மூன்று புத்தகங்கள்

raised_by_wolves.jpg

ஹாலிவுட்டில் எனக்குப் பிடித்த பல இயக்குனர்களில் குவிண்டிண் டரண்டினோவும் ஒருவர். சிலருக்கு குவிண்டினை ஒரு இயக்குனராக பிடிக்கும். அவர் அதையும் தாண்டி ஒரு சிறந்த எழுத்தாளர். சினிமாவின் இலக்கணத்தை கொஞ்சமாய் மாற்றிப் போட்டவர். ரொம்ப பேசுவதைத் தவிர்த்து, ஒரே காட்சியில் எல்லாவற்றையும் காண்பித்து விடும் சினிமா இலக்கணம் பிரபலமாகும் நேரத்தில், சினிமாவை மீண்டும் வளவளவென பேசவைத்து சுவாரசியம் சேர்த்தவர் குவிண்டின்.

குவிண்டனின் ரிசர்வாயர் டாக்ஸ் முதற்கொண்டு பல படங்களில், ரசனையான பேக்ட்ராப்பில், கதையின் திருப்புமுனைக்காக காத்திருக்கும் போது, பேச்சு வெள்ளம் ஆரம்பிக்கும். பேசப்பேச கதையோடு நாம் ஒன்றிப் போவோம். இப்படித் தான் கதை சொல்லியின் பக்கத்திலிருந்து நகர்ந்து கதை மாந்தர்களோடு ஒன்றாவது நடக்கிறது. இந்த டெக்னிக்கின் கில்லாடி குவிண்டின். அதைத் தவிர அவருடைய படங்களின் வரும் ரசிக்கத்தக்க பிண்ணனி இசையும், திரையில் காட்டப்படும் வன்முறையில்லா வன்முறையையும், ஆரம்பம் முடிவு என்பதே அதனதன் இடத்தில் இல்லா சாமர்த்திய திரைக்கதைகளும், அவரை பங்க் சினிமா(punk cinema)வின் தலைவராக்குகின்றன.

Rasied by Wolves : The Turbulent Art and Times of Quentin Tarantino என்னும் இந்த புத்தகத்தில் ஜெரொம் ஷரின்(Jerome Charyn) குவிண்டன் பிரபலமாவதற்கு அவர் லாஸ் வேகாஸ் நகரத்தின் ஒரு விடியோ கடையில் க்ளர்க்காக் வேலைப் பார்த்த போது அவர் பார்த்துத் தள்ளிய படங்கள் தான் என்ற ஒரு mythஐ இந்தப் புத்தகம் உடைக்கிறது. அவர் முதலில் நடிகராகவே விரும்பி அதற்கு மேற்கொண்ட பிரயத்தனங்களும், பின்னாளில் அது அவரின் படங்களுக்கு உதவியதை வேகமாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் குவிண்டன் பற்றிய ஒரு சலசலப்பை ஏற்படுத்த எழுதப்பட்ட புத்தகமாகவே எனக்குத் தெரிகிறது.

aam.jpg

The Average American Male என்னும் ச்சாட் க்ளட்ஜனின்(Chad Klutgen) புத்தகம் ஒரு புனைவு. இதன் தலைப்பு எதோ ஆராய்ச்சிக் கட்டுரைப் போல் தோன்றினாலும், க்ளட்ஜனின் முதல் நாவல் இதுவே.

வழக்கமாக எழுத்தாளர்களின் முதல் நாவல்களை படித்து விடுவேன். பலர் முதலில் ஒன்றை எழுதிவிட்டு மீண்டும் மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் முதல் புத்தகத்தை படித்துவிட்டு, மற்றதை விட்டு விலகலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸில் தன் இருபதுகளின் இருக்கும் ஒரு பெயரில்லா அமெரிக்க இளைஞன், தன்மை ஒருமையில் எழுதும் அவனுடைய அடல்ஸ் ஒன்லி கதை.

கேஸி(Casey) என்னும் சினிமாக் கனவுகளுடன் இருக்கும் ஒரு அழகான சற்றே பருமனான பெண்ணுடன் வசிக்கிறான். வேலையில்லாத போதும் அவளுடனே சதா சர்வ காலமும் செக்ஸ்ஸை பற்றியே நினைத்துக் கொண்டு வாழ்கிறான். ஜிம்முக்கு போகிறான். விடியோ கேம் விளையாடுகிறான். அழகிய பெண்களை கண்களால் கற்பழிக்கிறான். அவனும் கேஸியும் மூன்று பக்கங்களுக்கு ஒரு முறை கெட்ட காரியம் பண்ணுகிறார்கள்.

தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள் கேஸி. அதிலிருந்து தப்பித்து அலினா(Alyna) என்ற ரொம்பவும் அழகான பெண்ணுடன் சுற்ற ஆரம்பிக்கிறான். இந்த மாதிரியும் பெண்களா என்று சற்றே பயமுறுத்தும் அளவுக்கு, அலினாவும் நம் கதாநாயகனும், ரெண்டு பாரவுக்கு ஒரு முறை கெட்ட காரியத்தை கண்டின்யூ செய்கிறார்கள். கடைசியில் தமிழ் சினிமாவின் ஒரு திடீர் திருப்பத்துடன் முடிகிறது.

இதைப் படித்துவிட்டு அமெரிக்க ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் என்றால் அது தப்பு. இதில் வரும் கதாநாயகனுடன் எல்லா ஆண்களுக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும், கொஞ்சம் மிகைபடுத்தப்பட்ட காரக்டர் தான் இந்த கதையின் நாயகன்.

ச்சாட் க்ளட்ஜனுக்கு இது முதல் கதை. ரொம்பவும் யோசிக்காமல், தான் பார்த்த பார்க்கும் விஷயத்தை வைத்து கதை நகர்த்துகிறார். கெட்ட வார்த்தை கொட்டிக் கிடக்கிறது. இளைஞர்கள் படித்துவிட்டு ‘கூல்’ என்று சொல்வார்கள். திருமணமான ஆண்கள் லேசாக சிரிப்பை உதிர்ப்பார்கள். பெமினிஸ்டுகள் காறி உமிழ்வார்கள். ச்சாட்டுக்கு இவை எல்லாமே நல்ல விஷயம் தான். கூடிய சீக்கிரத்தில் இந்தக் கதை ஒரு ரொமாண்டிக் ஹாலிவுட் படமானால் ஆச்சரியப்படாதீர்கள்.

possible_side_effects.jpg

அகஸ்டன் பர்ரோஸ்ஸின்(Augusten Burroughs) Running With Scissors ரொம்பவும் பிடித்திருந்ததால், Possible Side Effects என்னும் இந்த புத்தகத்தையும் படித்தேன். அகஸ்டன் தன் வாழ்கையில் நடந்த சிறு சம்பவங்களை கொஞ்சம் மிகைப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதும் நான்காவது புத்தகம். அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர்களில் அகஸ்டனும் ஒருவர்.

இந்தப் புத்தகத்தில், ரொம்பவும் பிரபலமான தன்னுடைய ஒரு பாட்டியை பற்றிய எழுதும் முதல் கட்டுரையிலிருந்து Julia’s Child என்று தன் அம்மாவை பற்றி எழுதும் கடைசிக் கட்டுரை வரை எல்லாமே சிரிப்பலை தான். ஆங்காங்கு தன் ஓரின சேர்க்கை விஷயங்களை பற்றி விரிவாக சொல்லும் போது கொஞ்சம் நெளிய வைத்தாலும், பர்ரோஸ்ஸுக்கும் வாய்விட்டு சிரிப்பதற்கும் ஏக பொருத்தம்.

அகஸ்டன் தன்னை சுற்றியுள்ள மனிதர்களையும், தன்னுடைய/அவர்களின் வாழ்க்கையை பற்றிய பார்வையும் அதன் ironyயும் தான் காமெண்டரிகளாக எழுதுகிறார். தன்னுடைய நண்பியுடன் சேர்ந்து John Updikeகை கொல்ல திட்டமிடுகிறார், தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து ஒரு உல்லாச பயணம் மேற்கொண்டு சற்றே பயமுறுத்தும் விடுதியில் தங்கி தன் பல்லை இழக்கிறார். லண்டனுக்கு ப்ளைட்டில் போகும் போது, Carrie at the prom (ஸ்டீபன் கிங்கின் Carrie நாவல்) போல மூக்கிலிருந்து ரத்தம் சொட்டுகிறது. அதற்கு பின்னால் நடப்பதெல்லாம் காமெடி தான். அவ்வப்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் ஆறு வித்தியாசம் போடுகிறார். சில முறை சோகமாக தன்னுடைய குடிப்பழக்கம் பற்றி எழுதி சிரிக்க வைக்கிறார்.

இதைப் படித்த பின்னும், சுமாரான படமாகவும் வந்த இவருடைய Running with Scissors தான் சிறந்த புத்தகம் என்பேன். கிடைத்தால் படித்துப் பாருங்கள். ரொம்பவே சிரிப்பீர்கள்.