மீடியா

ப்ளாகிங்

ப்ளாகிங் என்பது முடிந்து விட்டது என்கிறார்கள். What do you mean முடிந்துவிட்டது ? என்று கேட்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

இரண்டாயிரத்துக்கு மிக அருகில், இணையத்தில் யார் வேண்டுமானலும் தினமும் எழுதும்படியான content management மென்பொருள் கொண்டுவரப்பட்டு, சிலர் தனக்கே தனக்கென ஒரு வளைதளம் தொடங்கி, அதை வெப்ப்ளாக்(weblog) எனப் பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எழுதி வளர்த்து வந்தனர். வெப்ப்ளாக் என்பது பிறகு ப்ளாக்(blog) (தமிழில் வலைப்பதிவு) என்றாயிற்று.

2002ல் scribbles of a lazy geek 😉 என்று ஒரு நீண்ட பெயரிட்டு, என் முதல் ஆங்கில வலைப்பதிவை எழுத அரம்பித்த பொழுது, இந்திய ப்ளாகர்(blogger)கள் கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தார்கள். அப்போதிருந்த வலைப்பதிவின் வடிவமும், இப்போது நாற்பது adblockகளுக்கு நடுவே எழுதப்படுகிற ரெண்டு வரி வலைப்பதிவும் மிக மிக வித்தியாசமானவை.

2002ல் ஒரு நாளைக்கு ஒரு பதிவை எழுதினார்கள். அந்த வலைப்பதிவையறிந்த ஒரு பத்து பதினைந்து பேர், அந்த பதிவிற்கு கமெண்ட் எழுதினார்கள். சண்டை போட்டார்கள். கண்ணீர் விட்டார்கள். சந்தோஷப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பேர் எழுத வர, சீனியர்களுக்கு கடுப்பாகி, தினமும் இரண்டு மூன்று என்று பதிவுகள் எழுதி தன் சீனியாரிட்டியை காட்டிக் கொள்ள, பிறந்தது மெயின்ஸ்ட்ரீம் ப்ளாகிங்(mainstream blogging). இது ஆரம்பித்தது 2004ல் தான்.

அதுவரை வலைப்பதிவு என்பது ஒரு தனி இயக்கமாக, பொதுஜன ஊடகங்களில் இருக்கும் ரெட்டேப்பிஸ்த்தை(red tape) தாண்டி யாரும் இந்த ஜனநாயக இணையத்தில் எழுதலாம் என்னும் ஒருவிதமான கிளர்ச்சியைத் தரும் ஊடகமாக விளங்கியது. எடிட்டர் என்று யாரும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் எழுதலாம் என்னும் சுதந்திரமும் கிடைத்தது.

பலரும் எழுத வந்த 2004ல் தான், மக்களின் பேராதவு பெற்ற வலைப்பதிவுகளை, பொதுஜன ஊடகங்கள் திரும்பிப் பார்த்தன. அதற்கு காரணங்கள் பல, இன்று அவையெல்லாம் வரலாற்றுப் பாடங்கள்.

நான்காண்டுகளுக்கு பின்பு இந்த 2008ல் சுதந்திர இயக்கம் என அறியப்பட்ட ப்ளாகிங் என்னும் ஒரு மாய உலகம் மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இன்றைக்கும் ஏராளமான வலைப்பதிவாளர்கள் தனது சொந்த வலைப்பதிவுகளை நடத்திக் கொண்டிருந்த்தாலும், இன்று ப்ளாகிங் என்பது ஒரு content management/deployment software மட்டுமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இன்று எல்லா பொதுஜன எழுத்து ஊடகத்திலும் ப்ளாகிங் வந்துவிட்டது. நியுயார்க் டைம்ஸ் போன்ற புத்திசாலித்தனமான பத்திரிக்கைகளில் செய்தியும் ப்ளாக் பதிவுகளும் ஒன்றோடொன்று இணைத்து பிரிக்க முடியாத அளவுக்கு, ப்ளாகிங்கை தனதாக்கிக் கொண்டுள்ளன பொதுஜன ஊடகங்கள்.

இப்படி வலைப்பதிவுகளாக் எழுதப்படும் செய்தி ஊடகங்களில் எடிட்டர்த்தனம் இல்லாமல் இல்லை. எடிட்டர்கள் இருந்தாலும் முன்பு இருந்ததைப் போல கட்டுப்பெட்டித்தனமாக எழுதினால் மக்கள் படிக்க மாட்டார்கள் என்பதால், கொஞ்சம் வெளிப்படையாக எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள். ப்ளாக் என்னும் தனி மனித சுதந்திர உலகோடு போட்டியிட்ட செய்தி ஊடகங்களுக்கு கிட்டத்தட்ட வெற்றி தான்.

அதாவது வலைப்பதிவு என்னும் உலகில் இருந்த அத்தனை நல்ல விஷயங்களையும் செய்தி ஊடகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. சில வலைப்பதிவுகளும் செய்தி ஊடகத்தின் அளவுக்கு வளர்ந்து விட்டன. உதாரணம், என்காட்ஜெட்(endgadget) என்னும் டெக்னாலஜி வலைப்பதிவுக்கு உட்கர்ந்து பேட்டி அளித்திருக்கிறார் மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ். அதைபோலவே, வலைப்பதிவுகளுக்கு முன்னால் டெக்னாலஜி பற்றி செய்தியளித்த சிநெட்.காம் என்னும் வலைத்தளம், கிட்டத்தட்ட மூடும் நிலைக்கு வந்ததற்கும் வலைப்பதிவுகளே காரணம்.

இப்படியே க்ளாசிக் செய்தி ஊடகமும், வலைப்பதிவுலமும் ஒன்றோடொன்று இணைந்து கொண்டிருக்கின்றன. வலைப்பதிவு உலகம் என்றிருந்த ஒன்று கிட்டத்தட்ட செய்தி ஊடகமாக மறைந்து கொண்டிருக்கிறது.

எழுத ஆளில்லாத நிலை போய் இன்று படிக்க ஆளில்லாத வலைப்பதிவுகள் நிறைய வந்து விட்டன. இதனால் ப்ளாகிங் வழக்கொழிந்து போய்விடும் என்று சொல்வதற்கில்லை. 2002ல் இருந்த அந்த ப்ளாக் என்னும் ஒரு தனி நபர் சுதந்திர ஊடகம் என்னும் வசீகரம் இன்று சற்றே மாறிவிட்டது. அவ்வளவுதான். இதெல்லாம் சுத்த அம்பக், இன்று உள்ளதும் அதே 2000தின் வலைப்பதிவு உலகம் தான் என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும்.

மீடியா

காபி வித் அனு

coffee with anu hassan

அனுஹாசன் வாயாடும் celebrity chat ஷோ. இதை காபி வித் கரண் என்று கரண் ஜோஹர், ஸ்டார் டீவியில் செய்த போது படா பேஜாராக இருந்தது. விஜய் டீவியில் முதலில் காவி வித் சுச்சி என்ற விளம்பரம் பார்த்த போது, யூகிசேதுவின் நையாண்டி தர்பார் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நன்றாகவும் இருந்தது. சுசித்ரா, கொஞ்சம் செயற்கையாக, தமிழை கொஞ்சி கொஞ்சி சரோஜா தேவி போல பேசினாலும், மிர்ச்சி ரேடியோ கேட்டதால் பழக்கமாகி பிடித்துப் போனது.

மிர்ச்சி சுசித்ராவிற்க்கு பின், அனுஹாசன் ஷோவில் celebrityக்கலோடு பேச ஆரம்பித்தார். ஒரு quintessential வாயாடியாக இல்லாவிட்டால் இந்த ஷோ நடத்த முடியாது. அனு கலக்கலாய் செய்கிறார். ஆனாலும் சில எபிசோட்களில் சுவாரசியம் மிஸ்ஸிங். ஏனென்று தெரியவில்லை. கோலிவுட் நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்பு தெரிந்தாலும், அவ்வப்போது நிகழ்ச்சி சுவையாக இருப்பதால், வாரா வாரம் பார்ப்பதுண்டு. மாண்டலின் ஸ்ரீனிவாசும், ட்ரம்ஸ் சிவமணியும் சேர்ந்த நிகழ்ச்சியும், கங்கை அமரனும் அவரது மகன்களும் வந்திருந்த எபிசோடும் இயல்பானவை.

