kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • February 5, 2024

    ப்ளாக், ப்லாக் மற்றும் பத்தொன்பது

    திடீரென பழைய திரைப்பட விமர்சனத்துக்கு ஈமெயிலில் ஆரேழு கமெண்டுகள் வந்த போதே புரிந்திருக்க வேண்டும். என்னவென்று சென்று பார்த்தால் தான் தெரிந்தது – இன்றோடு சரியாக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பன்சாலியின் ப்ளாக் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்கிறது.

    அறிவிப்பைப் பார்த்து விட்டு ஜனம் முழுக்க அதைப் பற்றி இண்டர்நெட்டில் தேட, இன்னமும் கடையை மூடாமல் இருக்கும் அரதப்பழசான நம் ப்ளாகில் இருந்த பட விமர்சனம் கண்ணில் பட, நன்றி நன்றி என்று ஈமெயில்கள். முன்பெல்லாம் விமர்சனம் எழுதினால் தாம்தூம் என்று திட்டுபவர்கள் எல்லாம் எங்கே போனீர்கள் அய்யா!

    பழைய விமர்சனம் தான் என்றாலும் போனால் போகட்டும் என்று படித்து விடலாம். தப்பில்லை.

    Black Movie Review – Bhansali Blacks-out Bollywood !!
  • January 9, 2024

    53ம் தெருவில் ஒரு பூனை 🐈‍⬛

    அருண் அப்பார்ட்மெண்டிற்கு லிப்டில் போகும் போது கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான். நான்கு நாள் தாடியும், அடர்த்தியான கலைந்த தலைமுடியும் தெரிந்தது. ஃபோனை அப்பார்ட்மெண்டின் கதவருகே எடுத்துக் கொண்டு போன போது சரக் என்று பூட்டு திறந்து கொள்ளும் ஓசை கேட்டது.

    கவிதா சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். பாதி உடம்பை மைக்ரோ ப்ளஷ் போர்வை மூடிக்கொண்டிருந்தது. வாராத தலை, மூக்குக் கண்ணாடி, கையில் Catakism – Bow to the meow புத்தகம்.

    போனை டேபிளில் வைத்து விட்டு ரெஃப்பிரிட்ஜ்ரேட்டரை திறந்து, “உனக்கு எதாவது வேணுமா, ஃப்ரூட், க்ரீக் யோகர்ட், சீஸ்?” என்றான்.

    “நோ… செம போர், வாக் போலாமா” என்றாள்.

    “ஸ்காட்ச்?”

    “நாட் நவ்… மே பி வரும் போது பார் போலாம்”

    கையில் எடுத்த மில்க் கார்ட்டனை திறந்து வாயில் வைத்து ஒரு மடக் செலுத்திக் கொண்டான். அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

    அந்த அறையில் அவர்கள் இருந்த சோபாவைத் தவிர, பால்கனி ஓரமாய் ஒரு ஆப்பிள் கணினி, ஆங்காங்கே புத்தக அடுக்குகள், எல்பி ரெக்கார்டுகள், ஜாஸ் போஸ்டர்கள். ஒரு சாம்ஸங்க் டீவி. ஒரு பூந்தொட்டி, எரிந்து கொண்டிருக்கும் நைட்லாம்ப். அருகே ஒரு சின்ன கிச்சன் சுத்தமாய் வைக்கப்படாமல் இருந்தது.

    பகலில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருண், இரவில் ஜாஸ் பிரியன். ஜாவா ஸ்கிரிப்டுக்கும் ஜான் கோல்ட்ரேனுக்கும் இடையே அவனது உலகம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கவிதா மான்ஹாட்டன் நூலகத்தில் புதிதாய் சேர்ந்திருந்த நூலகி மற்றபடி க்ரிஸ்டோஃபர் நோலனின் ரசிகை, அதாவது நோலகி. யதார்த்தத்தை மங்கலாக்கும் கதைகளில் தன்னை சதா நேரமும் மூழ்கடித்துக் கொண்டிருந்தாள்.

    ”இதென்ன பூனைய பத்தியெல்லாம் படிக்கற?”

