இன்று இருந்திருந்தால் என் தாத்தா ஓங்கூர் துரைசாமியின் 95வது பிறந்தநாள். அவர் பிறந்தநாளன்று போன் செய்தால், ஆல் த பெஸ்ட் என்று மனதார வாழ்த்தி முடிப்பார். அந்த ஆல் த பெஸ்ட் என்னோடு நிறையவே ஒட்டிக்கொண்டு விட்டது. பிறகொரு நாள் நான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த போது கைகுலுக்கி, ஏதோ ஞாபகத்தில் ஆல் த பெஸ்ட் என்று சொல்லிவிட்டேன். ரஹ்மான் தன் தலையை உயர்த்தி ஒரு நொடி என்னை உற்று நோக்கிய போது தான் புரிந்தது நான் செய்த அபத்தம். அந்த அபத்தத்தைப் பற்றி தனியாக எழுதலாம்.
பிறந்ததிலிருந்து இருபத்தேழு வயது வரை நான் பாட்டி தாத்தாவின் அருகிலேயே இருந்ததால் ஏகப்பட்ட ஞாபகங்கள். அதுவும் ஆறு வயது வரை அவர்களுடனே வளர்ந்ததால் தாத்தா சொன்ன உண்மைச் சம்பவங்களும், பாட்டி சாதம் ஊட்டச் சொன்ன கற்பனைக் கதைகளுமே என்னை வளர்த்தன. வீட்டில் முதல் பேரன் நான் ஆதலால் நிறையவே செல்லம்.
தாத்தாவுடன் முதல் ஞாபகம் அவர் என்னை புரசைவாக்கத்தில் உள்ள மெயின் ரோடுக்கு கூட்டிச் சென்று ஏதோ ஒரு தட்டுமுட்டு கடையில் பொம்மை வாங்கிக் கொடுத்த ஞாபகம். அப்போது அந்த கடையை நான் சுவாமி கடை என்று சொன்னதால் அந்த கடைக்காரரும் இந்த கடைக்கு சுவாமிஸ் ஸ்டோர் என்று பெயரிட்டது பற்றி என் தாத்தா சொன்னார். அப்பொழுது நாங்கள் இருந்தது புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவின் ஐந்தாம் நம்பர் வீட்டில். கொஞ்சம் பெரியவன் ஆனவுடன் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டைக் காண்பித்து இந்த வீட்டில்தான் ஆர்.கே. நாராயணன் பிறந்து வளர்ந்தார் என்றார். அதுவும் ஒரு வகையில் என்னை எழுத்தாளன் ஆவதற்குத் தூண்டியது என்று சொல்லலாம்.
தாத்தாவுடன் கைப்பிடித்து கங்காதீஸ்வரர் கோவிலுக்குப் போன ஞாபகங்கள் நிறைய. “தாள்ள போட்டுக்கோ, விபூதியை நல்ல பட்டையா இட்டுக்கணும்” என்பார். சூரியன் இறங்கிப் போய் இருட்டும் முன் கோயிலின் வெளிப் பிரகாரம் சூடாக இருக்க, அங்கிருக்கும் மேடையில் கதா காலட்சேபம் சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்படியே அந்த சூட்டில் நானும் அவரும் உட்கார்ந்து கொள்வோம். கதை சொல்பவர் ஆரம்பிக்க அப்படியே கதை கேட்டுக் கொண்டே தாத்தாவின் மடியில் படுத்து உறங்கிப் போவேன். எட்டு மணி வாக்கில் என்னை எழுப்பி வீட்டிற்குக் கூட்டி வருவார், அங்கு நான் கதை கேட்டதை விட அக்கோயிலின் சத்தத்தில் அமைதியாக உறங்கியது தான் அதிகம்.
ஆனால் தாத்தா சொன்ன கதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவக் கதைகள்.
தாத்தா பிறந்தது ஓங்கூரில். மேல் மருவத்தூருக்கும் திண்டிவனத்துக்கும் சரியாக நடுவிலிருந்த ஒரு குக்கிராமம். இன்று எஸ்.ஆர்.எம் யூனிவர்சிடி வந்து கிராமம் டவுனாகிவிட்டது. 1927ல் அது ஒரு படு கிராமம். அந்த கிராமத்திலிருந்த ஓரிரு ஓட்டு வீடுகளில் இவரின் வீடும் ஒன்று. அப்பா கிராமத்தின் கணக்குப் பிள்ளை. தாத்தாவைத் தொடர்ந்து வீட்டில் ஒரு ஆண் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் .
“தினம் கார்த்தால எங்கம்மா என்னைக் குளிப்பாட்டி, மை இட்டு வீட்டு திண்ணையில் உட்கார வெச்சுடுவா. அங்க போற வரவா எல்லாம் என் கன்னத்தைக் கிள்ளி துரை துரைன்னு சொல்லியே வீரராகவன்ற என் பேர் துரைசாமி ஆகிப் போச்சு. அப்புறம் எங்கப்பா என்னைக் கூட்டிப் போய் எதிர் பக்கமா இருக்கிற வீட்டில விட்டுவார். அங்க தான் பள்ளிக்கூடம். திண்ணையில் மணலை விரிச்சு அதுல எழுதச் சொல்லிக் கொடுத்தாங்க” என்பார்.
பெண்களை திருமணம் செய்ய வீட்டை விற்று அதன் எதிரிலேயே ஒரு மண் குடிசை வீட்டிற்கு குடும்பம் மாற்றலானது. 12வது வயதில் தாத்தாவின் தலையில் வீட்டின் பெரிய பையன் என்று பாரம் விழ சென்னையை நோக்கிப் பயணமானார். “எங்க மாமா என்ன தொழுப்பேடு ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின் ஏத்தி விட்டார். சின்னப் பையன் நான் எனக்கு மெட்ராஸை பத்தி என்ன தெரியும், ஏதோ வந்தேன் எங்கெல்லாமோ வேலை செஞ்சேன்”.
கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு தன் தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்தவுடன், விழுப்புரத்தில் இருந்த தன் அத்தை மகளான அன்னபூரணியை மணந்து கொண்டார். “டேய் எட்டாங் கிலாஸ் படிச்சிருகேன், நன்னா இங்கிலீஷ் வரும். உங்க தாத்தாவை கல்யாணம் பண்ணிக்காம் இருந்திருந்தா இன்னமும் படிச்சிருப்பேன்” என்று என்னிடம் சொல்வாள் என் பாட்டி.
திருமணம் முடிந்த கையோடு புரசைவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்கள் பாட்டியும் தாத்தாவும். மூன்று குழந்தைகள். வருமானம் போதாமல் இரண்டு மூன்று வேலைகள் செய்ய ஆரம்பித்தார் தாத்தா. தன் குடும்பம் மட்டுமல்லாமல் ஊரில் உள்ள அப்பா அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாட்டி இழுத்துப் பிடித்து குடும்பத்தை நடத்தினாள். பாரிஸ் கார்னரிலிருந்தது தாத்தா கணக்கெழுதும் கம்பனி. அங்கிருந்து புரசைவாக்கத்திற்கு நடந்தே சென்று வருவார். பஸ்சில் போனால் பத்துப் பைசா. அதை சேமிக்க தினமும் நடராஜா தான்.
இந்த கடினமான வருடங்களை பற்றி பாட்டியிம் தாத்தாவும் தனித்தனியாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தாத்தாவின் வெர்ஷனில் எப்பவுமே ஒரு நம்பிக்கை தெரியும். கொண்டு வரும் காசில் வீட்டை நடத்த வேண்டிய பாட்டிக்கோ எப்பவுமே கஷ்டம் தான். “எனக்கு என்ன தெரியும், நான் ஆபீஸ் போயிடுவேன், இவ தான் குழந்தைகளையும் வளர்த்து குடும்பத்தையும் நடத்தினா” என்று பாட்டியை கைகாட்டி விடுவார் தாத்தா. ஆனால் பாட்டிக்கும் தாத்தாவிற்கும் எவ்வளவிற்கு அன்னியோன்யம் இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு சண்டையும் வரும்.
1970களில் போட்டோபோன் என்று ஒரு நிறுவனத்தில் கணக்கெழுத வேலைக்குச் சேர்ந்தார் தாத்தா. அந்த நிறுவனம் தியேட்டர்களில் புரஜக்டர்கள் விற்கும் வியாபாரத்தில் இருந்தது. ராணி சீதை ஹால் இருக்கும் அதே கட்டிடத்தில் இருந்தது அவருடைய ஆபீஸ். தினம் மதிய வேலையில் அங்கிருந்து நடந்து போய் ட்ரைவ்-இன் வுட்லண்ட்ஸில் காபி குடித்தை பற்றி சொல்வார். 1996ல் இருந்து 2000ம் வரை தினமும் நானும் ஆங்கே தினமும் ஆஜராகி அதே காபியை குடித்தது வேறு கதை.
அப்படி ஒருநாள் ஆபிஸுக்கு கணக்கெழுத போன ஒரு நாளில் தாத்தாவிற்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. ஹாஸ்பிட்டலில் அனுமதித்த பின் அம்மாவின் ஆபிஸுக்கு போன் வர அவளும் மாமாவும் மாமியும் ஓடிப் போனார்கள். சின்னதாய் ஒரு பைபாஸ் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்தது தாத்தாவிற்கு டையட். பாட்டி அன்று முதல் தாத்தாவிற்கு எதை கொடுத்தாலும் பார்த்துப் பார்த்து தான் கொடுப்பாள். சர்க்கரை கம்மியாய், தேங்காய் சேர்க்காமல், அப்பளம் இல்லாமல் என்று ஏகப்பட்ட கெடுபிடி. எற்கனவே தண்ணியாய் இருக்கும் ஆவின் பாலை காய்ச்சி அதை டீ வடிகட்டியினால் வடிகட்டிய பின் தான் காபி போட்டுக் கொடுப்பாள்.
தாத்தாவை பற்றி முக்கியமாக ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். தாத்தா ஒரு hoarder. எதையும் தூக்கிப் போட மாட்டார். பரணிலில் என்றோ உபயோகப்படுத்திய பழைய இரும்பு சேர் இருக்கும், இரும்புப் பெட்டி இருக்கும், அதில் சில பல பேப்பர்கள் இருக்கும். தூக்கிப் போட யாரும் எத்தனித்தால், ” அது மாட்டம் இருந்துட்டுப் போறது, உங்களை என்ன பண்றது” என்பார். பழைய பேனாக்களை சேமித்து வைப்பார். தன் மகளின் திருமண பட்ஜெட் கடைசி நயா பைசா வரை எழுதி வைத்திருந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு தாத்தா ரிட்டையரானார். அப்பொழுதும் தன் மகனின் நிறுவனத்திற்கு கணக்கெழுதினார். புரசைவாக்கத்திலிருந்து ராமாபுரத்திற்கு வீடு மாறினார்கள். அந்த வீட்டில் தாத்தாவிற்கு ஒரு அறை இருந்தது. அதில் உட்கார்ந்து தான் கணக்கெழுதுவார். அதில் தனக்கென ஒரு அலமாரி வைத்திருந்தார். நான்கு அடி உயரத்திற்கு ஒரு இரண்டடி அகலமான ஒரு கருப்பு மர அலமாரி. அதில் மூன்று அடுக்குகள் இருந்தன. கீழே இருந்த கடைசி அடுக்கு இழுக்கும் படி இருக்கும். அந்த அலமாரியை யாரையும் தொட விடமாட்டார், தன் பேரப்பிள்ளைகள் உட்பட. அதில் தான் அவருடைய இதர பொருட்களை வைத்திருந்தார். பஸ் டிக்கெட், செல்லாத நாணயங்கள், சட்டை பட்டன்கள், பேனாக்கள், பழுப்படைந்த காகிதங்கள். அந்த அலமாரியின் வெளியே சகலமும் ஓட்டப்பட்டிருக்கும் – பஞ்சாங்கக் குறிப்புகள், இவ்வருட மாத காலண்டர், கிரிக்கெட் அட்டவணை, இன்னபிற. அதில் நான் ஒரு ரஜினி படமும் ஓட்டப் பார்த்தேன். தாத்தா சில வாரங்களுக்குப் பின் அதன் மேல் சங்கராச்சாரியார் படத்தை ஒட்டி ஒரு ரஜினி ரசிகனின் பழியை சம்பாதித்துக் கொண்டார்.
தாத்தா கிரிக்கெட் பார்ப்பார், தினமும் ஹிந்துவும் திணமணியும் படிப்பார். துக்ளக் படிப்பார், என்னையும் படிக்க்ச் சொல்லுவார். வாராவாரம் சோ எழுதிய மகாபாரதம் பேசுகிறதை படித்துக் கொண்டே டீவியில் மகாபாரதம் பார்த்தார். அதை அவருடன் சேர்ந்து படித்த ஞாபகம் இன்னமும் உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர அனுதாபியாய் இருந்தார். சங்கராச்சாரியாரின் கைதுக்குப் பிறகு அவருக்கு ஜெயலலிதாவின் மேல் இருந்த ஆதரவை பின் வாங்கிக் கொண்டார். அவரை திட்டித் தீர்த்தார், எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு பாட்டிக்கு கண் ஆப்பரேஷன் செய்தார்கள். அதில் கொஞ்சம் தப்பாய் போய் அவளுக்கு ஒரு கண் பார்வை சரியாக தெரியாமல் போயிற்று. ஆனாலும் தன் ஒற்றை கண்ணை வைத்துக் கொண்டு தாத்தாவிற்கு தானே உணவு கொடுப்பாள். 2013ல் அவள் இறந்து போகிற வரையில் தாத்தாவை பார்த்துக் கொண்டாள். அவள் இறந்த போது நான் அமெரிக்காவில் இருந்தேன். 2014கில் சென்னை சென்றிருந்த போது தாத்தாவை பார்க்கப் போனேன். வீட்டின் முன் அறையில் பாட்டியின் ஒரு படம் மாட்டப்பட்டிருந்து. தாத்தாவை பார்த்தவுடன், “என்ன தாத்தா இப்படி ஆயிடுச்சு” என்றேன். தன் தலையை திருப்பி பாட்டியின் படத்தை பார்த்து, அங்காலாய்ப்பாய், ” அவ போயிட்டா” என்று கைகளை போச்சு என்றபடி அசைத்தார். மற்றபடி ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். இத்தனை வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பாட்டியை பற்றி ஏதாவது சொல்வார் என்று நினைத்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் போய்விட்டது. மேலும் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டேன்.
வயதாக ஆக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் தப்ப ஆரம்பித்தது. தள்ளாட ஆரம்பித்தார். 2017ல் சென்னை சென்றிருந்த போது இரண்டு நாட்கள் அவருடன் இருந்தேன். அவர் வாயை கிளரி ஏதாவது கதை சொல்வாரா என்று பார்த்தேன். அப்பொழுதும் தன் 90வது வயதில் இரண்டொரு வாழ்க்கைக் கதைகளை சொன்னார். கடந்த இரண்டு வருடங்களாக ரொம்பவும் முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அப்பொழுதும் வாக்கர் வைத்து நடந்து வந்து கிரிக்கெட் பார்ப்பார், பிறகு சென்று படுத்துக் கொள்வார்.
இவ்வருட பிப்ரவரியில் பிஷ்மாஷ்டமி அன்று தன் 94ம் வயதில் தாத்தா அவரின் வீட்டில் அவர் மகனின் மடியில் அமைதியாக காலமானார். அவரின் கடைசிச் சடங்குகள் முடிந்த பின் அவரின் அறையை சுத்தம் செய்தார்கள். என் கஸின் வாட்ஸ்சாப்பில் மெசேஜ் அனுப்பினான். “தாத்தாவோட அலமாரியை கடைசியா நோண்ட முடிஞ்சது. you would have loved clearing his cupboard…full of life. ஆனா முன்ன மாதிரி ரொம்பவும் hoarding விஷயமெல்லாம் இல்ல, எதோ சின்ன சின்ன விஷயம் இருந்தது. ஆனா அலமாரியோட அந்த கடைசி drawerல ஒரே ஒரு கிழிஞ்ச போட்டோ மட்டும் தான் இருந்தது, interesting” என்றான்.
தன் திருமணத்தன்று buff வைத்த ஜாக்கெட் போட்டிருக்கும் அழகான அன்னபூரணிப் பாட்டியின் அந்தப் புகைப்படத்தை அன்று தான் நாங்கள் முதலில் பார்த்தோம்.