நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி.
முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். பிரகஸ்பதி நான் அதையும் படித்துப் பார்த்தேன்.
தான் ஒரு பதுக்கல் பேர்வழி இல்லை என்றாலும் நான்கைந்து விஷயங்கள் தன்னை அறியாமல் குவிந்து போனது என்கிறார். எல்.பி ரெக்கார்டுகள், புத்தகங்கள், பென்சில்கள், டிஷர்ட்டுகள் இன்ன பிற. டிஷர்ட் என்பது ஒரு மலிவான எளிமையான உடை. எதோ கலை பொக்கிஷமெல்லாம் அல்ல. அதனால் போகிற இடமெல்லாம் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிற ட்ஷர்டுகளை வாங்க ஆரம்பித்தார். அவர் அப்படி வாங்குவது தெரிந்து உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு டிஷர்டுகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். முதலில் முராகமி வீட்டின் அலமாரிகள் நிறைந்தன, பின்பு அட்டைப்பெட்டிகள் என கார் கராஜ் வரை ட்ஷர்டுகளால் நிரம்பி வழிய வேறு வழியில்லாமல் ரொம்பவும் வித்தியாசமான ட்ஷர்டுகளை படமெடுத்து புத்தகம் போட்டுவிட்டார். பெயர் – The T-Shirts I Love.
ஜப்பானிய உணவான சூஷீயில் ஆரம்பித்து, கெட்ச்சப், பர்கர், விஸ்கி, பியர், பறவைகள், விலங்குகள், இசை, கார்கள், மராத்தான், புத்தகங்கள், யூனிவர்சிடிகள், சூப்பர்ஹீரோக்கள் என்று எல்லா துறைகளிலும் சேர்த்து வைத்திருக்கும் டிஷர்டுகள் பற்றி அவற்றின் படங்களோடு கதை சொல்கிறார்.
”இவ்வளவு டிஷர்ட்கள் வைத்திருக்கிறீர்களே நீங்கள் பொக்கிஷமாய் நினைக்கும் டிஷர்ட் எது?” என்று ஒரு நிருபர் கேட்க, முராகமி சொன்னது சுவாரஸ்யமானது.
ஹவாய்த் தீவில் ஒரு மலிவு விலை டிஷர்ட் கடையில் “Tony” Takitani House (D) என்ற வாசகம் போட்டிருந்த டிஷர்ட் ஒன்றை வாங்கினார். விலை வெறும் ஒரு டாலர். வீட்டிற்கு வந்தவுடன் இந்த டோனி என்பவர் ஒரு உண்மை மனிதனாய் இருந்தால் எப்படியிருப்பான் என்று யோசிக்கப் போய், டோனி டாகிடானி என்று பெயரிட்டு ஒரு சிறுகதை எழுதினார். அந்த கதை பிரபலமாகப் போய் பிறகு அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகி பெரும் புகழை வாங்கித் தந்தது. “என் வாழ்க்கையில் எத்தனையோ முதலீடுகள் செய்திருக்கிறேன், ஆனால் அந்த ஒரு டாலர் டிஷர்ட் தான் பெஸ்ட்”.
டோனி டாகிடானி டிஷர்ட்
இந்த சம்பவத்திற்கு சுவையான ஒரு சிறுகதை முடிவு இருக்கிறது. அந்தப் படம் வெளிவந்து பிரபலமானவுடன், முராகமிக்கு டோனியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. “நான் தான் அந்த உண்மையான டோனி டாகிடானி. அந்த டிஷர்ட் நான் டெமாகிரடிக் கட்சிக்காக ஹவுஸ் தேர்தலில் நின்ற போது தயாரித்தது. தேர்தலில் நான் தோற்றுப் போனேன். அந்த டிஷர்ட் உங்களுக்காகவாவது உதவியிருப்பது சந்தோஷம் தான். நான் ஒரு வக்கீல், ஒரு முறையாவது என்னுடன் கோல்ஃப் விளையாட வாருங்கள்”.
முராகமிக்கு நீங்கள் இன்னமும் டிஷர்டுகள் அனுப்பலாம். அப்படியே அடியேனுக்கும் ஒன்று அனுப்பினால் இப்பகுதியில் உபயதாரர் பெயர் விவரம் குறிப்பிடுகிறேன். அனுப்பும் போது இந்திய யானை, அகல் விளக்கு, பாரதி மீசை என்றெல்லாம் இல்லாமல் தற்காலத் தமிழ் வார்த்தைகளாக அனுப்பக் கோருகிறேன். வாழ்க தமிழ்!