    “பேசற மாயாஜால பூனைய தவிர மிச்ச எல்லாத்தையும் படிச்சாச்சு” என்று புத்தகத்தை மூடி வைத்தாள். “வாக் போலாமா…”

    இரண்டு மாதங்களாக ப்ராஜக்ட் பிசியில் இருந்த அருணுக்கு, திடீரென்று நடை பழக அழைத்த மனைவியின் பேச்சைத் தட்ட முடியாமல், “ஷ்யுர் டா” என்றான்.

    “வாட்….. ஐ காண்ட் பிளீவ், வாட்…. என் புருஷன் நான் சொன்னதை உடனே கேட்டுட்டானா” என்று மேற்கூரையை நோக்கிக் கூவினாள்.

    மான்ஹாட்டனின் மார்ச் மாத குளிரையும் பொருட்படுத்தாமல், இருவரும் போட்டிருந்த சற்றே மெலிதான உடையுடன் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பக்கமும் கடைகளில் இரவுணவு கூட்டம். சோஃபிஸ் க்யூபன் எக்ஸ்பிரஸும், டேவ்ஸ் ஹாட் சிக்கனும் மூட ஆரம்பித்திருந்தார்கள். தீப் இந்தியா இன்னமும் மும்மரமாய் இருந்தது. சிவிஎஸ் ஃபார்மஸியின் வாசலில் போலீஸ் வண்டியின் விளக்கெரிந்து கொண்டிருந்தது.

    மேற்கு 53ம் தெருவில் நடக்கும் போது இருவரும் ஒரே நேரத்தில் அந்த பூனையைப் பார்த்தார்கள். ஒரு சந்தின் ஓரமாக, இருளை இருட்டடிக்கும் படியாகக் கறுப்பு கலரில் இருந்த அந்த பூனையின் கண்கள் மரகதப் பச்சையாய் இருந்தன. காணாமல் போன குழந்தைகள் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த ஒரு அஞ்சல் பெட்டியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது.

    “அந்தப் பூனையைப் பாரு, அருண்! நம்மைக் கூப்பிடற மாதிரி இருக்கு” என்றாள் கவிதா, பூனையின் பார்வையில் தன் கண்களைப் பூட்டிக்கொண்டாள்.

    அருண் சிரித்தான். “ட்ரூ நம்பள தான் பாக்குது, ஒரு வேள சாப்பாடு வாங்கிக் கொடுங்கன்னுதோ என்னவோ”

    அதற்குள் பூனை லாவகமாகக் கீழே குதித்து நடக்க ஆரம்பித்தது, “என்னைப் பின்தொடருங்கள்…” என்று சொல்கிற மாதிரி அவர்களைத் திரும்பிப் பார்த்தது.

    வசீகரிக்கப்பட்ட அவர்கள், குறுகிய தெருக்களில் அந்தப் பூனையைப் பின்தொடர்ந்தனர், நகரத்தின் சத்தம் மறைய ஆரம்பித்தது. பூனை, ‘ப்ளூ நோட்’ என்ற நியான் போர்டின் கீழே மங்கலாக விளக்குத் தெரிந்த ஒரு கதவுக்கு முன் நின்றது.

    “இது ஜாஸ் பார் போல இருக்கு,” அருண் கதவைத் திறந்து பார்த்தான். மங்கலான விளக்குகளுடனும் பழைய ஜாஸ் சுவரொட்டிகளால் மூடப்பட்ட சுவர்களுடன் இருந்தது அந்த பார். வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. ஸ்காட்ச் வாசனை காற்றில் மிதந்தது.

    “இதென்னது 60ஸ் ஜாஸ் பார் மாதிரி இருக்கு” என்று கிசுகிசுத்தாள் கவிதா.

    அமைதியான ஒரு டேபிளை எடுத்துக் கொண்டார்கள். கருப்புப் பூனை அவர்களின் காலடியில் சுருண்டு உட்கார்ந்தது. சாக்ஸபோனின் சத்தம் அறையை நிரப்பியது, அதன் இசையில் ஆழ்ந்தார்கள். அருண் கவிதாவைப் பார்த்துச் சிரித்தான்.

