ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன்.
அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட் கார்கோவில் எடுத்துக் கொண்டு வருவது பதினைந்து வருட பழக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டிலில் படிக்க பழகிக் கொண்டாலும், பழைய நியுஸ்பிரிண்ட் வாசனை ஞாபகங்கள் அவ்வப்போது வாசகனை பற்றிக் கொள்ளத்தான் செய்கின்றன.
அசோகமித்திரன் சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம்
தற்போது படிக்க ஆரம்பித்திருப்பது, அதாவது மீண்டும் படித்துக் கொண்டிருப்பது அசோகமித்திரனின் இன்று நாவலிலிருந்து ஒரு பிரமாதமான புனர்ஜென்மம் என்னும் சிறுகதை அத்தியாயம். நாவலில் சிறுகதை அத்தியாயமா என்று குழம்பினால், இந்த புத்தகத்தை படிக்க தகுதியானவர் நீங்கள். அசோகமித்திரனை 2009ல் சந்தித்த போது, இந்தக் கதையை சிலாகித்து நான் பேச, மையமாய் தலையாட்டினார் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.
சீதா கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள். அது கட்டிடத்தின் முன் பக்கம். முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த விசாலமான ஸன்ஷேட் தரையை மறைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்த போது கூட அந்த ஸன்ஷேட் மீது ஏகப்பட்ட குப்பை – பழத்தோல், காலி சிகரெட் பெட்டிகள், நெருப்புப் பெட்டிகள் கிடப்பது தெளிவாகத் தெரிந்தது. சீதா மொட்டை மாடியிலேயே இன்னொரு பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள் அந்த இடத்திலிருந்து நேரே கீழே தரையைப் பார்க்க முடிந்தது.
சீதா கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்றுகொண்டாள். அவ்வளவு உயரத்திலிருந்த அவளை உலகத்தில் அந்நேரத்தில் கவனிக்க யாரும் இல்லை. நிதானமாக ஒரு முறை மூச்சிழுத்து சுவாசம் விட்டாள். யாரிடமும் தனியாக இந்தக் காரியத்திற்கு விடை பெற்றுக்கொண்டு வரவில்லை. அம்மாவிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். இந்த ‘இருக்கலாம்’ என்பதை எவ்வளவோ விஷயங்களோடு பொருத்திப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடலாம். அல்லது வருத்தப்படலாம். இந்த ‘இருக்கலாம்’ தத்துவத்துக்கு வருத்தப்படுகிறவர்கள் ஆயுள் காலம் முழுக்க வருத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இருப்பார்கள்.
தளபதி படப்பிடிப்பில் மணி ரத்னம், ரஜினி மற்றும் ஷோபனா
மணி ரத்னத்தின் எந்தப் படம் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் விமர்சனம் வந்தே தீரும் என்பதைக் கடந்த மூன்று பத்தாண்டுகளில் பார்த்திருக்கலாம். விமர்சகர்களும் அ-விமர்சகர்களுக்கும் ஒரு ஏற்ற இலக்காக அவர் படங்கள் இருப்பதே காரணம். ஆளாளுக்கு அல்வா கிடைத்த மாதிரி பந்தாடித் தீர்ப்பார்கள். அவரின் பிரபலம் அவருடைய எல்லா படத்துக்கும் ஒரு விதமான liability தான்.
முதலில் மெளனராகத்திற்கு பிறகு ”தமிழ் நாட்டில் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிறது” என்றார்கள். பிறகு அஞ்சலியில் ”வயதுக்கு மீறி மைனர் சிறுவர்கள் செய்யும் வேலையா இது”, ரோஜாவில் ”அம்மாவின் எதிரில் ஆங்கிலம் பேசியபடி வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் ஆள் எங்கிருக்கிறான்”, பம்பாயில் ”இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை மூட்டி விடப் பார்க்கிறார் மணிரத்னம்”, அலைபாயுதேவிற்குப் பின் ”வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத் திருமணங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்”, ஆய்தஎழுத்தில், “பிராமண மாதவனைக் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் ரவுடியாகச் சித்தரிக்கும் நக்கல்”, ராவணன் வந்த போது, ”ராமாயணத்தை மாற்றி எழுதத் தமிழ்க் கழகங்களின் கடைசி முயற்சி” கடல்படம் படுத்துக் கொண்டாலும்,” மீனவக் கிராமத்தை இப்படியா சோத்துக்கு கஸ்டப்படறவங்களா சித்தரிப்பது”, ஓகேகண்மணியினால் “இதைப் பார்த்து தான் சென்னையிலேயே லிவ்-இன் செய்ய ஆரம்பிச்சுடுச்சுங்க இளசுங்க” என்று வகை வகையாகத் திட்டித் தீர்த்ததெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வரலாறு. திருடா திருடா போல லைட்டாக ஒரு படமெடுத்தால் “கதை டுபாக்கூர்” என்பார்கள். இருவர் எடுத்தால் ”இது ஒரு ஆர்ட் பிலிம்” என்று ஜிப்பா போட்டுக் கொண்டு விழாவெடுத்து நகநுனியில் கைத் தட்டுவார்கள், இரண்டு மணி நேரம் ரேவையும் அடூரையும் பற்றி சிலாகித்து விட்டு போய் விடுவார்கள், படமெடுத்தவருக்கு சில்லரை புரளாது.
இத்தனைக்கும் மணி ரத்னம் ஒரு மென்மையான இலக்கு. அவர் திரைப்படங்களுக்கு வரும் எந்த பாரட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிப்பதே இல்லை. இவர்களும் விடுவதாயில்லை. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு நக்கீரர் பரம்பரையாக மாறி விடுகிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதி பேசித் தள்ளுகிறார்கள். இவையெல்லாம் அபத்தமாயிருந்தாலும் தப்பில்லை, அவரவர்கள் கருத்துச் சுதந்திரம்.
ஓகே கண்மணி – மணி ரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பி.சி. ஸ்ரீராம்
மணி செய்வதெல்லாம் தன் கண் முன்னே மாறிக் கொண்டு வரும் சமுதாயத்தைப் பற்றி படம் பிடித்துக் காட்டுவது தான். தன் சமகாலத்தில் நடந்த / நடக்கும் விஷயத்தைப் பற்றி ஒரு கதையாய் கடத்த முயல்பவருக்குத் தான் என்னவெல்லாம் சிக்கல். மணி ரத்னம் ஒரு அறிய வகை என்பது மட்டும் உறுதி. தான் எடுத்துக் கொண்ட கதைக்கு உண்மையாக எதைச் சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை தனக்கு உண்டான ஒரு ரசனையில் mainstream formatல் சொல்லும் கலைஞன். சிக்கனமாய்ச் செலவழித்து, சிறப்பாய் மார்க்கெட்டிங் செய்து பணம் செய்யும் பிரமாதமான வியாபாரி.
நம்மூர் விமர்சகர்களுக்கு மணியை வகைப்படுத்த முடியாதது தான் காரணமே என்று சொல்லத் தோன்றுகிறது. சோஷலிஸ்டா, நாத்திகனா, கழக கண்மணியா, சமூக குழப்பவாதியா, வரலாற்றை வளைக்கும் குறும்புக்காரரா, பூர்ஷ்வா இலக்கியவாதியா என்று குழப்பங்கள்.
பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயல்கிறார் மணி ரத்னம் என்பது பல வருடமாக ஊரறிந்த ரகசியம். அதைப் படமெடுத்து வெளியிட்டவுடன் வரப்போகும் விமர்சனங்கள் பற்றிப் பல ஹேஷ்யங்கள் இருந்தன. ஆனால் படம் வந்து பின் ஒரே நேரத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் எதிர்ப்புகள், விமர்சனங்கள். இப்படி ஒரு வரலாற்று புதினத்தை படமாக்கியதால் மணி ரத்னம் ஆனதென்னவோ ஒரு equal opportunity offenderஆக.
“டிஜிட்டலில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட விபூதிப் பட்டைகள், ஒரு பிள்ளையார் கோயிலாவது எங்கேயாவது ஒரு தடவையாவது தெரியுதா? தெலுங்கில் நாராயணான்னு சொல்ற நம்பி தமிழ்ல ஏன் ஐய்யயோன்னு கத்துகிறார். உண்மையான ஆத்திகனான ராஜ ராஜ சோழனைப் பத்தி நாத்திகனான மணிரத்னத்திற்கு என்ன தெரியும். கர்ணன் கதைய உல்டா செஞ்சவர் தானே இவரு” என்கிறது வலது.
”சோழனைப் பத்தி மெட்ராஸிலேயே வளர்ந்தவனுக்கு என்ன தெரியும்…. சாமி படத்தை எடுக்க ராஜ ராஜ சோழனை இழுத்து வரார். பிராமண கல்கியின் பிராமண பிரசார படம்” என்று இடது. ஆனால் இவர் தான் கழகத்தைப் பத்தி இருவர் படம் எடுத்தவர் என்று எடுத்துச் சொன்னால், உஷ்… என்று விரல் வைத்து வாய் மூடுகிறார்கள்.
“But Greta Gerwig’s best work in Little Women is also somehow one of her most personal as well. That’s what making her adaptation from Louisa May Alcott’s novel amazing. Mani Ratnam needs to learn adapting movies for the modern screen” என்று மாஸ் காட்டும் புருடா பேர்வழிகள்.
“கல்கி புக் படிச்சா இருக்கிற த்ரில் இதில் இல்ல.. எதோ எல்லாம் அவசர அவசரமா இருக்கு” என்று எழுதிவிட்டு, இண்டர்வெலில் சமோசா ஆர்டர் செய்யும் மாமிகள்.
“This movie is one helluva vagrant and mind numbingly boring ride by a confused and deviously motivated distortionist masquerading… ” என்னும் வாட்ஸ்ஸாப் விமர்சகர்கள்.
மீண்டும் தமிழ் நாட்டில் சேரசோழபாண்டிய உலகப்போர் வருகிற மாதிரி பலரும் அவரவர் பிறந்த இடத்தை ஆண்ட மன்னனின் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அடுத்த படம் வருவதற்குள், சோழர் மன்னர்களின் மண்ணை தோண்டி எடுத்து, சோழர்கள் முற்பட்ட சாதியா பிற்படுத்தப்பட்டவர்களா, ஹிண்டூவா எக்ஸ்பிரஸ்ஸா, ஆரியர்களா திராவிடர்களா, காப்பி குடிப்பவர்களா ஜின்ஜர் சாயா பருகுபவர்களா, வேற்று நாட்டுக்காரர்களா அல்லது வேற்று கிரகவாசிகளா என்றெல்லாம் அக்கப் போர் செய்யப் போகிறார்கள். அவர்களைச் சோழ நாட்டுப் ப.பு.தி.
நாயகன் படப்பிடிப்பில் மணி ரத்னம், கமல் மற்றும் பிரதீப் சக்தி
ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, புரசைவாக்கத்திலிருந்த இந்தி டீச்சிங் சென்டரில் பிரவேஷிகாவோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் போர் அடிக்க ஆரம்பித்ததால், க்ளாஸ் போவதை நிறுத்தி விட்டேன். அம்மாவோ இந்தி படித்திருந்தார். “விட்றாத படி படி” என்றபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
கங்காதீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் ஏராளமான யுவ-யுவதிகள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருந்தேன். சைக்கிளில் ஒரு நாள் கோவிலுக்குச் செல்லும் போது அங்கே நின்று என்ன வகுப்புகள் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றேன். கோவில் அக்ரஹார தெருவிற்கு எதிரில் ஒரு சிறிய முட்டுச் சந்து. முதலில் இருந்தது ஒரு கார் மெக்கானிக் கடை. அதை தாண்டிச் சென்றால் ஒரு மாடி வீடு. வீட்டின் மொட்டை மாடியில் பெஞ்ச் போட்டு ஏராளமான இளம் வயதுக்காரர்கள் உட்கார்ந்து ஏதோ க்ளாஸ் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வாசலில், ஹிந்தி வித்யாலயா என்று போர்டு சொன்னது. அந்த மொட்டை மாடி க்ளாஸும், கலகலவென்று இருந்த அந்த இடமும் பிடித்துப் போனது.
இரண்டு மாதங்கள் கழித்து, இந்தி வித்யாவில் சேர்ந்திருந்தேன். இந்தி க்ளாஸை விட்ட இடத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்திருந்தேன். முகுந்தன் என்பவர் தான் க்ளாஸ் டீச்சர், அவர் தான் அந்த நிலையத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அவர் வீட்டின் மாடியில் தான் அந்த வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.
மாலை ஐந்து மணிக்கு வகுப்பு ஆரம்பிக்கும். மொட்டை மாடி என்பதால் வெயில் இறங்கிப் போய் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து அவ்வப்போது கேட்கும் மணிச் சத்தம், கீச்கீச் எனப் பறவைகளின் சத்தம், பளிச்சென இருக்கும் சக வயது பெண்கள் என்று ஒரு டீனேஜருக்கு எற்ற ரம்மியமான சூழ்நிலை. இதையெல்லாம் மீறி சுவாரஸ்யமாய் இந்தி வகுப்பெடுக்கும் முகுந்தன் சார். வெகு சீக்கிரத்தில் முகுந்தன் ஆதர்சமாகிப் போயிருந்தார். அந்நாள் வரை.
அஞ்சலி
அவ்வருட ஜூலை மாதத்தில் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படம் வெளியானது. தனியாக சினிமாவுக்குப் போக ஆரம்பித்திருந்த நான், அம்மாவிடம் இருந்து ஐந்து ரூபாய் என வாங்கிப் போய் படத்தை இருமுறை பார்த்திருந்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தில் மாட்டிக்கொண்டு, நேந்துவிட்ட கிடா போல அஞ்சலி பைத்தியம் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் மாலை, இந்தி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் முகுந்தன் சார்.
