இசை · சியாட்டல்

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஏ ஆர் ரஹ்மானும் !!

காலை 8:14. இன்று.

கிட்டத்தட்ட வழிகிற சியாட்டல் பஸ்சில் மூச்சு வாங்க ஓடி வந்து, எப்படியோ ஏறியாகி விட்டது. முதல் நான்கு சீட்டுகளைத் தள்ளிப் போனால், எதிர் எதிரே பார்த்துக் கொண்டு உட்காருகிற ஸ்பெஷல் சீட்டுகள். உண்மையாக இந்த சீட்டுகள் ரொம்பவும் உயரத்தில், முதுகை ரொம்பவும் சாய்த்துக் கொள்ள முடியாத சீட்டுகள். வலது புற நான்கு பேர் உட்காரக் கூடிய சீட்டில் ஹாயாக மூன்று பேர் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இதோ அவர்களை கொஞ்சம் தள்ளி உட்கார கேட்டு விட்டு, கம்பியோடு இடித்துக் கொண்டு, நுணுக்கிக் கொண்டு உட்கார்வது சாட்ஷாத் நானே தான். வழக்கமாக புத்தகம் படித்துக் கொண்டோ, என்.பி.ஆர் கேட்டுக் கொண்டோ ஆபிஸ் செல்லும் நான், இன்றைக்கு கேட்டுக் கொண்டிருப்பது தமிழ்ப் பாடல்கள்.

எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவரின் தலை பிளாக் அண்டு ஒயிட்டில் இருக்கிறது. இருந்தாலும் ஏகமாய் முடி வளர்த்து, ஆத்திப் பின்னல் போட்டிருக்கிறார். கெட்டி கருப்பு பிரேம் போட்டு மாடர்னாய் கண்ணாடி. படித்துக் கொண்டிருப்பது ஆரஞ்சுப் பத்திரிக்கை, Financial Express. அதற்கு பக்கத்தில் இருக்கும் goatie இளைஞன் எங்கோ மோட்டு வளையத்தைப் பார்த்துக் கொண்டு, தனது கோட்டியை திருத்தி திருகிக் கொண்டிருக்கிறான். கண்கள் சற்றே மறைக்கபடும் அளவிற்கு மங்கிகாப் பாஷனாய் அணிந்திருக்கிறன். அப்படியே எழுந்து டிவி காமிராவை நோக்கி குத்தி குத்திப் பாடினால், ஹிப்-ஹாப் பாடகன் தான்.

அதற்குப் பக்கத்தில் இரண்டு ஆசிய இளைஞர்கள். ஒருவன் நிண்டெடோ டி.எஸ்ஸில் எதோ விளையாடிக் கொண்டிருக்கிறான். மற்றொருவன், ஃபாம் டிரையோ 650 போனில் எதோ செய்து கொண்டு அவனருகில் நின்றிருக்கிறான்.

எதிரில் நான்கு பேர் சீட்டில், நான்கு பேர். நாலு பேரும் நாலுவிதம். முதலில், எனக்கு நேர் எதிரில், ஒரு ஸ்பானிஷ் பெண். காதில் பெரிய வளையத்தோடு, கிட்டத்தட்ட ஒரு அரை-வெள்ளை நிறத்தில் உதட்டுச்சாயம் இஷிக்கொண்டிருக்கிறாள். கைகள் மறைக்கும் வரை சந்தன நிறத்தில் ஒரு புசுபுசு வென்ற ரெக்ஸின் ஜாக்கெட். கண்களில் நேர்மை. கையில் ரொம்பவும் சின்ன கைப்பை. சின்னது என்றால் ரொம்பவும் சின்னது விரல்பை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவளுக்கு பக்கத்தில், Debbie Macomberன், The Manning Sisters படித்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. சொல்லத்தான் நினைக்கிறேன் ஜெயசித்ரா மாதிரி பெரிய ப்ரேம் கண்ணாடி. தடிமனாக கருப்பு கம்பிளி கோட்டு. கண்டிப்பானவள் ஆனால் அன்பானவள் போல் தோன்றுகிறார்.

