தீபாவளி நினைவுகள்

இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா தரும் ஒரு கோலியுருண்டை மருந்தை அப்படியே முழுங்கி சரம் வெடிக்க தலை தெறிக்க ஓடியதும் பல முறை. புரசைவாக்கத்தில் அந்த கூட்டமான வெள்ளாளத் தெருவின் பல சந்துகளில் ஒரு பெரிய சந்தில் தான் என் தீபாவளி நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

பாத்ரூம் க்ரில்லில் வைத்த ‘ஆட்டம் பாம்’ வெடித்து க்ரில் பெயர்த்துக் கொண்டு வந்ததும், கொட்டாங்குச்சி மூடி வைத்த லஷ்மி வெடி வெடிக்கிறதா என்று பார்த்த போது, முகத்தில் கொட்டாங்குச்சி வெடிக்க எதிர் வீட்டு சுஜ்ஜு சிரித்ததும்(scrabbleலில் அவளை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டேன்), சாணியில் நட்ட எதோஒரு வெடி வெடித்து, நாயரின் வீட்டின் சுவர் நாஸ்தியானதும், ராதாக்ரிஷ் விட்ட ராக்கெட் நானாவின் வேட்டியை துளைத்ததும் அந்த சந்தில் தான். வீட்டில் இருந்த வெடியெல்லாம் தீர்ந்து போக நண்பர்களுடன் ரோட்டை மேய்ந்து, வெடிக்காத வெடிகளை ‘புஸ்’ கொளுத்தி அப்பாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வருகின்றன.

ஸ்கூலில் ஒரிரு வாரத்திற்கு முன்பே திபாவளி fire பற்றிக்கொள்ள, மூச்சும் பேச்சும் தீபாவளி. பக்கத்தில் உட்காரும் சேட்டுப் பெண் ஷீக்கா, ஹிந்தி க்ளாஸுக்கு போகாமல், என்னோடு தமிழ் க்ளாஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திபாவளி கதை பேசும் அளவுக்கு திபாவளி முக்கியமானது. இப்போது ஷிக்கா யாரைக் கட்டிக் கொண்டு எவ்வளவு குழந்தைகளோடு தீபாவளி பற்றி அளக்கிறாள் என்று தெரியவில்லை.

பத்தாவதுக்குப் பின் கொஞ்சமாய் பட்டாசில் நாட்டம் குறைந்து, தீபாவளி என்றால் தீபாவளி ரிலீஸ் என்றானது. தளபதியில் இருந்து தேவர் மகன், திருடா திருடா என்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு சினிமா தான்.

மூன்று வருடங்களாக, சியாட்டலில், திபாவளி அன்று காலை கங்காஸ்நானம் செய்து, சன் டீவியில் ‘முதல் முறையாக’ என்று எதை போட்டாலும் சட்டை செய்யாமல், டை கட்டி டைம்(time) படித்துக் கொண்டே பஸ்சில் ஆபீஸ் செல்கிறேன். அமெரிக்காவில் தீபாவளி என்ன, எல்லா பண்டிகைகளும் வீக்கெண்டில் தான் வருகின்றன. அல்லது வரவழைக்கப்படுகின்றன. அதுவும் ஒரு வகையில் சுவாரசியம் தான்.

இந்த தீபாவளிக்கு ஷாருக்கின் ஒம் ஷாந்தி ஓம் பார்ப்பதாய் எண்ணம். அடுத்த வாரம் தான் ATM சியாட்டலுக்கு வருகிறார். ரஹ்மானுக்காவும் விஜய்க்காவும் அதையும் பார்க்க எண்ணம். பார்க்கலாம்.

டெலிவிஷன் பெட்டி

black and white television

இந்த வருடம் தாங்ஸ்கிவ்விங்கிற்கு ஒரு LCD டெலிவிஷன் வாங்குவதாய் எண்ணம். வீட்டில் இருக்கும் பழைய Cathode Ray Tube பெட்டியில், CNN சானலில், C மட்டுமே தெரிகிறது. மற்ற இரண்டு Nகளும் இழுத்துக் கொண்டு போய் விட்டன. அப்படி ஒன்றும் பெரியதாய் இழந்துவிடவில்லை என்றாலும், அமெரிக்க மார்க்கெட்டிங் விடமாட்டேன் என்கிறது.

முதலில் பெரிய திரை என்றார்கள். பிறகு வைட் ஸ்கிரீன், ப்ளாஸ்மா, ரியர் புரஜக்-ஷன் என்று இப்போது எல்சிடி வரை வந்திருக்கிறது. பிறகு எல்சிடியில் pixel எனப்படுகிற ஒளிப்புள்ளிகளை வைத்து மார்கெட்டிங் செய்கிறார்கள். தற்போதைய பேஷன் 1080p என்கிற வகை. இதனை full HDTV என்கிறார்கள். இந்த 1080pக்கும் இதற்கு முந்தைய மாடலுக்கும் எந்த சாமானியனுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனாலும் மீடியா அடிக்கடி இதை மார்கெட்டிங் செய்வதால் எல்லாரும் வாங்குகிறார்கள். நவராத்திரிக்கு இருந்த மாடல் போய் திபாவளிக்கு புது மாடல் வரும் மார்க்கெட் இது. இந்த இயந்திர பித்துக்கு ஒரு முடிவே இல்லை.

எங்கள் வீட்டின் முதல் டிவி பெட்டி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாங்கினார்கள். முன்னமே 83′ world cupஐ பாட்டி வீட்டின் சாலிடைரில்(Solidaire) பார்த்திருந்தாலும், எங்கள் வீட்டில் ஷட்டரோடு வாங்கிய B & W சாலிடைர் தான் ரொம்ப பிடித்திருந்தது. டிவி வாங்குவதே குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில் ஷட்டரோடு வந்த டிவியை மூடி மூடி வைத்திருதேன். பள்ளியில் படித்தவர்களோடு சாலிடைர் தான் நல்ல டிவி தான் என்று சண்டை வேறு. மற்றவர்கள் டயனோரா, ஈஸி டிவி, அப்ட்ரான் என்று சொன்னார்கள். எனக்கு சாலிடைர் தான் நல்ல டிவி. டிவிக்கு முன்னால் நின்று போட்டோ எடுப்பது தான் அப்போதைய பேஷன். என் அப்பா என்னையும் தங்கையையும் வைத்து நிறைய போட்டோ எடுத்தார்.

அப்போது டிவி வாங்குவது எதாவது ஒரு நிகழ்ச்சியை சார்ந்தே இருந்தது. என் பாட்டி வீட்டில் வாங்கிய முதல் டிவிக்கு காரணம், 83 உலகக் கோப்பை கிரிக்கெட், முதல் கலர் டிவிக்கு காரணம் 88 விம்பிள்டன். எங்கள் வீட்டில் வாங்கிய முதல் டிவி ’84 குடியரசு தினத்திற்கு முதல் நாள். அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து, பூஸ்ட் குடித்து டிவிக்கு முன் உட்கார்ந்து குடியரசு தின அணிவகுப்பை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

Bravery Awards for Kids என்கிற போஸ்டரோடு, ஒரு யானை மேல் வீரதீர செயல்களுக்காக பரிசு வாங்கிய சிறுவர்கள் பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதை என் அப்பா விளக்க, அன்றிலிருந்து முழ்குகிற யாரையாவது முடியை பிடித்து தூக்கியோ, பள்ளத்தில் விழுந்த குழந்தையை கையைத் தூக்கி காப்பாற்றவோ வேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தேன். ஓரிரு முறை கனவும் வந்தது. எப்படியாவது டெல்லி போய் யானைச் சவாரி செய்ய எண்ணம்.

அதற்கு பிறகும் ஒவ்வொரு குடியரசு தினத்துக்கும் அந்த குழந்தைகள் பரிசு லிஸ்டை தந்திப் பேப்பரில் பார்த்து விடுவேன். மிசோராமிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் வரும் குழந்தைகளை பார்க்க வியப்பு. இவர்கள் யாரைக் காப்பாற்றினார்கள், யார் இதை அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டார்கள், இதெல்லாம் உண்மையா, நமக்கேன் ஒரு கேஸும் மாட்டவில்லை என்றெல்லாம் பல குழந்தைத்தனமான கேள்விகள்.

ஏழாவது படிக்கும் போது ஒரு கல்யாணத்திற்காக திருவாரூர் போக நேர்ந்தது. கோயில் குளத்தைச் சுற்றி இருந்த வடக்கு மாட வீதியில் இருந்தது கல்யாண மண்டபம். காலையில் மாப்பிள்ளை ஊஞ்சலில் ஆட, கலர் சாத உருண்டைகளால் மாமிகள் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்க, எதிரில் இருந்த குளத்தின் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை ஆதலால் யாரும் இல்லாமல், படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, தண்ணிரீல் காலை நனைத்துக் கொண்டிருந்தேன். பாசியில் சறுக்கி சரேலென உள்ள போக, யாரோ ஒரு ஆரை டிராயர் சிறுவன் ஓடி வந்து அதே நொடியில் கையை பிடித்து இழுத்து விட்டான். என் கழுத்து வரை தண்ணீருக்கடியில் போயிருந்தது. வெளியே வந்து சுதாரித்துக் கொள்வதற்குள், ஏதோ தேவதூதன் போல ஓடிப் போய்விட்டான். மண்டபத்தில் எல்லாரும் கெட்டி மேள பூ போடுவதில் பிஸியாயிருக்க, நனைந்த புது ட்ரஸ்ஸுடன் யாருக்கும் தெரியாமல் ரூமுக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்தேன்.

அந்த சிறுவனுக்கு, அடுத்த ஆண்டு யாரும் குடியரசு தினத்தில் Bravery Award தந்ததாக நினைவில்லை. எனக்கும் யானை சவாரி கனவு மீண்டும் வரவேயில்லை.

மற்றவை சில

சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

————————-

சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன், ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

————————-

இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

————————-

crater lake oregon

போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!

விகடனில் கிறுக்கல்.com

kirukkal.com in ananda vikatan

இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன்.

படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி.

சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை.

என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும்.

போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய் இருக்கிறது. யார் யாரோ, “கலக்கறீங்க சார்” என்று மெயில் அனுப்புகிறார்கள். விகடனின் ரீச் தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி !!

“விகடன்ல எல்லாம் போட்ருக்காங்க, இன்னும் அதை update பண்ணாம இருக்கியே அசமஞ்சம்” என்று நினைப்பவர்களுக்கு, ஹிஹி !!. கூட்டம் வரும்போதே, இந்த வலைதளத்தில் எழுதித் தள்ளி, யாரையும் போரடிக்கிற எண்ணமில்லை. வழக்கம் போல எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல புத்தகமோ/படமோ/விஷயமோ பற்றி எழுத தோன்றி நேரமிருக்கும் போது, கண்டிப்பாய் கிறுக்கல்.

பி.கு – இப்போதைக்கு படிக்க கிறுக்கலின் பழைய பத்திகள் அல்லது இருக்கவே இருக்கு கிறுக்கலின் ஆங்கில பதிப்பு.

ஹே !!

காதில் பாட்டோடு டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே என்னுடைய ஒரு நாளைய ஓடும் கோட்டா முடிந்திருந்தது. கலைத்துப் போய் நிற்கலாம் என்று மூச்சு வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அந்த பாட்டு ஆரம்பித்தது.

இந்த பாட்டைக் கேட்டு்ப்/பாடிக்கொண்டே கொஞ்சம் எக்ஸ்ட்ரா காலரிகளை காலி செய்யலாம் என்று நினைத்து, மீண்டும் முழு மூச்செடுத்து ஓட ஆரம்பித்தேன். பாட்டு ஓட, நான் ஓட, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடின. வியர்வை வழிய வழிய மே.ல் மூ..ச்..சு வா….ங்….க, இனிமேல் சத்தியமாய் ஓட முடியாதென்று, டிரட்மிலின் அந்த ஹாண்டில் பாரை ஒரு கையிலும், வலதுபுற வயிற்றை மறு கையிலும் பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்த போது அந்த வரிகள் வந்தன…

தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் – சொல்லும்

அந்தக் கணத்தில் வியர்வை வழியும் கண்களினூடே சற்றே காந்தி தெரிந்தார்.

ஹும் ஹும்..உள்ளேன் !!

ஒண்ணு எழுது இல்லாகட்டி இழுத்து மூடு என்றெல்லாம் அன்பர்கள் மெயில் அனுப்பியதால் கொஞ்சம் பயந்து போய் இந்த ‘உள்ளேன் அய்யா!!’ பத்தி. இத்தனை நாளாய் எழுத கூடாது என்று எண்ணமில்லை. எழுத விஷயமிருந்தும், நேரமில்லாமையும், நேரமில்லாமையும் மற்றும் நேரமில்லாமையும் தான் காரணங்கள். நேரமில்லை ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொன்னாலும், அது தான் காரணமாயிருக்கும் போது என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.

படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், Fight Club எழுதிய சக் பலெனிக்கின்[Chuck Palahniuk] ராண்ட். கடைசியாய் பார்த்த நல்ல படம், மெல் கிப்சனின் அப்போகாலிப்டோ. இனி எழுத நினைக்கும்(கவனிக்க – ‘நினைக்கும்’) சில விடயங்கள் –

– கடைசியாய் படித்த ‘அந்த’ புத்தகம்.
– பார்த்த அற்புத/சில ‘அதி அற்புத’ படங்கள்.
– சென்னை விஜயம்.

ஆக இன்னும் சரக்கு தீர்ந்து போய்விடவில்லை. Hang on, BRB !!

இயந்திர பித்து – நிக்கானியன்

lazy lens

ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான்.

அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக வந்து விட, ரெண்டு வாரம் கொஞ்சம் அதிகமாய் சோப்பு போட்டு, பேர் அண்டு லவ்லி அப்பி, தினமும் அயர்ன் பண்ணி ஜீன்ஸ் போட, பசங்களெல்லாம் மிரண்டு போனார்கள். அந்த அண்ணாவை வைத்து, இதெல்லாம் இந்த காமிராவால வந்தது, நீ சுமாராத் தான் இருக்க தம்பி என்று உண்மையை உணர வைத்தார்கள்.

அதற்கு பிறகு காமிரா கத்துக் கொடுத்தார்கள். அப்பாவியாய் வரும் கஸ்டமர்களுக்கு என்னை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வைத்தார்கள். டார்க் ரூமில நிற்க வைத்து டெவலப்மெண்ட் சொல்லிக் கொடுத்தார்கள். காமிராவிற்கு முன் போய், காமிராவிற்கு பின் என்றானது. Photography கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் யாராவது என்னைக் கேட்டால், நானெல்லாம் அந்த காலத்து ஆசாமி, பிலிம் ரோல்ல படமெடுத்து கத்துக்கிட்டவன் என்று மார்தட்ட முடிகிறது.

அதற்கு பிறகு செந்திலுடன் பேசும் போது என் போட்டோகிராபி ஆசையை பார்த்து, அவனுக்கும் வேறு ஆள் கிடக்காததால், அவனின் கனவுப் படத்துக்கு காமிராமேனாக கால்ஷீட் போட்டான். அவனுடன் சேர்ந்து கதாசிரியனானேன் என்பது epilogue. அந்த காமெடி பற்றி மற்றோரு சமயம்.

2002ல் அமெரிக்கா வந்த போது, கொஞ்சம் டாலர் சேர்த்து, ஒரு கேனன்(canon) வாங்கினேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வேளாங்கன்னியிலிருந்து ரெயிலில் வந்து கொண்டிருந்த போது, உதயசூரியனை படமெடுக்கப் போய், CCD காலி. பிறகு ஒரு point and shootஆக சல்லிசாய் ஒரு சோனி வாங்கினேன். ரொம்பவும் பிடித்துப் போன காமிராவது. “எவன் லென்ஸை மாத்தி மாத்தி திருகிண்டிருப்பான்” என்று அந்த சோனியுடன் அக்கியமானேன்.

போன வருட கடைசியில் Nikon D40 என்றொரு காமிரா அறிமுகப்படுத்தியது. நல்ல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர்(single-lens reflex) காமிராவாதலால், மீண்டும் காமிராவிற்கு பின் என ஆசை துளிர் விட ஒரு ஆறு மாதம் கழித்து, இப்போது வாங்கி விட்டாயிற்று. சதக் சதக் என்று நொடிக்கு இரண்டரைப் படமெடுக்கலாம். டெலிபோட்டோ லென்ஸ் போட்டு பிசி.ஸ்ரீராம் மேட்டர்களை முயற்சிக்கலாம்.

அதெல்லாம் விடுத்து இப்போதைக்கு lazy lensசிலும் flickrயிலும் சுமாரான படங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நல்ல புகைப்படம் வரும் தருணங்கள் ரொம்பவும் அபூர்வம் தான். இந்த டெக்னாலஜியில் யார் வேண்டுமானாலும் நல்ல படமெடுக்கலாம். நல்ல எஸ்.எல்.ஆரும் மண்டை மண்டையாய் லென்ஸுகள் மட்டுமே முக்கியம். சென்னைக்கு செல்லும் போது ஒரு போட்டோ கட்டுரை செய்ய ஆசை. பார்க்கலாம்.

சமையல் குறிப்பு !!

“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம்.

ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது மானிட்டரில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு போனேன்.

என்ன தான் மனைவியின் கைப்பக்குவம் பிடித்திருந்தாலும், ஜனகராஜ் ஸ்டையிலில் தங்கமணி என்ஜாய் என்று இரண்டொரு மாதங்களுக்கு இஷ்டத்துக்கு சாப்பிடலாம் என்ற நினைப்புக்கு எள். பல டஜன் ஸிப்லாக் பைகளில், இரண்டு மூன்று கரண்டி சாம்பாரையும் ரசத்தையும் தனித்தனியாக் ஊற்றிக் கொண்டிருந்தாள். புரிந்தது சூழ்ச்சி. இதைப் போல சாம்பார், ரசம், மோர் குழம்பு, வத்தக் குழம்பு, அவியல் மற்றும் கூட்டு என்று விதவிதமாக மொத்தம் 60-70 தனிப் பாக்கெட்டுகளில் தயார்(சுத்தத் தமிழ் வார்த்தை ஒன்று இருக்கிறது. சொன்னால் பரிசு) செய்து, காட்டெருமை சைஸ் ப்ரீஸரில் அடைத்து விட்டாள். ஒரு நாளுக்கு தேவையான அளவு ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டது. இரண்டு மாதத்திற்கு தேவையான சாப்பாடு ரெடி.

மனைவி ஊருக்கு போன ஒருவாரத்திற்கு பிறகு நாக்கு செத்துப்போய், ப்ரீசர் சாம்பாரையும் கூட்டையும் மைக்ரோவேவில் டீபராஸ்ட் செய்து சாப்பிட்டால் கலக்கலாய் இருக்கிறது. எக்கச்சக்கமாய் எக்ஸ்பாக்ஸ் விளையாடிவிட்டு சுண்டக்காய் வத்தக் குழம்பும் லேஸ் சிப்ஸும் சாப்பிட முடிகிறது. இந்த ப்ரீசர் மேட்டர் சென்னையில் வேலைக்காகாது. என்னதான் ப்ரீசராய் இருந்தாலும் வெளியிலுள்ள தட்ப வெட்பத்தால் ரொம்ப நாள் தாங்குவது கடினம்.

தேசித் தமிழர்கள் என்னப்போல் சமையல் சோம்பெறிகளாய் இருந்தால் சிப்லாக் சாப்பாடை செஞ்சு வச்சுட்டு கிளம்புமா தாயே என்று தத்தம் மனைவிகளிடம் பெட்டிஷன் போடலாம். கொஞ்சம் வித்தியாசமாய், சேமியா உப்புமா, அடை, ஆனியன் ரவா, பருப்பு பாயசம் இத்தியாதிகளையும் பிரீஸ் செய்யும் படி கேட்கலாம். எல்லாவற்றிக்கும் தனித்தனியாய் தங்க மாளிகை பில் வரும்.

நீங்களும் இதை முயன்று பார்க்கலாமே ? (இப்படித் தான் எல்லா மங்கையர் மலர் குறிப்புகளையும் முடிக்கிறார்கள்).

சுளுக்கு !!

ankle sprain pic - mckinley.uiuc.edu

போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ் பிடிக்க வரும் போது, மளுக் என்றது. ஒரு நொடிக்கு கண்களில் ஆயிரமாயிரம் ரத்ன ஊசிக்கள் தெரிந்தன. நின்றேன். அடுத்த அடி வைக்க முடியவில்லை. 212 பஸ் வேறு செனெகா ஸ்டிரீட்டை தாண்டி சென்று விட்டது. ஷூவில் ஒரு பக்கம் சற்று அதிகமாகவே தேய்ந்து இருந்ததால், கணுக்கால் சட்டென்று உட்புறமாக மடங்கி மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனால் அது திரும்பிய அந்த நொடியில் உலகம் ஒருமுறை சர்ரென்று சுற்றி, பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் மறைந்து போய், ம்ம்மா…என்று ஒரு மெலிதான சவுண்ட் விட்டேன். அப்படியே அந்த சின்ன தெருவைத் தாண்டி அதே பஸ்சை பிடித்தால், இடது காலை வைக்க சிரமப்பட்டு ஏறினேன். காலை தடவிப் பார்த்தால், பஞ்சு மிட்டாய் போல உப்பி மெத்தென்று ஆகியிருந்தது.

