ஐபேடின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல் கருப்பு டீஷர்ட் போட்டுக் கொண்டு, மெடிக்கல் லீவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து பேசிவிட்டு, பேனை பெருமாளாக்கி விட்டு போனார். ஆண்ட்ராயிடை கூகிள்காரர்கள் குடைந்து கொண்டு இருக்கிறார்கள். திறந்தவுடன் அவ்வப்போது மறித்துப் போகிறதாம். மைக்ரோசாப்ட்காரர்களும் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. இம்மாதிரியான பலகை கணினிக்களின் காலமிது.
ஊரு ரெண்டுபட்டால் என்று அமெசான்காரர்கள் எந்த ஆபரேடிங் ஸிஸ்டத்திற்கும் தன் கிண்டில் சாஃப்ட்வேரை ரெடி செய்து கொண்டு விடுகிறார்கள். ஐஓஎஸ்யிலும் ஆண்ட்ராயிடிலும் விண்டோஸிலும் ஓடுகிறது. அமெசானின் கிண்டில் இ-புத்தக படிப்பானிலும் இருக்கிறது. சமீபத்தில் இ-புத்தகங்களின் விற்பனை பேப்பர் புத்தகங்களை தாண்டி விட்டது என அறிவித்திருக்கிறார்கள்.
மின்புத்தகத்தில் இருக்கும் பாதகங்கள் சாதகங்களை மறைத்துவிடும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். போன வாரம் கிண்டிலில் ஆஸ்கர் வைல்டின் The Importance of Being Earnest என்ற குட்டி நாடகத்தை வாசித்தேன். மின் புத்தகங்கள் இம்மாதிரி நாவல்கள், நாடகங்கள் போன்ற இலக்கியங்கள் படிக்க உதவும் என்றே தோன்றுகிறது. முன்னும் பின்னும் அடிக்கடி திருப்பிப் பார்த்து படிக்கும் பாட புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பதில் சிரம்ங்கள் இன்னமும் இருப்பதாக நினைக்கிறேன். யார் நினைத்தாலும்/விட்டாலும் பேப்பர் புத்தகத்திலிருந்து ஒரு இருபது வருடங்களிலாவது ஒரேடியாக மாறிவிடுவோம்.
0000
இந்திய சினிமாவிற்கு(உங்கள் துப்பாக்கியை கையிலெடுக்கவும்!) சென்ஸார் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் போல ரேட்டிங் சிஸ்டம் உதவலாம். ஆனால் ஹாலிவுட்டிலேயே இதை மாற்றி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியவில் இயங்கும் சென்ஸார் வழக்கம் ஹாலிவுட்டிலிருந்தே வந்தது. ஆனால் அங்கேயோ 1968லேயே சென்ஸார் போய் ரேட்டிங் வந்து விட்டது. அதாவது முதலில் படத்தை பார்க்கிற எந்த கமிட்டியும் வறுத்த வேர்கடலையை கொறித்துக் கொண்டே நாயகியின் தொப்புளையோ, நாயகன் பேசும் நாராசமான வசனங்களையோ கட் செய்ய முடியாது. தேசத்தில் இருப்பவர்கள் எதை பார்க்க வேண்டும் எதை கேட்க வேண்டும் என்பதை இருட்டு ரூமில் முடிவெடுக்க முடியாது. ஒரு கலைஞன் தான் எடுக்க நினைப்பதை எடுப்பதற்கும் அதை மற்றவர்கள் காண்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் ரத்தம் இருக்கிறது, ஆறுபது கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன என படம் பார்த்து விட்டு ரேட்டிங் கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்க்க அனுமதிப்பதற்கு இந்த ரேட்டிங்கள் உதவியாய் இருக்கின்றன.
இதை இந்தியாவிலும் செய்யலாம். தியேட்டர்களில் கொஞ்சம் கெடுபிடியாய் R(Restricted) ரேட்டிங் உள்ள படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி விடலாம். அப்படி இல்லையென்றால் இன்னமும் பத்து வருடங்களிலாவது ரேட்டிங் சிஸ்டம் போய் வேறெதாவது வந்து விடும். நேரடியாய் அதற்கு தாவி விடலாம். சமீபத்தில் ஆரண்யகாண்டம் என்ற படத்தில் கமல் ரஜினியை பற்றி வரும் வசனங்களை கட் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்களாம். நல்ல தமாஷ்.
0000
வாழ்கையில் எல்லாவற்றையும் விளையாட்டாய் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். Four Square என்னும் இணையதளத்திற்கு உங்கள் போனின் முலமாக சென்றால், நீங்கள் தற்போது எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை GPS மூலம் அறிந்து கொள்ளும். அடிக்கடி ஒரு பொது இடத்திற்கு, உதாரணமாக அசோக் நகர் சரவணபவன், சென்று வருகிறீர்கள் என்றால், எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ அப்போதெல்லாம் Four Square போய் வந்தால் அது கணக்கு வைத்துக் கொள்கிறது. இதே போல் எல்லோரும் செய்கிறார்கள். மற்றவர்களை விட நீங்களே அங்கே அதிகம் போகிறீர்கள் என்றால், உங்களை அசோக் நகர் சரவணபவனின் மேயராக, விளையாட்டாக, Four Square நியமிக்கிறது. ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடம் ஜெர்க் விட உபயோகமாக இருக்கும்.
இதேபோல் குழந்தைத்தனமாக இல்லாமல் உபயோகமாக வாழ்க்கையை விளையாட்டாக மாற்ற முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உதாரணம் – அமெரிக்காவில் எல்லோர் வீட்டின் கரெண்டையும் கணக்கெடுத்து, அவர்களின் வீட்டின் அளவு, இருக்கும் எலக்ட்ரானிக் சாமான்கள், இருக்கும் இடம், தட்பவெப்பத்திற்கு ஏற்ப யார் குறைவாய் மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து விளையாடுவது. அதையும் ஃபேஸ்புக்கில் பீற்றிக் கொள்ளலாம். நாடெங்கிலும் கரெண்டாவது மிச்சமாகும். இந்தியாவில் டிவி பார்ப்பதை கணக்கெடுக்கலாம்.
0000
ராபர்ட் ப்ராஸ்டின் கவிதைகளை ரொம்பவே பொறுமையாக படித்துக் கொண்டு வருகிறேன். இன்னமும் முடித்தபாடில்லை. ப்ராஸ்டின் Stopping By Woods on a Snowy Evening கவிதை நேருவினால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு க்ளீஷேவாகிவிட்டது. அதையும் தாண்டி ப்ராஸ்ட் மழையில் நனைந்தபடி, இரவில் நடந்தபடி, புல்லில் படுத்தபடி, ஆற்றில் கால் விட்டபடி கன்னாபின்னாவென்று நல்ல கவிதைகளை எழுதித் தள்ளி இருக்கிறார்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் இருக்கிற அ-நேரடித்தன்மையை பாருங்கள். நெருப்பு மற்றும் பனிக்கட்டிகளுக்கு பதிலாக நீங்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது பைபிளைப் பற்றியது என்றும் உலக ஷேமத்தை பற்றிய கவலை என்றும் ”இல்லை இல்லை, இதைத் தான் சொன்னார்” என்றும் இன்று வரை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளனை/கவிஞனை படிக்கும் போது அவரின் எண்ணங்கள் சுலபமாக புரிகிற மாதிரி இருக்கும். ஒரேடியாக ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளை படிக்கும் போது எனக்கு இந்தக் கவிதை அவர் மனைவியின் மறைவைப் பற்றி பேசுவதாகவும் தோன்றுகிறது.
Fire and Ice – Robert Frost
Some say the world will end in fire,Some say in ice.
From what I’ve tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To know that for destruction ice
Is also great
And would suffice.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இந்த பத்தியை கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர நினைத்திருக்கிறோம். மூன்று மாதங்கள் கழித்து தேர்தல், கிரிக்கெட், சுமாரான திரைப்படங்கள் மற்றும் நேரம் தொலைக்கும் இன்னபிற விஷயங்களை பேசலாம். இப்போதைக்கு பை.
– இன்ன பிற பத்தி – March 15, 2011
Leave a Reply