prakashraj and prithivaraj

ஒரு மாதத்திற்கு முன் பார்த்த ஷோவில், இரண்டு ராஜாக்கள். பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்வி ராஜ். அவர்கள் நடித்து எக எதிர்பார்ப்போடு வெளியான மொழி படத்தை ஒட்டி வந்த நிகழ்ச்சியாதாலால் கலை கட்டும் என்று எதிர்ப்பார்த்தால், ஏமாற்றம். இயல்பாய் அவை அடக்கமாய் பேசுகிறேன் பேர்வழி என்று தனது aptitudeகளை பற்றி சிலாகித்து கொள்ளும் பிரகாஷ்ராஜும், சார் நீங்க இது… சார் நீங்க அது என்று ஓவராய் புகழுகிற அனுவும், பிரித்விராஜும் சேர்ந்து போரடித்தார்கள்.

பிரகாஷ்ராஜ் நல்ல படங்கள் தயாரிக்கிறார், அதற்காக கொஞ்சம் இலக்கியத்தரமாக தமிழில் பேசவேண்டும் என்று நினத்து, நல்ல சினிமா, புரிதல், நடிப்புங்கிறது its another bus stop, நான் முக்கியம் என்னுடைய பயணம் முக்கியம் போன்ற சில பல கருத்துக்களையும் keywordsயும் அள்ளித் தெளித்தார். ரொம்பவும் அவை அடக்கமாக பதில் சொல்ல நினைத்து, அனு அவரை பற்றி சொன்ன சில நல்ல விஷயங்களை, இதெல்லாம் ஒரு மேட்டரா என்ற ரேஞ்சுக்கு போய் விட்டார்.

விஜய் டீவி பார்ப்பவர்கள் சாமானிய தமிழர்கள் என்று தெரியாமல், ஒரு பழுத்த தமிழிலக்கியவாதி போல், என் அம்மா நல்லவ, தைரியசாலி, அழகி, அடுத்த ஜென்மத்தில் அவள் என் மனைவியாக வேண்டும் என்று பேசப் போக கொஞ்சம் நெளிந்தார் அனு. எனக்கு கமல் ஞாபகத்திற்கு வந்தார். ஆனாலும் நல்ல தமிழ் சினிமா எடுக்கும் பிரகாஷ்ராஜ் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஓவராய் பேசி செம கடியாய் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதர்.

இந்த எபிசோட் கொஞ்சம் ஓவரானது என்னவோ உண்மைதான். வாராவாரம் சனியன்று காபி வித் அனு. இந்த எபிசோட் மட்டும் ஜால்ரா வித் அனு.

அமெரிக்கா · இயந்திரா · மீடியா

இணையமும் தேர்தலும்

1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு வந்த ஓபாமாவின் பேச்சை கேட்க மக்கள் ஆயிரம் டாலருக்கு எல்லாம் டிக்கெட் வாங்கினார்கள். இவ்விதமான முக்கிய போட்டியாளர்களாலேயே 2008 தேர்தல் கலை கட்ட துவங்கி விட்டது.

2008ல் வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இணையத்தின் தேர்தல் என்றும் சொல்கிறார்கள். என்ன தான் போன இரண்டு தேர்தல்களிலும் இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்த முறை தான் இணையத்தின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படும் என்பது கணிப்பு.

2000த்தின் தேர்தலில் இணையம் தேர்தல் நிதி வசூலிக்க பயன்பட்டது. 2004ல் ப்ளாக்ஸ் என்னும் வலைப்பதிவுகளின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இப்போதுள்ள நிலையில் இணைய பாண்ட்வித் என்பது தூசாகிவிட்டதால், அமெரிக்காவின் அடுத்த தேர்தலில், வீடியோ கான்பரன்ஸ் என்பது தான் தாரக மந்திரம். இதன் மூலம் online campaigning என்னும் விஷயம் பிரபலமாகியிருக்கிறது.

2008 தேர்தல் கோதாவில் குதிப்பதாக, போன வாரம், ஹில்லாரி கிளிட்டன் முதலில் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் தான். நேற்றிரவு அவரின் வலைதளத்தின் மூலம் வீடியோ சாட்டில் பொதுஜனத்திடம் பேசினார். இவர் போலவே பாரக் ஓபாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தது இணையத்தின் மூலம் தான்.

நம்மூரிலும் இன்னும் இரண்டொரு தேர்தலில், இணையத்தின் மூலம் வாக்கு சேகரிப்பு வரக்கூடும். அதற்கு பிறகு தேர்தல் கமிஷன் இரவு 11 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த கூடாது என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. அவரவர் வீட்டில், போடுங்கம்மாஓட்டு.காமில் எல்லா கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சோடா பாட்டில் பேச்சுக்களை பார்க்கலாம்.

இப்போது போல 5 நிமிட ஆட்சியின் வெற்றி விளம்பரங்கள் குறுக்கிடாமல் இல்லத்தரசிகள், மெகா சிரியலில் மூக்கு சிந்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கும் அரசியல்வாதிகள் தொகுதிக்கு போய் சாக்கடையில் கால் நனைத்து, இளவஞ்சி குறவஞ்சி என்று குழந்தைகளுக்கு பெயரிடாமல், துடைப்பம், முறம், முட்டை, தக்காளி இத்தியாதிகளால் தொகுதியிலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் வாக்கு சேர்க்கலாம். சில நூறு ஆட்டோக்களில் கரகர குரல் கத்தும் ஸ்பீக்கர் கேட்காமல் மக்கள் தத்தம் வீட்டில் ரேடியோ மிர்ச்சி கேட்கலாம், சூப்பர் ஜோடி பார்க்கலாம்.

ஓட்டுப்போடும் ஜனமோ உழுது கொண்டும், ரேஷன் வாசலில் நின்று கொண்டும் வியர்வை சிந்துவதால், அடுத்த தேர்தலில் யாராவது அவர்களுக்கு இலவச கணினியும், இணைய இணைப்பும் குடுப்பாராயின் நலம். அப்படியே தேர்தல் சம்பந்தமான் டாட்காம்யையும் வாங்கினால் சரி.

2008 அமெரிக்க தேர்தல் இணைய மார்க்கெட் கிட்டத்தட்ட $9.8 பில்லியன் என்று எதிர்பார்கிறார்கள். electionmall.com போன்ற நிறுவனங்கள் எற்கனவே இதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த வலைதளத்தின் CEO ஒரு இந்தியர், ரவி சிங். இன்று துட்டு கொடுத்தால் நாளை முதல் வாக்கு சேர்க்கலாம் என்கிறார்கள்.

யூ டியூப் போன்ற வீடியோ பரிமாற்ற வலைதளங்களுக்கு ஏக மவுசு. 2008: The Year of the YouTube Presidency என்று கலாய்கிறார்கள். சமிபத்தில் யூ டியூப்பை 1.6 பில்லியனுக்கு வாங்கிய கூகிள் கம்பெனிக்காரர்கள் ஓரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயாஸ்கோப் · மீடியா

மணியும் ரத்தினங்களும்

ஆடிக்கொரு முறை தான் வரும் மணி ரத்னத்தின் படம். அவர் படம் பற்றி அவரை விட மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். “…த்தா படன்னா இப்படி நச்சுனு இருக்கணுன்டா” என்று விடலைகளும், “மனிஷாவும் அரவிந்த்சாமியும் மீட் பண்ணும் போது காமிரா என்னமா திரும்பறது, அப்சலூட்ளி கார்ஜியஸ்” என்று இன்னோவா ஓட்டும் லயன்ஸ் க்ளப் மாமிகளும், “ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கமற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும் விஷயங்களை மொண்ணையாக புரிந்து கொள்ளும் மெளடீகமும் உள்ளன என்பதை காட்டி அவை வென்றெடுக்கப்பட வேண்டியவை எனவும் முன்மொழிகிறார் இயக்குநர்” என்று மணி ரத்னத்துக்கே குழப்பம் வர பேசும் எலக்கிய விமர்சகர்களும் பேசுவதை பற்றி ஜு.வி டயலாக்கே எழுதலாம்.

ஆனால் மணியோ ரத்தினம் உதிர்ப்பது அரிது. படம் வரும் போது மட்டும், ஆனந்த விகடன் ரிப்போர்டரையும் குமுதம் எடிட்டரையும் back-to-back சீத்தம்மாள் காலனி ஆபிஸில் சந்தித்து, தேவையான அளவு படத்தை பற்றி பேசி, இருக்கிற ஹைப்பில் எண்ணெய் ஊற்றுவார்.

இந்த முறை வரும் குரு ஒரு இந்திப் படம். ஆதலால் rediff ரிப்போர்டருக்கு நேரம் ஓதுக்கி இண்டர்வியு. Rediffவும் விடாமல் அதை ரெண்டு பாகமாக்கி சில பல ஆயிரம் page hitsகளை அதிமாக்கி கொண்டார்கள். முதல் பாகத்தில் குரு படம் பற்றியும், இரண்டாம் பாகத்தில் சினிமா பற்றியும் பொழுது போக்கு சினிமா பற்றியும் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே கவர்ந்தது. கொஞ்சமாய் புள்ளரிக்கிறது.

பேட்டியிலிருந்து –

What is more important, the content or the format?

Content, of course. Format is just the language. Content is the only thing that is important. Form is like handwriting. Whether you write in a scribble or clean handwriting or type it, the content remains the same. You want to write in clean hand, in a kind of a clear format only because it is aesthetically pleasing. I can scribble, that’s also fine.

Was it a conscious decision on your part to choose such clean handwriting?

I don’t know. That is how I have liked cinema. I have liked movies that have been made well, crafted well, presented well, and which have a kind of aesthetics and quality in every department. That is where I am trying to reach. I feel you can reach all those standards.

அவ்வப்போது இப்படி பேசுங்கள் மணி. கேட்க / படிக்க / பார்க்க நாங்கள் ரெடி.

புத்தகம் · மீடியா

எனக்குள் நான் – பாலகுமாரன்

balakumaran.jpg

“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.

உங்களுக்கு பாலகுமாரனை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தவற விடக்கூடாத ஒரு monologue பேட்டி இது.

இந்த முப்பது நிமிடத்தில் ஆன்மீகம், இறைவன், குருநாதர், குடும்பம், வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய பேசினாலும், தான் படைப்பாளியான கதையை சொல்லும் அந்த ஐந்து நிமிடம் மிக சுவாரசியம். மேலிருக்கும் வார்த்தைகளை அவர் egoவோடு சொல்லவில்லை என்பது பார்த்தால் புரியும். ஆறு பாகம் உடையார் எழுதி முடித்ததை பற்றி சந்தோஷப்படுகிறார். 237 நாவல்களும் மணிமணியான நாவல் என்கிறார்.

இன்றுவரை குமுதம் வெப் டீவி, ஆனந்த விகடனை தாண்டி செல்ல வேண்டும் என்ற குமுதத்தின் ஒரு மார்கெட்டிங் முயற்சி என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று நிதானமாக பல வெப் டீவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் அதில் உள்ள ஆர்வம் தெரிகிறது. ரவி பெர்னாடின் பேட்டிகளில் கொஞ்சம், மற்றவரை பேச அனுமதிப்பாராயின் நலம். இன்று பார்த்த கவிஞர் வாலியின் பேட்டியிலும், அன்று பார்த்த பா ராகவனின் பேட்டியிலும் அவர் நடுநடுவே பேசியதால் சில சுவாரசியங்கள் மிஸ்ஸிங். மற்றபடி, வெப் டீவியிலும் மெகா சீரியல்கள் வந்துவிடாமலிருந்தால் சரி.