”நேற்று ஜீனோ ஜீனோ தான் என்றெல்லாம் சொன்னாயே, நீ ஏன் இன்னமும் ஒரு நாய்க்குட்டி எல்லாம் வாங்கல?” என்று நண்பர் ஒரு வாட்ஸ்அப்பில் கேட்டிருந்தார்.
போன இரண்டு வருடங்களில் வீட்டிலிருந்த போது செய்வதறியாது, பல நண்பர்கள் பாண்டமிக் பப்பிக்களை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு முன்பின் நாய்களை வளர்க்காத இரண்டு நண்பர்கள் வாங்கியிருப்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த தொற்று காலத்தில் சட்டென விலையேறிப் போன வஸ்துக்கள் மூன்று – டாய்லெட் பேப்பர், வீடு மற்றும் நாய்க்குட்டிகள்.
ஒரு ஆறு மாதத்திற்கு முன்பாவது இந்த பப்பிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கென தனியாக ப்ரிடர் க்ரூப்புகள் இயங்குகின்றன. ரிட்ரீவரோ டூடுலோ என்று என்னென்னவோ ப்ரீட்களில் கலர் கலராக சைஸ் வாரியாக விற்கப்படுகின்றன. $50 முதல் $5000 வரை அமெரிக்காவுக்கே உரித்தான பாணியில் க்ரெடிட் கார்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் கேட்டிருந்த குட்டி பிறந்தவுடன், அதன் புகைப்படம் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். பிரதி ஞாயிறு நீங்கள் போய் உங்கள் நாய்க்குட்டியுடன் விளையாடிவிட்டு வரலாம். எட்டு வாரங்களுக்குப் பிறகு உங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரலாம். ஓரிரு வாரங்களுக்குள் திரும்பிக் கூட கொடுக்கும் வசதியெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள்.
பிறந்த குழந்தையைப் போல உங்கள் வீட்டிற்கு வரும் முதலிரு மாதங்கள் கடினமாதே. ஹவுஸ்ப்ரேக் செய்ய இரவெல்லாம் கண்விழித்து ஒரு வழியாக நாய்க்குட்டியைப் பயிற்றுவித்த பின் அதிரடி தான்.
எனக்குத் தெரிந்த நண்பர்கள் எல்லோர் வீட்டிலும் ஆண்கள் ரொம்பவும் தயங்கியே இப்படி ஒரு பாண்டமிக் பப்பியை வாங்க ஒத்துக்கொண்டார்கள். அல்லது ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டார்கள். ஆறு மாதம் கழித்து அந்த செல்லப்பிராணியிடம் அதிகம் ஒட்டிக் கொண்டதென்னவோ அந்த ஆண்கள் தான். இதில் எதோ சிண்ட்ரோம் இருப்பதாக உளவியளாளர்கள் கதைவிடலாம் நம்பாதீர்கள். இப்படியெல்லாம் சொல்கிறாயே உன் பதிலென்ன என்று நீங்கள் நினைக்கலாம். என் வீட்டிலும் பிக்கல் பிடுங்கல் இல்லாமலில்லை.
சில வருடங்களுக்கு முன் மகனின் பிடுங்கல் தாங்க முடியாமல் ஒரு பேட்டா மீன் வாங்கினோம். Petco என்றொரு கடைக்குப் போய் மீன், தொட்டி, அதில் வைக்க இரண்டு மூன்று அலங்கார பொருட்கள், அதற்கான உணவு என வாங்கி வரும்போதே, “லெட்ஸ் கால் திஸ் ஃபிஷ் மேக்ஸ், ஹி ஹிஸ் மை ப்ரதர்” என்று பெயர் வைத்தான். பேட்டா மீன் தனியாகவே வாழும். அது ஒரு முழு மீன் தொட்டியையும் எடுத்துக் கொண்டது. சரியாக மூன்று வாரங்களுக்குப் பின் அதற்கான உணவு கொடுப்பதும், தொட்டித் தண்ணீரை மாற்றுவதும் என் தலையில் விழுந்தது. தினமும், “ ஹாய் மேக்ஸ்” என்று சொல்லிவிட்டு எல்லோரும் ஜகா வாங்கிக்கொள்ள, அடுத்த மூன்று வருடமும் அதைப் பராமரித்தது உங்கள் நான்.
மேக்ஸ் (max)
கடைசியாய் சில வாரங்கள் சரியாக உணவருந்தாமல் தண்ணீர் தொட்டியின் அடியிலேயே படுத்துக் கிடந்து, ஒரு நாள் மாலை உயிர் துறந்தது மேக்ஸ். சோகமாகியது வீடு. மகன் அழ ஆரம்பிக்க, மூன்று வருடமாக மேக்ஸை பார்த்துக் கொண்ட எனக்குப் பரம சோகம். இணையத்தில் தேடி, பலரும் சொன்ன மாதிரி மேக்ஸை கொண்டு போய் டாய்லெட்டில் போட்டு, அதைச் சுற்றி நின்று ஒரு முறை உச்சுக் கொட்டி, ப்ளஷ் செய்தோம். மகன் இன்றிரவு பாடம் படிக்க மூடில்லை என்று சொல்லிவிட்டு காமிக்ஸ் படிக்கப் போய்விட்டான்.
