kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • February 12, 2021

    இரண்டு வேலைக்காரர்கள்

    போன வாரம் நெட்ஃபிளிக்ஸில் இரண்டு திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று White Tiger, மற்றொன்று Sir. இரண்டு திரைப்படங்களின் கதைகளிலும் நாயகர்கள் இந்தியாவில் எங்கும் பார்க்ககூடிய சாராசரியான வேலைக்காரர்கள். 

    ஆதர்ஷ் கவுரவ்

    அரவிந்த் அடிகா எழுதி 2008ல் புக்கர் பரிசு பெற்ற வொயிட் டைகர் நாவலை பத்தாண்டுகள் கழித்து சாவகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த போது இருந்த அந்த வெடவெடப்பு இல்லாமல் இம்மாதிரி கதைகளை திரையில் பலமுறை ஏற்கனவே பார்த்திருப்பதால் கொஞ்சம் கொட்டாவி தான். நவ இந்தியாவில் சாதி மற்றும் அடிமைத்தனத்தால் உருவாக்கப்பட்ட கூண்டிலிருந்து வெளியேறும் ஏழை இளைஞன் பால்ராமின் கதை. சலுகை பெற்றவர்களை அவர்களின் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கவும், ஏழைகளை தெருக்களில் வைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மோசமான அமைப்பின் மீதான முழு இரத்தக்களரி தாக்குதல். பால்ராம் சொல்வது போல் ஏழை வேலைக்கார்கள் கூட்டிலடைக்கப்பட்ட கோழிகள். அவனும் மற்றக் கூட்டிலடைப்பட்ட ஏழைகளும்  ஒன்றுகூடி, கூச்சலிட்டு, திணறுகிறார்கள், அடுத்து யார் படுகொலை செய்யப்படுவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.  அடிகாவின் கதையின் மையத்தில் ஒரு இருள் இருந்தது, ராமின் பஹ்ரானியின் திரை வடிவத்தில் அது கொஞ்சம் காணாமல் போய்விட்டது. 

    திலோத்தமா ஷோம் மற்றும் விவேக் கோம்பர்

    2018 பம்பாய் சென்ற போது என்னை ஏற்றிச் சென்ற கருப்பு மஞ்சள் ஆட்டோகாரருக்கு நான் சரியாக ஹிந்தியில் சொல்லாததால் உள்ளூர் விமான நிலையத்துக்கு பதிலாக சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். விஷயம் புரிந்து அடுத்தொரு ஆட்டோ பிடித்து உள்ளூர் விமான நிலையத்துக்கு போகும் வழியில் எராளமான குறுகலான சந்துக்கள். அதில் குண்டும் குழியுமாக நீர் நிரம்பிய ரோடின் ஓரமாக ப்ளாட்பாரத்தில் தூங்கும் ஜனங்கள். அங்கிருந்து ஒரே ஒரு தெரு தள்ளி மேல்நாட்டு சாயல் கொண்ட ஹோட்டல்கள், கார்கள், சல்யூட் அடிக்கும் வாட்ச்மேன்கள். பம்பாய் மும்பாயாக மாறினாலும் நகரங்களுக்கே உண்டான அதன் அசுரகுணம் மாறுவதாயில்லை.

    அந்த சலசலப்பான பெருநகரத்தில் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் வரும்  ஒரு படிக்காத கிராமப் பெண் ரத்னாவின் பார்வையில் எடுக்கப்பட்ட படம், சார். ரத்னாவின் கனவுகள் பெரியவை, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் சமூக மற்றும் பொருளாதார தடைகளை எதிர்கொள்கிறாள். இதில் தன் எஜமானின் மேல் கொஞ்சம் காதல். பரஸ்பர மரியாதையில் ஆரம்பிக்கும் அவர்களின் உறவு,  நட்பாகி இறுதியில் அன்பாகும் கதை.

    ரத்னாவாக நடித்திருந்த திலோத்தமா ஷோம் ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு.  பெரும்பாலும் உரையாடல் இல்லாமலேயே செல்லும் இப்படம் இந்திய சினிமாவின் வெற்றி என்று தயக்கமாய் சொல்லலாம். 

    ஆனால் இவ்விரண்டு படங்களும் வேலைக்காரர்களைப் பற்றி இருந்தாலும் அது இந்தியாவையும் அதில் ஊறிப்போன முதலாளித்துவத்தையும் பற்றிய விமர்சனமாக எனக்குப் பட்டது. 

    ஒரு படத்தில் ஒரு முஸ்லிம் வேலைக்காரன் இந்துவாக நடிக்கிறான். விடிகாலையில் ரம்ஜான் நோன்புக்கு சமைக்கும் போது மற்றொரு வேலைக்காரன் பார்த்து விட, வேலையை விட்டு தன் ஊரைப் பார்க்க போய்விடுகிறான். மற்றொன்றில் சைவ வேலைக்காரி வேறு வழியில்லாமல் அதை மறைத்து எஜமானனுக்கு அசைவம் சமைத்து தருகிறாள்.

    இரண்டிலும் உயர்குடி இளம் பெண்கள் கெட்ட வார்த்தை பேசினாலும் திறந்த மனதுடன் வேலையாட்களை நடத்துகிறார்கள். இரண்டிலும் நடுவில் பேசியதற்காக வேலைக்காரர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இரண்டிலும் எஜமானர்கள் வெளிநாட்டு ரிட்டன்கள்.  வேலைக்காரர்கள் தன் இடத்திலிருந்து வெளியேறி முன்னேற துடிக்கிறார்கள், புதிய விஷயங்களை அறிய முற்படுகிறார்கள். தோற்கிறார்கள்.

    முக்கியமாக இரண்டிலும் எஜமானர்களுக்கு தத்தம் வேலைக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை, அறிந்து கொள்ளவும் முயல்வதுமில்லை. இதில் நம் எல்லோருக்கும் ஒரு செய்தி இருக்கிறது.

  • October 1, 2020

    கணம் 1 – சுழி போட்டு

    கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்
    கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
    கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?
    – பாரதி

  • January 29, 2020

    ஸ்டிரச்சர் கேஸ்

    தமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான்.

    கடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை என்று நினைத்துப் பார்த்தால், மணி ரத்னத்தை உட்பட ஒன்று கூட தேறவில்லை. ஆகையால் தமிழ் சினிமா எடுப்பவர்களுக்கு, எடுக்க நினைத்து மதுரையிலிருந்து சென்னைக்கு வர பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லாம் என்று தோன்றுகிறது.

    தமிழின் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 99% எற்கனவே வெளிவந்து விட்டன. பாக்கியிருக்கும் அந்த 1 சதவிகிதத்தில் நிறைய இடமில்லை. யோசித்த பின் பஸ் ஏறவும்.

    அதை சொல்லும் போது இதையும் சொல்லி வைக்கலாம். தமிழின் சிறந்த படப் பாடல் பட்டியலில் 99.9% எற்கனவே வெளிவந்து விட்டன(ஆபேரி ராகத்தில் 100%). க்கும்…. கொஞ்சம் கனைத்துக் கொள்கிறேன்.


    பேஸ் புக்கில் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிக கண்மணிகளுக்கான ஒரு க்ரூப்பில் யாரோ ஒரு மகானுபாவர், சுஜாதாவின் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக தினமும் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார், பதிப்புரிமை என்று ஒன்று இருப்பதரியாது. தனது ஆதர்ச எழுத்தாளரின் எழுத்துக்கு செய்யும் தவறை உணராமல் பலரும் அதை லைக்-ஷேர்-சப்ஸ்க்ரைப் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    காசு கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு பதிலாக, இன்ஸ்டால்மண்டில், காப்ஸ்யூல் வடிவத்தில் இணையத்தில் எல்லாமே கிடைக்கிறது என்பதால் கேள்வி கேட்காமல் பேஸ் புக்கை நகர்த்தி நகர்த்தி மேய்ந்து போய்கினே இருக்கிறோம். சுஜாதா இருந்தால், “படிச்சா சரி” என்பார்.


    படித்து முடித்த புத்தகம் – ஹருகி முராகமியின் – What I Talk About When I Talk About Running. முராகமியை படித்தவர்களுக்கு தெரிந்த மயக்கும் எழுத்து ஆனால் முராகமியின் தெரியாத வாழ்க்கைக் கதை. ஹவாயின் ஒரு தீவில் ஒய்வெடுக்கும் முராகமி தனக்கு ரொம்பவும் பிடித்த ஓட்டத்தை பற்றி சொல்கிறார். அதன் மூலம் தன் வாழ்க்கையை ஓட்டமும் நடையுமாய் விவரிக்கிறார்.

    ஓய்வான ஒரு சனிக்கிழமை மதியம் படிக்க வேண்டிய புத்தகம். ஞாயிறன்று காலையில் ஷு மாட்டிக் கொண்டு நீங்கள் ஓட ஆரம்பிப்பது சர்வ நிச்சயம்.

    படிக்க ஆரம்பித்த புத்தகம் – எஸ். ராமகிருஷ்ணனின் கடவுளின் நாக்கு. தி இந்து நாளிதழில் வெளியான தொடரின் தொகுப்பு. கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது என்று ஆரம்பித்து கதையின் கதையை சொல்கிறார். பல நாட்டு கதைகளை அறிமுகப்படுத்தும் முயற்சி. பேஷ்!


  • January 26, 2020

    மீண்டும் – இன்ன பிற

     

    2010ல் தமிழ் பேப்பரில் பாரா எழுத சொல்லி இன்னபிற என்றொரு வாரப் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு உட்கார்ந்து நள்ளிரவு வரை எழுதி முடித்து சொக்கனுக்கு அனுப்பி விட்டு தூங்கப் போவேன். அது வெளிவந்து கொண்டிருந்தபோது யாராவது ஒரு ஆசாமி – சூப்பர் ப்ரோ என்று டுவிட்டரில் சொல்வார். அதோடு சரி. ரொம்ப வரவேற்பெல்லாம் இருந்ததாக ஞாபகம் இல்லை. கிட்டத்தட்ட 25 வாரங்களுக்கு பிறகு வேலைப் பளு காரணமாக அப்பத்திக்கு ஒரு ப்ரேக் எடுக்கப் போய் பெரிய இடைவெளியாகிவிட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள்.

    இந்த நீண்ட இடைவெளியில் சினிமா பார்ப்பது கொஞ்சம் குறைந்தது, இசை கேட்பது அதிகரித்தது(நன்றி யூடூப்), புத்தகங்களுக்கான நேரத்தை இணையம் ஆக்கிரமிக்க, முடி சற்றே கொட்டி-வெளுத்து, வீட்டு வேலைகள் அதிகமாகி, நாற்பதை வயது எட்டி, திரும்பிப் பார்த்தால் – பதினேழு வயதில் ஜிப்பா ஜோல்னாவில் சினிமா இலக்கியம் என்று பிதற்றியவனுக்கும், நாற்பதில் ஷார்ட்ஸில் திருப்பாவை பஜனை கோஷ்டியில் அமெரிக்க பெருமாளை சேவிப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் எராளம்.

    உண்மையை சொல்ல வேண்டுமானால், 2008ன் பிப்ரவரியில் சுஜாதா மறைந்த பிறகு சில மாதங்களுக்கு எழுத்தின் மேல் ஆர்வம் போய்விட்டது. பின்பு 2010 இந்த தமிழ் பேப்பர் பத்தியால் தான் மீண்டும் எழுத வந்தேன். அதன் பிறகு பத்து வருடங்கள். ஆக ப்ரேக் கே பாத் என்னால் எழுத கை வராது என்பது தெரிகிறது. ஆக மீண்டும் எழுதலாம் என்று இப்போது நினைத்த போது, ப்ரேக் இல்லாமல், படிப்பவர் யார் – என்ன சொல்லுவார்கள் என்று கவலைப்படாமல், வாரம் ஒரு முறையாவது எழுத அவா. பார்க்கலாம்.

    செனட் சபையில் ஜனாதிபதி மீதான பதவி நீக்க விசாரணை தொடங்கிய தினம்.

    1/22/2020

  • March 14, 2018

    Working from home

    “I have always thought that the place where you sleep or the place you share with your partner should be separate from the place where you write. The domestic rituals and details somehow kill the imagination. They kill the demon in me. The domestic, tame daily routine makes the longing for the other world, which the imagination needs to operate, fade away. So for years I always had an office or a little place outside the house to work in. I always had different flats. But once I spent half a semester in the U.S. while my ex-wife was taking her Ph.D. at Columbia University. We were living in an apartment for married students and didn’t have any space, so I had to sleep and write in the same place. Reminders of family life were all around. This upset me. In the mornings I used to say goodbye to my wife like someone going to work. I’d leave the house, walk around a few blocks, and come back like a person arriving at the office.

    Ten years ago I found a flat overlooking the Bosporus with a view of the old city. It has, perhaps, one of the best views of Istanbul. It is a twenty-five minute walk from where I live. It is full of books and my desk looks out onto the view. Every day I spend, on average, some ten hours there”

    – Orhan Pamuk, Author

←Previous Page
1 … 13 14 15 16 17 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar