kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • October 11, 2007

    பாரன்ஹீட் 451

    Fahrenheit 451 Ray Bradbury

    “You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.

    கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.

    ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

    கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.

    இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.

    கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!

    இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.

    ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.

    ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.

    இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.

    ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது. கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார். பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.

    மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, “The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you’ll come along.”

  • October 10, 2007

    பொய் / உண்மை

    வெகு நாட்களுக்கு பிறகு இரு நேர்த்தியான ஆங்கில பதிவுகள் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து படிக்கும் வெகு சில வலைப்பதிவுகளில், இவையும் அடக்கம். இந்தப் குறிப்பிட்ட பதிவுகளை படித்து, ரசித்து, சிரித்து, யோசிக்க நேரம் தேவைப்படலாம். எனக்குப் பட்டது.

    முதல் பதிவை எழுதியவர் ஹூக் மாக்லியோட்(Hugh Macleod). ஒரு கார்டூனிஸ்ட். விசிட்டிங்கார்ட்களின் பின் கார்டூன் வரைவது இவரது தொழில். மிக நேரடியாக முகத்தில் அடிக்கும் படி உண்மையை ஒரே ஒரு கார்ட்டூனில் சொல்வார். மைக்ரோசாப்டைப் பற்றி வரைந்த ஒரு தாக்குதல் கார்ட்டூனை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

    பொய் சொல்லுதல் பற்றி, 2004ல் எழுதியிருந்த ஒரு போஸ்டை, திரும்பவும் கொண்டுவந்திருந்தார். என்னவோ செய்தது.

    இரண்டாவது பதிவை எழுதியது, Freakonomics என்னும் புத்தகத்தை எழுதிய இருவரில் ஒருவர் – ஸ்டீவ் லெவிட்(Steve Levitt). சமீபத்தில் வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகனாமிக்ஸ் புத்தகம். புத்தகத்தில் சொன்னது அத்தனையும் காம்ன்சென்ஸ் தான். ஆனால் இந்த வேக உலகில், காமன்சென்ஸ் இஸ் நாட் காமன். அதனால் தான் க்ரைம் சதவிகிதத்துக்கும், ஆபார்ஷனுக்கும், முடிச்சுபோட இவர்களால் மட்டுமே முடிந்தது. கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம்.

    உண்மை சொல்லுதல் பற்றி இவர் எழுதிய பதிவு. க்ரைக்ஸ்லிஸ்ட்(craigslist.org) என்னும் ஒரு free-ads வலைதளத்தில் வந்திருந்த ஒரு பெண்மணியின் பணக்கார ஆண்களை பற்றிய ரொம்பவும் ”உண்மையான’ ஒரு கேள்வியும், அதற்கு ரொம்பவும் ”உண்மையான’ பதில் சொன்ன ஒரு பணக்கார ஆண் எகனாமிஸ்டை பற்றியது. யோசிக்க வைத்தது.

  • October 8, 2007

    The Rant

    It’s been raining the whole of the weekend. Was tied to the home, being lazy and watching television for a good portion of this long weekend. Something that I did after a long time.

    Its a very bad movie season at Hollywood and Kollywood. Recently I moved to the sitcoms. Completed the third season of Desperate Housewives. Currently watching the first season of NBC’s hit show, Heroes. Also started to watch Friends from it’s first season. I completed a round last year. This is a second trip to the Friend’s galaxy.

    By the way, unlike many of the fans, Ross Geller and Phoebe Buffay are my faves.

    ————————————————-

    Director Vasanth has a cool interview on kumudam.com alongwith Nitin Sathya, the villain of his latest movie, Satham Podathey. Vasanth is one of favorite directors of Kollywood. However, I have to say that he wasn’t so careful on choosing his film subjects. Probably Nerukku Nerr was a start to that carelessness. His next film Rhythm had a great subject but also had a pretty uninspiring script. Hey Nee Romba Azhaga Irukka was a classy film with a great script. I don’t think anyone even cared to watch the film.

    Vasanth’s uniqueness is to allow his characters speak their natural language and be themselves. Having introduced some of the movers and shakers of kollywood from Simran to Jyothika to Surya, Vasanth still has very low profile. And that’s probably why he is a misfit to Kollywood.

    Am still waiting to watch Satham Podathey hoping its probably one of the better films of what can be called as a continuing diastorous year for kollywood.

    ————————————————-

    Being on the subject of this year’s best films of kollywood, my list is currently restricted to two films – Chennai 600 028 and ‘Muthazhagu’ fame Paruthi Veeran.

    Kamal’s Dasavatharam has all qualities to join the list. Probably Tamil M.A too. I watched the trailer of this Jeeva starrer Tamil M.A and I am already wanting to watch the film.

    This year’s biggest let down was undoubtedly, you know what 🙂

    ————————————————-

    Watched Sivaji over the weekend for the second time. No word on how the movie fared the second time around.

    But here is something that Shankar should do before he starts to make the next hype at the bollywood level, watch just two movies.

    a) Mel Gibson’s Apocalypto
    b) The Lives Of Others

    These are certainly not the only best movies now. But this is what the contemporary cinema has to offer. And creators should atleast watch these movies before they start yapping about their so called tight-scripts.

  • October 7, 2007

    எவ்ளோ படிப்பது ?

    big_read.jpg

    சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

    பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

    புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

    மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

    அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

    கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

    இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

    மேலே சொன்ன – அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

    இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், “சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?” என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, “அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover” என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

    சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, “My writing career has taken off” என்று காலரை தூக்கிவிடும் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

    ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். “ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது” என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

    “இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர” என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

    ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

    ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

    எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

    இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

    விடை : MU@C3B5:30 – Meet you at Chennai City Center by 5:30.

  • October 6, 2007

    சென்னை க்ளிக்

    chennai click

    நான்கு மாதத்திற்கு முன் சென்னை சென்றிருந்த போது, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிக்கானில் க்ளிக்கினேன். வண்டியை ஓட்டிய ஆட்டோகாரர்களும், கால் டாக்ஸிகாரர்களும் நொந்து போனது மற்றொரு செய்தி.

    அந்த புகைப்படங்களை அப்லோட் செய்ய இவ்வளவு நாளாகிவிட்டது. அப்படி ஒன்றும் சிலாகித்துக் கொள்கிற மாதிரி படங்களில்லை. ஆனாலும் சென்னையை கொஞ்சமாய் அள்ளிக் கொண்டு வந்ததில் சந்தோஷம்.

    லேசி லென்ஸில்[ப்ராட்பேண்ட் தேவை] கொஞ்சமாய் செலக்டட் படங்கள் அல்லது ஃபிளிக்கரில் எல்லா படங்களுடன்(மத்தியில் உள்ள iயை அழுத்தினால் செய்தியுடன் புகைப்படங்கள்).

←Previous Page
1 … 71 72 73 74 75 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar