“You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.
கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.
ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.
கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.
இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.
கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!
இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.
ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.
ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.
இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.
ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது. கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார். பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.
மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, “The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you’ll come along.”