kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • October 23, 2006

    சென்னையிலிருந்து புத்தகங்கள் – 1

    என்ன தான் சென்னையிலிருந்த போது தமிழ் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தாலும், அமெரிக்கவாசியான பின்பு தான், தமிழ் இலக்கிய ஆர்வம் பிய்த்துக் கொள்கிறது. தெரிந்தவர்களில் யார் வருவதாய் தெரிந்தாலும், உடனே ஒரு ஜிமெயில் பறக்கும். புக்ஸ் வாங்கி வர முடியுமா ? முடிந்தால், இந்தா பிடியுங்கள் லிஸ்ட். பலர் புத்தகம் தானே, டான்டெக்ஸ் இல்லாத வரை சரியன்று ஒத்துக் கொண்டு வாங்கி வருவார்கள். சிலர், இவன் யாருடா சுத்த கேணையா இருக்கான் என்று ஜகா வாங்குவார்கள். தப்பில்லை. என்னை பொருத்த வரை, வாங்கி வந்தால் சரி, இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது இண்டர்நெட்டு.

    எனக்கு புத்தகம் வாங்க நண்பர்களை நான் செலுத்துமிடம், New Book Lands. முன்பொரு முறை சுஜாதாவிடம் கேட்ட பொழுது, அவர் சொன்ன இடம் இது. என்ன சார், லாண்ட்மார்கில வைரமுத்துவை தவிர தமிழ் புத்தகமே இல்லை. எனக்கு தெரிஞ்சு சென்னையில நல்ல த்மிழ் புக்கு கடையே இல்ல போல இருக்கு, என்று குறைப்பட்டுக் கொண்ட போது, அப்படியெல்லாம் இல்லை நம்ம T.nagar New Book Lands இருக்கு என்றார். தேசிகனிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு, ஒரு மே மாத சனிக்கிழமை வெய்யிலில் மண்டை காய்ந்து சென்றேன். சற்றே வழுக்கையும் சிரித்த முகமுமாய், ஒருவர் வாங்க வாங்க என்றழைத்தார். ரைட்டர் சுஜாதா சார் தான் இங்க என்னை அனுப்பினார் என்றேன். அவர் பக்கத்தில் இருந்த அந்த காஷியர் பெண்ணிடம் ஏதோ சொல்ல, வந்தது சில்லென்று ஒரு டம்ளர் மோர். முதலில் நான், சுஜாதா பெயரை namedrop பண்ணியதால் தான் மோர் கொடுத்தார்கள் என்று நினைத்தேன். எனக்கு பிறகு ஊதுபத்தி விற்க வந்தவருக்கும் மோர் கொடுத்த போது தான், அட எல்லாருக்கும் கொடுக்கிறாங்க என்று புரிந்தது.

    புக்லாண்ட்ஸின் மானேஜர், ஸ்ரீனிவாசன், சிரித்த முகத்தினன். தமிழ் புத்தக வாசம் கொண்டவர். எந்த புத்தகமாயிருந்தாலும், எங்கிருந்தாலும் சரி, வாங்கித்தருவார். New Book Landsசுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக புத்தகம் வாங்குவீர்கள். நர்மதா பதிப்பகத்தின் ஒரு அங்கம். அங்கு புத்தகம் வாங்க சென்ற என் அருமை நண்பன், இவனுக்கு நாம புக்கு வாங்கி அனுப்பி கட்டுபுடி ஆகாது, இந்த கடையில கேட்டு பார்ப்போம் என்று விசாரிக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன பதில் எனக்கும் பிடித்திருந்தது.

    முதல் முயற்சியாக ஒரு 15 புத்தகத்தின் லிஸ்டை orders@newbooklands.comக்கு அனுப்பினேன். அவர்கள் புத்தகத்திற்கும் + அஞ்சல் செலவாக ஒரு 150 இந்திய ருபாயும் கட்ட சொல்லி ஒரு creditcard பாங்க் லிங்க்கு அனுப்பி, நான் செலுத்தி, புத்தகம் சென்னையிலிருந்து கிளம்பியது. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. 80 நாட்கள் கழித்து. அத்தனை வெயிட் செய்ததால் புத்தகங்களை கட்டிக் கொள்ளாத குறை. விசாரித்து பார்த்தால் புத்தகங்கள் வந்தது கப்பலில் என்று தெரிந்தது. புத்தகம் வாங்கித் தள்ளும் ஆசாமியாய் இருந்து, கொஞ்சம் வெயிட் செய்ய முடியுமாயின், அஞ்சல் செலவை மிச்சப்படுத்தி இன்னும் இரண்டொரு புத்தகங்கள் sneek-in செய்ய முடியும். போன வாரம், அடுத்த பெரிய லிஸ்டும் கொடுத்து புத்தகங்களும் கப்பலேறி விட்டன.

