
கங்குபாய் காட்டியாவாடி திரைப்படம் சுமாராய்த் தான் இருந்தாலும், முதல் அரை மணி நேரத்துக்கு திரையிலிருந்து கண்ணை விலக்க முடியாமல் பார்க்க வைத்த பன்சாலிக்கு நன்றிகள் பல. சோகம் அப்பி வழியும் அதே முதல் முப்பது நிமிடங்களில் துல்லியமான மெல்லிசையும், பல வண்ணங்கள் வழிந்தோடும் கலையும் ஒளிப்பதிவும் கவனம் கலைக்க முயன்றாலும், பகீரென்று அடிவயிற்றைக் கலக்கும் திரைக்கதையால் பன்சாலியும், நாளை மலரப்போகும் ரோஜாப்பூ போலச் சன்னமான நாசியுடனும் அழுத்தமான உதட்டுடனும் இருக்கும் கங்குவும்(ஆலியா பட்) தான் மனசில் நிற்கிறார்கள்.
எது முதலில் வந்தது காமமா காதலா என்ற கேள்விகளுக்கெல்லாம் இடம் தராத ஒரு இடம் தான் பம்பாயின் காமாத்திபுரா. வந்தான், படுத்தான், போனான் என்றில்லாமல் வந்த இடத்தில் கங்குவை ஒருவன் மூர்க்கமாய் துன்புறுத்திக் கிட்டத்தட்டச் சாக அடிக்கும் போது, அந்த நாளைய ரோஜா புயலாகிறது.
இம்மாதிரி பயோபிக் படங்களில் எப்பொழுதுமே அதீத திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது தான். அதற்காக நிறையவும் மெனக்கெடாமல், பாலியல் தொழிலை மகிமைப்படுத்த முயலாமலும், அதே நேரத்தில் பாலியல் தொழிலாளிகளின் மாறாத அவலநிலையை அடிநாதம் மாறாமல் எடுத்து வைத்ததற்குப் பாராட்டுக்கள்.
பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை காதலைச் சொன்ன படங்கள் இருக்கின்றன. ஆனால் இப்படத்தில் இருபத்தைந்தாவது நிமிடம் ஒரு காட்சி வருகிறது. பல பா.தொ பெண்கள் ஒரு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பெண் கங்குவிடம் தன் தந்தைக்குக் கடிதம் எழுத உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். கங்கு ஒரு இன்லாண்ட் காகிதத்தில் எழுத ஆரம்பிக்க, எதை வேண்டுமானாலும் எழுது என்று அந்தப் பெண் சொல்ல , கங்கு கடிதத்தின் முதல் வரியைச் சொல்லிக் கொண்டே எழுத ஆரம்பிக்கிறாள். சட்டென அந்த அறையில் இருக்கும் மற்ற பெண்களின் கண்கள் எங்கெங்கோ பார்த்தபடி நிலைத்துப் போகின்றன. கடிதத்தின் அடுத்த வரியைத் தன்னையும் அறியாமல் மற்றொரு பெண் சொல்கிறாள். அதற்கடுத்த வரியை இன்னொரு பெண்ணின் உதடுகள் உச்சரிக்கின்றன. எல்லோரும் தத்தம் தந்தைகளுக்கு எழுத வேண்டியதை ஒரு கடிதத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் காமாத்திபுராவுக்கு வந்து சேர்ந்த பாதைகள் பல ஆனால் பலவும் ஒன்றே. இவ்வாண்டின் கவிதைத் தருணம் வெளிப்பட்ட திரைப்பட காட்சி இதுவாய்த் தான் இருக்கமுடியும்.