எவ்ளோ படிப்பது ?

big_read.jpg

சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன – அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், “சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?” என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, “அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover” என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, “My writing career has taken off” என்று காலரை தூக்கிவிடும் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். “ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது” என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

“இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர” என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 – Meet you at Chennai City Center by 5:30.