நூலக ஞாபகம்

லயன்காமிக்ஸ்

அஷ்வினுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சிறுவயதில் தனியாக வீட்டில் நூலகம் நடத்தியது ஞாபகம் வந்தது. ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை விடுமுறையில் திடீரென்று கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் போட்டு ஒரு நூலகம் வைத்து சம்பாதிக்கலாம் என்று ஏனோ தோன்றியது. காரணம் சரியாக ஞாபகம் இல்லை. எங்கேயாவது படித்ததாலோ அல்லது “அவனப் பாரு, எப்படி சூட்டிகையா இருக்கான்” என்று யாரையோ காட்டி விட்டுப் பெரியவர்களில் யாரோ சொன்னதாலோ இருக்கலாம்.

நாங்கள் இருந்த அந்த புரசைவாக்க வெள்ளாளத் தெருவின் சற்றே பெரிய சந்தில் 50-60 வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை தற்போதுள்ள அப்பார்ட்மெண்ட் காம்பெளக்ஸிற்கு ஒப்பிடலாம். எல்லா வீட்டிலும் ஒரிரு குழந்தைகளாவது இருந்தார்கள். இப்படி எல்லாம் மார்கெட் ஸ்டடி செய்தேனா என்று தெரியாது. ஆனால் நினைத்த இரண்டொரு நாளில் நூலகம் ஆரம்பித்து விட்டேன்.

கையில் நூறு புத்தகங்களாவது இருந்தன. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸில் ஆரம்பித்து பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம், அமர் சித்ர கதா என்று என் வயது சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள். அவ்வப்பொது ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும், ரீடர்ஸ் டைஜஸ்டும் அகப்படலாம். வீட்டுல் எல்லாரும் தூங்கிய பிறகு, அந்த புத்தகங்களை அள்ளிப் போட்டு ஒவ்வொன்றிலும் நம்பர் எழுத ஆரம்பித்து விட்டேன். அதை தவிர அதை படிக்கும் சார்ஜ் என்று நானாய் முடிவு செய்த விஷயங்கள். அமர் சித்ர கதாவாயிருந்தால் 50 காசு, ராணி காமிக்ஸிற்கு பத்து காசு, தீபாவளி மலருக்கு 75 காசு என்று எனக்கு மட்டுமே புரிந்த கணக்கு.

பெட்ரூம் அலமாரியில் இருந்த அத்தனையையும் தூக்கி தூர வைத்து விட்டு இந்த புத்தகங்களை உயர வாரியாக அடுக்கி வைத்தேன். ஒரு பழைய துணியை அயர்ன் செய்து திரையிட்டேன். நூலகத்திற்கு பெயர் வைத்ததாய் ஞாபகமில்லை. அடுத்த நாள் என் நூலக மினி திறப்பு விழா. கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த நண்பர்களிடம் விஷயம் சொன்னவுடன் கொஞ்சம் புரியாமல் மட்டையை கிழே போட்டுவிட்டு நூலகத்தை பார்க்க வந்தார்கள். அந்த நூறு புத்தகங்களை ஒரு நூலகமாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா என்று தெரியவில்லை. ஒரு புத்தகத்தையும் எடுக்காமல் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் ரவி வந்து ஒரு ஸ்பைடர் புத்தகத்தை எடுத்துப் போனான். சதீஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் எடுத்தான். ரவி எடுத்து போன புத்தகத்தை ரோட்டில் வைத்து விட்டு கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான். ஒரு கல்லின் மேல் தனியாக கிடந்த என் புத்தகத்தை பார்த்த அந்த கணத்தில் புரிந்து போனது, என் புத்தகங்கள் தான் என் பொக்கிஷம். அந்த புத்தகத்தை எடுத்துப் போய் வீட்டில் வைத்தேன். லைப்ரரி மூடப்பட்டது. இன்று வரை.

கிறுக்கல் 3.0

ஒரு வழியாக சுப்புடு.காமிலிருந்து பழைய டெம்ப்ளேட் உள்பட எல்லாவற்றையும் காலி செய்து கொண்டு மீண்டும் பழைய வீட்டிற்கு ஜாகை மாறியாகி விட்டது. சமூகசேவையாக லேசிகீக்.நெட்டில் எழுதிய குப்பைகள் அத்தனையும் பத்திரமாக இங்கேயே நகர்த்தியாகிவிட்டது. ஆக, மீண்டும் எழுதத் தொடங்க வேண்டியது தான் பாக்கி.

பழைய பதிவு – கிறுக்கல் 2.0

யார் தவறு?

”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

He gets it !!

writer sujatha

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.

எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.

கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.

சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.

ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!

கிறுக்கல் 2.0

ஆக ஒரு வழியாக மூவபிள் டைப்பிலிருந்து(MT) வேர்ட்ப்ரஸ்ஸுக்கு(WP) கிறுக்கலையும், அந்தப் பக்கத்தையும் ஜாகை மாற்றியாகிவிட்டது. கிறுக்கலுக்கு இது முதல் மாற்றம். அந்தப் பக்கத்திற்கு இது மூன்றாவது.

நான்கு வருடங்களாக பயன்படுத்திய மென்பொருளை அப்படியே தூக்கிப் போட முடியவில்லை. அதாவது, மூவபிள் டைப்பில் நான் நாளொரு மேனியாக கட்டிய டெம்பிளேடுகைள விட்டுவிட முடியாமல், அதற்காக மெனக்கெட்டு(மெனகட்டு ?) அதே look and feelலோடு வேர்ட்பிரஸ்ஸிலும் கட்ட கொஞ்ச நாளாகிவிட்டது.

மூவபிள் டைப்பில் வலைப்பதிவு செய்வது நன்றாகவே இருந்த போதிலும், சமீபத்திய வெளியிடான MT 4.0 இருந்த பிரச்சனைகளால், பல பதிவுகள் எழுதும் போதே காணாமல் போய் விட்டன. கிறுக்கலில் எழுதி வைத்திருந்த சில பதிவுகள் பூச்சி பூச்சியாக மாறின. அதனால் எழுதுவதை கிடப்பில் போட்டு விட்டு, ஒரு ரெண்டு வாரம் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேர்ட்பிரஸ் டெவலப்பராகி விட்டேன். இனி எல்லாம் சுகமே !!

~

2002ன் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த போது இதைப் போல வலைப்பதிவு மென்பொருள்கள் உபயோகத்தில் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் எழுத ஆள் இல்லை.

இணையத்திலேயே எழுதி அப்படியே பட்டனைத் தட்டி(one-button publishing) பதிவு செய்யலாம் என்கிற விஷயம் தான் ப்ளாகரில் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அதற்காகவே மட்டும் தான் எழுத தொடங்கினேன். முதலில் வைத்திருந்தது ரொம்பவும் காடியான கலர்கள் கொண்ட, ரொம்பவே கிரேஸியான டெம்பிளேட். அது பிடிக்காமல் முதல் மூன்று மாதத்தில் மாற்றி விட்டேன். அதற்குப் பிறகு வந்தது தான் இந்த டிஸைன். இது 2005ல் கொஞ்சம் தளுக்காக மாற்றப்பட்டது. பின்பு போன வருடம் வரை இது நிலைத்துப் போனது.

2006ல் கிறுக்கல் எழுதலாம் என்று ஆரம்பித்த போது, ஒரு எளிமையான டிஸைன் தேவலாம் என்று தோன்றியது. மூவபிள் டைப்பில் இருந்த minimalist என்ற டிஸைன் ரொம்பவும் பிடித்துப் போக, அதை எடுத்து இன்னமும் எளிமைப்படுத்தி உருவானது தான் இந்த டிஸைன். நண்பர்கள் சிலருக்கு பிடிக்காமல் போனாலும், இதை வைத்துக் கொண்டிருக்க காரணம், எளிமை.

தேவைக்கு அதிகமான சைட்பார் விஷயங்களுடன், தேவைக்கு மிக அதிகமான விளம்பரங்களுடன் இருக்கும் சில் வலைப்பதிவுகளில் எது பதிவு எது மற்றது என்று தெரியாமல் போய்விட்ட காலத்தில், ஒரு ideal blog எப்படி இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கோபத்தோடு நினைத்து கட்டியது தான் இந்த கிறுக்கல் டிஸைன்.

மேலும் தற்போது வலைப்பதிவுகளை படிப்பவர்கள், RSS செய்தியோடை மூலமாகத் தான் படிக்கிறார்கள். படிப்பவர்கள் இனி அந்தந்த தளங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. Content is the king. ஆக டிஸைன் எப்படி இருந்தால் என்ன.

~

இந்த தளத்திற்கு இது மூன்றாவது வருடம். போன இரண்டு வருடங்களில் ஒன்றும் பெரியதாக எழுதி கிழித்து விடாததால், இந்த வருடம் இந்தப் பக்கத்தில் எழுதினாலே போதும் என்பது தான் எண்ணம்.

ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்

journal of joyce carol oates

நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.

ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.

1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம். 1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே.

இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம்.

இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது.

தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பா.ராகவன் பேப்பர் எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த விஷயத்தையும், தூர்தர்ஷன் நினைவுகளையும் எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.

ஜெயமோகன் படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.

அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத ஒரு வித வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் – The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can’t be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice “prints,” our journal-selves are distinctly our own; try as we might, we can’t elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.

பொய் / உண்மை

வெகு நாட்களுக்கு பிறகு இரு நேர்த்தியான ஆங்கில பதிவுகள் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து படிக்கும் வெகு சில வலைப்பதிவுகளில், இவையும் அடக்கம். இந்தப் குறிப்பிட்ட பதிவுகளை படித்து, ரசித்து, சிரித்து, யோசிக்க நேரம் தேவைப்படலாம். எனக்குப் பட்டது.

முதல் பதிவை எழுதியவர் ஹூக் மாக்லியோட்(Hugh Macleod). ஒரு கார்டூனிஸ்ட். விசிட்டிங்கார்ட்களின் பின் கார்டூன் வரைவது இவரது தொழில். மிக நேரடியாக முகத்தில் அடிக்கும் படி உண்மையை ஒரே ஒரு கார்ட்டூனில் சொல்வார். மைக்ரோசாப்டைப் பற்றி வரைந்த ஒரு தாக்குதல் கார்ட்டூனை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

பொய் சொல்லுதல் பற்றி, 2004ல் எழுதியிருந்த ஒரு போஸ்டை, திரும்பவும் கொண்டுவந்திருந்தார். என்னவோ செய்தது.

இரண்டாவது பதிவை எழுதியது, Freakonomics என்னும் புத்தகத்தை எழுதிய இருவரில் ஒருவர் – ஸ்டீவ் லெவிட்(Steve Levitt). சமீபத்தில் வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகனாமிக்ஸ் புத்தகம். புத்தகத்தில் சொன்னது அத்தனையும் காம்ன்சென்ஸ் தான். ஆனால் இந்த வேக உலகில், காமன்சென்ஸ் இஸ் நாட் காமன். அதனால் தான் க்ரைம் சதவிகிதத்துக்கும், ஆபார்ஷனுக்கும், முடிச்சுபோட இவர்களால் மட்டுமே முடிந்தது. கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம்.

உண்மை சொல்லுதல் பற்றி இவர் எழுதிய பதிவு. க்ரைக்ஸ்லிஸ்ட்(craigslist.org) என்னும் ஒரு free-ads வலைதளத்தில் வந்திருந்த ஒரு பெண்மணியின் பணக்கார ஆண்களை பற்றிய ரொம்பவும் ”உண்மையான’ ஒரு கேள்வியும், அதற்கு ரொம்பவும் ”உண்மையான’ பதில் சொன்ன ஒரு பணக்கார ஆண் எகனாமிஸ்டை பற்றியது. யோசிக்க வைத்தது.

இது போர்க்களமா?

ப்ளாக் ப்ளாக் என்று காமெடியாய் ஏதோ ஆரம்பித்து இன்று கொலை மிரட்டலில் வந்து நிற்கிறது. கேதி சியரா(Kathy Sierra) என்னும் ஒரு பிரபல ப்ளாகர் ஒருவரரின் வலைப்பதிவிற்கு வந்த ஏராளமான, பெயரில்லாத மிரட்டல் கமெண்டுகளால், அவர் பேசவேண்டிய ஒரு கான்பெரன்ஸிலிருந்து விலகிக் கொண்டார். கேதி ப்ளாக் தவிர சில ஜாவா சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். இவர் வலைப்பதிவு எழுதுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்க போய், பூதம் கிளம்புகிறது.

இவரின் Creating Passionate Users என்னும் பிரபல வலைப்பதிவில் இது சம்பந்தமான இந்த ப்ளாக் போஸ்டைக் கண்டு வலைப்பதிவுலகம் சற்றே சலசலத்துப் போயிருக்கிறது. பிரபல வலைப்பதிவாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் விடுமுறையில் போய்விட்டார்கள். இதனால் நிறைய வளர்ச்சியடையாத வலைப்பதிவு சட்டங்கள், உடனடி இயக்கத்துக்கு வந்தால், முன்னேற்றம் தான். பிபிசி செய்தி.

இந்திய வலைப்பதிவுலகிலும், இது போல நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு வலைப்பதிவாளர், இது போல சில கமெண்டுகளாலும் அவர் பெயரில் யாரோ எழுதிய மற்றொரு வலைப்பதிவாலும், தன் ப்ளாகை மூடி ஜூட் ஆகியது சோகம் தான். அது யாருக்கும் தெரியாதது மற்றோர் சங்கடம்.

வலைப்பதிவின் மூலம் இது போல, “மவனே நான் யார் தெரியுமா, என்னோட ஹிட் எவ்ளோ தெரியுமா ?” சங்கதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ கிடக்கிறா பிட்ச், அந்த போஸ்ட் எழுதின அவள அப்படியே ரேப் பண்ணணும் என்றெல்லாம் கேட்க ஆளின்றி எழுதுகிறார்கள். கேட்டால் freedom to talk, first amendment என்று ஜல்லி.

தன்னுடைய வலைப்பதிவில் கவிதை, கதை, நாடகம், ஊடகம் என்று நல்லவர்களாய் எழுதி, பெயரில்லாமல் மற்றவர் வலைப்பதிவில் யார் எப்படி உச்சா போகிறார்கள், எந்த பிரபல ப்ளாகர் எந்த ஆண் குறியை குறி வைக்கிறார் என்றும் சதா வாந்தி எடுக்கிறார்கள். இதைப் போல் எழுத ‘தில்’ இல்லாதவர்கள் இவர்களுக்கு ஜால்ராயிட்டு உசுப்புவது மற்றோரு விஷயம். ஒருவர் எழுதிய எழுத்தை எதிர்க்கப் போய், நிறையவே பர்சனலாகி, விஷயம் சீரியஸாகிவிட்டது.

இவர்களையெல்லாம் வருகிற மே மாதத்தில் எந்த பேட்டையிலாவது இரண்டு குடம் தண்ணீருக்கு அலைய விடலாம் அல்லது 725ஆம் நாளன்று, சாந்தி தியேட்டரில் சந்திரமுகி பார்க்க வைக்கலாம்.

எப்படி கடவுள் நம்பிக்கைகளும், கோயில்களும் அதிகமாக, அந்த செயல்பாடுகளில் கயமைத்தனங்கள் புகுந்து, அதை எதிர்க்க நாத்திகவாதம் உருவாகி கடவுளே இல்லை என்று அறைகூவும் நிலைமை உருவானதோ அதை போல தான் இதுவும். சில பிரபலர் செய்யும் கயமைத்தனங்களை எதிர்க்க உருவான கூட்டம் வேறோரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவை எல்லாமும், 15 நிமிட பிரபலத்துக்குத் தான். யாரோ ஒருவர் ஸ்லாஷ் டாட்டில் சொன்னது போல, “The Internet used to be a university. Then it became a shopping mall. But now, it’s a war zone.”

%d bloggers like this: