தற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள்.
இங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ நிலைமை வேறு மாதிரி. இந்தப் படம் ஹிட்டைத் தவிர வேறொன்றும் ஆகாது என்ற காரெண்டி உள்ள படங்களை மட்டும் யாராவது எடுத்து தியேட்டரில் போட்டு விடுவார்கள். அதில் கூட அவ்வப்போது உத்தமபுத்திர தப்புக்கள் நடப்பதுண்டு. சில சமயம் இதற்கு ஏதிர்ப்பதமாக – ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு சனிக்கிழமையன்று ஒரே ஒரு ஷோ திரையிடப்பட்டது. அந்த மாதிரி ஒரு பிரமாதமான படத்தை நானும் பதினெட்டு பேரும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
இந்தியாவில் இப்படி பல முறை தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டு. ஹே ராமின் முதல் நாள் மாலைக் காட்சிக்கு ஆபிஸில் சொல்லிவிட்டு போனேன். தேவியில் பாண்டு வாத்திய பேரிசை, ரசிக கண்மணிகளின் சரம், ஆங்காங்கே ”பத்து-நுப்பது பத்து-நுப்பது வாய்ங்க்கோ வாய்ங்க்கோ” ப்ளாக் டிக்கெட் ஆசாமிகளை கடந்து உள்ளே போனால் கமல் எதோ ஜட்கா வண்டியில் பவனி வந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து சிலாகித்துப் போய் ஒரிரு வாரங்களுக்கு பின் நண்பர்களை பேசி சமாளித்து ஹேராம் பார்க்க கூட்டி வந்தேன். தேவி பாரடைஸ் தியேட்டரின் உள்ளே இருபத்தைந்து பேர், இருக்கிற மின்விசிறிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள். இதே போல் உட்லாண்ட்ஸில் இருவர் படம் ரிலீஸ் ஆகிய மூன்று வாரங்களுக்கு பின் கல்லூரி நண்பர்களை கூட்டிப் போனேன். அடிக்காத குறை. எண்ணிப் பார்த்தால் கூட என்னையும் சேர்த்து முப்பது பேர். கூட்டம் இல்லாததால் படம் பார்த்துக் கொண்டிருந்த போது குளிர் அதிகமாகி பத்து டிக்கெட்டுகள் ஜகா. என் நண்பர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக தூங்கி போய்விட நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் பத்து இருபது நாட்களுக்கு படம் ஓடும். மற்ற ஊர்களில், அதாவது இந்த மாதிரி வடமேற்கு மூலையில் இருக்கும் சியாட்டலில் ஒரு ஷோ, மிஞ்சிப் போனால் நாலு ஷோ. அதுவும் இந்தியாவில் வந்த இரண்டு மூன்று வாரம் கழித்தே வரும். நான் பார்த்து விமர்சனம் எழுதுவதற்குள் அதைப் பற்றிய சுவாரசியம் குறைந்து போய்விடுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் அடக்கம், படம் வந்த முதல் நாளே கதையை விமர்சனத்தில் கோடிட்டு கூட காட்ட முடியாது. ஆனால் எல்லோரும் படம் பார்த்த பின்னர் விரிவாக உட்கார்ந்து அலசி ஆராயலாம். இதற்கேற்ற ஒரு சூழ்நிலை வேண்டும். அதுவும் தமிழில் ஆரோக்கியமாக இல்லையோ என்றே தோன்றுகிறது.
திரும்பவும் அமெரிக்காவுக்கு வரலாம். ஆக, இப்படி தியேட்டரில் வராத படங்களின் டிவிடி வந்தால் தான் படம் பார்க்க முடியும். படம் இந்தியாவில் வெளியான ஒரிரு வாரங்கள் கழித்து, ஸ்ருதிலயம் என்னும் ஒரு கம்பெனியின் டிவிடி வெளிவரும். அது அடாசு ப்ரிண்டாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோட்டஸ் என்ற கம்பெனியின் பிரகாசமான டிவிடி வெளிவரும். இது எந்த அளவுக்கு ஒரிஜனல் டிவிடி என்ற கேள்விகளெல்லாம் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் கடைகளில் டிவிடி, அதை உரசிப் பார்க்காமல் வாங்கி வந்து பார்த்து விடுவார்கள் அமெரிக்க தமிழர்கள்.
0000
So we’ll live, And pray, and sing, and tell old tales, and laugh at gilded butterflies என்று ஷேக்ஸ்பியரின் கிங் லியர் சொல்லுவதாய் இருக்கும் வரிகளைப் போன்ற ஒரு கடைசிக் கவிதை முடிவு, ஆடுகளத்தில். கதாநாயகன் தன் காதலியுடன் ஒரு வழியாக தப்பித்து லாரியேறி ஊரை விட்டு போகும் காட்சியில் தெரிவது தான் வெற்றிமாறனின் வெற்றி. Everything gone wrong கதை. அதில் கடைசியில் யாருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு, ரியலிஸ்டிக். ஆனாலும் கடைசிக் காட்சியில் அந்த லாரி கண்ணை விட்டு மறைந்து போக ஆலம் விழுதெல்லாம் தெரிகிறது. ஒருவேளை டைரக்டரின் டச்சோ என்னவோ?
ஆ.களத்தை பற்றி பேசுவதற்கு முன், கிங் லியரை ஷேக்ஸ்பியரின் மிகத் திறமையான படைப்பு என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அந்த மாதிரி ஒரு ட்ராஜெடி முடிவை, பதினேழாம் நூற்றாண்டில் எதிர்கொள்வதற்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்திருக்கும். இன்னமும் எல்லா பெரிய நடிகர்களும் ஒரு முறையாவது கிங்லியராக நடிக்கும் வாய்ப்பிற்கு தவமிருக்கிறார்கள். தமிழில் கூட சமீபத்தில் அசல் என்ற படத்தில் கிங்லியரை கொஞ்சம் உல்டா அடித்திருந்தார்கள். கி.லியரில் அவருக்கு மூன்று பெண்கள், இங்கே ஆண்பிள்ளைகள். கடைப் பெண் கார்டெலியாவாக இங்கே அஜித் குமார். அசல் அசலல்ல.
ஆடுகளத்தின் கதை, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட துரோகக் கதை. ஆனால் துரோகத்தின் சாத்தியக்கூறுகள் பலப்பல. எத்தனை முறை இப்படியான கதையைப் பார்த்தாலும்/படித்தாலும் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது. அந்த பெரிய மனிதரை(!) துரோக உணர்ச்சி ஆக்கிரமிப்பதை, காமிரா சற்றும் விலகாது படம் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சகுனி சூழ்ச்சிகள் நடைப்பெற இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாத படி துரோகம் அறுவாளைத் தூக்கிக் கொண்டு அலைய, சீட்டு நுனி லயிப்பிற்கு குறைவில்லை. தனுஷும் அவர் கூட வரும் ’சாவல்’ பார்ட்டியும் நகமும் சதையும், கடைசியில் ரத்தமும் கொண்ட மனிதர்களாக வலம் வருகிறார்கள். உதாரணத்திற்கு தனுஷின் அம்மா, பேட்டைக்காரனின் மனைவி என பல ரியல்-லைப் காரெக்டர்கள்.
வெற்றி மாறனின் இரண்டாவது படமும் அவரின் முதல் படத்தைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கிய பகுதி ஓரிரவில் நடக்கிறது, கதையின் கடைசியை முன்னமே கொஞ்சம் காட்டி விடுகிறார், பின்பு கதை ப்ளாஷ்பேக்கில் போகிறது, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. இம்மாதிரியாக நான்-லீனியராக கதை சொல்வதில் சில நன்மை/தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நல்ல வேலையாக இது சம்பந்தப்பட்ட குறை தெரியவில்லை. படத்தில் அந்தக் காதல் தேவையேயில்லை என்று தோன்றினாலும் அதில்லாமல் கல்லா கட்டுவது கடினம்.கடைசியாக டைட்டிலில் இந்தப் படம் எடுக்க உதவிய படங்கள் லிஸ்டில் தேவர் மகன் விருமாண்டி Babel எல்லாம் இருக்கிறது. புத்தகங்களில் கிரிகோரி ராபர்ட்ஸின் Shanthaaram மற்றும் Roots தென்படுகின்றன. இலக்கியம் படிப்பதன் அவசியம் ஆங்காங்கே படத்தில் தெரிகிறது.
“நீ இந்தப் பையன லவ் பண்றியா இல்ல அவனையா?” என்று கதாநாயகியை கேள்வி கேட்கும் போது இசைக்கும் அந்த ஜில்லிடும் தீம் மியூஸிக் பிரமாதம். ஜி.வி பிரகாஷ் எங்கிருந்து இன்ஸ்பயர் ஆனார் என்று சொல்லியிருக்கலாம். ஒத்த சொல்லால பாடல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு ஆட வைத்திருக்கிறது. கதர் ஜிப்பா ஜோல்னாப்பை வகையராவுக்கு பிடித்த மாதிரியும் டப்பா கட்டு கட்டும் லுங்கி மாம்ஸ்களுக்கும் பிடித்த மாதிரியும் படமெடுக்கும் வெற்றிமாறனுக்கும் விஷால் பரத்வாஜுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.
– இன்ன பிற பத்தி – March 8, 2011
Leave a Reply