயிர்மை]
வஸந்த் வஸந்த – சுஜாதா [உயிர்மை]
ஒரே ஒரு துரோகம் – சுஜாதா [விசா]
வண்ணத்துப் பூச்சி வேட்டை – சுஜாதா [உயிர்மை]
ரப்பர் – ஜெயமோகன் [கவிதா]
பின் கதை சுருக்கம் – பா ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி [கிழக்கு பதிப்பகம்]
சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுப்ரமண்ய ராஜு [கிழக்கு பதிப்பகம்]
மெர்குரிப் பூக்கள் – பாலகுமாரன் [ விசா]
ஜன கண மன – மாலன் [கிழக்கு பதிப்பகம்]
குதிரைகளின் கதை – பா.ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன் [கவிதா பதிப்பகம்]
ஆகாயத்தாமரை – அசோகமித்திரன் [கிழக்கு பதிப்பகம்]