kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • February 28, 2011

    யார் தவறு?

    ”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

    பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

    பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    0000

    தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

    இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

    புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

    0000

    3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

    இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

    3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

    0000

    1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

    இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

  • February 27, 2011

    சுஜாதா இங்கே ஒளிந்திருக்கிறார் (pun intended)

    http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color=ffffff&fullscreen=1

    மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம் 24 ரூபாய் தீவு முகுந்தன் அனிதா பசித்த புலி ’வசந்த’குமாரன் அப்ஸரா நகரம் பாதி ராஜ்யம் பதினாலு நாட்கள் கணேஷ் சு பெண் இயந்திரம் கடவுள் வந்திருந்தார் ஜூனோ ஆஸ்டின் இல்லம் இன்னமும் பெண் கனவுத் தொழிற்சாலை விக்ரம் நில் கவனி தாக்கு கணையாழியின் கடைசிப் பக்கம் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு ஜா ப்ரியா ஜன்னல் மலர் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தீண்டும் இன்பம் மாயா நைலான் கயிறு ஆதலினால் காதல் செய்வீர் எப்போதும் பெண் பாரதி இருந்த வீடு அகப்படும் வரை திருடனல்ல கற்றதும் பெற்றதும் தா மாஞ்சு பாலம் ஆ என் இனிய இயந்திரா அனிதா – இளம் மனைவி யவனிகா பத்து செகண்ட் முத்தம் மெரினா ஓடாதே 6961 அடிமைகள் அப்பா அன்புள்ள அப்பா குருபிரசாதின் கடைசி தினம்…சுஜாதா.

    அல்லது sujathalogyயில்.

  • February 20, 2011

    RIP Malaysia Vasudevan

    http://www.youtube-nocookie.com/v/XpYFTU7Pl-s?fs=1&hl=en_US&rel=0

    One of my all time faves, thanks to MV for a remarkable rendering.

  • February 14, 2011

    பெரும்பள்ளம்

    எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது.

    மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை சற்றே மாற்றக் கூடியவை. நான்கு நாட்களுக்கு உலுலாக்காட்டியாக் போய்க் கொண்டிருந்த இந்த புரட்சி ஊர்வலங்களைப் பார்த்து அரசு பயந்து போய் விட்டது நன்றாக தெரிந்தது. அதற்கு பிறகு நடந்தது தான் பயங்கரம். யாரோ போய் கைரோவில் இருந்த சிறைச்சாலையை திறந்துவிட 17,000 கைதிகள் வெளியே தப்பி ஓட, பிடித்தது தீ. இந்த கைதிகளில் அரசு ’சந்தேகத்தின் பேரில்’ பிடித்துப் போட்ட நல்லவர்களும் அடக்கம். ஆக நல்லவர்களும் அல்லாதவர்களும் ஒரே நேரமாக வெளியே வர ஏற்கனவே இருந்த பதட்டம் அதிகமாகி ஒரே களேபாரம். புரட்சி செய்து கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் பேர் வீடு திரும்பி தத்தம் காலனிக்கு பாதுகாப்பாய் இருக்க மற்றவர்கள் இன்னமும் விடிய விடிய புரட்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    புரட்சி நல்லதா கெட்டதா என்பதை அந்நாட்டவர்களிடம் விட்டு விடலாம். நம்நாட்டில் இம்மாதிரி ஏன் நடக்காது என்றாவது யோசித்துப் பார்க்கலாம். எகிப்தில் முபாரக் என்றொருவர் தான் இருக்கிறார். லஞ்சம் நம்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு தேசிய குணமாகியிருக்கும் இந்நாட்களில் யாரை எதிர்த்து புரட்சி செய்வோம்? ப்ளாக் டிக்கெட்டில் இருந்து, ப்ளாடுக்கு பட்டா வாங்குவது, பம்பு தண்ணிக்கு குழாயை வீட்டுக்கு இழுப்பது, குழந்தைக்கு ஸ்கூல் டொனேஷன் என்று எல்லோரும் எதோ விதங்களில் கறைப்பட்டுப் போய் இருக்கிறோம். அப்படியே புரட்சி பண்ணுகிறோம் என்று ஜெமினி பிரிட்ஜுக்கு அடியில் போய் நின்று கோஷமிடும் போது, உண்மை நெருட திரும்பி வந்து விடுவோம். ஆக புரட்சியும் கூட உதவாதென்றால் என்றால், சிம்பிளாக, சுயேச்சையில் நிற்கும் ஐஐடி மாணவன் யாருக்காவது ஓட்டாவது போட்டு கறை கழுவலாம்.

