ஏறக்குறைய சொர்க்கம்

ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது.

மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால் நீங்கள் மயூரி போனீர்களேயானால், அங்கு கேட்கும் டயலாக்குகள் படு சுவாரசியமானவை.

“ஏம்மா நான் வேணும்னா எடுத்து தரட்டுமா” – CPWDல் இருந்து ரிடையர் ஆகி மகள் பிரசவத்திற்காக வந்த அப்பா.

“உளுத்தம் பருப்பு சின்ன பாக்கட் தான் இருக்காம். உங்களுக்கு அது கிடைக்கிற வரைக்கும் இட்லி கெடயாது. சீரியல் தான்” – ஒரு சுடிதார் மாமி, ஜீன்ஸ் மாமாவிடம்.

“ஏங்க உங்க செல்போனை குடுங்க, அர்ச்சனா நம்பரை நோட் பண்ணிக்கலாம்” – போன வாரம் தான் வந்து இறங்கியதால், ஜந்துக்களை போல அமெரிக்காவை பார்க்கும் புதுப் பெண் தீபா.

இப்படியாக எங்கு திரும்பினாலும் தமிழ்.

தமிழ் சங்கத்தில் ஈ ஓட்டுகிறார்கள். மயூரியில் தமிழ் வழிகிறது. ஒன்றிரண்டு ‘ஐ டோண்ணோ தமில் யார்’ தமிழர்கள் ஓப்பன் டாப் பி.எம். டபிள்யு-வில் வந்து பராத்தாவும், தால் மக்னீயும் வாங்கி போவார்கள். அவர்களை லூசில் விட்டு பார்த்தால், தமிழ் வளர்கிறது. Atleast Tamil continues. தமிழ் காதில் கேட்கும் பொழுது குஜால்சாக இருக்கிறது. ஏறக்குறைய சொர்க்கம். ஏறக்குறைய.