சினிமா · சென்னை · பதிவுகள் · மனிதர்கள் · Mani Ratnam

மணிரத்னசோழன் – வந்ததும், வருவதும் 1

1

நாயகன் படப்பிடிப்பில் மணி ரத்னம், கமல் மற்றும் பிரதீப் சக்தி

ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, புரசைவாக்கத்திலிருந்த இந்தி டீச்சிங் சென்டரில் பிரவேஷிகாவோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் போர் அடிக்க ஆரம்பித்ததால், க்ளாஸ் போவதை நிறுத்தி விட்டேன். அம்மாவோ இந்தி படித்திருந்தார். “விட்றாத படி படி” என்றபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

கங்காதீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் ஏராளமான யுவ-யுவதிகள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருந்தேன். சைக்கிளில் ஒரு நாள் கோவிலுக்குச் செல்லும் போது அங்கே நின்று என்ன வகுப்புகள் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றேன். கோவில் அக்ரஹார தெருவிற்கு எதிரில் ஒரு சிறிய முட்டுச் சந்து. முதலில் இருந்தது ஒரு கார் மெக்கானிக் கடை. அதை தாண்டிச் சென்றால் ஒரு மாடி வீடு. வீட்டின் மொட்டை மாடியில் பெஞ்ச் போட்டு ஏராளமான இளம் வயதுக்காரர்கள் உட்கார்ந்து ஏதோ க்ளாஸ் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வாசலில், ஹிந்தி வித்யாலயா என்று போர்டு சொன்னது. அந்த மொட்டை மாடி க்ளாஸும், கலகலவென்று இருந்த அந்த இடமும் பிடித்துப் போனது.

இரண்டு மாதங்கள் கழித்து, இந்தி வித்யாவில் சேர்ந்திருந்தேன். இந்தி க்ளாஸை விட்ட இடத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்திருந்தேன். முகுந்தன் என்பவர் தான் க்ளாஸ் டீச்சர், அவர் தான் அந்த நிலையத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அவர் வீட்டின் மாடியில் தான் அந்த வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

மாலை ஐந்து மணிக்கு வகுப்பு ஆரம்பிக்கும். மொட்டை மாடி என்பதால் வெயில் இறங்கிப் போய் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து அவ்வப்போது கேட்கும் மணிச் சத்தம், கீச்கீச் எனப் பறவைகளின் சத்தம், பளிச்சென இருக்கும் சக வயது பெண்கள் என்று ஒரு டீனேஜருக்கு எற்ற ரம்மியமான சூழ்நிலை. இதையெல்லாம் மீறி சுவாரஸ்யமாய் இந்தி வகுப்பெடுக்கும் முகுந்தன் சார். வெகு சீக்கிரத்தில் முகுந்தன் ஆதர்சமாகிப் போயிருந்தார். அந்நாள் வரை.

அஞ்சலி

அவ்வருட ஜூலை மாதத்தில் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படம் வெளியானது. தனியாக சினிமாவுக்குப் போக ஆரம்பித்திருந்த நான், அம்மாவிடம் இருந்து ஐந்து ரூபாய் என வாங்கிப் போய் படத்தை இருமுறை பார்த்திருந்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தில் மாட்டிக்கொண்டு, நேந்துவிட்ட கிடா போல அஞ்சலி பைத்தியம் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாலை, இந்தி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் முகுந்தன் சார்.

“சார் அஞ்சலி எப்படி?” என்று அவருக்கு நெருக்கமான ஒரு பையன் கேட்க

“நேத்து நைட் ஷோ தான் போனோம். ராஸ்கல் என்ன படம் எடுத்திருக்கிறான் மணி ரத்னம். பசங்க எல்லாம் அதிகப் பிரசங்கித்தனமா பிஹேவ் பண்றாங்க. எதோ லவ்வர்ஸ சேர்த்து வைக்கிறாங்களாம். இதெல்லாம் எங்க நடக்கும். இப்படித் தான் ஹாலிவுட்டைப் பார்த்து படமெடுத்து நம்ப ஊரை இன்ஃபுலுயன்ஸ் பண்ண வேண்டியது. ராஸ்கல்கள்ஸ்” என்றார் முகுந்தன் சார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குச் சட்டென முகுந்தன் சார் மீது கோபம் வந்தது. பக்கத்திலிருந்த கார்த்தியைப் பார்த்தேன். என் கோபத்தில் அவனும் பங்கு கொண்டபடி தலையாட்டினான். அந்தப் படத்தில், அப்பார்ட்மெண்ட் சிறுவர்கள் செய்யும் காதல் தூது போன்ற எல்லா விஷயங்களும் சர்வ சாதரணமான விஷயங்கள். அந்த வயதில் டீனேஜராக எல்லோரும் செய்திருந்தார்கள் அல்லது யாரவது செய்தது பற்றி கேள்விப் பட்டிருந்தார்கள். யாரும் செய்யாத ஒரு விஷயத்தைக் கூட மணிரத்னம் படத்தில் காட்டவில்லை என்று தோன்றியது. படத்தில் அந்த சிறுவர்கள் செய்யும் சிறுச்சிறு விஷமங்கள், அப்போது மாறிக் கொண்டிருந்த சென்னையின் பிரதிபலிப்பு தான்.

என்ன தான் முகுந்தன் சார் ஆதர்ச வாத்தியாராய் இருந்தாலும், மணி ரத்னத்தின் மேல் அபாண்டமாய் குற்றம் சாட்டிய போது நான் பேச முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்ததால் என்மேலேயே கோபம் வந்தது. இந்தி படிக்காமல் இருக்க எனக்கு இன்னுமொரு காரணம் கிடைத்தது. அடுத்த நாள் சனிக்கிழமை. மீண்டும் ஒரு முறை அம்மாவிடம் மன்றாடி பணம் வாங்கிக் கொண்டு மூன்றாவது முறையாகச் சக்தி அபிராமியில் காலைக் காட்சி பார்த்தேன். பார்த்து விட்டு வெளியில் வரும் போது அன்னை அபிராமியில் உலகம் பிறந்தது எனக்காக என்ற சுமாரான சத்யராஜின் வெற்றிப் படத்தின் மேட்னி காட்சிக்குக் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது.

”இந்த படத்துக்கு எல்லாம் இப்படி ரசனை இல்லாம அடிச்சிக்கிறாங்க. நாம பார்த்த அஞ்சலியை புரிஞ்சுக்க முடியாதவங்க” என்று அவர்களின் மேல் ஒரு பரிதாபம் வந்தது. அந்தப் பரிதாபம் பொன்னியின் செல்வன் வரை தொடருகிறது.

(தொடரும்)