அடுத்த நாள் காலை, “நீ மேக்ஸ ப்ளஷ் பண்ணியிருக்க கூடாதுப்பா. ப்ளஷ் பண்றதுக்கு முன்னாடி மேக்ஸ் லைட்டா அசைஞ்ச மாதிரி இருந்தது” என்று ஜெர்க் விட்டான் மகன். பாவம் அவன் சோகம் அவனுக்கு என்று நினைத்துக் கொண்டேன். “நீ கொஞ்சம் ஒழுங்கா மேக்ஸோட தண்ணிய மாத்தி சரியா சாப்பாடு போட்டிருந்தா இன்னமும் ஆறு மாசம் இருந்திருக்கும்” என்றாள் மனைவி. கடைசி வரை பார்த்துக் கொண்டவனுக்கு இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் மேக்ஸ் ஞாபகம் வரும் போதெல்லாம், “ யூ ஷுடுண்ட் ஹாவ் ப்ளஷ்ட் இம், ஹி மஸ்ட் பி இன் ஹெவன் நவ்” என்று சொல்வான் மகன்.
இம்மாதிரி இன்னுமொரு பிரிவைத் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதுவும் தொட்டுக் கூட பார்க்காத மீனுக்கே இப்படி என்றால், கொஞ்சி, முத்தமிட்டு, மடியில் அமர்த்தி, ஆரத்தழுவிய செல்ல நாய்க்குட்டிகளைப் பற்றி நினைத்துக் பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் சொல்லி பார்த்தாயிற்று, ஆனாலும் ஒரு நாய்க்குட்டியையாவது வாங்கியே தீருவது என்று வீட்டில் நடத்தப்படும் எதிர்ப்புக் கூட்டணியை எதிர்ப்பதற்குப் பைரவரை வேண்டுகிறேன்.
இப்படியெல்லாம் நான் சொல்லிவிட்டு, திடீரென ஒரு நாள், நாய் குட்டியை கட்டிக் கொண்டு இன்ஸ்டாகிரமில் ஒரு செல்பி போடலாம், சொல்வதற்கில்லை. பெயர் என்னவோ கண்டிப்பாய் ஜீனோவாகத்தான் இருக்கும்.
‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது பார்த்தா, இன்னமும் படிச்சு இன்னமும் உங்களுக்கு உபயோகமாக இருக்க முடியும்! அப்புறம் வால்ல ஒரு பேரிங்கு போயிருக்கு. ஆட்டறது கஷ்டமா இருக்கு. இஃப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு மத்தியானம் கொஞ்சம் தூங்கணும்!’”
— என் இனிய இயந்திரா / சுஜாதா
சுஜாதா எண்பதுகளில் எழுதிய என் இனிய இயந்திரா என்ற விஞ்ஞானக் கதை (சயின்ஸ்-பிக்ஷன்) ஆரம்பிப்பது 31-12-2021. கதை நடப்பது 2022ல் டிஸ்டோப்பிய நாடாக மாறிய தமிழ்நாட்டில். ஆக இன்று நடந்து கொண்டிருக்கும் கதை. 2021ன் கடைசி நாளில் தான் நிலாவிற்கும் சிபிக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியை அரசாங்கம் கொடுக்க, நிலா சிபிக்கு ஒரு வீடியோ கால் செய்கிறாள். அப்போது அவள் புரட்சியாளன் ரவியையும் அவனது ரோபோ நாய்க்குட்டியான ஜீனோவையும் சந்திக்கிறாள். சிபி சிறையில் அடைக்கப்பட, நிலாவும் ஜீனோவும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் கதை.
ஜீனோ மனித உணர்வுகள் கொண்ட ஒரு அடாவடி ரோபோ. சரியாக சொல்ல வேண்டுமானால் கணேஷ்-வசந்த் ஜோடியில் வஸந்தைப் போல புத்திசாலியான வாயாடி பாட். கதை வெளிவந்த போது ஜீனோ பிரபலமாக சில வருடங்கள் கழித்து ஒரு சீக்குவல் எழுதினார் சுஜாதா – மீண்டும் ஜீனோ.
தொடர்கதையாக நான் முதலில் படித்தது மீண்டும் ஜீனோவைத் தான். அப்போது கற்பனையில் தான் ஜீனோவை வரைந்து கொள்ள முடிந்தது. பின்பு எ.இ.இ தொலைக்காட்சித் தொடராக வந்த போது ஜீனோவை ஒரு வழியாகப் பார்க்க முடிந்தது. கடைசியாக அக்கடான்னு நாங்க உட போட்டா பாட்டில் கமல் ஒரு வர்சுவல் லீஷில் ஜீனோவை பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்தியனில் ஜீனோ
ஜீனோ தான் எனக்கு முதலில் அறிமுகமான ரோபாட். பிறகு ஐஸாக் ஆஸிமோவ் எழுதிய பல புத்தகங்களிலும்(The Naked Sun, Robot Dreams…) மூலமும், ஹாலிவுட் படங்கள் மூலமும் பலப்பல ரோபாட்களை பார்த்தாகிவிட்டது. ஆனாலும் ஜீனோ ஜீனோ தான்(சுஜாதா இருந்திருந்தால் மூன்றாம் பாகத்திற்கான தலைப்பு ரெடி). நான் வாங்கிய அத்தனை எலக்ட்ரானிக்ஸ் எந்திரங்களுக்கும், சீடி ப்ளேயர் முதல் ஃபோன், ஐபேட் என்று கடைசியாய் வாங்கிய கார் வரை எல்லாவற்றிற்கும் செல்லப் பெயர் ஜீனோ (ஜீனோ_போன், ஜீனோ_டொயோடா… ) . வீட்டிலிருந்த wifi கூட பல வருடங்களாக ஜீனோ என்றே இருந்தது. வீடு மாறும் போது எப்படியோ மாறிவிட்டது.
போன வருடம் ராபர்ட் கார்கில் எழுதிய அசிமோவ் வாசனை வீசிய, மிகப் பிரமாதமான டே ஸீரோ நாவலை படித்தபோது(க்யூட் புலிகுட்டி ரோபோட்) கூட ஜீனோவை நினைத்துக் கொண்டேன், சுஜாதாவையும் கூட.
சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சித்தி திரைப்படத்தில் வரும் காலமிதுகாலமிது என்ற பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒரு தாய் தன் மகளுக்குச் சொல்லும் நடைமுறை அறிவுரைப் பாடல் அது. அந்தக் கருப்பு வெள்ளைப் பாடல் வெளிவந்த காலமும் தற்போதைய காலமும் தாய்களும் மகள்களும் எப்படி மாறியும் மாறாமலும் இருப்பதைச் சொல்லும் குறும்படம் தான் நண்பர் ஹேமந்த் குமாரின் – காலமிது காலமிது.
பொழுது புலர்ந்து, பறவைகள் பறந்து, சூரியன் எழுந்து என்றெல்லாம் வழக்கமான சம்பிரதாயங்களுடன் இல்லாமல், படம் சடுதியில் ஆரம்பிக்கிறது. ஒரு பெண் மருத்துவர் தன் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது காரிலேயே கதை ஆரம்பித்து முடிந்து போகிறது. இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் போல நாம் பார்ப்பது இந்த ஒரே கதாபாத்திரத்தைத் தான். அந்தப் பெண் காரில் ஏறியவுடன் ஆன் செய்யும் ரேடியோ மூலம் தான் புரிகிறது அது கரோனா வைரஸ் காலம், அவள் இருப்பது கலிபோர்னியாவின் பே ஏரியாவில். ஆஸ்பத்திரியில் கரோனா கடமைகளை முடித்து விட்டு களைத்துப் போய் வீட்டிற்கு செல்ல காரில் ஏறி தனக்கு வந்த வாய்ஸ்மெயில்களை கேட்கிறாள் அந்தப் பெண். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு அழைக்கும் கணவன், என்னை இங்கிருந்து கூட்டிப் போய் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடு என்று அழும் மகள், உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை கூப்பிட்டுப் பேசு என்று சென்னையிலிருந்து அழைக்கும் மாமா, உங்க அம்மா செய்கிற அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை என்று சென்னையிலிருந்து குறை சொல்லும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுப் பெண் என்று எல்லா பக்கத்திலிருந்தும் அவளைப் பிடித்து இழுக்கிறார்கள்.
காரை ஓட்டிக் கொண்டே இவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பவள், இந்தக் கவலைகளால் களைத்துப் போய் ரோட்டின் ஒரமாகக் காரை நிறுத்தி, அந்தக் கும்மிருட்டில் ஒரு சிகரெட் பிடிக்கிறாள். பிறகு ஒரு வழியாய் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு தன் தாய்க்கு போன் செய்கிறாள். மற்றதை யூடுப் திரையில் காண்க.
