2010ல் தமிழ் பேப்பரில் பாரா எழுத சொல்லி இன்னபிற என்றொரு வாரப் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு உட்கார்ந்து நள்ளிரவு வரை எழுதி முடித்து சொக்கனுக்கு அனுப்பி விட்டு தூங்கப் போவேன். அது வெளிவந்து கொண்டிருந்தபோது யாராவது ஒரு ஆசாமி – சூப்பர் ப்ரோ என்று டுவிட்டரில் சொல்வார். அதோடு சரி. ரொம்ப வரவேற்பெல்லாம் இருந்ததாக ஞாபகம் இல்லை. கிட்டத்தட்ட 25 வாரங்களுக்கு பிறகு வேலைப் பளு காரணமாக அப்பத்திக்கு ஒரு ப்ரேக் எடுக்கப் போய் பெரிய இடைவெளியாகிவிட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள்.
இந்த நீண்ட இடைவெளியில் சினிமா பார்ப்பது கொஞ்சம் குறைந்தது, இசை கேட்பது அதிகரித்தது(நன்றி யூடூப்), புத்தகங்களுக்கான நேரத்தை இணையம் ஆக்கிரமிக்க, முடி சற்றே கொட்டி-வெளுத்து, வீட்டு வேலைகள் அதிகமாகி, நாற்பதை வயது எட்டி, திரும்பிப் பார்த்தால் – பதினேழு வயதில் ஜிப்பா ஜோல்னாவில் சினிமா இலக்கியம் என்று பிதற்றியவனுக்கும், நாற்பதில் ஷார்ட்ஸில் திருப்பாவை பஜனை கோஷ்டியில் அமெரிக்க பெருமாளை சேவிப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் எராளம்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், 2008ன் பிப்ரவரியில் சுஜாதா மறைந்த பிறகு சில மாதங்களுக்கு எழுத்தின் மேல் ஆர்வம் போய்விட்டது. பின்பு 2010 இந்த தமிழ் பேப்பர் பத்தியால் தான் மீண்டும் எழுத வந்தேன். அதன் பிறகு பத்து வருடங்கள். ஆக ப்ரேக் கே பாத் என்னால் எழுத கை வராது என்பது தெரிகிறது. ஆக மீண்டும் எழுதலாம் என்று இப்போது நினைத்த போது, ப்ரேக் இல்லாமல், படிப்பவர் யார் – என்ன சொல்லுவார்கள் என்று கவலைப்படாமல், வாரம் ஒரு முறையாவது எழுத அவா. பார்க்கலாம்.
செனட் சபையில் ஜனாதிபதி மீதான பதவி நீக்க விசாரணை தொடங்கிய தினம்.
1/22/2020