Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில் வைத்துக் கொண்டு, வியர்வை வழிய ஓடும் பொது ஜனம் தான், ஷங்கரின் பார்வையாளன். அவரின் நல்ல சினிமா ஆசையை, தன் நண்பர்களின் ‘நல்ல’ படங்களை தயாரிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்.
இந்த pedestrian fantasyயை கொஞ்சமேனும் ஓதுக்கி வைத்து, உண்மையை சொல்லப் போய், பாய்ஸ் படமெடுத்த ஷங்கரையும் சுஜாதாவையும், அந்த பொதுஜனம், 23சி பஸ்சை கோட்டை விட்டாலும் பரவாயில்லை என்று நின்று துப்பி விட்டு போனார்கள். ஆனந்த விகடனின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விமர்சன வார்த்தை, சீ !!.
இனிமேலும் உண்மை வழியும் சினிமாவை ஷங்கர் எடுப்பதரிது. இன்று பாய்ஸ் படமெடுத்தால் BPO companyகளின் சாக்கடையில் காண்டம் குப்பைகளை காட்ட வேண்டும். காட்டினால் பாய்ஸ் கைத்தட்டுவார்கள். அவர்களின் பெற்றோர் அதிர்ந்து போய், இந்த ஆளுங்க சரியான crook என்பார்கள். Hypocrites !!
இப்படி சில வருடங்கள் முன்னே சென்று தான், சிவாஜியின் பாடல்களையும் எடை போட வேண்டியதாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரஹ்மான் வளைந்து கொடுக்கவில்லை, அந்த இந்த ரிதம் ப்ரோக்கிராமிங் சூப்பர் என்று போலி பண்டிதத்தனம் காட்டுபவர்கள் சொல்வதை அப்படியா என்று கேட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆவது நலம். இது ரஜினி படமல்ல. இது ரஹ்மான் படமல்ல. இது ஷங்கர் படமல்ல. இது இவர்கள் படம்.
இப்படியாக மூன்று பெரிய ஸ்டார்கள் இணையும் போது வரும் உரசல்களும் நெரிசல்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் பாடல்கள் எந்த ஒரு biasசிலும் இருக்காதது சந்தோஷமே. ரஜினியின் intro பாடலும், ஷங்கரின் முத்திரையான குறுங்கதை சொல்லும்(ஓட்டகத்த – ஜெண்டில்மேன், முக்காலா – காதலன், மாயா மச்சிந்தரா -இந்தியன், அன்பே – ஜீன்ஸ்) பாடலும், ரஹ்மானின் ஒரு offbeat பாடலும் சேர்ந்திருப்பது தான் சிவாஜி ஆல்பத்தின் மிகப் பெரிய பலம்.
SPB செம எனர்ஜியுடன் பாடும் சூரியனும் சந்திரனும் தான் கேட்டவுடன் முதலில் பிடித்தது. வழக்கமான ரஜினி பாடலைப் போல் இருந்தாலும், பாட்டின் சற்றே அதிகமான டெம்போவும், SPBயின் அருமையான குரலும், 7G ரெயின்போ காலனிக்கு அடுத்ததாக மிக அழகாக எழுதப்பட்ட நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் [ஏலே ஆடு மாடு மேலே உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்….], இதன் வெற்றி நாயகர்கள். பாடலை கேட்டால், யாரும் சொல்லாமலேயே, பாடலை பாடிக்கொண்டே ரஜினி ஓடுவது நடப்பதுமாக காமிராவை சுற்றி வருவது கண்முன்னே வரவில்லையென்றால், நீங்கள் தமிழனல்ல !! balelaka என்ற வார்த்தை இப்போது தமிழ் அகராதியில் சேர்க்கப்படுகிறது. cool.
வழக்கம் போல ரஹ்மானின் elecric guitar வாசிக்கப்படுகிறது. வழக்கம் போல போஸ்டரில் ரஜினி acoustic guitarயுடன் நிற்கிறார். only rajini…possible என்று சொல்லத் தோன்றுகிறது. தீம் சாங். முதல்வனின் தீம் போல புள்ளரிக்காத குறையை வார்த்தை வரிகள் தீர்த்து வைக்கின்றன. வாடா வாடா வாங்கிக்கடா பாடலை எழுதியது ஷங்கரோ என்று தோன்றுகிறது. பேட்டை ராப் எழுதியது அவர் தான். இந்தியன் படத்தின் போது, கமலுக்கு எல்லா உடைகளூம் அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்றே அந்த அக்கடா இக்கடா பாட்டை வைத்தேன் என்றார் ஷங்கர். அதே போல் ஒரு சாதா ரசிகனுக்கும் போய்ச் சேரும் வரிகள்(சிங்கம் கூட ஜுஜுபிதாண்டா, சிவாஜி வாயிலே ஜிலேபிதாண்டா). முக்கிய காட்சிகளில் இந்த தீம் சாங் பின்ணணியாக வருமேயாயின், வார்த்தைகளின் cheapness மறைந்து போகும், டெம்போ காட்சிகளை மிகைப்படுத்தும். டிரைலரும் இந்த இசையில் தான் வரும் என்று எதிர்பார்ப்பு. கலக்கல் சூப்பர் ஸ்டார் தீம்.
ஒரு கூடை கெட்ட தமிழ். அசத்தல் ரஹ்மான் ஸ்டைல் offbeat பாடல். படங்களை பார்த்தால், டெலிபோன் மணிபோல் பாடல் போல இருக்கிறது. அரிதான இதன் மெதுவான டெம்போவில் தான் இதன் வித்தியாசம். பிளேசி பாடுவது காட்டுக் கத்தல். உதித் நாராயணின் பருவாயில்லைக்கு அடுத்தபடியான தமிழ்க் கொலை. வரவேற்கிறோம். ஒரு கூடை சன்லைட் என்னும் இந்த பாடல் ஒரு டூயட். அடடா நீ ஐந்தடி மிட்டாய், நடந்தாய் நீ பறக்கிற தட்டாய், ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய் என்று கவிஞர் பா விஜயின், ரஜினி துதி. ரசித்த பாடல்.
படத்தில் நல்ல பாடல்களை ரஹ்மான் சுட்டுக் கொள்கிறார் என்று குற்றம் சாட்ட மற்றோரு உதாரணம். சில்லென்று ஒரு காதல் படத்தில், நியுயார்க் நகரம் முதல் உதாரணம். அதிரடிக்காரன் மச்சான் என்ற பாடலில் ரஹ்மானின் குரல் மாற்றும் கலை தெரிகிறது. வாலிக்கு இதை மாதிரி western gliteraati பற்றி லாண்டரி லிஸ்ட் எழுத பிடிக்கும்(மடோனா பாடலா நீ – காதலா காதலா, நான் காதல் கம்ப்யூட்டர் நீதான சாப்ட்வேர் – காதல் தேசம்). இதிலும் ரோஜர் மூர், எடி மர்பி, ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் வருகிறார்கள். பில்லா ரங்கா பாஷா தான் இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான் வரி சரித்திரத்துக்காக எழுதப்பட்டவை.
உதித் நாராயண்/சின்மயி பாடும் சஹானா சாரலை விட விஜய் யேசுதாஸ்/கோமதி ஸ்ரீ, பாடும் pathos versionனான சஹானா பூக்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. முக்கிய காரணம் விஜயின் குரல் மற்றும் பாஷனாகிப் போன திருப்வெம்பாவை இடைச்சொருகல் தான். இதில் ரஜினி காற்றடித்து தலை கலைய, இடுப்பில் கை வைத்து கடலை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. சிகரெட் பிரேக்.
ஆம்பல் லாம்பல் என்கிற வாஜி வாஜிப் பாடல் ஒரு டிபிகல் ஐட்டம் நம்பர். ரஜினி வேறு ராஜா வேஷத்தில் வருகிறார் போல. மாயா மச்சிந்த்ரா, முதல்வனே முதல்வனே, அன்பே அன்பே வரிசையில் மற்றுமொரு ஷங்கர்/ரஹ்மான்/வைரமுத்து பாடல். பல்லியான கமல், பாம்பான வடிவெலுவுக்கு பிறகு டைனோசரான ரஜினியாக இருந்தால் ஷங்கருக்கு மன்னிப்பில்லை. முரண்பாட்டு மூட்டை என்னும் வார்த்தைகளில் வைரமுத்து நெடி. ஹரிஹரன் குரல் டுமீல்.
ஆல்பம் சூப்பர். ஷங்கருக்குத் தான் முதல் வெற்றி. லாட்டரி டிக்கெட் பறக்கப் போகிறது. தலை கலையப் போவது நிஜம். மீண்டும்….ரெடியாகுங்கள்.