என்ஆர்ஐகள் என்றால் விடுமுறையின் போது தாத்தா பாட்டியிடம் குழந்தையைக் காட்டுவதற்காக ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு, மெட்ராஸ் விஜயம் செய்து, திருப்பதியில் ஒரு மொட்டை போட்டு, எக்ஸ்பிரஸ் வேகத்தில் உறவினர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி , குழந்தையைக் கொசு கடித்து வீங்கி, ஓலா ஓட்டுநர்கள் சொன்ன நேரம் தவறி வந்து, அக்கார்டு ஓட்டலில் நண்பர்களைச் சந்தித்து டாலர் பார்ட்டிகள் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி உங்க ஊரே இப்படித்தான் என்று லுஃப்தான்ஸா ஏறுபவர்கள் தான் என்ஆர்ஐகள் என்னும் ஸ்டீரியோடைப் பிம்பங்களை உடைக்கும் இம்மாதிரி கதைகள்/வாழ்க்கைகள் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிப் பார்த்தால் இப்படம் பிரமாதமாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு என்ஆர்ஐ குறும்படம்.
மற்றபடி அமெரிக்காவில் படமெடுப்பது சுலபமான காரியமல்ல. சில வருடங்களுக்கு முன் ஆறேழு படங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் இதை நன்கு அறிவேன். இங்கே சென்னையைப் போல கூப்பிட்டால் ட்ராலி பிடிப்பதற்கும் க்ளாப் தட்டவும் நான்கு பேர் ஓடியெல்லாம் வர மாட்டார்கள். முதலில் ஒரு குழுவை அமைக்கப் பல மாதங்களாகிவிடும். படத்தில் பங்கு பெறும் எல்லோரும் தன்னார்வலர்கள் என்பதால் இது கொஞ்சம் சிரமமான காரியம் தான். அதன் பின் எல்லோரையும் ஒருங்கிணைத்து, ஒரே நாளில் வரவழைத்து, அவர்கள் நடுநடுவே போன் பார்த்துக் கொண்டிருப்பதை அரவணைத்து, எல்லோருக்கும் ஸ்டார்பக்ஸிலிருந்து காபி பீட்சா வரை ஆர்டர் செய்து படமெடுப்பதற்குள் நடுமண்டையில் முடி உதிர்ந்து விடும். மற்றபடி சட்டப்படி படத்தில் நடித்திருப்பவர் முதல் க்ளோஸ்-அப் ஷாட்டில் தலை தெரியும் ரோட்டில் நடப்பவர் வரை நோ அப்ஜெக்ஷன் கையெழுத்து வாங்கவில்லை என்றால் கோர்ட்டு நோட்டீஸ் வரலாம். இவையெல்லாவற்றையும் தாண்டி படமெடுப்பதற்கு ஒரு விதமான பித்து அவசியம்.
ஹேமந்திற்கு இந்தப் பித்து பல வருடங்களாக இருப்பது எனக்குத் தெரியும். நவீன சினிமாவின் காதலன் அவர். சிறந்த ரசனை உடையவர். சில வருடங்களுக்கு முன் அவரும் நானும் சேர்ந்து 25 வாரங்கள் பேசும்படம் என்று ஒரு சினிமா விமர்சன podcast செய்து கொண்டிருந்த போது இதை உணர முடிந்தது. அதே ரசனையுடன் தன் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு ஆர்ப்பாட்டமில்லா திரைப்படமாக இதை எழுதி, இயக்கி, எடிட் செய்துள்ளார். வாழ்த்துக்கள் ஹேமந்த், உங்களுக்கும் மொத்த படக் குழுவினருக்கும். படம் முழுவதும் தெரியும் ஒரே முகமாக வரும் ஜ்யோத்ஸ்னாவின் குரலுக்கும் அவர் காட்டும் மிகத்துல்லியமான முகபாவங்களுக்கும் பாராட்டுக்கள். கார் ஓட்டும் போது வைக்கப்படும் காமிரா கோணங்களுக்காக ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ominous சூழ்நிலையை இசையால் உணர்த்திய இசையமைப்பாளருக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
படத்தில் குறைகள் இல்லாமலில்லை. ஆங்காங்கே வரும் உச்சரிப்பு பிழைகளும், இசையின் மூலம் கதையை உணர்த்த முயல்வது என சிறு குறைகள் இருந்தாலும், கதையின் உள்ளர்த்தத்தை உரக்கச் சொல்லாமல் பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டு விடுவதால் இந்த நவ தமிழ் சினிமாவை வரவேற்கலாம்.
