இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த இருபது வருடத்தில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட 60 மில்லியன். இன்றைய அமெரிக்க ஜனத்தொகையில்(300 மி) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பாதி பிறந்தது அப்பொழுது தான். 1946 – 1964 வரை அமெரிக்காவில் பிறந்த அந்த தலைமுறையை பேபி பூமர் ஜெனரேஷன்(Baby Boomer generation) என்கிறார்கள். 1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட Birth Control Pillsகளினால் தான் இந்த பேபி பூமர் ஜெனரேஷன் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த பில் கிளிண்டனும், தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் கூட பேபி பூமர் தலைமுறையில் பிறந்தவர்கள் தான்.
இந்த பேபி பூமர் தலைமுறையில், போன அமெரிக்க நூற்றாண்டின் பாதியில், 1951ல், பிறந்த பில் ப்ரைசன் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்புகள் தான், The Life and Time of a Thunderbolt Kid. அப்படித் தான் ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட அமெரிக்கா வல்லரசாக வளர்ந்த அந்த முக்கிய இருபது வருடங்களின் ஒருவித வரலாறாகத்தான் இதைப் படிக்க முடிகிறது.
பில் பிரைசன் ஒரு பயணக் கட்டுரையாளர். A Walk in the Woods என்ற அவரின் அமெரிக்க பயணக் கட்டுரை மிகப் பிரபலம். வெறும் பயணத்தைப் பற்றி மட்டுமல்லாமல், அதன் மூலம் ஓர் இடத்தில் வாழும் மக்களின் கலாசாரம், வாழ்க்கை நிலை என்று பலவற்றையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர். இதற்கு மேல் சிறந்த நகைச்சுவையாசிரியர். 2004ன்கில் இவர் எழுதிய A Short History of Nearly Everything , இந்தியாவில் கன்னாபின்னாவென்று விற்றது.
தண்டர்போல்ட் கிட்டில் அயோவா மாகாணத்தின் டி மாய்ன்(Des Moines) நகரத்தில் கழித்த தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி காமெடியாக விளாவரியாக எழுதுகிறார். எல்லோர் வீட்டிலும் கார்கள் இருந்ததில்லை. 1945 வருடத்திற்கு எழுபதாயிரம் கார்கள் விற்ற அமெரிக்காவில், 1950களின் நடுவே, ஒரு வருடத்திற்கு விற்ற கார்களின் எண்ணிக்கை 4..5 மில்லியன்கள். இப்போதிருக்கும் 64,000 மைல் ஹைவேக்களை, ஹைசன்யோவர் ஜனாதிபதியாய் இருந்த, 50களில் கட்டினார்கள்.
அப்போது தான் ஃபிரிட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவர் வீட்டில் ப்ரிட்ஜ் வாங்கினால், ஒரு ஆறு மாதத்திற்கு யாராவது அந்த பிரிட்ஜைப் பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.அதைப் பற்றி வீட்டின் தலைவர் ஒரு மணி நேரமாவது பீத்திக் கொள்வார். டிவி ஒளிபரப்புகள் துவங்கின. இன்னமும் கலர் டிவி வந்தபாடில்லை. ஒரே டிவிச் சானலை ஒரு நாடே பார்த்துக் கொண்டிருந்தது. ரொம்பவும் சாய்ஸ்கள் இல்லாமல் மக்கள் சாவகாசமாக, சந்தோஷமாக இருந்தார்கள். பில் பரைசனின் detailingல் கில்லாடி. தண்டர்போல்ட் கிட் என்னும் ஒரு காமிக் ஹிரோவாக தன்னைக் கற்பனைச் செய்து கொண்ட கதை தான் இந்த புத்தகத்தின் ஹைலைட்.
இதை படித்தவுடன், 1950களின் அமெரிக்காவும், 1970களின் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று தோன்றுகிறது. இதே அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கும்.
தான் எழுதும் விஷயத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாத போது, தனது விவரிப்பு வார்த்தைகளால் விஷயத்தை நகைச்சுவையாக்குகிறார். பஸ்ஸில் படித்துக் கொண்டே வாய்விட்டு சிரித்தேன். பக்கத்தில் இருந்தவர் புத்தகத்தின் அட்டையை மீண்டும் பார்த்துக் கொண்டார்.
அமெரிக்கா எப்படி அமெரிக்காவானது என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால், சீரியஸ் கட்டுரைப் புத்தகங்களை விடுத்து, இதைப் படித்துப் பார்க்கலாம். கடந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களில் சிறந்த புத்தகம் என்று சொல்ல முடியும். யாருக்காவது புத்தகம் பரிசளிப்பதாய் இருந்தால், தற்போது இதைத் தான் வாங்கிக் கொடுப்பதாய் எண்ணம். குழந்தைப் பருவத்தை தாண்டிய யாரும் ரசிப்பார்கள்.