நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.
இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.
யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.
யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.
போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.