எந்தரோ மஹானுபாவுலு !!

போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது.

நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு மூக்குப்பொடி மாமாக்கள், யேசுதாஸின் கச்சேரியை அலசி ஆராய்ந்தார்கள். காதை கொஞ்சம் அந்த பக்கம் சாய்த்தேன். அவர்கள் கொஞ்சம் கர்னாடகத்தை பற்றி பேசி விட்டு, சென்னை சபா கச்சேரிக்கும் சியாட்டல் கச்சேரிக்கும் ஆறு வித்தியாசம் போட போய் விட்டார்கள். அவர்களின் மருமகள்கள் கச்சேரிக்குப் போனதை ஏதோ சிவாஜி படத்தை பர்ஸ்ட் ஷோ பார்த்த மாதிரி பீலா விட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான artificial expectation கிளம்புவதால், நம்மூர் பட்டு மாமி sistersகள் ஸ்ருதி பெட்டி தம்பூரா சகிதமாக க்ளீவ்லாண்டையும், அட்லாண்டாவையும், பச்சை டாலர்களையும் படை எடுக்கிறார்கள்.

பல desiக்கள், மாதா மாதம் அம்மா அப்பாவுக்கு ஒரு 200 டாலரை money2indiaவில் அனுப்பிவிட்டு, இங்கிருந்தே சென்னை கனவு காண்கிறார்கள். தமக்கும் சென்னைக்குமான gapஐ குறைப்பதாக நினைத்துக் கொண்டு, கச்சேரியை முற்றுகையிட்டு, எல்லா பாட்டுக்கும் ஆதி தாளத்தை தொடை தட்டுகிறார்கள். குழந்தைககு diaper மாற்றி்க் கொண்டே, ஆலாபனைக்கு நடுவில் சபாஷ் போடுகிறார்கள். கர்னாடக சங்கீதம் எங்கோ எஸ்கேப் ஆகிறது.

Create a website or blog at WordPress.com