தொலைந்து போனவர்கள்

lost_abc.jpg

டிவி தொடர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது இரண்டு தொடர்கள். இரண்டுக்கும் ஒரே பெயர். ஒன்று 80களின் முடிவில் DD 2 அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்தது. மற்றொன்று தற்போது வந்து கொண்டிருப்பது. தொலைந்து போனவர்கள் – Lost.

சா.கந்தசாமியின் நாவலான தொலைந்து போனவர்கள், பதிமூன்று வாரங்களுக்கு, ஒவ்வொரு வியாழன் இரவும் பத்து மணிக்கு ஒளிபரப்பான போது, எனக்கு டினேஜ் வயது. அந்தத் தொடரில் தொலைந்து போனவர்களில் நானும் ஒருவன். அதற்கு சில வருடங்களுக்க்கு பிறகு, புத்தக சந்தையில் வாங்கி, கந்தசாமியின் நாவலைப் படித்தேன்.

கிராமத்தில் பிள்ளைப் பிராயத்தை கழித்த நான்கு பேர், பல வருடங்களுக்கு பிறகு தன் பழைய வாழ்க்கைய நினைத்துப் பார்த்து, மீண்டும் தன் கிராமத்திலேயே சந்தித்துக் கொள்கிற மாதிரியான கொஞ்சம் நெகிழ்ச்சியான தொடர். நடிகர் ராஜேஷும் அவரின் நண்பர்களாக நடித்தவர்களும் இன்னமும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். என்னை ரொம்பவும் ஈர்த்த தொடர் வேறில்லை. லாஸ்டைத் தவிர.

லாஸ்ட்டைப் பற்றி பேசும் முன், கொஞ்சம் பழைய புராணம். டானியல் டிஃபோ (Daniel Defoe) எழுதிய ஆங்கிலத்தின் முதல் நாவலான(1719) Robinson Crusoe படித்திருக்கிறீர்களா ? அதே டினேஜில் ராபின்ஸன் க்ருஸோவை நாவலாக/காமிக்ஸ்ஸாக படித்தேன். பிறகு கிட்டத்தட்ட ஒரு ஐம்பது முறைப் படித்த பின்னும், பிடித்திருந்தது. எப்போதெல்லாம் பாட்டி எனக்கு பிடிக்காத அடையோ, அரிசி உப்புமாவோ செய்கிறாளோ, அப்போதெல்லாம் ராபின்சன் க்ருஸோவைப் படித்தேன். அதில் வரும் க்ருஸோவும் ஃப்ரைடேவும் என்னுடன் ரொம்பவும் நண்பர்களாகிவிட்டார்கள்.

தனியாளாக ஒரு தீவில் வந்து மாட்டிக்கொள்ளும் க்ருஸோ என்றவனைப் பற்றித் தான் கதை. க்ருஸோ அந்த தீவில் அலைந்து திரிந்து தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அந்தத் தீவில், சில பழங்குடி மக்கள் அடிக்கடி வந்து அங்கிருக்கும் கைதிகளை நரபலி கொடுத்து உண்கிறார்கள். அங்கே தான் ஃப்ரைடே என்ற ஆப்ரிக்க இளைஞனை காப்பாற்றுகிறான். இருவரும் சேர்ந்து ஒரு குகையை வாழக்கூடிய வீடாக மாற்றிகிறார்கள். அதைப் படிக்கும் போதெல்லாம் நமக்கும் அப்படி எதாவது நடந்து, ஒரு தீவில் தனியாளாக மாட்டோமா என்று நினைத்துண்டு. இதே மாதிரி ஒரு castaway கதையை மாடர்னாக மாற்றினால் எப்படி இருக்கும். லாஸ்டைப் போல.

சிட்னியில் இருந்து லாஸ் எஞ்சல்ஸ் செல்லும் ஓஷியானிக் ஃப்ளைட் 815, திடிரென்று கிழே விழுகிறது. அது உடைந்து விழுந்த இடம், ஒரு தீவு. அந்த ப்ளைட்டில் பயணித்தவர்களில் சிலர் உயிர் பிழைக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற, உதவி வரும் என்று காத்திருக்கிறார்கள். வரவில்லை என்றவுடன், உதவி வரும் வரை அந்தத் தீவில் வாழ முயல்கிறார்கள்.

முதலில் அந்தத் தீவில் தங்களைத் தவிர மற்ற யாரும் இல்லை என்று நினைத்தவர்கள், தங்கள் கூட்டத்தில், ஒவ்வொருவராக மறையும் மர்மத்தைக் கண்டு பிடிக்கப்போய் யாரிடமோ மாட்டிக் கொள்கிறார்கள்.

தன் மணவாழ்க்கையைத் தொலைத்த ஜாக் என்கிற ஒரு அதி நுட்ப சர்ஜனும், தன் தந்தையை கொலை செய்த கைதியாக இருக்கும் கேட் என்ற ஒரு பெண்ணும், லாட்டரியில் மில்லியன் டாலர்கள் விழுந்தும் துரதிர்ஷ்டவசமான ஹர்லி என்ற ஒரு ஆஜானுபாகுவான ஸ்பானிஷ் இளைஞனும், ஒரு அமெரிக்க-இரானிய போலிஸ்காரனும், காலொடிந்த ஜான் லாக் என்கிற கிழ இளைஞரும் என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். ஒவ்வொடு வாழ்க்கையும் ஒவ்வொரு கிளைக்கதை.

என்ன தான் தொலைந்து போனவர்களை பற்றியதாக கதைக்களன் இருந்தாலும், அந்த விமான விபத்தில் பிழைத்த அத்தனைப் பேரும், வாழ்வைத் தொலைத்தவர்கள். அந்தத் தீவில் தன் தொலைத்த வாழ்வை கண்டுபிடிக்கிறார்கள்.

ஸ்டீபன் கிங் நாவல் போல, முன்னேயும் பின்னேயும் செல்லும் ஒரு பெண்டுலம் கதை. அதிரடி திருப்பங்களுடன் இப்போது வருவது லாஸ்டின் நான்காவது வருடம். ஒவ்வொரு வருடமும் 24 நாற்பது நிமிட எபிசோடுகள் என்று இது வரை அடுத்ததை யூகிக்க முடியாமல் பயணிக்கும் அதிவேகத் தொடர்.

இதைத் தவிர, அழகான ஹவாய் தீவு லொகேஷன்கள், மிக தெளிவான திரைக்கதை, எமாற்றாத எபிசோடுகள், நடிக்கத் தெரிந்த நடிகர்கள் என்று ரொம்பவும் க்ரிப்பிங்காக செல்லும் லாஸ்டை மிஸ் செய்ய முடியாது.

இதுவரைப் பார்த்திராவிட்டால், abc.comல் லாஸ்ட்டின் எல்லா சீஸன் எபிசோட்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள், பார்த்து விடுங்கள். ஜென்ம சாபல்யம்.

Create a website or blog at WordPress.com