போன மாதம் ஆப்கானிஸ்தானில் சரித்திரம் புரண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இந்தியர்கள் ஜனகணமன பாடி, சாக்லெட்டை விழுங்கி, அதன் ப்ளாஸ்டிக்கை கசக்கி கீழே போட்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்தும் அச்சுபிச்சுத்தனமாக இரவில் வாங்கினோம் இன்னமும் விடியவேயில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் திராபைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இந்தியாவைப் போல் ஒரு சுதந்திரமான நாடு எங்குமேயில்லை. தனி மனித சுதந்திரத்தை நாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டோம். எந்த அடி சுவரிலும் பான் துப்பி, எந்த தெரு ஓரத்திலும் பிஸ்ஸடித்து, எப்படி வேண்டுமானாலும் குறுக்காக ரோட்டை க்ராஸ் செய்து என்று எந்த நாட்டிலும் அனுமதிக்கப்படாத சுதந்திரம். ப்ராங்போர்ட்டில் இமிக்ரேஷன் ஆபிஸர் சொல்வதை அமைதிப் பசு மாதிரி கேட்டுக் கொண்டு கோட்டுக்கு அந்தப் பக்கமாய் நிற்பவர், சென்னை விமான நிலையத்தின் இமிக்ரேஷன் ஆபிஸரின் கணினியுள் தலைவிட்டு பார்த்துக் கொண்டிருப்பது சுதந்திரமில்லாமல் வேரென்ன.
நமக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்காமல் போனது, சுதந்திரம் என்பது இதுவல்ல. பிரிட்டனிடமிருந்து நாம் மீண்டும் பறித்துக் கொண்டது, ஜனநாயகத்திற்கான சுதந்திரம். இந்தியா போல் பொருளாதாரத்தில் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில், 1.4 பில்லியன் மக்கள் ஜனநாயகம் என்ற எண்ணத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதே ஒரு அற்புதம். மேலும் 75 ஆண்டுகளாக அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒரு சாதனை. அதுவும் பக்கத்து நாடுகளில் உள்ள ஆசாமிகள் செய்யும் விஷமங்களைப் பார்த்த பின்பும் இந்தியாவில் ஜனநாயகம் செழிப்பாக இருப்பது பெருமைப்பட வேண்டியது தான். கண்டிப்பாக இந்தியா முறைகேடுகளும் குறைகளும் உள்ள ஒரு அபூரண ஜனநாயகம். அப்படிச் சொல்லப் போனால் எதில் தான் குறையில்லை.
மனிதக்குலத்தின் ஆறில் ஒரு பங்கு இருக்கும் இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களுக்கு இன்னமும் மக்கள் அர்ப்பணிப்போடு இருப்பதைக் கொஞ்சமாவது கொண்டாடித்தான் ஆக வேண்டும். வந்தே மாதரம் என்ற அந்த பிரம்மாண்ட கனவைக் கண்டவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.
தீவிரவாதத்துடன் சேர்த்து உடனடியாக அழிக்கப்பட வேண்டியது இந்த கெட்ட கரோனா வைரஸ். கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அமெரிக்காவில் மீண்டும் வெறியாட்டம் போடுகிறது இந்த டெல்டா கரோனா தொற்று. பிள்ளைகள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் இந்த நேரத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் மீண்டும் மாஸ்க் அணிந்தே ஆகவேண்டிய கட்டாயம். பல நிறுவனங்கள் தடுப்பூசியைக் கட்டாயமாக்கினால் பணியாளர்கள் ராஜினாமா செய்து விடுகிறார்கள் எனப் பயந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல் இல்லாத வைரஸ் சிரிக்கிறது.
அமெரிக்காவின் தற்போதைய அரசு இயந்திரம் கொஞ்சம் ஓய்ந்து தான் போய் விட்டது. பதவிக்கு வந்தவுடன் அரசியலாக்கப்பட்ட வைரஸை மீண்டும் விஞ்ஞானமாக்கப் பார்த்தார்கள் . எல்லோருக்கும் இலவச தடுப்பூசி என அறிவித்தார்கள். தடுப்பூசி லாட்டரிகள் அறிவிக்கப்பட்டன. ஊரில் இருக்கும் அத்தனை மைதானங்களிலும் காரில் உட்கார்ந்து கொண்டே தடுப்பூசி போட்டுக் கொள்ள இராணுவம் வந்து ஏற்பாடு செய்தது. இருந்த அத்தனை நிறுவனங்களின் தடுப்பூசியையும் வாங்கினார்கள். போகிற வருகிறவர்களுக்கெல்லாம் ஊசி போட்டுத் தள்ளினார்கள். இவ்வளவு இருந்தும் தடுப்பூசியின் தவறான தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து இந்த முயற்சியைச் சற்றே குலைத்தன.
இன்று வரை வயது வந்தவர்களில் சுமார் 72.7 சதவிகிதம் குறைந்தது ஒரு தடுப்பூசி பெற்றுள்ளனர். 70 சதவிகிதம் பெரியவர்களை ஜூலை 4க்குள் அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது அரசு. ஆனால் அந்த தேசிய இலக்கை அடைய ஏறக்குறைய ஒரு மாதம் அதிகமாகத் தேவைப்பட்டது. அதற்குள் வைரஸ் பிறழ்ந்து டெல்டாவாக உருமாறி வந்துவிட மீண்டும் ஒரே களேபரம்.
தற்போது போர்க்கால முயற்சியாக வீடுவீடாக சென்று ஊசி போட ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் “உங்களுக்காகவும், உங்கள் அன்பு குடும்பத்துக்காகவும், உங்கள் சுற்றுப்புறத்துக்காகவும், உங்கள் நாட்டிற்காகவும் இதைச் செய்யுங்கள். இது கேலிக்குரியதாகத் தெரியலாம், ஆனால் இது ஒரு தேசபக்திக்குரிய விஷயம்” என்று அறிவித்தார். இண்டிபெண்டென்ஸ் டே திரைப்படத்தில் வரும் ஜனாதிபதி பில் புல்மேனை நினைவுபடுத்தும் பேச்சு. வைரஸை வேற்றுகிரகவாசிகள் போலச் சீக்கிரமாக ஓட்டி விடுவார்கள் என நம்பலாம்.
டெஸ்டோஸ்டெரோன் நிறைந்த சார்பட்டா பரம்பரை படத்தைப் பார்க்க முடிந்தது. ரஞ்சித் கண்டிப்பாக ஒரு auteur. தன் கலையைச் சரியாகப் புரிந்து கொண்ட ஒரு திரைப்படக் கலைஞர். அது காலா திரைப்படத்தின் மூலமே தெரிந்தது. சா.பரம்பரையில் தன் கலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ரஞ்சித்திற்கும் அவரது குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
ஜேம்ஸ் ஜாய்ஸ்
”சா.பரம்பரையில் எமர்ஜென்ஸியை என்ன சூப்பரா கதையில யூஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா… சான்ஸே இல்ல… ஜீனியஸ்” என்று யூடூபில் விமர்சகர்கள் சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. இது ஒரு புராதன யோசனை என்று சொல்லிக் கேட்பாரில்லை என்பதால் இதே போல ஒரு இலக்கிய சாதனத்தைப் பயன்படுத்திய போன நூற்றாண்டின் ஜீனியஸ் ஒருவரை பற்றிப் பார்க்கலாம்.
ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ்(James Joyce) எழுதிய யூலிஸீஸ்(Ulysses) ஒரு நவீனத்துவ நாவல். இதை 1918 – 1920 வரை அமெரிக்க இதழான தி லிட்டில் ரிவியூவில் தொடராக எழுதினார்.
முதல் பார்வையில், புத்தகத்தின் பெரும்பகுதி ஒரு கட்டமைப்பே இல்லாமல் குழப்பமானதாகத் தோன்றலாம்; ஜாய்ஸ் ஒருமுறை சொன்னது, “நான் பல மர்மங்களைப் புதிர்களை இதனுள் வைத்துள்ளேன், அதனால் பல நூற்றாண்டுகளாகப் பேராசிரியர்களை பிஸியாக வைத்து இருப்பேன், நான் என்ன சொல்கிறேன் என்று வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள்”. புத்தகம் பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது, இதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாளின் ஒரு மணிநேரத்தை உள்ளடக்கியது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதன் சொந்த இலக்கிய பாணி இருந்தது. சில நனவோடை போலவும், ஒரு நாடகத்தைப் போலவும், குத்துக்கள், பகடிகள் மற்றும் குறிப்புகள் நிறைந்தவையாகவும் எழுதினார் ஜாய்ஸ். மற்றும் ஒவ்வொரு அத்தியாயமும் ஓமரின் ஒடிஸியின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடன் தொடர்புடையது. கதாபாத்திரங்களின் மனதில் தான் கதையின் முக்கிய நிகழ்வுகளே நடக்கின்றன.
இத்தனைக்கும் கதை ரொம்பவே சாதாரணமான கதை. தமிழ் சினிமா விமர்சகர்களின் பாஷையில் காப்பி அடிக்கப்பட்ட காவிய கதை. ஓமரின் காவியமான ஒடிஸியை தழுவி எழுதப்பட்டது. 1904 ஜூன் 16 ஒரு சாதாரண நாள்(இந்நாளின் பின்கதைதான் காமெடியே). அந்த ஒரே நாளில் டப்ளினில் பயணிக்கும் லியோபோல்ட் ப்ளூம் என்னும் ஒரு விளம்பர நிறுவன விற்பனையாளனின் அன்றைய சந்திப்புகளை யூலிஸஸில் விவரிக்கிறார். இதை முழுவதும் புரிந்து, சிரித்துச் சிரித்து ரசிக்க எனக்குப் பத்து வருடங்களாவது ஆகியது. மூன்று முறையாவது படித்த பின் தான் ஜாய்ஸின் புத்திசாலித்தனம் புரிய ஆரம்பித்தது.
ஜாய்ஸ் 1904 ஜூன் 16றை தேர்ந்தெடுக்கக் காரணம், அந்நாளில் தான் மனைவியான நோரா பார்னகிளை முதன் முறையாகச் சந்தித்தார். இருவரும் காதலில் விழுந்து வேலை மற்றும் மகிழ்ச்சியைத் தேடி அயர்லாந்தை விட்டு வெளியேறினார்கள். தன் மனைவியின் மேல் அளவுக்கதிமான காதலிலிருந்த ஜாய்ஸ், அவளைச் சந்தித்த அந்த முதல் நாளை, தான் எழுதிய மிக முக்கியமான நாவலின் கதை நடக்கும் நாளாக தேர்ந்தெடுத்தார்.
அவர் மனைவிக்குப் பின் அவர் காதலித்தது டப்ளின் நகரத்தை. சில பேரழிவுகளில் டப்ளின் நகரம் அழிக்கப்படுமானால், இந்நாவலின் பக்கங்கள் மூலம் செங்கல் செங்கல்லாகக் கட்டியமைக்கப்படலாம் என்ற அளவிற்கு அந்நகரத்தைப் பற்றி ஒரு விரிவான விளக்கம் கொண்டது யுலிஸிஸ். கதையின் நாயகியையும் தன் மனைவியின் சாயல் கொண்டவளாகத் தான் உருவாக்கினார். ஜூன் 16 1904 அன்று வந்த The Irish Times வந்த அத்தனை செய்திகளும் அந்நாவலில் இடம்பெற்றன. கதையில் நாயகன் ப்ளூம் அன்று மதியம் 2:30க்கு நடைபெறவுள்ள குதிரை ரேஸில் த்ரோஅவே என்னும் குதிரையின் மேல் பந்தயங்கட்ட முடிவு செய்கிறான். உண்மையாக ஜூன் 16 1904 அன்று The Irish Timesல் வந்த ரேஸ் அட்டவணையில் அதே நேரத்தில் ஓடிய ஒரு குதிரையின் பெயர் தான் அது. இதைப் போல பலப்பல குறிப்புகள்.
ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றி ரிச்சர்ட் எல்மன் எழுதிய சரிதையில் நாவல் வெளியான அன்று நடந்த ஒரு சம்பவத்தை பற்றி ஒரு குறிப்புள்ளது. நாவல் முதலில் தொடராக வந்த போது அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்காகப் பல நாடுகளில் தடை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாவலை வெளியிட யாரும் முன்வராத போது , பாரிஸிலுள்ள தி ஷேக்ஸ்பியர் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த சில்வியா பீச் முன்வர, ஜாய்ஸின் 40வது பிறந்தநாளன்று 200 காப்பிகளாகப் புத்தகம் வெளியிடப்படுகிறது. இரண்டாம் பிரதியைத் தான் வைத்துக் கொண்டு சில்வியா பீச், முதல் பிரதியை அழகான ஒரு தாளில் மடித்து ஜாய்ஸின் அப்பார்ட்மெண்டிற்கு அனுப்புகிறார் சில்வியா.
புத்தகம் வீட்டிற்கு வருகிறது. ஜாய்ஸ், அவரது மனைவி மற்றும் அவளது தோழி ஆகிய மூவரும் வீட்டில் இருக்கிறார்கள். யுலிஸிஸின் முதல் பிரதியை ஜாய்ஸ் பிரித்து, தன் பவுண்டென் பேனாவை எடுத்து முதல் பக்கத்தைத் திருப்பி, to my darling nora.. with love from jim என்று எழுதி தனது மனைவியிடம் சமர்ப்பிக்கிறார். புத்தகங்களைப் படிக்கும் பழக்கமில்லா மனைவி அதைத் திருப்பி திருப்பி பார்த்து விட்டு, “அது சரி, நிச்சயமாக நான் இதையெல்லாம் படிக்க மாட்டேன்” என்று சொல்கிறாள். அப்படியே திரும்பி தனது தோழியிடம், “இந்தா புத்தகத்தைப் பிடி, இதற்கு என்ன தருவாய்” என்று கேட்கிறாள். தனது மனைவியைப் பார்த்த முதல் நாளை வைத்து எழுதப்பட்ட அந்த நாவல் ஒரு அசாதாரண காதல் செயல். அந்த முதல் பிரதிக்கு நேர்ந்தது ஒரு பாவம். பாவம் ஜாய்ஸ்.