என்ன தான் சென்னையிலிருந்த போது தமிழ் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தாலும், அமெரிக்கவாசியான பின்பு தான், தமிழ் இலக்கிய ஆர்வம் பிய்த்துக் கொள்கிறது. தெரிந்தவர்களில் யார் வருவதாய் தெரிந்தாலும், உடனே ஒரு ஜிமெயில் பறக்கும். புக்ஸ் வாங்கி வர முடியுமா ? முடிந்தால், இந்தா பிடியுங்கள் லிஸ்ட். பலர் புத்தகம் தானே, டான்டெக்ஸ் இல்லாத வரை சரியன்று ஒத்துக் கொண்டு வாங்கி வருவார்கள். சிலர், இவன் யாருடா சுத்த கேணையா இருக்கான் என்று ஜகா வாங்குவார்கள். தப்பில்லை. என்னை பொருத்த வரை, வாங்கி வந்தால் சரி, இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது இண்டர்நெட்டு.
எனக்கு புத்தகம் வாங்க நண்பர்களை நான் செலுத்துமிடம், New Book Lands. முன்பொரு முறை சுஜாதாவிடம் கேட்ட பொழுது, அவர் சொன்ன இடம் இது. என்ன சார், லாண்ட்மார்கில வைரமுத்துவை தவிர தமிழ் புத்தகமே இல்லை. எனக்கு தெரிஞ்சு சென்னையில நல்ல த்மிழ் புக்கு கடையே இல்ல போல இருக்கு, என்று குறைப்பட்டுக் கொண்ட போது, அப்படியெல்லாம் இல்லை நம்ம T.nagar New Book Lands இருக்கு என்றார். தேசிகனிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு, ஒரு மே மாத சனிக்கிழமை வெய்யிலில் மண்டை காய்ந்து சென்றேன். சற்றே வழுக்கையும் சிரித்த முகமுமாய், ஒருவர் வாங்க வாங்க என்றழைத்தார். ரைட்டர் சுஜாதா சார் தான் இங்க என்னை அனுப்பினார் என்றேன். அவர் பக்கத்தில் இருந்த அந்த காஷியர் பெண்ணிடம் ஏதோ சொல்ல, வந்தது சில்லென்று ஒரு டம்ளர் மோர். முதலில் நான், சுஜாதா பெயரை namedrop பண்ணியதால் தான் மோர் கொடுத்தார்கள் என்று நினைத்தேன். எனக்கு பிறகு ஊதுபத்தி விற்க வந்தவருக்கும் மோர் கொடுத்த போது தான், அட எல்லாருக்கும் கொடுக்கிறாங்க என்று புரிந்தது.
புக்லாண்ட்ஸின் மானேஜர், ஸ்ரீனிவாசன், சிரித்த முகத்தினன். தமிழ் புத்தக வாசம் கொண்டவர். எந்த புத்தகமாயிருந்தாலும், எங்கிருந்தாலும் சரி, வாங்கித்தருவார். New Book Landsசுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக புத்தகம் வாங்குவீர்கள். நர்மதா பதிப்பகத்தின் ஒரு அங்கம். அங்கு புத்தகம் வாங்க சென்ற என் அருமை நண்பன், இவனுக்கு நாம புக்கு வாங்கி அனுப்பி கட்டுபுடி ஆகாது, இந்த கடையில கேட்டு பார்ப்போம் என்று விசாரிக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன பதில் எனக்கும் பிடித்திருந்தது.
முதல் முயற்சியாக ஒரு 15 புத்தகத்தின் லிஸ்டை orders@newbooklands.comக்கு அனுப்பினேன். அவர்கள் புத்தகத்திற்கும் + அஞ்சல் செலவாக ஒரு 150 இந்திய ருபாயும் கட்ட சொல்லி ஒரு creditcard பாங்க் லிங்க்கு அனுப்பி, நான் செலுத்தி, புத்தகம் சென்னையிலிருந்து கிளம்பியது. புத்தகங்கள் வந்து சேர்ந்தன. 80 நாட்கள் கழித்து. அத்தனை வெயிட் செய்ததால் புத்தகங்களை கட்டிக் கொள்ளாத குறை. விசாரித்து பார்த்தால் புத்தகங்கள் வந்தது கப்பலில் என்று தெரிந்தது. புத்தகம் வாங்கித் தள்ளும் ஆசாமியாய் இருந்து, கொஞ்சம் வெயிட் செய்ய முடியுமாயின், அஞ்சல் செலவை மிச்சப்படுத்தி இன்னும் இரண்டொரு புத்தகங்கள் sneek-in செய்ய முடியும். போன வாரம், அடுத்த பெரிய லிஸ்டும் கொடுத்து புத்தகங்களும் கப்பலேறி விட்டன.
திரை கடலோடி வந்த பர்ஸ்ட் லிஸ்ட் புத்தகங்கள் –
கற்றதும் பெற்றதும் 1 – சுஜாதா [டாய்லெட்டில் கை தவறி தண்ணியில் விழுந்ததற்காக replacement] [விகடன் பிரசுரம்]
அசோகமித்திரன் பதிப்புலகம் – ஞாநி [கலைஞன் பதிப்பகம்]
ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா [சுஜாதாவின் well researched. magnum opus.] [உயிர்மை]
வஸந்த் வஸந்த – சுஜாதா [உயிர்மை]
ஒரே ஒரு துரோகம் – சுஜாதா [விசா]
வண்ணத்துப் பூச்சி வேட்டை – சுஜாதா [உயிர்மை]
ரப்பர் – ஜெயமோகன் [கவிதா]
பின் கதை சுருக்கம் – பா ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி [கிழக்கு பதிப்பகம்]
சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுப்ரமண்ய ராஜு [கிழக்கு பதிப்பகம்]
மெர்குரிப் பூக்கள் – பாலகுமாரன் [ விசா]
ஜன கண மன – மாலன் [கிழக்கு பதிப்பகம்]
குதிரைகளின் கதை – பா.ராகவன் [கிழக்கு பதிப்பகம்]
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன் [கவிதா பதிப்பகம்]
ஆகாயத்தாமரை – அசோகமித்திரன் [கிழக்கு பதிப்பகம்]