    திரை கடலோடி வந்த பர்ஸ்ட் லிஸ்ட் புத்தகங்கள் –

    கற்றதும் பெற்றதும் 1 – சுஜாதா [டாய்லெட்டில் கை தவறி தண்ணியில் விழுந்ததற்காக replacement] [விகடன் பிரசுரம்]
    அசோகமித்திரன் பதிப்புலகம் – ஞாநி [கலைஞன் பதிப்பகம்]
    ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா [சுஜாதாவின் well researched. magnum opus.] [உயிர்மை]
    வஸந்த் வஸந்த – சுஜாதா [உயிர்மை]
    ஒரே ஒரு துரோகம் – சுஜாதா [விசா]
    வண்ணத்துப் பூச்சி வேட்டை – சுஜாதா [உயிர்மை]
    ரப்பர் – ஜெயமோகன் [கவிதா]
    பின் கதை சுருக்கம் – பா ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
    வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி [கிழக்கு பதிப்பகம்]
    சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுப்ரமண்ய ராஜு [கிழக்கு பதிப்பகம்]
    மெர்குரிப் பூக்கள் – பாலகுமாரன் [ விசா]
    ஜன கண மன – மாலன் [கிழக்கு பதிப்பகம்]
    குதிரைகளின் கதை – பா.ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
    ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன் [கவிதா பதிப்பகம்]
    ஆகாயத்தாமரை – அசோகமித்திரன் [கிழக்கு பதிப்பகம்]

  • October 8, 2006

    இருவரில் ஒருவர்

    மு க - ராம்கி

    நண்பர் ராம்கி தன் இரண்டு[1,2] புத்தகங்களையும், சியாட்டல் வந்த மற்றோரு நண்பர் மூலம் அனுப்பியிருந்தார். ராம்கி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய சந்திப்பில் தமிழ் ப்ளாகராக அறிமுகமானார். நல்ல நண்பர். சக ரஜினி ரசிகர். எப்பொழுது கேட்டாலும் சென்னையிலிருந்து புத்தகம் வாங்கி அனுப்புவார். இதெல்லாம் தாண்டி, மு.க புத்தகத்தின் மூலம் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகியுள்ளார்.

    படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றிய இரண்டு விஷயங்கள் இவ்விவை. கருணாநிதி என்பவர் இல்லாமல் தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு, ஜோதிகா இல்லாத சூர்யா போல இருக்கும். இந்த மனிதரை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவருடைய அனுபவதிற்காக, மதிக்கப்பட வேண்டியவர்.

    அந்த விடிகாலை கைதில் ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம், ஒரு நல்ல prologue-ஆக அமைகிறது. அதன் பின் திருக்குவளையில் கருணாநிதி பிறப்பதற்கு சற்று முன்பு ஆரம்பித்து, ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. மாலன் சொல்வது போல, கலைஞர் வாழ்கையில் தெரியாத விஷயங்களில் புத்தகம் சுவாரசியமாகவும், தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் மெதுவாகவும் இருக்கிறது. ஆனால் இது எழுத்தாளரின் தவறல்ல. நமக்கு தெரிந்த விஷயங்களும் சுவாரசியமாய் இருக்குமாயின், ராம்கி exaggerate செய்திருக்கிறார் என்பது தெரிந்து விடும்.

    மணி ரத்தினத்தின் இருவரில் கலைஞரின் கதாபாத்திரத்தில் கள்ளம் இல்லாமல் ஒரு வித புரட்சி மனப்பான்மை இருந்தது. ராம்கி தன் புத்தகத்தில் விலாவரியாக விவரிப்பதால், ஆரம்ப காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் தன் கலக எழுத்துக்களை யும் பேச்சுக்களையுமே பயன்படுத்தினார் போன்ற வாக்கியங்கள் highlight ஆகின்றன.

    மையக் கரு கலைஞராக இருப்பதால், இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்சி, எம்.ஜி.யார் போன்ற விஷயங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டே போகிறது புத்தகம். அதே சமயத்தில் பெரியார், அண்ணா, திராவிட கழகத்தின் வளர்ச்சியும் / வீழ்ச்சியும் போன்ற எதிர்பார்க்காத விஷயங்களை சற்றே in-depth ஆக ஆராய்ந்திருப்பது, மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும்.

    இரண்டு குறைகள் அல்லது opportunities for improvement ஆக நான் கருதுவது –

    ஒன்று, மு.க வின் பர்சனல் வாழ்க்கையை பற்றி சில பக்கங்கள் போட்டிருந்தால், அவரின் ஒரு நல்ல பயோகிராபியாக இருந்திருக்கும். அவரின் திருமணத்திற்கு பிறகு, அவரின் personal வாழ்க்கையை பற்றி ஒன்றுமே இல்லாதது குறையே.

    இரண்டு, இத்தனை புத்தகத்தையும் ராம்கியால் தானே எழுதியிருக்க முடியாது. பல புத்தகங்களையும், வரலாற்றையும் புரட்டிய பின்னரே இப்படி ஒரு சிறந்த படைப்பை உருவாக்க முடியும். அப்படி இருக்கும் போது, புத்தகத்தின் கடைசியில், Bibliography போட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.

    எப்படி இருந்தாலும், இந்த புத்தகத்தை படிப்பது, தமிழ் கூறும் நல்லுலகத்தில் இருக்கும் அனைவர்களுக்கும் ஒரு sneak-peek into the political history Tamil Nadu. சரள நடைக்கும், கடின உழைப்பிற்காகவும் ராம்கிக்கு ஒரு ‘ஜெ’ !!

  • October 7, 2006

    முல்லைகொடி யாரோ ?

    கௌதம் பச்சைக்கிளி முத்துச்சரம்

    முதலில் பருந்து என்றார்கள். பிறகு சிலந்தி என்றார்கள். இப்பொழுது பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிறார்கள். கௌதம் மேனன் – சரத்குமாரின் அடுத்த படம் வருகிறதோ இல்லையோ, எனக்கு ஒரு zooவிற்குள் போன பீலிங் வருகிறது.

  • October 5, 2006

    நேரம்டா நேரம் !! – 2

    சியாட்டல் டைம்ஸ்

    என்னை கேட்டால், இதை படிப்பதற்கு முன் முந்தைய Time மேட்டரை படிப்பது சாலச் சிறந்தது என்பேன்.

    இரண்டு நாட்கள் முன்பு ஆபிஸ் செல்லும் போது பஸ்சில், படித்துக் கொண்டிருந்தது, மாலனின் ஜன கண மன. காலை பஸ்சில், வழக்கமாக எனக்கு அருகில் உட்காரும் அந்த ஜப்பானிய இளைஞன் படிப்பது ஜப்பானிய புத்தகங்கள் தான். அவனை பார்த்து தான் நாமும் நமது vernacular மொழியில் படிக்கலாம் என்று எண்ணி, ஒரு வருடம் முன்பு பஸ்சில் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை லைப்ரரியில இருந்து எடுத்த, பிலிப் ராத், ஃபாக்னர், லியான் யூரி என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன்.

    பஸ்சில் பக்கத்து சீட்டு அமெரிக்கர்கள் சிலர், என்ன புத்தகம் படிக்கிறீர்கள், இது என்ன மொழி என்று நிஜ ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களில் இரண்டொருவருக்கு, சுஜாதா – அசோகமித்திரன் பற்றி சொல்லி இருக்கிறேன். சிலர் ஜேம்ஸ் பாட்டர்சனை படித்துக் கொண்டே, என் புத்தகத்தில் எட்டிப் பார்ப்பார்கள். சிலர் ஒன்றும் கண்டு கொள்ளாமல், மாக்கிண்டாஷுவார்கள்.

    இரண்டு நாட்கள் முன்பு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த IPod பெண், தமிழ் புத்தக அட்டையை பார்த்து கொஞ்சம் முகம் சுளித்தது, சங்கடமாய் இருந்ததால், புத்தகத்தை மூடி வைத்து விட்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

    நேற்று சியாட்டல் பை படித்துக் கொண்டிருந்த போது, கண்ணில் பட்ட விஷயம் விவகாரமாயிருந்தது. சியாட்டல் விமான நிலையத்தில், தொலைபேசியில் தமிழ் பேசிக் கொண்டிருந்த அப்பாவி தமிழனை சந்தேக கேஸில் பிடித்து விசாரித்து பின்பு விட்டு விட்டார்கள். என்ன தான் அமெரிக்க போலிஸ் நியாயமாக நடந்து கொள்பவர்களாய் இருந்தாலும், நம்ம ஆளு கொஞ்சம் கடியாகி, இனிமேல் விமான நிலையத்தில் தமிழே பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு சிக்காகோ பிளைட் ஏறியிருக்கிறார்.

    மாலனின் புத்தகத்தில் கோட்சே துப்பாக்கியெடுத்து பிர்லா தோட்டம் செல்லும் வரை படித்து விட்டு படுக்கும் போது தான் அது ஞாபகம் வந்தது. டைம் வாரப் பத்திரிக்கை சந்தாவை நிறுத்தலாம் என்று முடிவு செய்து இருந்தாலும், காலை காபிக்கு துணையாக Seattle Times பேப்பர் போட சொல்லியிருந்தேன். ஜிம் போவத்ற்காக காலை 5:30க்கு கதவு திறந்தால் வாசலில், ஒரு குயர் பேப்பரை ரப்பர் பேண்டில் கட்டி போட்டிருந்தார்கள்.

    ஏதோ காபிக்காக ஐம்பது செண்ட்டுக்கு வாஙகும் சியாட்டல் டைம்ஸ், ஒரு இரண்டு கிலோவாவது இருக்கும். இருக்கிற information overloadல் இந்த ரெண்டு கிலோ இன்பர்மேஷன் வேறு. பஸ்சில் எடுத்து சென்றால் எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்பார்கள் என்று முக்கியமான பேப்பரை மட்டும் எடுத்து செல்கிறேன். இனிமேல் அந்த iPod பெண் வந்தால் முகம் சுளிக்காமல், பாட்டு கேட்கலாம். எனக்கு என்னவோ ஒரு Time போய் இன்னோரு Time வந்த்து, கத்தி போய் வாள் வந்ததாய் தான் தோன்றுகிறது.

  • October 3, 2006

    நேரம்டா நேரம் !!

    டைம் இந்தியா டுடே

    நீங்கள் டைம் படித்திருக்கிறீர்களா ? டைம் ஒரு அமெரிக்க வார இதழ். அதை விடுங்கள், நம்மூர் இந்தியா டுடே பார்த்ததுண்டா. அதைப் போலவே டைமும், அமெரிக்க நடுத்தரவர்க்க பார்த்சாரதிகளுக்கும், சுரேஷ்களுக்குமான பத்திரிக்கை. சந்தா ஓன்றும் அதிகமில்லை. வருஷத்துக்கு இருபதே டாலர், ஜெண்டில்மென். வெறும் இருபதே டாலர்.

    நல்ல வழவழ அட்டையில், எதாவது கொழ கொழ மேட்டரை, பேனை பெருமாளாக்கி கவர் ஸ்டோரி போடுவார்கள். அதை நாமும் பஸ்சில், பாதி தூக்கத்தில், ஏக குளுரில், படித்துக் கொண்டே ஆபிஸ் செல்வோம். கடைசி ரெண்டு பக்கத்தில், ஏஞ்சலினா ஜோலியின் குழந்தையும், டாம் க்ரூஸின் அடுத்த கர்ள் பிரண்டும் பல் இளிப்பார்கள். அதை பற்றி ஒரு மூன்று பத்தியும், லண்டனில் நடந்த கேட்வாக்கில் அவிழ்ந்த பாவடையும் பற்றியும் ‘சுவாரசியமாக’ எழுதி விட்டு, இனிதே முற்றும் போடப்படும். நடுநடுவே சூப்பர்மேன் என்னும் கற்பனை ஹீரோ, Gayயா இல்லையா ? ப்ளாகிங் என்னும் புதிய மீடியா தாக்குப்பிடிக்குமா புடுங்கிக்குமா ? சதாம் ஹுசைனா சாகிர் ஹுசைனா ? என்று ‘time’ly கட்டுரைகள் வேறு.

    இவ்வளவு கடுப்பாக காரணம், டைம் பத்திரிகை அல்ல. பல வருடங்களாக இந்தியா டுடே படித்து வந்தும், அது ஒரு டைமின் க்ளோன் என்று தெரியாமல் போனதால் வந்த வெறுப்பு தான். கடந்த ஒரு வருடமாக டைம் படிக்கும் நான் ஆழ்ந்து கவனிப்பது, இந்தியா டுடேவின் காப்பி திறமை தான். என்னமாய் அடிக்கிறார்கள். அட்டையில் இருந்து, க்டைசி பக்கம் வரை அதே மாதிரி ரிப்போர்டிங், புகைப்படங்கள், கருத்து கணிப்புகள், gossipகள் என்று எல்லாமே அதே அதே.

    ஏப்ரல் 2007ல் முடியும் எனது சந்தாவிற்கு இப்பொழுதே பணம் கட்டச் சொல்லி கடிதம் போட்டிருக்கிறார்கள். இருபது டாலர் செக் அனுப்பினால், ஒரு வருட சந்தாவும், ஒரு ‘டைம்’பீஸும் தருகிறார்கள். இதை எழுத ஆரம்பித்த பொழுது அனுப்பலாம் என்றிருந்தேன், இப்போ ம்ஹும். No Way.

←Previous Page
1 … 89 90 91 92 93 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar