புத்தகம்

இந்திய புத்தக விமர்சனம்

book review.jpg
[படம் – இந்து]

நிலஞ்சனா ராய் இந்துவில் எழுதியிருக்கும் The decline of the book review, ஒரு காலத்தின் கட்டாயம். புத்தகம் மற்றும் கலை சார்ந்த விமர்சனங்களை படிப்பாரில்லாமல், எல்லா பத்திரிக்கைகளும் ஏறக்குறைய நிறுத்தி விட்டன. மெட்டி ஓலியும், வால மீனும் மக்களை சதா சர்வ காலமும் ஏழரை சனி போல பிடித்துக் கொண்டிருப்பதால், குமுதத்திலும் விகடனிலும் இளமை காம்பெளண்ட் பக்கம் பக்கமாக தலை விரித்தாடுகிறது. அப்படியே தப்பி தவறி புத்தக விமர்சனம் போட்டு விட்டால், அதில் ஒரு controversy இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்.

குமுதத்தில் பு(து)த்தகம் என்று அரை பக்கத்திற்கு ஏனோ தானோ என்று ஏதோ கிறுக்குகிறார்கள். விகடனில் இப்பொழுது புதிதாக புத்தக விமர்சனம் வருகிறது. கல்கியிலும் பு.வி படித்தாக ஞாபகம். இந்தியா டுடேயில் மட்டும் தான் ஒரு பக்க பு.வி போடுகிறார்கள். அதுவும் சாமானியனுக்கு புரியாத மாதிரி விஸ்தீரணம், கோட்பாடு, கொழுக்கட்டை என்று ஏதோ முத்தொள்ளாயிரம் எழுதுகிறார்கள்.

இந்த கதியில் கடந்த மூன்று வருடங்களாக, சென்னை புத்தக சந்தை, பங்குச் சந்தை போல் பணம் கொழிப்பதாக சொல்லும் BAPASIயை [Booksellers and Publishers Association of South India] நம்பலாமா வேண்டாமா என்று தோன்றுகிறது. எந்த ஒரு தொழிலும் அதற்கு தொடர்புடைய மற்ற தொழில்களை உருவாக்கிக் கொள்ளும் என்பது இந்திய, குறிப்பாக தமிழ் புத்தக தொழிலுக்கு இன்னும் உண்மையாகவில்லை.

விமர்சகர்களுக்கு கொடுக்கும் சல்லிக் காசில் பிடித்தம் பார்க்கும் mainstream பத்திரிக்கைகள், atleast, வாசகர்கள் எழுதிப் போடும் ஒரு பக்க புத்தக-கலை விமர்சனங்களையாவது கடைசி பக்கங்களில் போடுமேயானால், புண்ணியமாய் போகும்.

பி.கு – மேலே இருக்கும் இந்து கேஷவ் வரைந்த கார்டூனுக்கும், இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த டைம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்க்கும், ஒரு obvious ஒற்றுமை இருப்பதாக நான் சொன்னால் அடிக்க ஆட்டோ அனுப்புவார்கள். இந்த மாதிரி காரணங்களிற்க்காக மட்டுமே பல விமர்சனர்கள், தமிழ் சினிமா பாட்டெழுத போய் விட்டார்கள் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் !!

இசை

சஞ்சய் சுப்பிரமணியம்

சஞ்சய் சுப்பிரமணியம்

என்னை கேட்டால் கர்னாடக இசையில் இப்பொழுதுல்ல Top Three ஆசாமிகளில், சஞ்சய் சுப்பிரமணியன் தான் பர்ஸ்ட் என்பேன். சுருதி சுத்தமாகவும், ஸ்பெஷ்டமான உச்சரிப்புடனும், சங்கதியில் hip-hop பண்ணக்கூடிய திறமையுடனும் இருப்பவர். Total entertainer.

ஒரு மார்கழி இரவில், பத்மா சேஷாத்திரியில் அவர் பாடிய தோடி ராகம், இன்னும் நினைவிருக்கிறது. அதே ராகத்தை பாடிக் கொண்டே பைக்கில் வீடு திரும்பிய போது, நாய் துரத்தியது.

இம்மாத காலச்சுவடு, அவருடன் ஒரு அருமையான நேர்காணலை வெளியிட்டுள்ளது. நம் mainstream பத்திரிக்கைகள் போல் ஒரு ரெண்டு பக்க கேள்வி பதில் மாதிரி இல்லாமல் மிக விவரமான நேர்காணல் இது. கெட்டி மீசை சஞ்சயின் நேர்காணல் ஒரு கச்சேரி அனுபவம்.

இசை · சியாட்டல்

எந்தரோ மஹானுபாவுலு !!

போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது.

நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு மூக்குப்பொடி மாமாக்கள், யேசுதாஸின் கச்சேரியை அலசி ஆராய்ந்தார்கள். காதை கொஞ்சம் அந்த பக்கம் சாய்த்தேன். அவர்கள் கொஞ்சம் கர்னாடகத்தை பற்றி பேசி விட்டு, சென்னை சபா கச்சேரிக்கும் சியாட்டல் கச்சேரிக்கும் ஆறு வித்தியாசம் போட போய் விட்டார்கள். அவர்களின் மருமகள்கள் கச்சேரிக்குப் போனதை ஏதோ சிவாஜி படத்தை பர்ஸ்ட் ஷோ பார்த்த மாதிரி பீலா விட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான artificial expectation கிளம்புவதால், நம்மூர் பட்டு மாமி sistersகள் ஸ்ருதி பெட்டி தம்பூரா சகிதமாக க்ளீவ்லாண்டையும், அட்லாண்டாவையும், பச்சை டாலர்களையும் படை எடுக்கிறார்கள்.

பல desiக்கள், மாதா மாதம் அம்மா அப்பாவுக்கு ஒரு 200 டாலரை money2indiaவில் அனுப்பிவிட்டு, இங்கிருந்தே சென்னை கனவு காண்கிறார்கள். தமக்கும் சென்னைக்குமான gapஐ குறைப்பதாக நினைத்துக் கொண்டு, கச்சேரியை முற்றுகையிட்டு, எல்லா பாட்டுக்கும் ஆதி தாளத்தை தொடை தட்டுகிறார்கள். குழந்தைககு diaper மாற்றி்க் கொண்டே, ஆலாபனைக்கு நடுவில் சபாஷ் போடுகிறார்கள். கர்னாடக சங்கீதம் எங்கோ எஸ்கேப் ஆகிறது.

சியாட்டல்

ஏறக்குறைய சொர்க்கம்

ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது.

மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால் நீங்கள் மயூரி போனீர்களேயானால், அங்கு கேட்கும் டயலாக்குகள் படு சுவாரசியமானவை.

“ஏம்மா நான் வேணும்னா எடுத்து தரட்டுமா” – CPWDல் இருந்து ரிடையர் ஆகி மகள் பிரசவத்திற்காக வந்த அப்பா.

“உளுத்தம் பருப்பு சின்ன பாக்கட் தான் இருக்காம். உங்களுக்கு அது கிடைக்கிற வரைக்கும் இட்லி கெடயாது. சீரியல் தான்” – ஒரு சுடிதார் மாமி, ஜீன்ஸ் மாமாவிடம்.

“ஏங்க உங்க செல்போனை குடுங்க, அர்ச்சனா நம்பரை நோட் பண்ணிக்கலாம்” – போன வாரம் தான் வந்து இறங்கியதால், ஜந்துக்களை போல அமெரிக்காவை பார்க்கும் புதுப் பெண் தீபா.

இப்படியாக எங்கு திரும்பினாலும் தமிழ்.

தமிழ் சங்கத்தில் ஈ ஓட்டுகிறார்கள். மயூரியில் தமிழ் வழிகிறது. ஒன்றிரண்டு ‘ஐ டோண்ணோ தமில் யார்’ தமிழர்கள் ஓப்பன் டாப் பி.எம். டபிள்யு-வில் வந்து பராத்தாவும், தால் மக்னீயும் வாங்கி போவார்கள். அவர்களை லூசில் விட்டு பார்த்தால், தமிழ் வளர்கிறது. Atleast Tamil continues. தமிழ் காதில் கேட்கும் பொழுது குஜால்சாக இருக்கிறது. ஏறக்குறைய சொர்க்கம். ஏறக்குறைய.