    இத்தனை நாட்களாக சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”எகிப்துல என்னாச்சு சார்” என்று கேட்பவர்களுக்கு எழுதிப் புரியவைக்கவே முடியாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

    0000

    இந்த எகிப்துப் புரட்சியில் ஈடுபட்டு முக்கிய அமைப்பாளர்களை இந்த சத்தமெல்லாம் ஓய்ந்து விட்ட போது, “அந்த நாட்கள் எப்படி இருந்தது?” என்று கேட்டுப் பார்த்தால், “கருப்பாய் அடி வயிற்றை கவ்வுகிற பயமாய் இருந்தது” என்று சொல்லுவார்கள். வேலையிருக்குமா இருக்காதா, பாஸ் ஆவோமா மாட்டோமா என்ற நாட்கள் நமக்கும் நடந்திருக்கலாம், அப்போது நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டுப் பார்த்தாலும் இப்படித் தான் பதில் சொல்லுவோம். இதைத் தான், பெரும்பள்ளம் அல்லது Pit என்கிறார்கள்.

    உங்கள் வேலையில் தினம் தினம் இம்மாதிரி தோன்றுகிறதா? அமாம் என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரி அடிவயிற்று பயம் இல்லையென்றால் உங்களில் comfort zoneல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த தலைமைப் பண்புள்ளவர்கள் மீண்டும் மீண்டும் இம்மாதிரி பெரும்பள்ளங்களைத் தேடிப்போய் விழுந்து, மீண்டும் மேலெழுந்து வருகிறார்கள். கேட்டால் சேலன்ஞ் என்கிறார்கள். கேள்விப்பட்டதுண்டா?

    சமீபத்தில் Validation என்றொரு குறும்படம் பார்த்தேன். இம்மாதிரி கட்டிப்புடி வைத்தியங்களுக்கு நாமெல்லோரும் ஏங்குகிறோம். இதுவும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு தான் என்று தோன்றுகிறது. பதினாறு நிமிடங்களும் பார்க்க முடியவிட்டாலும் முதலிரண்டு நிமிடங்களையாவது பார்த்து விடுங்கள்.

    0000

    10 000 000 000 மிருகங்கள். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.

    Fast Food Nation எனும் புத்தகத்தில் இம்மாதிரி உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வார ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போய் விட்டார்கள். என்ன தான் நாங்கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மரியாதையுடன் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். Inside a Slaughterhouse என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை.

  • February 7, 2011

    இன்னொரு தல்

    அமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting. சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.

    நாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள். 1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.

    மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி, தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து, பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.

    இதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon. ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன். பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

    0000

    ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

    ஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.

    0000

    தமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர், ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.

    கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.

    பாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும். நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்’ என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.

    சமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. Bad Arrack.

    0000

    இனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம், இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா? அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள். ரொம்ப தாங்க்ஸ்.

    படம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.

    0000

    பெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.

    FIRST
    ..
    ..
    This child is a marvel, a matchless wonder.
    A staggering child, a child astounding,
    Dazzling, diaperless, dumbfounding,
    Stupendous, miraculous, unsurpassed,
    A child to stagger and flabbergast,
    Bright as a button, sharp as a thorn,
    And the only perfect one ever born.

    SECOND

    Arrived this evening at half-past nine.
    Everybody is doing fine.
    Is it a boy, or quite the reverse?
    You can call in the morning and ask the nurse.

←Previous Page
1 … 21 22 23 24 25 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 25 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar