சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.
ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.
இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.
இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.
இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.
சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.
பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.