இதை twisted ankle அல்லது ankle sprain என்கிறார்கள். தமிழில் சுளுவாக மக்களித்தல் அல்லது சுளுக்குதல் என்கிறார்கள். வெகு எளிதாக வரக்கூடிய சுளுக்கும் இந்த ankle சுளுக்குத் தான். ஆங்கிள் [Ankle] என்பதே angulus என்னும் லத்தின் மொழியில் இருந்து வந்தது. தடிமனான மாமாக்களின் ankleகளை fat + ankle சேர்த்து fankle என்று கிண்டலடிக்கிறார்கள். ஒரு protactorல் 90 டிகிரி ஆங்கிள் மாதிரியான தோற்றமுடைய காலும் பாதமும் சேரும் திரிவேணி சங்கமம். சில பல தசைநார்களும், fibula, tibia, talus என்னும் 3 எலும்பகளும் கூட்டணி இட்டு அசைவு தரும் ஒரு இணைப்பு. இங்கு வரும் சுளுக்குகளை musculoskeletal injury வகைகளில் சேர்க்கிறார்கள். உலகில் வரும் அனேக ankle sprain injuryக்கள் வருவது விளையாட்டு வீரர்களுக்குத் தான். அல்லது அதிரடிக்காரன் மச்சான் பாடுபவர்களுக்கு.

ரொம்பவும் வீங்கிப் போய், நாலு தப்படி கூட எடுத்து வைக்க முடியவில்லையென்றால், டாக்டருக்கு போன் செய்வது உசிதம். அவரும் எக்ஸ்ரே எடுத்து, காலை அப்படி இப்படி திருப்பி, இங்க வலிக்குதா….இப்ப..இப்ப என்று வலி உயிர் போக செய்து அதே புருஃபன் தருவார். இதுக்கு நாலு நாள் ரெஸ்ட் எடுக்கணும் என்பார். நாலு நாள் வீட்டிலிருந்து மெகா சீரியல் பார்த்தால் மறை கழன்று விடும் என்பதால், ஆபீஸுக்கு நொண்டி நொண்டி போவீர்கள். மறை கழன்றாலும் பரவாயில்லை என்று காலை மேலே தூக்கி வைத்து விகடன் ஒளித்திரையில், தேவயானி அழுவதை பார்ப்பது பெட்டர். சரியாக வீக்கம் அடங்காத நிலையில் தினசரி வேலைகளை செய்வது, மீண்டும் ஒரு முறை மளுக் என்று கால்களை மடங்க வைக்கும். அந்த நொடியை மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

இந்த ‘மளுக்’கை சரியாக்குவதற்கு RICE என்னும் வீட்டு வைத்தியம் சொல்கிறார்கள். அனேக சுளுக்கர்களுக்கு இந்த முறையே போதும். R என்பதற்கு ரெஸ்ட். I என்பதற்கு ஐஸ். ஐஸ் கட்டிகளையோ, ஐஸ் பாக்குகளையோ ஒரு மணி நேரத்திற்கு வைக்கலாம். நிறைய வைத்தால் ஜன்னி வரும். C என்பதற்கு compression. ஒரு பாண்டேஜ் வைத்து அந்த இடத்தை கட்டலாம். E என்பதற்கு elevation. பாண்டேஜ் வைத்து கட்டிய கால்களை உங்கள் இருதயத்தை விட உயரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உங்களில் பழைய எகனாமிக்ஸ் புத்தகத்தயோ, புளி மூட்டையோ, விஐபி சூட்கேஸையோ வைத்துக் கொள்ளலாம். புவியீர்ப்பை வைத்து அந்த வீக்கத்தை குறைக்கும் முயற்சி தான் இது.

நான்கு நாட்களாக இப்படி RICE வைத்தியம் செய்து ஒரு மாதிரி வீக்கம் வடிந்துள்ளது. இப்போது இதை டைப்புவதும் பெருமாள் போல ஒரு ஆதிசேஷ சயனத்தில் தான். வீக்கெண்ட் எங்கும் போக முடியாமல், படிக்க வேண்டும் என்று நினைத்து வாங்கிய தடிமனான அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்பை முடித்து விட்டேன். இப்போது படித்துக் கொண்டிருப்பது ஒல்லியான கிரேசி மோகனின் காமெடிப் புத்தகம், சிரித்து சிரித்து சுளுக்கு பிடிக்கும் அபாயத்தோடு.