இப்படி எங்காவது ‘பலான’ என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர்.
இந்த ‘பலான’ என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல பலான தமிழ் சொல்களில் ஒன்று. இப்பொழுதெல்லாம் குஜிலிப்பான்ஸ், ஜலபுலஜல்ஸ் என்று மாற்று சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கொக்கோகம், மதன, காம என்று எதை சொன்னாலும் இக்காலத்து டினேஜர்களுக்கு புரியாமல் போகலாம். ‘பலான’ என்பது அப்படியல்ல.
ஒரு பன்னிரெண்டு (இப்பொழுதெல்லாம் பத்து) வயதில் அறிமுகமாகும் இந்த பலான என்ற வார்த்தையை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வழக்கமாய் ஞாபகம் இருப்பதில்லை. தினமலர் வாரமலரின் துணுக்கு மூட்டையோ, வண்ணத்திரையின் நடுப்பக்க பின்-அப் பகுதியோ, கெட்ட வார்த்தை புத்தகம் படிக்கும் நண்பனோ, யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியவுடன் ஏற்படுத்தும் கிளுகிளுப்பு அடங்க ஹார்மோன்கள் விடுவதில்லை.
பலான என்பது பலவகையான என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அதை கெட்ட சமாசாரத்திற்கு எற்றபடி பலான என்று சுருக்கியவர் சாமர்த்தியர். பலவகையான காரியங்களுக்கு தனித்தனியாக சொற்கள் இருந்தாலும், மிட்நைட் மசாலாவிலிருந்து டிரிபில் எக்ஸ் படம் வரை எல்லாவற்றிற்கும் one word fits all, பலான. ஜீனியஸ்.
கூகிளில் பலான என்ற வார்த்தையை தேடிப் பார்த்தால், கிட்டத்தட்ட 6,250 வலைதளங்கள் கிடைக்கின்றன. பலான படம், பலான இடம், பலான பலவீனம், பலான விஷயம், பலான உபயோகம், பலான பெயர், பலான புத்தகம், பலான யோசனை, பலான விடுதி, பலான இணையம், பலான சுவை, பலான குடும்பம், பலான வசதி, பலான காட்சி, பலான ஆயிட்டம், பலான வூடு, பலான எண்ணம் என்று அப்படி இப்படி போய் கடைசியாக பலான எஸ்.எம்.எஸ், பலான பதிவு வரை வந்தாயிற்று.
இவற்றிற்கு காரணம் எழுத்து தமிழை, பேச்சு தமிழை விட கொஞ்சம் தூய்மையானதாகவே வைத்திருந்தார்கள்/ருக்கிறார்கள். ஆங்கில இலக்கியத்திலும் படங்களிலும் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு தமிழில் மிக மிக தெளிவான கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுத்து தமிழில் பயன்படுத்தும் போது கொஞ்சம் வன்முறையாக தெரிவதால் தான் இந்த substitution. யோசித்துப் பார்த்தால் பேச்சுத் தமிழை விட எழுத்துத் தமிழில் தான் பலான என்கிற வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருக்கிறது. வீட்டில் பலான விஷயம் என்று உபயோகித்தால் பின்னி எடுத்து விடுவார்கள். ஆனாலும் சிலர் ‘க்’கன்னாவை வைத்து பேசுவதைப் போல், பலான இடத்துல பலான டிபன் சாப்டுட்டு பலான பஸ் புடிச்சு பலான டைமுக்கு வந்துற்றேன் என்று பேசுவதே பலான வார்த்தையில் தான்.
சமீபத்தில் வெளியான தரணி-விஜய்யின் குருவி பட இசையில், பலானது பலானது என்கிற ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. வித்யாசாகர் இசையில் அவரும் ராஜலட்சுமியும் பாடியிருக்கிற இந்தப் பாடல் தான் கேட்டவுடன் பிடித்தது. எதோவொரு DJ பாங்கராவுடன் சேர்த்த தமிழ்ப் பாட்டு போல இருந்தாலும், டாக்டர் விஜய்யும் த்ரிஷாவும் வழக்கமான சுறுசுறுப்பாட்டத்தை போட்டு ஹிட்டாக்குவார்கள் என்று நம்பலாம்.
அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பிராணி
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ
மெகா சைஸுல மெகா சைஸுல பிலிம் காட்டுற நீ
மலைக்கள்ளனா மலைக்கள்ளனா எதைத் தேடுற நீ
என்றெல்லாம் சுவையாய்(?!) சரணம் இருந்தாலும் பாடலின் பல்லவியில் பலான வரிகளிகளும் தேவையில்லமல் வரும் சில வார்த்தைகளும், இப்போதுள்ள சூழ்நிலையில் காண்டர்வர்சியை அழைக்கின்றன. அது என்ன என்று காம்படீஷன் போஸ்கார்டில் அல்லாமல் ஈமெயில் அனுப்பினால் VPPயில் பலான புத்தகங்கள் அனுப்பப்படும்.