ஸ்டிரச்சர் கேஸ்

தமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான்.

கடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை என்று நினைத்துப் பார்த்தால், மணி ரத்னத்தை உட்பட ஒன்று கூட தேறவில்லை. ஆகையால் தமிழ் சினிமா எடுப்பவர்களுக்கு, எடுக்க நினைத்து மதுரையிலிருந்து சென்னைக்கு வர பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லாம் என்று தோன்றுகிறது.

தமிழின் சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 99% எற்கனவே வெளிவந்து விட்டன. பாக்கியிருக்கும் அந்த 1 சதவிகிதத்தில் நிறைய இடமில்லை. யோசித்த பின் பஸ் ஏறவும்.

அதை சொல்லும் போது இதையும் சொல்லி வைக்கலாம். தமிழின் சிறந்த படப் பாடல் பட்டியலில் 99.9% எற்கனவே வெளிவந்து விட்டன(ஆபேரி ராகத்தில் 100%). க்கும்…. கொஞ்சம் கனைத்துக் கொள்கிறேன்.


பேஸ் புக்கில் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிக கண்மணிகளுக்கான ஒரு க்ரூப்பில் யாரோ ஒரு மகானுபாவர், சுஜாதாவின் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக தினமும் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார், பதிப்புரிமை என்று ஒன்று இருப்பதரியாது. தனது ஆதர்ச எழுத்தாளரின் எழுத்துக்கு செய்யும் தவறை உணராமல் பலரும் அதை லைக்-ஷேர்-சப்ஸ்க்ரைப் செய்து கொண்டிருக்கிறார்கள்.

காசு கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு பதிலாக, இன்ஸ்டால்மண்டில், காப்ஸ்யூல் வடிவத்தில் இணையத்தில் எல்லாமே கிடைக்கிறது என்பதால் கேள்வி கேட்காமல் பேஸ் புக்கை நகர்த்தி நகர்த்தி மேய்ந்து போய்கினே இருக்கிறோம். சுஜாதா இருந்தால், “படிச்சா சரி” என்பார்.


படித்து முடித்த புத்தகம் – ஹருகி முராகமியின் – What I Talk About When I Talk About Running. முராகமியை படித்தவர்களுக்கு தெரிந்த மயக்கும் எழுத்து ஆனால் முராகமியின் தெரியாத வாழ்க்கைக் கதை. ஹவாயின் ஒரு தீவில் ஒய்வெடுக்கும் முராகமி தனக்கு ரொம்பவும் பிடித்த ஓட்டத்தை பற்றி சொல்கிறார். அதன் மூலம் தன் வாழ்க்கையை ஓட்டமும் நடையுமாய் விவரிக்கிறார்.

ஓய்வான ஒரு சனிக்கிழமை மதியம் படிக்க வேண்டிய புத்தகம். ஞாயிறன்று காலையில் ஷு மாட்டிக் கொண்டு நீங்கள் ஓட ஆரம்பிப்பது சர்வ நிச்சயம்.

படிக்க ஆரம்பித்த புத்தகம் – எஸ். ராமகிருஷ்ணனின் கடவுளின் நாக்கு. தி இந்து நாளிதழில் வெளியான தொடரின் தொகுப்பு. கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது என்று ஆரம்பித்து கதையின் கதையை சொல்கிறார். பல நாட்டு கதைகளை அறிமுகப்படுத்தும் முயற்சி. பேஷ்!


2 responses to “ஸ்டிரச்சர் கேஸ்”

  1. முராகமியின் டீஷர்ட் – kirukkal.com Avatar

    […] சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். […]

    Like

  2. Shana Avatar

    Thanks for poosting this

    Like

Leave a comment