பிரசண்டேஷன் தேவையா?

Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.

ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது. இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.

அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன. பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான். அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.

நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும். மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள். அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது. ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம். இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

0000

”நாளைக்கு ஒரு ப்ரசண்டேஷன் பண்ணனும் நீங்க…” என்று முடிக்கும் முன் உடனே பவர்பாயிண்டை திறந்து வைத்துக் கொண்டு மோட்டுவளைக் கவிஞர் போல யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பவர்பாயிண்டை சரியாக உபயோகிக்காமல் அதை வைத்துக் கொண்டு யோசிப்பதன் விளைவு தான் தாங்க முடியாத கருத்துரை, வரவேற்புரை, பொழிப்புரை மற்றும் இன்னபிற உரைகள்.

பவர்பாயிண்ட் என்பது கடைசியில் வருவது. முதலில் வரவேண்டியது என்ன சொல்லப்போகிறோம், எப்படி சொல்லப்போகிறோம், ஏன் சொல்லப் போகிறோம் போன்ற தனக்கான கேள்விகள். இக்கேள்விகளை டிஜிட்டல் அல்லாத முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெள்ளைப் பலகையிலோ, போஸ்-இட்களிலோ எழுதப்படும் ப்ரசண்டேஷன்கள் திருத்தப்பட்டு கடைசியிலேயே பவர்பாயிண்டில் வரையப்படுகின்றன. இம்மாதிரி ப்ரசண்டேஷன் செய்வதற்காக நம்மை தயார்ப்படுத்தும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் டிசைன் பள்ளிகள் இருந்தும் மோசமான ப்ரசண்டேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதை சுலமாக்க நான்கு விதிகளை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதலாவது, சிங்கிள் டீ குடித்துக் கொண்டே, சொல்லப் போகிற விஷயம் என்ன என தீர்மானிப்பதும் மற்றும் உங்களின் நண்பர்கள் அல்லது குழுவுடன் விவாதிப்பது. அதாவது brainstorming.

2வது, மேலே சேர்க்கப்பட்ட எண்ணங்களை ஒரு முகப்படுத்துவது. உங்கள் வழங்குதலின்(presentation) முக்கிய கருத்து ஒன்றை தீர்மானிப்பது. இரண்டு மூன்று இருபது கருத்துக்கள் சொன்னால் புரியாமல் போய்விடும். ஆக ஒரு ப்ரண்டேஷனுக்கு ஒரு முக்கிய கருத்து. அம்புடுதேன்.

மூன்றாவது, எப்படி வழங்கப் போகிறோம் எனத் தீர்மானிப்பது. Storyboarding. வெள்ளைத் தாளில் சொல்ல வருவதை கையினால் படம் போட்டு எழுதிக் கொள்வது. இது இல்லாமல் பவர் பாயிண்டை திறப்பது, ஸ்கிரிப்ட் இல்லாமல் ஷூட்டிங் போவது போல் அபாயகரமானது. இந்த வகையில் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வைத்து ஒரு வழியாக ப்ரசண்டேஷனின் வடிவம் வந்து விடுகிறது.

கடைசியாக பவர்பாயிண்டடுகள், கலர்கள், படங்கள், அனிமேஷன்கள் ஆகியன. அனிமேஷன் இல்லமல் புல்லட்டுகள் இல்லாமல் அதிகமாய் எழுதாமல் வெறும் படங்களாலேயே சொல்லப்படும் வழங்குதல்கள் தான் ரசிக்கப்படுகின்றன என்கிறார்கள். கதை கேட்டு வளர்ந்த ஜென்மங்கள் நாம். இது எல்லா வழங்குதல்களிலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. முடிகிற போது செய்யாதது தான் குற்றம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ப்ரசண்டேஷன் என்றால் எதாவது படம் காட்டித் தான் பேச வேண்டும் என்பது அல்ல. முதலில் ப்ரசண்டேஷனே தேவையா என்ற கேள்வியை கேட்கலாம். வெறும் ஈமெயில் மெமோ அனுப்பினால் போதாதா? அல்லது ஒரு அறையில் ஒன்று கூடி பேசிவிடலாமா? இவையெல்லாம் முடியாதென்றால் வருகிறவர்களின் நேரத்தை மதித்தாவது எளிமையாக ப்ரசண்டேஷன் செய்ய முயற்சிப்பது ஒரு மினிமம் கடமை.

– இன்ன பிற பத்தி March 1, 2011.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s