“சார் அஞ்சலி எப்படி?” என்று அவருக்கு நெருக்கமான ஒரு பையன் கேட்க
“நேத்து நைட் ஷோ தான் போனோம். ராஸ்கல் என்ன படம் எடுத்திருக்கிறான் மணி ரத்னம். பசங்க எல்லாம் அதிகப் பிரசங்கித்தனமா பிஹேவ் பண்றாங்க. எதோ லவ்வர்ஸ சேர்த்து வைக்கிறாங்களாம். இதெல்லாம் எங்க நடக்கும். இப்படித் தான் ஹாலிவுட்டைப் பார்த்து படமெடுத்து நம்ப ஊரை இன்ஃபுலுயன்ஸ் பண்ண வேண்டியது. ராஸ்கல்கள்ஸ்” என்றார் முகுந்தன் சார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குச் சட்டென முகுந்தன் சார் மீது கோபம் வந்தது. பக்கத்திலிருந்த கார்த்தியைப் பார்த்தேன். என் கோபத்தில் அவனும் பங்கு கொண்டபடி தலையாட்டினான். அந்தப் படத்தில், அப்பார்ட்மெண்ட் சிறுவர்கள் செய்யும் காதல் தூது போன்ற எல்லா விஷயங்களும் சர்வ சாதரணமான விஷயங்கள். அந்த வயதில் டீனேஜராக எல்லோரும் செய்திருந்தார்கள் அல்லது யாரவது செய்தது பற்றி கேள்விப் பட்டிருந்தார்கள். யாரும் செய்யாத ஒரு விஷயத்தைக் கூட மணிரத்னம் படத்தில் காட்டவில்லை என்று தோன்றியது. படத்தில் அந்த சிறுவர்கள் செய்யும் சிறுச்சிறு விஷமங்கள், அப்போது மாறிக் கொண்டிருந்த சென்னையின் பிரதிபலிப்பு தான்.
என்ன தான் முகுந்தன் சார் ஆதர்ச வாத்தியாராய் இருந்தாலும், மணி ரத்னத்தின் மேல் அபாண்டமாய் குற்றம் சாட்டிய போது நான் பேச முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்ததால் என்மேலேயே கோபம் வந்தது. இந்தி படிக்காமல் இருக்க எனக்கு இன்னுமொரு காரணம் கிடைத்தது. அடுத்த நாள் சனிக்கிழமை. மீண்டும் ஒரு முறை அம்மாவிடம் மன்றாடி பணம் வாங்கிக் கொண்டு மூன்றாவது முறையாகச் சக்தி அபிராமியில் காலைக் காட்சி பார்த்தேன். பார்த்து விட்டு வெளியில் வரும் போது அன்னை அபிராமியில் உலகம் பிறந்தது எனக்காக என்ற சுமாரான சத்யராஜின் வெற்றிப் படத்தின் மேட்னி காட்சிக்குக் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது.
”இந்த படத்துக்கு எல்லாம் இப்படி ரசனை இல்லாம அடிச்சிக்கிறாங்க. நாம பார்த்த அஞ்சலியை புரிஞ்சுக்க முடியாதவங்க” என்று அவர்களின் மேல் ஒரு பரிதாபம் வந்தது. அந்தப் பரிதாபம் பொன்னியின் செல்வன் வரை தொடருகிறது.
அவன் சிறுவனாய் இருந்த போது அப்பா தன் பால்ய கதைகளைச் சொன்னதுண்டு. காலையில் எழுந்து, கடலூரில் போக்குவரத்து நிறைந்த பகுதியிலிருந்த ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்தது பற்றி. பத்து வயதில் அவரின் அப்பா தவறியவுடன், தன் அத்தையின் ஓட்டலில் காலை 4:30 மணிக்குச் சாம்பிராணி போட்டுக் கடை திறப்பது அவரின் வேலையானது. என்ன தான் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து வருகிற போகிறவர்களிடம் பில் காசை வாங்கி சில்லறை திருப்பிக் கொடுப்பது என்பது வேலையென்றாலும் அதை விட அந்தச் சிறுவனுக்குப் படிப்பதில் ஆர்வமிருந்தது. அவர் கூடவே படித்த அத்தையின் மகனை விட மார்க் அதிகமாக வாங்கியதால் புத்தகங்கள் கிழிக்கப்பட்டு, பள்ளிக்குப் போகவிடாமல் ஓட்டலில் கல்லா கட்டவேண்டியதாகியது. இதிலெல்லாம் ஒரே நல்ல விஷயம், காலையில் ஓட்டலில் போடப்படும் முதல் காபி கல்லாவில் இருப்பவருக்குத் தான். அதுவும் காலை டிகாஷனில், சற்றுமுன் கறந்த தண்ணி கலக்காத பாலில் போடப்பட்ட சுடச்சுட காபி. பதினோரு வயதிலிருந்து அப்பா எப்போதும் டபுள் ஸ்ட்ராங் காபி மட்டுமே குடிப்பவரானார்.
ஹேர்ஹோஸ்டஸ் துபாய் வரப்போகிறது என்று எழுப்பிய போது, ஸ்ட்ராங் காபி கிடைக்குமா என்று அவன் கேட்டான். சுடச்சுட காபச்சீனோ வந்தது. ப்ளைட்டின் பிசினஸ் க்ளாஸில் ஆளில்லை. சியாட்டலில் இருந்து கிளம்பிய பின், ஒரு ரொட்டியும் கொஞ்சம் சாதமும், ஆரஞ்சு நிறத்தில் பனீரோ என்னவோ கொண்டு வந்து கொடுத்தார்கள். விமான பயணமும் அதன் விஸ்தாரமான உணவு பண்டங்களும் அவனுக்கு என்றுமே பிடித்ததில்லை. அப்படியே பயணம் செய்யும் போதெல்லாம் மிளகாய்ப் பொடி தடவி நான்கைந்து இட்லிகளும் கொஞ்சம் புளியோதரையையும் கட்டிக் கொடுப்பாள் மனைவி. துபாய் வரை இட்லியையும் பின்பு புளியோதரையையும் சாப்பிட்டு விட்டு, விமான உணவிலிருந்து தப்பித்துக் கொள்வான். இம்முறை மனமும் உடலும் ஒத்துழைக்காமல், விமான விருந்தை சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆறு மாதங்களில் அவனுக்கு இது மூன்றாவது இந்தியப் பயணம்.
முதல் முறை, கரோனாவிற்கு பின் டிசம்பரில் குடும்பத்துடன் சென்னைக்குச் செல்ல முற்பட்ட போது, ஒமிக்ரான் வந்திருந்தது.
“பாத்துக்கோ, வரதும் வராததும் உன் இஷ்டம்”,என்று சொல்லிவிட்டார் அப்பா.
“முடிஞ்சா ஒரு நடை வந்துட்டுப் போடா” என்றாள் அம்மா.
இரண்டு வருட இடைவெளிக்குப் பின் டிசம்பரில் பார்த்த போது அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் இளைத்திருந்தார்கள். முடி கொட்டி நரை அதிகமாயிருந்தது. அவனுக்கும் அதே கதை தான்.
”என்னடா இப்படி முடி கொட்டிப் போச்சு”, அம்மா.
“ஆமாம்… பின்ன இரண்டு வருஷமா தினமும் ஒரு தொப்பிய போட்டுண்டு வாக்கிங் போனா… அந்த தொப்பி என்ன பண்றதுன்னு தான் புரியல” என்றாள் மனைவி.
அம்மா சொன்ன மாதிரி முன்னம் முடியெல்லாம் கொட்டித்தான் போயிருந்தது. என்ன ஆனாலும் டை அடிப்பதில்லை, வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று முடிவோடிருந்தான் அவன். gracious aging என்று தனக்குக் தானே சொல்லிக்கொண்டிருந்தான்.
முட்டு வலியால், இரண்டு முட்டுக்களையும் டைட்டேனியம் முட்டுக்களாக மாற்றி கொண்டு விட்டிருந்தாள் அம்மா. இம்முறை தான் முட்டு வலி என்று சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். கரோனா தொற்று குறைந்தவுடன், யார் உதவியும் இல்லாமல் அப்பாவே அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்று, அங்கேயே ஏழு நாட்கள் தங்கி முட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து பார்த்துக் கொண்டார்.
இரண்டாம் முறையாக அவன் இந்தியா வந்தது கொஞ்சம் எதிர்பாராதது. ஏப்ரல் மாதத்தில் ஒரு உறவினர் நிகழ்ச்சிக்குச் சென்ற பொழுது அம்மா அங்குத் தடுக்கி விழுந்து காலில் அடிபட. மூன்று மாத பெட் ரெஸ்ட் என்று டாக்டர் சொல்லிவிட்டார். யார் உதவியும் இன்றி அப்பாவே அவளைப் பார்த்துக் கொள்ள, மே மாதத்தில் ஒரு நாள் அப்பாவிற்கு முடியாமல் போனது. டாக்டரிடம் சென்றவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து விட்டார்கள். அம்மா வீட்டிலும் அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க வேண்டிய நிலைமை.
”குரு நீ உடனே கிளம்பி வா. வந்தா அம்மாவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று வாட்ஸ்ஸாப்பில் அனுப்பினார் அப்பா.
இந்த பதினேழு வருடத்தில், நீ வந்தே ஆகவேண்டும் என்று என்றுமே எதற்குமே சொன்னதில்லை. அதனால் செய்தி வந்தவுடன் எமிரேட்ஸில் கிளம்பினான்.
ஆஸ்பத்திரியில் நுழைந்து தேடிக் கொண்டு போய்ப் பார்த்தால், படுத்துக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். சற்றே மெலிந்து நான்கு நாள் தாடி தெரிந்தது. ஆங்காங்கே வேட்டிகளும் ப்ளாஸ்டிக் டப்பாக்களும் சூழ இருந்தது அந்த அறை. ஆஸ்பத்திரி வாடை வீசியது.
“என்னப்பா ஆச்சு”
“ஒண்ணுமில்லடா, அம்மாவை பார்த்தியா? எப்படி இருக்கா? வீட்ல போய் எல்லாத்தையும் உட்கார்ந்து பேசலாம். டாக்டர் இன்னிக்கு டிஸ்சார்ஜ்னு சொல்லிட்டார். கீழ போய் ரிசப்ஷன்ல பணத்தை கட்டிவிட்டு வா” என்றார்.
“தாத்தா சூப் சொல்லட்டுமா” என்று நர்ஸ் பெண்மணி சொல்ல, தன் அப்பாவை யாரோ தாத்தா என்று அழைப்பதைக் குழப்பமாகப் பார்த்தான்.
அவனுடைய அப்பா எப்போதும் போல அப்பாவாகவே இருந்தார். என்ன… கொஞ்சம் வயதாகியிருந்தது, நரை அதிகமாயிருந்தது, உடல் தளர்ந்திருந்தது . தன் ஸ்போர்ட்ஸ் டேவில் வந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடியவர் தானே இவர். அதே மாதிரி தானே இருக்கிறார்? ஆனால் இவரை ஏன் தாத்தா என்கிறார்கள் என்று நினைத்தான்.
கீழே ரிசப்ஷனில் பணம் கட்ட போனவனை இன்ஷுரன்ஸ், டாக்டர் கையெழுத்திட்ட சர்டிபிகேட் என்று சகல உபாதைகளும் செய்து அனுப்பும் போது இரவாகியது. வீடு வந்து சேர்ந்த பிறகு தான் ஒரு வித இயல்புநிலைக்கு வந்தார் அப்பா. அம்மா எழுந்து உட்காரவும் வாக்கர் வைத்துக் கொண்டு நடக்கவும் ஆரம்பித்திருந்தாள்.
“நீ கிளம்பறத்துக்கு முன்ன ஒரு ஈசி சேரும் இரண்டு தலைகாணியும் வாங்கி கொடுத்துட்டுப் போ” என்றார்.
வாங்கிக் கொண்டு வந்து ஈசி சேரை அவரின் அறையில் திறந்து வைத்தான். அப்பா அதில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தார். சுறுசுறுப்பாய் வளைய வருபவர், இப்படி பொய்ப் பல் சிரிப்பில் ஈசி சேரில் படுத்துக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது.
கிளம்புவதற்கு முன், அழகாய் எளிமையாய் அடுக்கி வைத்திருந்த முக்கியமான டாக்குமெண்டுகளை காட்டினார்.
“இந்த பழ படமெல்லாம் நீ எடுத்துண்டு போ, போய் ஸ்கான் செஞ்சு அனுப்பு” என்று ஒரு ஐந்து கிலோவிற்கு பழைய புகைப்படங்களை கொடுத்து அனுப்பினார்.
“என்னப்பா.. உட்கார்ந்து பேசணும்ன்னு சொன்னியே என்ன விஷயம்.”
“ஒண்ணுமில்ல, இப்படி இரண்டு பேரும் உடம்புக்கு முடியாம இருக்கும் போது நீ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். தோ பார்… ஏதோ பயந்து போய் உன்ன வரச்சொன்னேனு நினச்சுக்காத. எனக்கு பயமில்லை. என்னிக்கோ ஒரு நாள் எல்லாரும் போகதான் போறோம். எனக்கென்ன எல்லாம் பார்த்தாச்சு, அனுபவிச்சாச்சு, ஒண்ணும் குறையில்ல. ஒரு நாள் உடம்புக்கு வந்து படுத்தோமா, ஆஸ்பத்திரில இரண்டு நாள் இருந்தோமா, அதுக்குள்ள பசங்க எல்லாரும் வந்துட்டா அப்படியே போய்டணும். எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தி நாமளும் கஷ்டபட்டு கிடந்து என்ன செய்யப் போறோம். ”
அப்பா எப்பவுமே இப்படி ஒரு stoic தான். அவன் சிறு வயதிலிருந்த போது உறவினர் ஒருவர் இறந்து போக, அப்பா அதைப் பற்றி இரண்டு வாரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
“கடைசி காலம்னா அந்த மாதிரி இருக்கணும். ராமு தண்ணிய குடிச்சுண்டே இருந்த போது அப்படியே உசிர் போயிடுச்சு. கொடுத்து வைச்சவன். அதே மாதிரி தான் போகணும்னு ஆசை” என்றார்.
“ஆமா இந்த உலகத்தில நாம நினைக்கிறது எல்லாம் நடக்கற்தா என்ன. எல்லா நம்ம கர்மாவை பொறுத்து தான்” என்று அவரை குறுக்கிட்டு சொன்னாள் அம்மா.
சியாட்டிலுக்கு கிளம்பும் போது கண்ணாடி அணிந்து கட் பனியனுடன் ஈசி சேரில் படுத்திருந்தவர், ”சரி பார்த்துப் போ. ப்ளைட்ல உன் ஐபேடை மூடி வைச்சுட்டு தூங்கு” என்றார்.
2
பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விதமான முக்கல் தொனியில் ம்ம்ம்ம்ம்…. என்று ஒரு ஹம்மிங்குடன் ஆரம்பிப்பார் டி.எம்.சவுந்தரராஜன். பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற அந்தப் பாடலைத்தான் அப்பா தன் திருமணத்தன்று நலங்கு நிகழ்ச்சியில் அம்மாவிற்காகப் பாடியதாக அவனிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். என்றெல்லாம் அதைச் சொல்லுகிறாரோ உடனே சிவாஜி கணேசன் மாதிரியே உதட்டை அசைத்து அசைத்துப் பாடிக் காட்டுவார்.
”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவி பாரடைஸ்ல ஏவி ரமணன் மியூசியானோ நடக்கும். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ப்ளீர்ன்னு இசையோடு ரமணனும் உமா ரமணனும் பாட ஆரம்பிப்பாங்க. பிரமாதமாக இருக்கும்” என்று 70களின் மெட்ராஸைப் பற்றிச் சொல்வார். அப்போது தான் அப்பாவுக்கு மைக் பிடித்துப் பாடும் பாடகனாக வேண்டும் என்று ஆசை இருந்ததே அவனுக்கு தெரிந்தது.
மே பிற்பகுதியில் அவன் அமெரிக்கா திரும்பியவுடன் அப்பாவும் சகஜ நிலைக்குத் திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பின் ஜூன் மாதத்தில் அப்பா உட்கொண்ட உணவின் அளவு குறைந்தது.
“நல்லா தக்காளி ரசமும் அவரைக்காய் கறியும் செய்யுன்னு சொன்னார். ஆனா சாப்பிட உக்கார்ந்தா பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றார்” என்று அவன் போன் செய்யும் போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.
அவருடைய டாக்டரிடம் வாட்ஸ்ஸாப்பில் அவன் பேசினான்.
”ரொம்பவும் பயப்பட ஒண்ணுமில்லை. கார்டியாலஜிஸ்ட் சொன்ன மாதிரி தண்ணியை அளவா பார்த்துக் குடிக்க சொல்லுங்க. எலக்ட்ரோலைட்ஸ் பார்த்துக்கோங்க” என்றார் டாக்டர்.
அவனுக்குத் திரும்பவும் இந்தியா போக இருக்கும் வேண்டியிருக்கும் போலத் தோன்றியது. அடுத்த நாள் எடுத்த PCR டெஸ்டில் அவனுக்கு கரோனா தொற்று உறுதியானது.
இரண்டு நாட்களுக்குப் பின் கொஞ்சம் கரோனா ஜூரம் தலைவலியெல்லாம் தேவலையானவுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்ன என்று படித்துப் பார்த்தால் கரோனா முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றது அரசு.
அப்பா உணவு வெறும் நீராகாரம் மட்டுமே என்றாகியது. அம்மா எல்லாவற்றையும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள். அப்பா அதையும் தவிர்க்கப் பார்த்த்தார். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாசிகள் அவரை பார்க்க வந்த போது தள்ளாடிப் போய் கீழே உட்கார்ந்து விட்டார். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போகமுடிவாகியது.
“நான் வேணும்ன்னா கிளம்பி போறேன். உனக்குக் கோவிட் சரியான உடனே நீ வா” என்றாள் தங்கை.
கலிபோர்னியாவிலிருந்து அவள் கிளம்ப, இன்னும் ஐந்து நாட்கள் தள்ள என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆஸ்பத்திரிக்குப் போன அப்பாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தது. அப்பாவின் தம்பி, அவனுக்கு போன் செய்தார்.
“கண்ணு, அப்பாவுக்கு மூச்சு விட முடியல. அவங்க ஆறு நிமிஷத்துக்கு CPR செஞ்சு காப்பாத்திட்டாங்க. நீ உடனடியா எப்ப கிளம்ப முடியும்” என்றார் அவன் சித்தப்பா.
அடுத்த நாள் அவன் தங்கை அப்பாவைப் போய் ஐசியூவில் பார்த்தாள்.
“ஏன்னால பாக்க முடியல டா அப்பாவை. டீயூப்பெல்லாம் இழுத்து போட்டுடறார்னு, கைய கட்டி வச்சிருக்காங்க. பாவம் டா அப்பா. சரியாயிடும்பா கவலை படதேன்னு சொன்னேன். இல்லன்னு அப்பா தலையை அசைக்கிறார்டா” என்று அழுதாள்.
அவனுக்கு இப்பொழுது தானா தனக்கு கரோனா வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
”பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் / கையினில் துல்லியம் காட்டும் உடலையும் / ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே” என்று திருமூலர் சொன்னது அவனுக்கு அன்று புரிந்தது.
அன்றிரவு அவன் தங்கையும் அங்கிருந்த ஒரு டாக்டரும் வாட்ஸாப்பில் அவனுக்கு போன் செய்தார்கள்.
மல்டிபல் ஆர்கன் டிஸ்பங்க்ஷன் என்றாகி அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பாவிற்கு மீண்டும் கார்டியாக் அரஸ்ட் வந்து காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.
வீட்டிலிருந்த மற்றவர்க்கெல்லாம் கரோனா வந்து விடாமல் இருக்க தனி ரூமில் இருந்தவனுக்கு தங்கை அழுது கொண்டே போன் செய்த போது அவளைத் தேற்றுவதா தான் அழுவதா என்று புரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. ஒரு வழியாகப் பேசி வைத்து விட்டு கண்ணீர் விட்டழுதான். இந்தியா போய் அப்பாவின் கடைசி கடமைகளைச் செய்து முடிக்க முடியுமா என்று கண்விழித்து யோசித்திருந்தான்.
“கண்ணு… நீ வராம ஒண்ணும் செய்ய முடியாது. நீ வந்து தான் எல்லா காரியமும் பண்ணனும். கரோனா எல்லாம் முடிஞ்ச அப்புறம் கிளம்பி எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வா. மூணு நாளோ முப்பது நாளோ நாங்க அப்பாவை பத்திரமா ராமசந்திராவில வச்சி இருக்கோம்” என்றார் சித்தப்பா.
அம்மா தவித்துப் போனாள்.
”சித்தப்பா என்ன சொல்றாரோ அதே அப்படியே செய்.” என்றால் அம்மா.
மூன்று நாட்களுக்குப் பின் வீட்டில் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு கிளம்புகிற மாதிரி எமிரேட்ஸில் டிக்கெட் புக் செய்தான்.
சென்னை வந்து சேர்ந்தவுடன், அவன் குவாரண்டைனில் தனியாக இருப்பதற்கு வீட்டில் இருந்த அப்பாவின் அறை ஒழித்துக் கொடுத்தார்கள். கரோனாவின் களைப்பு இன்னமும் போன மாதிரியில்லை. அப்பா இறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அவனுக்கு கரோனா வந்து பத்து நாட்கள்.
அன்று பகலில் அப்பாவை ராமசந்திராவிலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். மார்சுவரியிலிருந்து வந்ததால் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழே இருந்த பெரிய கார் பார்கிங்கில், காரை எல்லாம் நகற்றி, S. Ramesh, Puthur என்று ஐஸ் பெட்டிக்கான விளம்பரம் எழுதப்பட்டிருந்த ஒரு ஐஸ் பெட்டியில் அப்பாவை வைத்திருந்தார்கள். அவன் வந்து அப்பாவைப் பார்த்த போது அவனையே எல்லோரும் பார்ப்பது போல தோன்றியது. கொஞ்சம் தள்ளிப் போய் அழுதான். மாஸ்க் நனைந்து போனது.
பாட்டு போடப்பட்டவுடன் அப்பா தலையாட்டிக் கொண்டே உதட்டைச் சுழற்றி சுழற்றி பாடுவது ஞாபகம் வந்து அழுகை சற்று அதிகமானது.
அவனுக்குப் பஞ்சகச்சம் கட்டி விட்டார்கள், தண்ணியைத் தலையில் விட்டுக் கொண்டு சொட்டச் சொட்ட வரச்சொன்னார்கள். வாத்தியார் மந்திரம் சொல்லி நெருப்பு உண்டாக்கினார். பின்பு அவனை அப்பாவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவர் வலது காதில் தர்ப்பையைப் படுமாறு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
அப்பாவின் தலையை மடியில் வைத்த நொடியில் அவனுக்கு ஒரு பெருவாழ்வே மின்னலாக ஒடியது. குடும்ப பாரத்தைச் சுமக்க அப்பா படித்து பம்பாய் போனது, மெட்ராஸுக்கு வந்து அம்பத்தூர் எஸ்டேட்டில் பதினேழு கம்பெனிகளில் வேலை செய்தது, தனக்கான வாழ்வை சிறுகச் சிறுக சேர்த்து அமைத்துக் கொண்டது, உறவினர் யார் வந்து திருமணத்திற்குப் பணம் என்று கேட்டாலும், அம்மாவை LTC போட வைத்தாவது பணம் குடுத்தது, பலப்பலப் பேருக்கு பலவகையில் உதவி செய்தது, குல தெய்வத்துடன் சேர்த்து நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணிக்கும் அவனைக் கூட்டிச் சென்றது, கடைசி வரையில் ஒரு என்ஜினியராக வாழ்ந்தது என்று அப்பாவின் எழுபத்து ஏழு வருடங்களும் பளீரென வந்து போனது.
நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய் வண்டியில் ஏறிக் கொள் என்றார்கள். வண்டியில் ஏறும் வரை தங்கையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பாவை வண்டியில் ஏற்றிப் போய் மின் மயானத்தில் 550 டிகிரியில் தகனம் செய்தார்கள்.
அன்று குரு பவுர்ணமி, இரவு 8 மணி. இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு அருகில் கார் வந்த போது மழைத் தூறல் ஆரம்பித்தது. பீச்சில் ஆள் அதிகமில்லை.
கார்ல் ஸ்மித் மண்பத்துக்கு எதிரில் காரைப் பார்க் செய்தவுடன் தன் கையில் வைத்திருந்த பானையுடன் தண்ணீரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழைத் தூறல் அதிகமாக மக்கள் தண்ணீரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெற்று மார்போடு, பஞ்ச கச்சம் கட்டி பானை எடுத்துக் கொண்டு போனவனை சிலர் விசித்திரமாகப் பார்த்தார்கள்.
பவுர்ணமி என்பதால் கடல் பரபரப்பாய் இருந்தது. இடுப்பளவு தண்ணீர் வரும் வரை உள்ளே நடந்தான். அந்த முழு நிலவை ஒரு முறை தலை தூக்கிப் பார்த்தான்.
“பா…” என்று சத்தமாகச் சொல்லி ஒரு முறை அப்பாவின் சிரித்த முகத்தை நினைத்துக் கொண்டான். தன் கையிலிருந்த பானையைத் தண்ணீரில் வைத்து அழுத்தினான். பானை உடைந்து வங்காள விரிகுடாவில் விரிய ஆரம்பித்திருந்தார் அப்பா.
3
அப்பா பம்பாயில் வேலை செய்த கதைகளை சொல்லும்போது அவனுக்குச் சுவாரசியமாய் இருக்கும். அந்த மனிதர்களும் அந்த ஊரும் அவனுக்கு அன்னியமானதால் இருக்கலாம். இடுக்கமான வீடுகள், பொங்கி வழியும் ரயில் பெட்டிகள், தெருவில் விற்கும் பூரி தின்பண்டங்கள். பம்பாயினால் அப்பாவுக்கு இந்தி சினிமாவும் பிடித்துப் போனது. ஆராதனாவிலிருந்து Nazia Hassan பாடும் Aap jaisa koi meri zindagi mein aaye to baat ban jaaye வரை எல்லாம் கேட்பார், பார்ப்பார். ஆனால் பம்பாயில் இருந்த போது அவருக்குத் தெரிந்த இரண்டே வார்த்தைகள், அச்சா மற்றும் நஹி. இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அவர் எப்படி நாட்களைக் கடத்தினார் என்பது தான் கதைகளே.
பம்பாயிலிருந்து திரும்பியதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் அவருடைய அம்மா தமிழ் நாட்டில் இருந்ததாலும் அவரை விட்டு தள்ளி இருக்க மனமில்லாததாலும் தான். பம்பாயில் மேலும் தங்கியிருந்தால் தன் வாழ்வு எப்படி போயிருக்கலாம் என்பது பற்றி ஒரு alternative narrativeவை அப்பா சொல்லிக் கேட்டிருந்தான்.
”பம்பாயிலேயே இருந்திருந்தா இத்தனை வருஷத்துல ஒரு பெரிய பங்களா கட்டி..”
“ஏன் அங்கேயே நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே. நல்லா… கவர்மெண்ட்ல வேலை செய்ற பொண்ணா வேணும்னு தானே ஒத்த கால்ல நின்னீங்க. இத்தனை நேரம் பம்பாய்ல அந்த ஒடுக்கு வீட்ல மழை ஓழுகிண்டு இருக்கும்” என்று சொல்லி அப்பாவின் புஜத்தில் செல்லமாய் குத்துவாள் அம்மா.
விக்ரமில் கமல் சொல்லும் ”…ப்பாத்துக்கலாம்” போல அப்பா அக்கறையற்ற, “அதெல்லாம் சல்தா ஹை…” என்பார்.
பம்பாயில் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என அவன் நினைத்தது, சல்தா ஹை என்ற மனப்போக்குத் தான். தன் வாழ்வில் அத்தனை ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர், தன் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தைப் பற்றி ஒரு வித துறவியின் மனநிலையில் சல்தா ஹை என்று சொல்லிக் கடந்து சென்று விடக்கூடியதை அவன் கொஞ்சம் வியந்தான்.
—
அமெரிக்காவிலிருந்து வந்த அன்றே தகனம் முடிந்திருந்ததால், அடுத்தடுத்த காரியங்களை பற்றி வீடு யோசித்தபோது, அவனுடைய பயண களைப்பும், கரோனா களைப்பும் தீரட்டும் என்று எல்லா காரியங்களையும் ஒன்பதாம் நாளன்று தள்ளி வைத்து விட்டார்கள்.
அடுத்த மூன்று நாட்களுக்கும் அப்பாவின் அறையிலேயே தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். டீவி போர் அடித்தது, டுவிட்டர் கசந்தது, புத்தகங்களில் மன போக மறுத்தது. முதலில் அதை ஜெட்லாக் என்று நினைத்தவனுக்கு பிறகு தான் புரிந்தது, அது அப்பாவின் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற மன உணர்ச்சி உண்டாக்கும் தூக்கமின்மை என்று.
ஒன்பதாம் நாள் முதல் அத்தனை காரியங்களையும் ஸ்ரீ ராம தீர்த்தம் என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்குச் சென்றவுடன் அவன் கணினி தொழிலாளி மண்டைக்குள் தோன்றியது, “இது ஒரு FaaS” என்று. Funeral-as-a-service.
பத்தாயிரமோ பன்னிரெண்டோ கொடுத்து விட்டால், ஹோம சாமன்கள் முதற்கொண்டு , காரியம் செய்விக்க அறைகளும், குழி தர்ப்பணம் செய்ய குழிகளும், கோ பூஜை செய்ய மாடு கன்றுக்குட்டிகளும், அரிசி வாழைக்காய் தானம் வாங்கிக் கொள்ள அங்கேயே வேலை செய்யும் ஆட்களும் என்று எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற இடம். அடுக்குமாடி குடியிருப்புகள் நிரம்பி வழியும் சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தேவையான all-in-one service.
”கர்தா பேர் சொல்லுங்கோ…”
“கீர்த்திக…”
“நீங்க தான கர்த்தா, உங்க பேர் சொல்லுங்கோ…”
சொன்னான்.
அப்போது தான் புரிந்தது அப்பாவின் காரியங்களில் கர்த்தா எனப்படுவன் அவன் தான் என்று. அடுத்தடுத்த நாட்களில் பஞ்சகச்சம் கட்டுவதற்கு கற்றுக் கொண்டு விட்டான். தலை குளியல், தர்ப்பணம் , அரிசி வாழைக்காய் என்று எல்லா நாட்களுக்கும் சேர்த்துக் குழி தர்ப்பணம் செய்யச் சொன்னார் வாத்தியார். கண்ணை மூடி கல் ஊன்றினான்.
“இன்னும் நல்லா நெறைய ஜலம் விடணும். இந்த பத்து நாளும், போன அப்பாவோட ஆத்மாவுக்குத் தெரிஞ்சது ஒண்ணு தான். பசி தாகம்… பசி தாகம்”
அந்த சிறிய ஸ்ரீ ராம தீர்த்த அறையில் தங்கை அடுப்பு பற்ற வைத்து சாதம் வடித்து பிண்டம் பல பிடித்து வைத்திருந்தாள்.
“மார்ஜயந்தா…”
“மார்ஜயந்தா…”
“மம-ன்னு சொல்லுங்கோ”
”மம” என்றான்.
“அப்படியே பித்ரு தீர்த்தம் போல கையில இருக்கிற எள்ளு கலந்த ஜலத்தை, கைய திருப்பி பிண்டத்தோட மேல விட்டுடுங்கோ”
விட்டான்.
“இப்ப பூணுல சரியாப் போட்டுக்கலாம்”
கலிபோர்னியா சென்றிருந்த மாமா அப்பாவின் செய்தி கேட்டு அவனுக்கு முன்னமே கிளம்பி வந்திருந்தார். பத்தன்று காலை அவனிடம் வந்து,” இன்னிக்கு காரியம் பண்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும், கொஞ்சம் தைரியமா இரு” என்று எச்சரித்தார். பத்தாம் நாளன்று உறவினர்கள் வந்தார்கள், அழுதார்கள், பத்து கொட்டினார்கள்.
ஒத்தன் என்பவருக்கு உணவிடச் சொன்னார்கள். அவர் உண்டு முடிந்தவுடன் அவனை திரும்பி நிற்க சொன்னார்கள்.
“அப்பாவுக்காக கிளம்பி இவர் காசிக்கு போறார். அவரை பாக்காம திரும்பி நின்னுக்கோங்கோ”
அது ஒரு ஐதீகம் தான். காசிக்செல்லாம் பலரும் செல்லச் சொல்லவதில்லை. அதற்குச் செலவாகும் என்று பின்னர் புரிந்து கொண்டான்.
வாத்தியார்கள் கோஷ்டியாய் உட்கார்ந்து ஒரு சேர ருத்ரம், சமகம் சொன்னார்கள். அதுவரை செய்யப்பட்ட காரியங்கள் எல்லாம் புதிதாக இருந்தாலும், அவர்கள் சொன்ன ருத்ரத்துடன் சேர்ந்து அவனும் அரைகுறையாய் ருத்ரம் சொல்ல முற்பட்டான்.
சுபஸ்வீகாரத்துக்கு எல்லோரையும் வாட்ஸ்ஸாப்பில் அழைக்க அப்பாவின் படம் போட்டு அழைப்பு செய்து கொடுத்தான். அபார்மெண்டில் இருந்த எல்லோருக்கும் அழைப்பை அனுப்பினாள் அம்மா.
வாத்தியார்கள் வந்தனர். நவக்கிரக ஹோமம் செய்தார்கள். புண்ய ஜலத்தினால் அவனை நனைத்தார்கள். சரம ஸ்லோகம் எழுதி வாசித்தார். அப்பாவின் திதி இத்தியாதி விஷயங்களை ஒரு அரை பேப்பரில் எழுதி கொடுத்தார்.
”இனிமே இதுதான் அப்பாவோட முக்கியமான சீட்டு. இதை நீங்க எங்க காமிச்சாலும், திதி பார்த்து மாசிகம் சோதமம் எல்லாம் பண்ணி வச்சிருவா. 27ம் நாள் , 45ம் நாள், ஆறாம் மாசத்தை மட்டும் விடாம பண்ணிடுங்க. அடுத்த வருஷம் வருஷாப்திகம் இங்கேயே ஜம்முன்னு பண்ணிடலாம். ஆக்சுவலா கர்த்தா ஒரு வருஷம் கோயில் போகப்பிடாது, மலை ஏறப்பிடாது, கடல் கடக்கபிடாது. ஆனா அமெரிக்கா போய் ஆகனுமே. ஒண்ணும் சிரமமில்ல, ஒரு ப்ரிதி பண்ணிக்கலாம்” என்று கொஞ்சம் சிரித்த படி சொன்னார்.
அப்பாவின் ஆஸ்தான அட்டோ ஓட்டுநர் முதற்கொண்டு மருந்து கடைக்காரர், ப்ளம்பிங் வேலை செய்பவர் என்று எல்லோரும் வந்தார்கள், அழுதார்கள். அப்பா அவர்களுக்குச் செய்திருந்த உதவிகளின் விவரங்களைச் சொன்னார்கள். சீனு ஒரு ஃபாண்டா பாட்டில் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தார்.
“அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது இதுன்னு…”
அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. தான் சென்னையில் இல்லாத பதினேழு வருடங்களில் அப்பா பலருக்கும் பணத்தையும், மனத்தையும் கொடுத்து உதவியிருக்கிறார். அவர் சென்னை வரும்போது இவற்றைப் பற்றிக் கேட்டிருந்தாலும், அந்த எளிய மனிதர்களின் அக்கறையை அப்போது தான் புரிந்து கொண்டான்.
தங்கையுடன் சேர்ந்து வீட்டைக் கொஞ்சம் எளிதாக்கி அம்மாவிற்கு ஏற்றபடி மாற்றி அமைக்க நினைத்தான். அப்பா சேர்த்து வைத்திருந்த பலவித எலக்டிரிகல் கருவிகளை ஒன்றாக எடுத்து வைத்தார்கள். அவர்களின் ஆஸ்தான எலக்ட்ரீஷனை அழைத்து எடுத்துப் போகச் சொன்னார்கள்.
“என்னது சார் இறந்துட்டாரா” என்று அதிர்ந்து போனர் அந்த எலக்ட்ரீஷன்.
”இந்த ஸ்விட்ச் போர்டையெல்லாம் ரிமோட்டா மாத்தி அவர் செஞ்சிருந்க்கிற விஷயம் ஸ்டார் ஓட்டல கூட இல்லீங்க. அவர் சொல்லித் தான் இதயெல்லாம் நானே தெரிஞ்சுகிட்டேன்”
அப்பாவின் கனிணியை வீட்டு வேலை செய்பவரின் சிறுவனுக்கு உதவியாய் இருக்கும் என்று கழட்டிக் கொடுத்தான். ப்ரிண்டர் இன்னொருவருக்குச் சென்றது.
பாங்க் கணக்கு வழக்கைப் பார்த்த போது, அப்பா எல்லா கணக்குகளையும் எளிதாக்கி அத்தனை டாக்குமெண்டையும் சேர்த்து ஃபைல் செய்து தன் டைரியில் அழகான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார். அம்மாவின் ஏர்டெல் ஃபோன் முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் ஒரு ஆண்டு சந்தா கட்டி வைத்திருந்தார். அவன் செய்ய வேண்டிய வேலை என்று ஒன்றுமே இல்லாமல் செய்து வைத்துப் போயிருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த கடைசி நாட்களுகளுக்கான செலவு, பிடித்தம் போக அனைத்தும் ஏற்கனவே அவர் கட்டியிருந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷுரஸிலுருந்து ஒரே செக்காக வந்தது.
“அடுத்த ஒரு வருஷத்துக்கு என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க. அப்பா நினைவா நான் இங்க தான் இருக்க போறேன்” என்றாள் அம்மா. அவளைத் தனியாக எப்படி விடுவது என்று அவர்கள் வியந்த போது, அடுத்த இரண்டு மாதங்களாவது அங்கேயே தங்குகிறேன் என்றார் அவள் தம்பியான அவன் மாமா.
எமிரேட்ஸில் திரும்ப டிக்கெட் வாங்கினான்.
விமானத்தில் ஏறி, பறப்பதற்கு முன் உட்கார்ந்த அவன் ரெஸ்ட்ரூம் போக தன் இருக்கையை விட்டு எழுந்தான்.
“Sorry sir.. only one restroom in business class today. This one does not work. You can use the first class restroom if needed” என்றாள் அந்த விமானப் பணிப்பெண்.
எதோ சொல்ல எத்தனித்தவன், தன்னையும் அறியாமல், “fine.. சல்தா ஹை” என்றான்.
“What.. Waaz that” என்று வினவினாள்.
“Oh no, nothing… do you have cappuccino. I’ll take one.”
காப்பசீனோ வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பின் அன்று அவனுக்கு முதல் முறையாக நன்றாக உறக்கம் வந்தது.
கங்குபாய் காட்டியாவாடி திரைப்படம் சுமாராய்த் தான் இருந்தாலும், முதல் அரை மணி நேரத்துக்கு திரையிலிருந்து கண்ணை விலக்க முடியாமல் பார்க்க வைத்த பன்சாலிக்கு நன்றிகள் பல. சோகம் அப்பி வழியும் அதே முதல் முப்பது நிமிடங்களில் துல்லியமான மெல்லிசையும், பல வண்ணங்கள் வழிந்தோடும் கலையும் ஒளிப்பதிவும் கவனம் கலைக்க முயன்றாலும், பகீரென்று அடிவயிற்றைக் கலக்கும் திரைக்கதையால் பன்சாலியும், நாளை மலரப்போகும் ரோஜாப்பூ போலச் சன்னமான நாசியுடனும் அழுத்தமான உதட்டுடனும் இருக்கும் கங்குவும்(ஆலியா பட்) தான் மனசில் நிற்கிறார்கள்.
எது முதலில் வந்தது காமமா காதலா என்ற கேள்விகளுக்கெல்லாம் இடம் தராத ஒரு இடம் தான் பம்பாயின் காமாத்திபுரா. வந்தான், படுத்தான், போனான் என்றில்லாமல் வந்த இடத்தில் கங்குவை ஒருவன் மூர்க்கமாய் துன்புறுத்திக் கிட்டத்தட்டச் சாக அடிக்கும் போது, அந்த நாளைய ரோஜா புயலாகிறது.
இம்மாதிரி பயோபிக் படங்களில் எப்பொழுதுமே அதீத திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது தான். அதற்காக நிறையவும் மெனக்கெடாமல், பாலியல் தொழிலை மகிமைப்படுத்த முயலாமலும், அதே நேரத்தில் பாலியல் தொழிலாளிகளின் மாறாத அவலநிலையை அடிநாதம் மாறாமல் எடுத்து வைத்ததற்குப் பாராட்டுக்கள்.
பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை காதலைச் சொன்ன படங்கள் இருக்கின்றன. ஆனால் இப்படத்தில் இருபத்தைந்தாவது நிமிடம் ஒரு காட்சி வருகிறது. பல பா.தொ பெண்கள் ஒரு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பெண் கங்குவிடம் தன் தந்தைக்குக் கடிதம் எழுத உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். கங்கு ஒரு இன்லாண்ட் காகிதத்தில் எழுத ஆரம்பிக்க, எதை வேண்டுமானாலும் எழுது என்று அந்தப் பெண் சொல்ல , கங்கு கடிதத்தின் முதல் வரியைச் சொல்லிக் கொண்டே எழுத ஆரம்பிக்கிறாள். சட்டென அந்த அறையில் இருக்கும் மற்ற பெண்களின் கண்கள் எங்கெங்கோ பார்த்தபடி நிலைத்துப் போகின்றன. கடிதத்தின் அடுத்த வரியைத் தன்னையும் அறியாமல் மற்றொரு பெண் சொல்கிறாள். அதற்கடுத்த வரியை இன்னொரு பெண்ணின் உதடுகள் உச்சரிக்கின்றன. எல்லோரும் தத்தம் தந்தைகளுக்கு எழுத வேண்டியதை ஒரு கடிதத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் காமாத்திபுராவுக்கு வந்து சேர்ந்த பாதைகள் பல ஆனால் பலவும் ஒன்றே. இவ்வாண்டின் கவிதைத் தருணம் வெளிப்பட்ட திரைப்பட காட்சி இதுவாய்த் தான் இருக்கமுடியும்.