    “இந்த இடம்… மேஜிக்கல். ஏதோ கனவுல வர மாதிரி”

    கவிதா தலையசைத்தாள், அவள் கண்களில் அம்பர் விளக்குகள் பிரதிபலித்தன.

    “நாம எல்லாத்துலேந்தும் விலகி, நமக்கு சொந்தமான ஒரு சின்ன உலகம் போல இருக்கு. இதுக்கு முன்னாடி இந்த இடத்தை பத்தி கேள்விப்பட்டதே இல்லல”

    ஸ்காட்சை அருந்தியபடி அருண், “உன் புக்ஸ்ல வர மாதிரி வாழ்க்கையில இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? பச்சை கண் மாஜிகல் பூனை, நேரத்தை மறக்கடிக்கும் ஜாஸ், இந்த ஸ்மூத் ஸ்காட்ச்” என்றான்.

    கவிதா சிரித்துக்கொண்டே, “யாருக்குத் தெரியும், இப்போ கூட நாம அந்த மாதிரி ஏதாவது கதை ஒண்ணுக்குள்ள இருக்கலாம்.”

    அடுத்த சில மணிநேரங்களில் அவர்களின் உரையாடல் கனவுகள், அச்சங்கள் என்று துள்ளலுடன் அலைந்து திரிந்தது. அந்த மாலை நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்கியது.

    மீண்டும் தெருவில் இறங்கிய போது பூனை காணாமல் போனதைக் கண்டார்கள். வீட்டிற்கு நடந்து சென்றபோது அருண் கவிதாவை குளிரிலிருந்து காப்பாற்றுவது போல அணைத்துக் கொண்டான். கவிதா ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனின் இந்த புதிய கவனிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.

    திரும்பி வந்த போது அவர்களின் அப்பார்ட்மெண்ட் துடைத்து வைத்த மாதிரி சுத்தமாய் இருந்தது. நகர நியான் விளக்குகளின் மென்மையான பிரகாசத்தில் அந்த அறையே மின்னியது. அருண், கவிதாவை இழுத்து நடனமாட இழுத்தான். “நான் உன் கூட இருக்கும்போது யாருக்குத் தேவை இந்த படு போர் புக்ஸ்?” கண்ணடித்தான்.

    கவிதா சிரித்தாள், “இந்த chapter எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு,” அவள் கைகளால் அவனைச் சுற்றிக் கொண்டாள். அவர்கள் மெதுவாக அசைந்தபோது அவ்விரவு ஒரு ஆத்மார்த்தமான ஜாஸ் மெல்லிசையாக அவர்களைப் படர்ந்தது.

  • January 8, 2024

    😍 எல்லோரும் whatsappல் இருக்கிறார்கள் 😍

    மாலினியின் குடும்பம் ரொம்பப் பெரியது. அவளுடைய அப்பா அவர் வீட்டில் கடைசிக் குழந்தை. அவருக்கு முன்னால் 6 அத்தை மற்றும் பெரியப்பாக்கள். அம்மாவின் வீட்டின் வழியாக 18 கஸின்கள். இந்த கூட்டத்தை விட பெரியது என்றால் அது அவளுடைய நண்பர்கள் தான். 4 நகரங்களில் 6 பள்ளிக்கூடங்களிலும் 2 பெரிய கல்லூரிகளிலும் படித்திருந்தாள். சரியான வாயாடி. அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.

    மாலினி திருமணமாகி கணவனுடன் பெர்லினில் இருக்கும் பெரிய ஜெர்மன் வங்கியில் வேலை செய்யப் போனாள். வேலை போக மிச்ச நேரத்தைக் கணவனுடனும் whatsappபிலும் கழித்தாள். தினமும் ஸ்டேட்டஸ் போட்டாள், மறக்காமல் பிறந்தநாள் மணநாள் வாழ்த்து அனுப்பினாள், எல்லோரின் மெசேஜுக்கும் 👏🏽👍🏽👌🏽போட்டாள். எல்லோரும் அவளுக்கு பிறந்தநாள், மணநாள் மெசேஜ் அனுப்பினார்கள், 😍🎉😂 என்றும் எமொஜியிட்டார்கள்.

    இரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் குளிர் ஜுரம் வந்தது. ஸ்டேட்டஸில் போட்டாள். 17 மெசேஜ்கள் 27 😭🥹😞 எமோஜிகளும் வந்தன. அவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் காரில் ஏறப்போனவள் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டபோது, 8 மெசேஜ்கள் , 16 👩🏽‍🦽👩🏽‍🦯🤞🏽😘 எமோஜிகள். போன வருடம் கணவனுக்கு திடீரென்று டயபடீஸ் என்று ஸ்டேட்டஸ் போட்டாள், 6 மெசேஜ்கள், 8 டயபடீஸ் ஃபார்வர்டு மெசேஜ்கள் மற்றும் 20 😞🫶🏽 எமோஜிகள். போன மாதம், கணவன் நெஞ்சு வலியில் மறித்துப் போக, 60 RIPகள் மற்றும் 36 😭🫂 எமோஜிகள்.

    இன்று மாலினியின் பிறந்தநாள். 260 க்ரூப் மெசேஜ்கள், 25 🎉💃🏽🥳எமோஜிகள். அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.

  • January 7, 2024

    இவ்வாண்டின் தலைப்புச் செய்தி

    New Yorker

    இந்த வருடத்தில் நடக்கப்போகும் ஒரே ஒரு முக்கிய செய்தியை இவ்வருடத்தின் தலைப்புச் செய்தி என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கத் தேவையேயில்லை. அது போன வருடத்தின் தலைப்புச் செய்தியாகத் தான் இருக்கப் போகிறது. போன வருடத்தின் தலைப்புச் செய்தி தான் என்ன?

    2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் மிகவும் உஷ்ணமான ஆண்டு. (படிக்க)

    “The extraordinary global November temperatures, including two days warmer than 2ºC above preindustrial, mean that 2023 is the warmest year in recorded history.”

    – EU Coppernicus Team

    அதெப்படி உலக உஷ்ணத்தைச் சரியாகக் கணக்குச் செய்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை. கள்ளக்குறிச்சியிலும், மஞ்சக்குடியிலும், சுடானிலும், அர்ஜென்டினாவில் வைக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான தெர்மாமீட்டர்களும், பூ மலரும் அட்டவணைகளும், விலங்குகளின் இனப்பெருக்க பருவங்களும், ice-cores எனப்படும் பனிக்கட்டி ஆய்வுகளும் பொய் சொல்வதில்லை.

    இந்த 2024 போன வருடத்தையும் பின் தள்ளக்கூடும் என்று நம்புகிறார்கள். பருவநிலை மாற்றம் பற்றி அறியாமல், “ப்ரோ, அயலான்ல அந்த ஏலியன் என்னமா தமிழ் பேசுது…” என்று சோ.மீயில் (அதாவது சோஷியல் மீடியாவில்) நியுஸ் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான ஒரு குட்டி பின்னோட்டம். புகைபிடித்தல் உடம்புக்குத் தீங்கானது போன்ற மறுக்க முடியாத climate change உண்மைகள் என்னென்ன?

    • பூமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது சூரியனின் தவறு மட்டுமல்ல – கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அழைக்கப்படாத விருந்தாளிகள் போல வெப்பத்தைப் பிடித்து வைத்திருக்கின்றன.
    • துருவ பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருக்கின்றன. இது கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 8 அங்குலம் உயர வழிவகுத்தது. கடற்கரைகள் எதிர்பாராத அளவுக்கு நிலத்தை ஆக்கிரமிக்க, பனிதுருவ கரடிகள் ரியல் நமது எஸ்டேட் பட்டியல்களைப் எட்டிப்பார்க்கின்றன.
    • வானிலையின் மனநிலை மாற்றங்கள் தீவிரமடைந்துள்ளன, சூறாவளி வேகமாகச் சுழல்கிறது, மழை ஒரேயடியாகக் கொட்டித் தீர்க்கின்றது, உஷ்ண அலைகள் பல வாரங்கள் நீடிக்கின்றன.
    • கார்பன் டை ஆக்சைடு அளவுகள் குறைந்தபட்சம் 800,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகமாக உள்ளது, தற்போது ஒரு மில்லியனுக்கு 410 பாகங்களுக்கு மேல் உள்ளது. இது வளிமண்டலத்தில் ஒரு கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பார்ட்டி போலத் தோன்றலாம், எல்லா விஷவாயுக்களும் அழைப்பு உண்டு.
    • பத்து லட்சத்திற்கும் அதிகமான மிருக இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. காடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்க , பல விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து, பருவநிலை மாற்றத்தை விஞ்ச தங்கள் போஸ்டல் பின்கோடுகளை மாற்றி நகரத்தில் தஞ்சம் புக ஆரம்பித்திருக்கின்றன.

    நமக்குள் இருக்கும் ஆதிகால குகை மனிதனும் வருங்கால குழந்தைகளும் ஒரே நேரத்தில் நம்மை நோக்கிக் காறித் துப்பும் அளவிற்கு உலகை இப்படி தீப்பிழம்பாக மாற்றிய நமக்கு ஷொட்டுக்கள் பல. Well done!

  • December 24, 2023

    காமுவும் எக்ஸிஸ்டென்ஷியலிசமும்

    இதைப் படித்த dall-e 3 வரைந்த காமு

    எங்கள் வீட்டிலிருந்த காமுவும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் அல்பர்ட் காமுவும் நேரேதிர் துருவங்கள். எ.வீ.காமு வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன செய்கைகளுக்கும் காரணம் இருப்பதாகவும் அதை தான் உணர்ந்தது போலவும் பேசுவாள். அவள் வாழ்வில் பணத்தை உபயோகித்ததே இல்லை, ஆனாலும் கோவிலுக்குச் சென்றால் வாசலில் யாசிப்பவர்களுக்கு, “ அவாளுக்கு ஏதாவது போட்டுட்டு வந்தா தான் உனக்குப் பலன்” என்பாள். பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் பிஸ்கேட்டின் ஓரமெல்லாம் கடித்து விட்டு நடுவில் பிரிட்டானியா என்று எழுதியிருப்பதை உடைக்காமல் கடைசிவரை வைத்திருப்பது எப்படி என்று அவள் தான் எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாள். பிறந்தாள் பிடிக்கும் அதுவும் நட்சத்திர பிறந்தநாள் கண்டிப்பாய் கொண்டாட வேண்டும் என்பாள். எத்தனை மாதங்களானாலும் சரி, எல்லா புடவைகளுக்கும் ஃபால்ஸ் அடித்து, கொஞ்சம் கூட நிறம் மாறாமல் மாட்சிங் ரவிக்கைத் துணி வாங்கி தைத்து மட்டுமே போட்டுக் கொள்வாள்.

    திருமண நிகழ்ச்சியென்றால் மகிழ்வான தருணம் என்று புரியும் வயது வருவதற்கு முன் எனக்கு சொல்லிக் கொடுத்தாள். “முன்னாடி போய் மாப்பிள பொண்ணு பக்கத்துல நின்னுக்கோ அப்பத்தான் எல்லா ஃபோட்டோலயும் நீ இருப்ப” என்று எனக்கு வேதமோதினாள். என் மாமாவின் திருமணத்தில் மணமக்களை விட, எல்லா நாத்தனார்களுடனும், மன்னிகளுடனும், ஐந்து வயது சிறுவனாக நான் அரை ட்ராயரும் டக்- இன் செய்த வெள்ளை சட்டையுடன் நின்று கொண்டு எல்லா புகைப்படங்களையும் நிறைத்துக் கொண்டுவிட்டேன். “பந்திக்கு முந்திக்கோ” என்பாள். சொன்ன சொல்லை மீறாத சீடனாக மூன்று வேளை பந்திக்கும் முண்டியடித்து முதலில் உண்பது என்பதெல்லாம் போய், நேராக சமையலறை சென்று காபியும், காசி அல்வாவும் வாங்கிச் சாப்பிடும் கைதேர்ந்த நிபுணன் ஆகினேன். ஆக்கியவள் காமு. ஊஞ்சலில் மணமக்கள் பக்கத்தில் நிற்க வைப்பாள், பச்சை சுத்தி போடும் போது, “கலர் சாதம் மேல படாம டக்குனு குனிஞ்சுக்கோ”, நலங்கின் போது அப்பளம் தலையில் உடையும் போது கலகல என்று சிரிப்பாள்.

    காமு என்கிற காமகோடி என்னுடைய சித்தி, அம்மாவின் தங்கை. பிறந்ததிலிருந்து சில வருடங்களுக்கு நான் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்த போது, அங்கிருந்த மற்ற இரண்டு பேர் மாமாவும் சித்தியும். இருவருக்கும் அப்போது திருமணமாயிருக்கவில்லை. மாமா ப்ரிட்டானியாவில் வேலையிலிருந்தார். சித்தி அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி முடித்திருந்தாள். பார்ப்பதற்குக் கிழக்கே போகும் ரயில் ராதிகா போல் இருப்பாள். ராதிகா தமிழ்நாட்டின் சித்தியாவதற்கு முன் காமு என்னுடைய சித்தி ஆனாள். சீராக எண்ணையிட்டு அழுத்தி வாரி ரிப்பன் கட்டப்பட்டிருக்கும் தலை, நெற்றிக்குச் சற்றே பெரிய ஷ்ரிங்கார் சாந்துப் பொட்டு, பர்வின் பாபி போல voile saree.

    எனக்கு வீட்டின் முதல் பேரன் என்பதால் ஏகப்பட்ட கவனிப்பு. அதனால் காமுவிற்கோ என்னுடன் sibling rivalry. இரவில் ஜமக்காளம் விரித்து நடு ஹாலில் படுக்கப்போகும் போது, ஃபேனுக்கு கீழே யார் தூங்குவது என்ற சண்டையில், அவள் தோற்றுப் போவாள். “குழந்தையோட என்ன சண்ட வேண்டிக் கிடக்கு” என்று பாட்டி சொல்ல, வேறு வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டே தள்ளிப்படுப்பாள். கொஞ்ச நேரத்தில் எல்லாம் என்னைத் தூங்க வைக்கக் கதை சொல்லுவாள்.

    கதை என்றால் சும்மா காமா சோமா கதை எல்லாம் இல்லை. முழு ராமாயணம் மகாபாரதத்தையும் சிறு கதைகளாகச் சொல்லியிருக்கிறாள். அதுவும் கிருஷ்ணரின் கதை என்றால் அவளுக்கு அலாதி ப்ரியம். காமு எனக்கு சொன்ன அக்ரூரரின் கதை பிறகு யாரும் அப்படி சொல்லிக் கேட்டதில்லை. கம்சன் அக்ரூரர் என்னும் தன் நண்பனை, கிருஷ்ணனை மதுரா நகருக்கு அழைத்து வருமாறு அனுப்பி வைக்கிறான். அக்ரூரும் அதே மாதிரி கிருஷ்ணர் பலராமரை அழைத்துக் கொண்டு தேரில் கிளம்புகிறார். வழியில் குளிக்க அக்ரூரர் யமுனையில் இறங்க, கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்றுகொண்டிருந்தார்கள். அதெப்படி முடியும், இப்போது தானே தேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்தபடி அக்ரூரர் நீரிலிருந்து வெளியேறி தேருக்குச் சென்று பார்த்தார். பார்த்தால் அங்கே இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் நீருக்குச் சென்றால் அங்கும் இருக்கிறார்கள். அப்போது தான் அக்ரூரருக்கு கிருஷ்ணர் யார் என்று தெரிய வருகிறது. இந்தக் கதையை ஒரு பிரமாதமான சிறுவர் சிரிப்புக் கதையாக மாற்றி, பக்தி மாறாமல் சொல்லுவாள். அதே மாதிரி தான் குசேலரின் கதையும். அவளுக்கு இந்த கதைகளை யார் சொன்னார்கள், எங்கே படித்தாள், எப்படி இப்படி ரசித்து ரசித்து சொல்கிறாள் என்பது வீட்டில் இருப்பவர்களுக்கே புரியவில்லை.

    அதே மாதிரி கங்காதீஸ்வரர் கோவிலுக்கு போகும் போது, முருகர் கையில் இருக்கும் வேலைக் காட்டி காட்டி ”அம்மம்மா கிட்ட வாங்கிக் கொடு சொல்லு” என்று என்னிடம் ஒரு நாள் சொல்லி விட்டாள். நானும் வேல் கேட்டால் வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்று சொல்லி அடம் பிடிக்க, அதை மறக்கப் வைக்க பல மாதங்களாகியது. காமுவிற்கு கமல் படம் என்றால் பிடிக்கும், எனக்கு ரஜினி. அதனால் மீண்டும் சண்டை. நான் ரஜினி ஸ்டைலில் சண்டை போஸ் காண்பிக்க, காமுவோ “ கமல் தான் டாப் டக்கர்”.

    காமுவிற்கு ஒரு நாள் திருமணமாகியது. உஸ்மான் ரோட்டில் இளையராஜா வீட்டின் அருகே இருந்த திருமண மண்டபத்தில். அவள் திரும்ப வீட்டிற்கு வராத போது அழுதேன் என்று பிறகு பாட்டி சொல்லியிருக்கிறாள். “இருக்கிற வரைக்கும் அவளோட சண்டை மண்டை, அப்புறம் சித்திய காணோம்னு ஒரே அழுகை”

    திருமணத்திற்குப் பின் அவளுக்கு இரண்டு குழந்தைகளாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது எதாவது விசேஷங்களின் போது பார்த்துக் கொள்வது என்று ஆனது. ஆனாலும் பார்க்கிற போதெல்லாம், “ நீ என்ன படம் பார்த்த?” என்பாள். கமல் படம் எதாவது ரிலிஸாயிருந்தால், அதைப் பற்றிக் கேட்பாள்.

    ஒரு கோடை விடுமுறையின் போது எல்லா பேரன் பேத்திகளும் சேர்ந்து ராமாபுரத்தில் இருந்த மாமா வீட்டிலிருந்தோம். மாடியில் வடாம் இட்டுக் கொண்டிருந்தார்கள். பல வேஷ்டிகளைப் பிரித்துப் போட்டு, அவை பறக்காமல் இருக்க செங்கல்லையும், காக்காவை ஓட்ட குடை கம்பிகளையும் வைத்திருந்தோம். ஜவ்வரிசி வடாம் போட்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த காமுவிற்கு தலைச் சுற்றல் வந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தாள். பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு தடதடவென்று எதோ இடிக்கிற சத்தம். ஓடி வந்து பார்த்தால், தரையில் தலை குப்புற விழுந்து கிடந்தாள் காமு. ஒரு நொடி எல்லாமே நின்ற மாதிரி இருந்தாலும், மேலாடை இல்லாமல் போட்டுக் கொண்டிருந்த லுங்கியோடு டாக்டரை கூட்டிக் கொண்டு வர ஓடினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு விதமான எஸ்கேப். விழுந்ததில் இறந்து விட்டாள் என்றெண்ணி அதை பார்பதற்குத் தவிர்க்கப் பார்த்தேனா?

    அருணாசலம் டாக்டர் க்ளினிக்கின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களைப் பொருட்படுத்தாமல் உள்ளே ஓடினேன். “சார், சித்தி கிழே விழுந்துட்டாங்க, கொஞ்சம் வரமுடியுமா”. டாக்டரின் கைனடிக் ஹோண்டாவில் பில்லியன் சீட்டில் உட்கார்ந்த படி வீட்டிற்குச் சென்றோம். அதற்குள் காமுவை எழுப்பி உட்கார வைத்திருந்தார்கள். முகத்தில் நல்ல அடி, ரத்தம் தெரிந்தது. கை உடைந்திருந்தது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது வந்த மயக்கம் என்று புரிந்தது. பிறகு அவ்வப்போது மயக்கம் வர ஆரம்பித்தது.

    காமுவிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் மிகத் துல்லியமாகச் செய்வாள். அதைச் செய்வதற்காகவே பிறவி எடுத்தால் போல். ஆனால் நேரம் எடுத்துக் கொள்வாள். அரை கிலோ கேரட்டை அரை மணி நேரம் நறுக்குவாள். நறுக்கியதைப் பார்த்தால், மிஷின் கூட அப்படி நறுக்கியிருக்க முடியாது என்பது போல சீரான சதுர வடிவில் இருக்கும். பூ கட்டினால் பூக்கார பெண்மணி தோற்றுவிடுவாள். காய வைத்த துணி மடித்தால் கடையில் இருந்து வாங்கி வந்த புது துணி போல இருக்கும். குழந்தைகளுக்கு தலை வாரினால் ஒரு தலைமயிர் கூட மேலே தூக்கியிருக்காது. அதே மாதிரி அவள் சாப்பிட உட்கார்ந்தால் ஒரு மணி நேரமாகலாம். சாதத்தைச் சரியாகப் பிசைந்து, ரசம் ஊற்றி கத்தரிக்காய் கறி சாப்பிட்டால், சாப்பிட்டு முடித்த நமக்கும் மீண்டும் சாப்பிடத் தோன்றுகிற அளவுக்கு அழகாய் சாப்பிடுவாள்.

    நான் அமெரிக்கா வந்தவுடன் அவ்வப்போது ஃபோனில் பேசுவது என்றாகியது. என்றாவது என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி, “குரு எப்படி இருக்கான். அவன் ஞாபகம் வந்தது, எனக்கு ஒரு நாள் ஃபோன் பண்ண சொல்லு”. அம்மாவோ ”அவன் பிஸியா இருக்கான், ஆனா சொல்றேன்” என்றால், “நீ அவன் கிட்ட சொல்லு சித்தி கேட்டான்னு”. ஓரிரு வாரங்களுக்குப் பின் ஃபோன் செய்தால், “எப்படி இருக்கே?” என்று கேட்டு விட்டு பிறகு எதுவுமே பேச மாட்டாள். “அவளுக்கு நீ பேசினா ஒரு சந்தோஷம், அப்பப்போ முடிஞ்சா பேசேன்” என்பாள் அம்மா.

    இந்தியா செல்லும் போது, “ எப்படியிருக்கா காமு?” என்று அம்மாவிடம் விசாரித்தால், “அவ ரெண்டு மூணு நாளாவே கேட்டுண்டு தான் இருக்கா. ஆட்டோ வச்சுண்டு அவளைப் போய் பார்த்துட்டு வாடா”. சூளைமேட்டின் குறுகிய தெருக்களின் வழியாக ஆட்டோவில் சென்றால், அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பாள். நானா உன்ன வரச்சொன்னேன் என்ற மாதிரி. சித்தப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்புகிற போது, “இன்னிக்கு என்ன புரோக்ராம், புரசைவாக்கத்தில மணிகண்டனைப் பாக்க போறியா” என்பாள். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்தும் என் பால்ய சினேகிதனை அவள் அனாயாசமாக ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியமாயிருக்கும்.

    போன ஜூன் மாதம் அப்பாவின் வருஷாப்திகத்திற்குப் போன போது காமு வந்திருந்தாள். என் மனைவியைக் காட்டி, “சித்தி இது யாரு?” என்று கிண்டலாய் கேட்டேன். உன்னோட பெட்டர் ஹாஃப் என்பதைத் தலையை ஆட்டி ஆட்டி ஒரு வார்த்தை பேசாமல் சொல்லி விட்டாள். மீண்டும் அனாயாசம். ”அவளுக்கு எல்லாம் தெரியும், அவளுக்கு தெரியாதது என்ன இருக்கமுடியும் சொல்லு” என்றாள் அம்மா.

    காமுவுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, நியூக்ளியர் பிசிக்ஸ் தெரியாது, எக்ஸிஸ்டென்ஷியலிசம் தெரியாது. மற்றபடி எல்லாம் தெரியும். போன மாதம் அவள் இறந்த அன்றிரவு அவளின் நட்சத்திர பிறந்தநாள்.

←Previous Page
1 … 5 6 7 8 9 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 25 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar