[புகைப்படம்: அவுட்லுக்]
மாடியிலிருந்து எட்டிப்பார்த்தார் அசோகமித்திரன். கைனடிக் ஹோண்டாவை ஓரமாய் பார்க் செய்து விட்டு ஏறிட்டுப் பார்த்தேன். பல்லைச் சற்றே கடித்தபடி கவலையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். முன்னால் மாட்டியிருந்த ப்ளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு அவர் இருந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மாடியேறினேன்.
”உள்ள வாங்க, அதோ அந்த ரூம்ல இருக்கார்” என்றார் ஒரு பெண்மணி, அந்த அப்பார்ட்மண்டின் க்ரில் கேட்டை திறந்தபடி.
மனைவியாய் இருக்கும் என்று முடிவுசெய்து, வாங்கி வந்திருந்த மாம்பழப் பையை அவரிடம் கொடுத்தேன்.
”மாம்பழமெல்லாம் எதுக்குப்பா, வயசாச்சு… எல்லாருக்கும் உடம்பு சரியில்லை, இதெல்லாம் யாரும் சாப்பிடறதில்லை” என்று சொன்னார்.
”பரவாயில்லை மாமி” என்று சொல்லி சிரித்தபடி அவரைத் தாண்டிச் சென்றேன்.
“வாப்பா” என்றார் எழுத்தாளர்களின் எழுத்தாளர். ஒரு எளிய நீல நிற சட்டை, கொஞ்சம் பழுப்பேறிய வேட்டி, சற்றே கலைந்த தலை, நிறைய சுருக்கமான நெற்றி. இன்னமும் பல்லைக் கடித்தபடி இருந்தார்.
“என்ன வேணும்”.
“ஒண்ணுமில்லை சார். உங்க ஃபேன், அமெரிக்காலேந்து வரேன். உங்கள பார்த்துட்டுப் போலாம்னு” என்று சொன்னேன்.
அதற்கு இரண்டு மணி நேரம் முன்புதான், கிழக்கு பதிப்பகத்தில் கேட்டு அவரின் போன் நம்பரும், வேளச்சேரி விலாசமும் வாங்கினேன். போன் செய்தவுடன், வாங்க என்றார். வரவேற்பார் என்று நினைத்தேன்.
“உக்காருங்க” என்றார்.
“நான் உங்கள 2004ல ஒரு புத்தக விழால பார்த்துப் பேசினேன். ஒரு போட்டோ கூட எடுத்துக்கிட்டேன்”
“எந்த பங்ஃஷன்”
“அது…. உயிர்மை ஆன்லைன் விழா, சுஜாதா இந்திரா பார்த்தசாரதியெல்லாம் கூட இருந்தாங்க. நீங்க பேசினப்ப கணையாழியை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடத்தினீங்கன்னு பிரமாதமா பேசினீங்க. ஒரே சிரிப்பு.”
இன்னமும் பல்லைக் கடித்தபடி என்னைப் பார்த்தார். அந்த விழாவைப் பற்றி யோசிக்கிறார் என்று தோன்றியது. அங்கிருந்த அமைதியை கலைப்பதற்கு மேலும் பேசினேன்.
“சமீபத்தில உங்களோட ‘இன்று’ படிச்சேன். ரொம்ப மூவிங். சூப்பர் சார்”
”ஆமால்ல, அதுவும் அந்த பொண்ணோட நிலைமை கஷ்டம்தான்” என்றார்.
அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரத்தை படைத்தவர் அவர், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதபடி பேசினார். எனக்கு முதலில் புரியவில்லை.
அதன் பிறகு 90 நிமிடங்கள் கழிந்தன. பிறகு புரிந்தது, இவர் நிஜமாகவே வேற மாதிரி.
அசோகமித்திரனை சற்று தள்ளி நின்று பார்த்தால் நினைப்பில் தன்னை மறந்தவர் போல இருப்பார். வயதாகியதால் மறதியோ என்று தோன்றலாம். பேச ஆரம்பித்தால் அத்தனை விஷயமும் தெரிந்த ஆள் என்று புரியும். டிக்கின்ஸ்சை முதல்முறை படித்ததில் இருந்து, அயோவா அனுபவங்கள், 70களில் இருந்த மவுண்ட்ரோடு ட்ராபிக், ட்ரைவ்-இன் உட்லாண்ட்ஸில் காபி விலை வரை vividஆக விவரமாய் பேசினார்.
“நான் எழுதின புஸ்தகம் இது, படிச்சிருக்கீங்களான்னு கேக்கற்தே வன்முறையாப்படறது. அதனால புஸ்தகத்தைப் பத்தியெல்லாம் மத்தவங்ககிட்ட பேசறதே இல்லை. இப்பல்லாம் யாராவது படிக்கறாங்களா என்ன?” என்று கிளம்பும் போது சொன்னார்.
நான் கையில் எடுத்து வந்திருந்த, இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் புத்தகத்தில், நண்பர் குரு சுப்பிரமணியத்துக்கு என்று எழுதி கையெழுத்திட்டார். அவர் உட்கார்ந்த மாதிரியே ஒரு போட்டோ எடுத்தேன்.
“வரேன் சார்”
“சரிப்பா, சீக்கிரம்… இருட்டிண்டு வருது மழை வரப்போறது, வீடு பக்கம் தானே?”
கிரில்லை திறந்து கொண்டு, அவர் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன். ஹோண்டாவை ஸ்டார்ட் செய்த போது எதோ தோன்ற திரும்பிப் பார்த்தேன். பால்கனியிலிருந்து பல்லைக் கடித்தபடி கொஞ்சம் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் சாதாரண கணங்களை காவிய கணங்களாக்கிய எழுத்தாளனுக்கு ஒரு சின்ன கவலையை கொடுத்ததற்கு என்னையே திட்டிக் கொண்டேன்.
”நான் எழுதின புஸ்தகம் இது, படிச்சிருக்கீங்களான்னு கேக்கற்தே வன்முறையாப்படறது.” 2009ல் அவர் சொன்ன அந்த வரி இன்று வரை வாழ்வில் உதவியாயிருக்கிறது. நன்றி மித்திரன்.
Leave a Reply