அவருக்கு பக்கத்தில் சிறிய கண்களுடன், கருப்பு கலரில் கவாஸ்கர் தொப்பி, புலன் விசாரனை விஜயகாந்தின் பிரவுன் கலரில் நீண்ட டிடெக்டிவ் கோட்டு போட்டிருக்கும், ஒரு ஜப்பானிய அல்லது கொரியன் மாமா. மிஞ்சிப் போனால் ஐம்பத்தைந்து வயதிருக்கலாம்.இப்போதெல்லாம் ஜப்பான் முகத்துக்கும் சீன முகத்துக்கும் வித்தியாசம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தொப்பியை எடுத்தால் கண்டிப்பாய் வழுக்கை தான். என்ன பந்தயம் ? சுத்தமாய் காலையில் ஷேவ் செய்திருக்கிறார். ஜில்லெட் மாக் 3. கையில் லெதரில் ஆபிஸ் பை. உள்ளே ஒரு ஐபிஎம் லாப்டாப் அல்லது டெல் இருக்கலாம். சில பைல்களும், சில வீட்டு பில்களும், ஒரு ப்ளூம்பெர்க் மாகஸின்னும் இருக்கலாம் என்பது என் யூகம்.

அடுத்தவருக்கு போவதற்கு முன் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உட்காருகிறேன். பக்கத்தில் இருப்பவர் கொஞ்சம் நகர்ந்து உட்கார, ஹம்…ம்..அ..ப்பா. ஆங்கிலத்தில் வரும் appa அல்ல இது, hubba என்று பெருமூச்சு. ஒரு வழியாய் சுகமாய சாய்ந்து உட்கார்ந்து விட்டேன். பஸ் மெர்சர் ஐலண்ட் அருகே சீராக அறுபதில் பயணிக்கிறது. நின்று கொண்டிருப்பவர்கள் எல்லாம் எதிலோ சாய்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதோ, அங்கே ட்ரைவரின் சீட்டிற்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் அந்த அம்மணி, இந்த கூட்டத்தை தாண்டி வந்தால், உட்கார என் இடம் கொடுப்பேன். சத்தியம். இதில் சத்தியம் தேவையில்லை, இது ஒரு நற்குணம். அதுகூட இல்லை. கடமை. யூஷுவலாக நின்று கொண்டு போவது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் காலரியாவது குறையும் என்ற குறுக்கு புத்திதான். அதைத் தவிர உட்கார்ந்து போவதில் நிறைய சிரமங்கள். ஆனால் கண்டிப்பாய் பஸ்சில் கடைசியாய் ஏறி நின்று கொண்டு பயணிக்க கூடாது. பல்லவன் பஸ்சில் புட்போர்ட் அடிக்கிற மாதிரி, ஒவ்வொரு ஸ்டாப்பாய் ஏறி இறங்க வேண்டும். ஆனாலும் பஸ்ஸிலிருந்து வெளியேறுபவர்களின் முகங்களை பார்க்க வசதியாயிருக்கும். ஓரிருவர் ஸ்டாப் வந்தாயிற்று, இனி எட்டு மணி நேரம் ஆபிஸில் சீட்டு தேய்க்க வேண்டும் என்கிற மாதிரி இறங்குவார்கள். பலர் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டு. சிலர் தனக்குத் தானே பேசிக் கொண்டு, சிலர் தூங்கி எழுந்து கலங்கிய கண்களுடன் என்று ஏராளமான முகபாவங்கள்.

சொல்லிக் கொண்டே, முக்கியமாய் சொல்ல வந்ததை எங்கேயோ விட்டுவிட்டேன். ஆங் !! எதிரில் உட்கார்ந்திருக்கும் அந்த மூன்றாவது ஜப்பானிய மாமாவுக்கு பக்கத்தில், ஜீன்ஸில் ஒரு டினேஜ் பெண். ரெண்டு நாசித்துவாரத்துக்கு நடுவே சின்னதாய் ஒரு வளையம் போட்டுக் கொண்டிருக்கிறாள். பிங்க் கலர் போனில் சதா எதோ/யாருக்கோ டெக்ஸ்ட் செய்து கொண்டிருக்கிறாள். நைக்கீயின் லொகோ போட்ட வெள்ளை ஷூ. லோகோவைச் சுற்றி பிங்க் கலரில் லைனிங். வெள்ளை டீஷர்ட்டில் Bratz !! என்று குறும்பாய் குறுக்கலாய் ஜிகினாவில் எழுதியிருக்கிறது. கையில் மொந்தையாய் கருப்பு லெதர் ஸ்டராப் கடிகாரத்தில், ஊர்க்கோடி வரை டைம் தெரியும். அதன் நொடி முள் தற்போது முப்பத்தாரில்…அல்ல… முப்பத்தேழில் ஓடிக்(அதென்ன ஓடி ?) கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு.

ஊஞ்சலாடும் பாலம் எனப்படும், லேக் வாஷிங்கடனின் மேலே(மேலே என்றால் ரொம்பவும் மேலே அல்ல. எங்கேயோ பாலத்தைக் கட்டி அப்படியே தண்ணீரின் மேல் மிதக்கவிட்ட மாதிரி ஒரு பாலம்). ப்ராக்கட்டில் அந்த வாக்கியத்தை எழுதி முடிப்பதற்குள் எதற்காக சொல்ல வந்தோம் என்பது மறந்து, அதை துறந்து, திரும்பவும் எழுத ஆரம்பிக்கிறேன். ஊஞ்சலாடும் பாலம் எனப்படும், லேக் வாஷிங்கடனின் மேலே கார்-பூல் லேனில் பஸ் சென்று கொண்டிருக்கிறது. அதாவது ஒருவருக்கு மேற்பட்டவர் ஒரு வண்டியில் இருந்தால், அந்த வண்டிகள் மட்டும் செல்லக்கூடிய லேன் சிஸ்டம். நூற்றுக்கு ஆறு அல்லது ஏழு கார்களில் தான் ஒருவருக்கு மேற்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இந்த கார்-பூல் லேனில் கூட்டம் கம்மி. மற்ற லேன்களில் அம்மும் கார்க் கூட்டம். பக்கத்து லேனில் சுப்பரு கார் ஆசாமி…ஐயோ, மோட்டர் ரேசரில் ஷேவல்லவா செய்து கொண்டிருக்கிறான். கார் ஓட்டிக் கொண்டே. பஞ்சதந்திரத்தில் கமல் செய்து காட்டிய மாதிரி. அந்த லேனில் போகும் கார்களின் எவர்சில்வர் வீல்கள் வேகமாய் சீராய் சுத்துவது பார்க்க அழகாய் இருக்கிறது.

விஷயத்துக்கு வருவோம். எதிரில் உட்கார்ந்து கொண்டிருப்பது நாலு பேரும் நாலு விதம் என்றேனல்லவா. ஆனாலும் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை. எல்லார் காதிலும், எம்.பி.திரி ப்ளேயர்களின் இயர்-போன்கள். அந்த மத்திய வயது அம்மணி மட்டும் கருப்பு கலர் ஒயரில் இயர்போன். மற்றவர்கள் வெள்ளை. காதில் சொருகியிருக்கும் இயர்போனை பார்த்தாலே தெரிகிறது, எல்லாமே ஆப்பிள் ஐ-பாடின் இயர்போன்கள்.

அதற்கு முன்னால், இந்த ஸ்டாப் வந்து விட்டது. இதற்கு அடுத்த ஸ்டாப் தான், சியாட்டல் டவுண்டவுனின் முதல் ஸ்டாப். இந்த ஸ்டாப்பிற்கு என்ன பெயர் என்று மூன்று வருடங்களுக்கு பிறகும் தெரியவில்லை. அவ்வளவாக யாரும் ஏறி இறங்காத ஒரு ரெண்டு கெட்டான் பஸ்ஸ்டாப். ஒரே ஒரு முறை மட்டும், மழை பெய்த ஒரு சாயங்காலத்தில் வீட்டிற்கு போகும் போது, இந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்கிறேன். சீ..சீ. பெண்கள் விஷயம் எல்லாம் இல்லை. கல்யாணமாகி விட்டது எனக்கு.

புத்தகம் படிக்கிற ஆர்வத்தில், மறந்து போய் தெரியாமல் எதோ ஒரு பஸ்சில் ஏறி விட்டேன். பிறகு தான் தெரிந்தது, அது ரெண்டன் போகிற பஸ்சென்று. அதுவும் இரண்டு ஸ்டாப்புகளுக்கு பிறகு. ட்ரைவர் ஒரு வழியாய் என்னை இந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்று விட்டார். புத்தகத்தை மூடி வைத்து பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். பெல்வியு போகிற பஸ்செல்லாம், இந்த ஸ்டாப்பில் யார் ஏறப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அடித்து கொண்டு போகிறார்கள். போதாகுறைக்கு மழை வேறு. இப்படியே போனால் ஒரு பஸ்ஸும் நிற்காது என்று நினைத்த போது, சடாரென்று தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் போல, மழை நிற்க, அடுத்த பஸ்ஸும் வந்து நிற்க, எல்லாம் சுபம்.

இந்த ஆனானிமஸ் ஸ்டாப்பில் யாரோ ஒரு சைக்கிளோட்டி இறங்குகிறார். சைக்கிள் ஹெல்மெட் போட்டுக்கொண்டு, முன்பக்க பாரில் வாட்டர் பேக் ஒட்டிக் கொண்டு. பஸ்ஸுக்கு முன்னால் சொருகியிருந்த தனது சைக்கிளை எடுத்துக் கொள்ள, பஸ் புறப்படுகிறது.

எதிர் சீட், ஐபாட் அன்பர்கள் மேலே சொன்ன தத்தம் வேளையை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஜப்பான் மாமா ரொம்பவும் சாந்தமாய் தெரிந்தார். கண்களில் அமைதி தெரிந்தது. காதில் ஐ-பாட் இயர்போன் இன்னமும் இருக்கிறது. ஆக எதோ கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ? இப்படி சாந்தமாய் என்னத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சாட்டர்…டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரிரியா..ஓயே ஒயே என்று யாரோ, தமிழை பாஷனாய், எந்த பாடகியோ, இந்தக் கணத்தில், சத்தமாய் ஆல்டோ வாய்சில், ரஹ்மான் இசையில், என் காதில் கத்துகிறாள். எழுந்து ஆட கால்கள் துடிக்கின்றன. இன் ஃபாக்ட் ஜோடி நம்பர் ஒன்னில் வெற்றி பெறுகிற அளவுக்கு, கைகளாலேயே டான்ஸ் செய்து கொண்டிருக்கிறேனே ஜப்பான்காரரே, தெரியவில்லையா.

நீங்கள் எதைக் கேட்டுக் கொண்டு சாந்த சொரூபியாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கேட்பதென்ன, அந்த காலத்து உங்க ஊர் சினிமா பாடல்களா, அல்லது உமாச்சி பாட்டா, ஃபாட்காஸ்டா, ஆடியோ புக்கா ? என்ன தான் அது ? என்னால் முடியவில்லை. பூம் ஷாக்…….பூம் பூம் ஷாக்…. என் காதில் ஓடும் பாடலை கொஞ்சம் நேரம் கேட்கிறீர்களா. சத்தியமாய் ஆடுவீர்கள். அல்லது மாட்டீர்கள்.

பெண்கள் ஒரு மிக்ஸி..ஆண்கள் வந்தால் சட்னி, பெண்கள் ஒரு கிரிக்கெட்..ஆண்கள் தான் விக்கெட்… ஒத்துக் கொள்கிறேன் அபத்த தமிழ் சினிமாவின் அபத்தா-அபத்தமான வரிகள் தான். இருந்தாலும், தமிழன் எனக்கே புரியாத வரியாக இருந்தாலும் நான் ரசிக்கவில்லையா. அந்த மாதிரி நீங்களும், பென்னியும் உஜ்ஜயினியும் பாடும் இந்த சாட்டர்டே பார்ட்டிக்கு போகலாம் வரியா..ஓயே…..ஒயே இளமை பாடலை ரசிக்க முடியும். கேட்பீர்களா சார் ?

அது சரி, இந்த பாட்டு முடிவதற்குள் ஆபிஸ் வந்து விடும் போலிருக்கிறது. இப்போது நின்றது அமெசான் ஸ்டாப். அமெசான் சாஃப்ட்வேர் மச்சான்கள் இறங்கிப் போகிறார்கள். அதோ இறங்குகிறானே ராஜ், அமெசான் வெப் ஸர்வீஸில் அப்ளிகேஷன் டெவலப்பர். அவனும் ஸாண்டிஸ்க் ப்ளேயரில் இதைத் தான் கேட்கிறான் என்று நினைக்கிறேன். பேபி உன் டி.ஜே நான்…ஒரு முறை இருமுறை பலமுறை கேட்டிடும் சங்கீததோயுயுயும்ம்ம். அது தான மச்சான் என்று கேட்பதற்குள் தனக்குத் தானோ தலையாட்டிக் கொண்டே இறங்கி விட்டான். வேறு என்ன பாடலாய் இருக்க முடியும் தலையாட்ட. கண்டிப்பாய் இது தான்.

தொப்பியை சரி செய்து இறங்க ஆயுத்தமாகி விட்டார் என் எதிர் சீட் ஜப்பான்காரர். வழுக்கை தெரிகிறது. சொன்னேனல்லவா. நீ….நீ…நீ மார்லின் மன்றோ க்ளோனிங்கா…இல்ல….ஜெனிபர் லோபஸ் ஸ்கானிங்கா…ஒண்டே மட்டும் கேர்ள் ப்ரண்டாக வரியா. என்ன ஒரு பாடல். என்றாவது ஒருநாள் அவரை இந்த பாட்டுக் கேட்டு ஆட வைக்க வேண்டும். ஸ்டாப் வந்தாகிவிட்டது. வரட்டா..ஒயே ஒயே !!

http://odeo.com/flash/audio_player_tiny_black.swf

இசை · பயாஸ்கோப்

காணவில்லை

இளைஞர்களின் கோலிவுட்டை, இந்த படத்திற்கு பின்னர் காணவில்லை. தேடிப்பார்கிறேன் காற்றோடு.

அப்பாஸ் ட்ரம்ஸ் அடிக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு சைகை செய்து நடந்து போவார், போன வாரம் கூட பீச்சில் ஒரு யுவா, அதே போல ஒரு பெண்ணின் பின்னால். Strikingly similar. ஒரே ஞாபகம்ஸ்.

இசை · சுஜாதா · பயாஸ்கோப்

சிவாஜி – பாடல்கள்

rajini rahman sivaji music

Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில் வைத்துக் கொண்டு, வியர்வை வழிய ஓடும் பொது ஜனம் தான், ஷங்கரின் பார்வையாளன். அவரின் நல்ல சினிமா ஆசையை, தன் நண்பர்களின் ‘நல்ல’ படங்களை தயாரிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்.

இந்த pedestrian fantasyயை கொஞ்சமேனும் ஓதுக்கி வைத்து, உண்மையை சொல்லப் போய், பாய்ஸ் படமெடுத்த ஷங்கரையும் சுஜாதாவையும், அந்த பொதுஜனம், 23சி பஸ்சை கோட்டை விட்டாலும் பரவாயில்லை என்று நின்று துப்பி விட்டு போனார்கள். ஆனந்த விகடனின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விமர்சன வார்த்தை, சீ !!.

இனிமேலும் உண்மை வழியும் சினிமாவை ஷங்கர் எடுப்பதரிது. இன்று பாய்ஸ் படமெடுத்தால் BPO companyகளின் சாக்கடையில் காண்டம் குப்பைகளை காட்ட வேண்டும். காட்டினால் பாய்ஸ் கைத்தட்டுவார்கள். அவர்களின் பெற்றோர் அதிர்ந்து போய், இந்த ஆளுங்க சரியான crook என்பார்கள். Hypocrites !!

இப்படி சில வருடங்கள் முன்னே சென்று தான், சிவாஜியின் பாடல்களையும் எடை போட வேண்டியதாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரஹ்மான் வளைந்து கொடுக்கவில்லை, அந்த இந்த ரிதம் ப்ரோக்கிராமிங் சூப்பர் என்று போலி பண்டிதத்தனம் காட்டுபவர்கள் சொல்வதை அப்படியா என்று கேட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆவது நலம். இது ரஜினி படமல்ல. இது ரஹ்மான் படமல்ல. இது ஷங்கர் படமல்ல. இது இவர்கள் படம்.

இப்படியாக மூன்று பெரிய ஸ்டார்கள் இணையும் போது வரும் உரசல்களும் நெரிசல்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் பாடல்கள் எந்த ஒரு biasசிலும் இருக்காதது சந்தோஷமே. ரஜினியின் intro பாடலும், ஷங்கரின் முத்திரையான குறுங்கதை சொல்லும்(ஓட்டகத்த – ஜெண்டில்மேன், முக்காலா – காதலன், மாயா மச்சிந்தரா -இந்தியன், அன்பே – ஜீன்ஸ்) பாடலும், ரஹ்மானின் ஒரு offbeat பாடலும் சேர்ந்திருப்பது தான் சிவாஜி ஆல்பத்தின் மிகப் பெரிய பலம்.

SPB செம எனர்ஜியுடன் பாடும் சூரியனும் சந்திரனும் தான் கேட்டவுடன் முதலில் பிடித்தது. வழக்கமான ரஜினி பாடலைப் போல் இருந்தாலும், பாட்டின் சற்றே அதிகமான டெம்போவும், SPBயின் அருமையான குரலும், 7G ரெயின்போ காலனிக்கு அடுத்ததாக மிக அழகாக எழுதப்பட்ட நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் [ஏலே ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்….], இதன் வெற்றி நாயகர்கள். பாடலை கேட்டால், யாரும் சொல்லாமலேயே, பாடலை பாடிக்கொண்டே ரஜினி ஓடுவது நடப்பதுமாக காமிராவை சுற்றி வருவது கண்முன்னே வரவில்லையென்றால், நீங்கள் தமிழனல்ல !! balelaka என்ற வார்த்தை இப்போது தமிழ் அகராதியில் சேர்க்கப்படுகிறது. cool.

வழக்கம் போல ரஹ்மானின் elecric guitar வாசிக்கப்படுகிறது. வழக்கம் போல போஸ்டரில் ரஜினி acoustic guitarயுடன் நிற்கிறார். only rajini…possible என்று சொல்லத் தோன்றுகிறது. தீம் சாங். முதல்வனின் தீம் போல புள்ளரிக்காத குறையை வார்த்தை வரிகள் தீர்த்து வைக்கின்றன. வாடா வாடா வாங்கிக்கடா பாடலை எழுதியது ஷங்கரோ என்று தோன்றுகிறது. பேட்டை ராப் எழுதியது அவர் தான். இந்தியன் படத்தின் போது, கமலுக்கு எல்லா உடைகளூம் அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்றே அந்த அக்கடா இக்கடா பாட்டை வைத்தேன் என்றார் ஷங்கர். அதே போல் ஒரு சாதா ரசிகனுக்கும் போய்ச் சேரும் வரிகள்(சிங்கம் கூட ஜுஜுபிதாண்டா, சிவாஜி வாயிலே ஜிலேபிதாண்டா). முக்கிய காட்சிகளில் இந்த தீம் சாங் பின்ணணியாக வருமேயாயின், வார்த்தைகளின் cheapness மறைந்து போகும், டெம்போ காட்சிகளை மிகைப்படுத்தும். டிரைலரும் இந்த இசையில் தான் வரும் என்று எதிர்பார்ப்பு. கலக்கல் சூப்பர் ஸ்டார் தீம்.

ஒரு கூடை கெட்ட தமிழ். அசத்தல் ரஹ்மான் ஸ்டைல் offbeat பாடல். படங்களை பார்த்தால், டெலிபோன் மணிபோல் பாடல் போல இருக்கிறது. அரிதான இதன் மெதுவான டெம்போவில் தான் இதன் வித்தியாசம். பிளேசி பாடுவது காட்டுக் கத்தல். உதித் நாராயணின் பருவாயில்லைக்கு அடுத்தபடியான தமிழ்க் கொலை. வரவேற்கிறோம். ஒரு கூடை சன்லைட் என்னும் இந்த பாடல் ஒரு டூயட். அடடா நீ ஐந்தடி மிட்டாய், நடந்தாய் நீ பறக்கிற தட்டாய், ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய் என்று கவிஞர் பா விஜயின், ரஜினி துதி. ரசித்த பாடல்.

படத்தில் நல்ல பாடல்களை ரஹ்மான் சுட்டுக் கொள்கிறார் என்று குற்றம் சாட்ட மற்றோரு உதாரணம். சில்லென்று ஒரு காதல் படத்தில், நியுயார்க் நகரம் முதல் உதாரணம். அதிரடிக்காரன் மச்சான் என்ற பாடலில் ரஹ்மானின் குரல் மாற்றும் கலை தெரிகிறது. வாலிக்கு இதை மாதிரி western gliteraati பற்றி லாண்டரி லிஸ்ட் எழுத பிடிக்கும்(மடோனா பாடலா நீ – காதலா காதலா, நான் காதல் கம்ப்யூட்டர் நீதான சாப்ட்வேர் – காதல் தேசம்). இதிலும் ரோஜர் மூர், எடி மர்பி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் வருகிறார்கள். பில்லா ரங்கா பாஷா தான் இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் வரி சரித்திரத்துக்காக எழுதப்பட்டவை.

உதித் நாராயண்/சின்மயி பாடும் சஹானா சாரலை விட விஜய் யேசுதாஸ்/கோமதி ஸ்ரீ, பாடும் pathos versionனான சஹானா பூக்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. முக்கிய காரணம் விஜயின் குரல் மற்றும் பாஷனாகிப் போன திருப்வெம்பாவை இடைச்சொருகல் தான். இதில் ரஜினி காற்றடித்து தலை கலைய, இடுப்பில் கை வைத்து கடலை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. சிகரெட் பிரேக்.

ஆம்பல் லாம்பல் என்கிற வாஜி வாஜிப் பாடல் ஒரு டிபிகல் ஐட்டம் நம்பர். ரஜினி வேறு ராஜா வேஷத்தில் வருகிறார் போல. மாயா மச்சிந்த்ரா, முதல்வனே முதல்வனே, அன்பே அன்பே வரிசையில் மற்றுமொரு ஷங்கர்/ரஹ்மான்/வைரமுத்து பாடல். பல்லியான கமல், பாம்பான வடிவெலுவுக்கு பிறகு டைனோசரான ரஜினியாக இருந்தால் ஷங்கருக்கு மன்னிப்பில்லை. முரண்பாட்டு மூட்டை என்னும் வார்த்தைகளில் வைரமுத்து நெடி. ஹரிஹரன் குரல் டுமீல்.

ஆல்பம் சூப்பர். ஷங்கருக்குத் தான் முதல் வெற்றி. லாட்டரி டிக்கெட் பறக்கப் போகிறது. தலை கலையப் போவது நிஜம். மீண்டும்….ரெடியாகுங்கள்.

இசை

ஸ்ரீ ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸாய நம !!

கிதார் பிரசன்னாவின் ஸ்ரீ ஜிம்மி பாடலின் live version. இந்த வர்ஷனில் கடம் குறைகிறது. கடைசி இரண்டு நிமிடங்களில் லேசாக ஜிம்மி தென்படுகிறார். அசல் பாடலின் சாம்பிள் இங்கே.

ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸுக்கு ஒரு அசத்தல் ட்ரிப்ப்யூட்.

இசை · இயந்திரா · பயாஸ்கோப்

பச்சைத் தமிழனின் கலைந்த தலை

sivaji rajini

எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.

வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.

ரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.

இந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.

இதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன ? அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.

இவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.

முதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.

ஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.

இந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.