குமுதம் தவிர மற்ற இதழ்கள் தீம்தரிகிட இதழில் வரும் கட்டுரைகளை பயன்படுத்தலாம் என்று specificகாக ஃபைன் பிரிண்ட் போடும் அளவுக்கு, குமுதத்துக்கு எதிராக இருந்த எழுத்தாளர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுகிறார், என்றவுடன் விஷயமிருக்கும் என்று நினைத்தேன். இருக்கிறது.
ஓ பக்கங்களுக்கு முன்னமே அவர் எழுதி, சொல்ப பிரதிகளே விற்ற தீம்தரிகிடவின் வாசகன் என்ற அளவில் எனக்கு ஞாநியின் நேர்மையான கருத்துக்கள் பிடிக்கும். சிலதில் ஒற்றுப்போக முடியாவிட்டாலும்(எம்.எஸ் அஞ்சலிக் கட்டுரை – தீம்தரிகிட) அவர் சொல்ல வந்ததை மறைக்காமல் சொல்லும் விஷயம், தமிழ்நாட்டுக்கு, அதன் பத்திரிக்கைகளுக்கு அரிது தான்.
தீம்தரிகிட இதழை நடத்தி கொஞ்சம் நஷ்டம் அடைந்தார் என்று அதை படித்தவர்களுக்கு புரியும். பழுப்பு நிறத்தில், கெட்டி அட்டை இல்லாத ஒரு பேப்பர் கட்டை ஸ்டேப்லர் செய்து கொடுப்பது போல இருந்தாலும், ஞாநியின் முகத்திலடிக்கும் நேர்மை பிடிக்காமல் இருந்தால் அரிது.
ஆர்குட்டில் ஒரு குழு உண்டாக்கும் அளவுக்கு ஓ பக்கங்கள் பிரபலமான போது, விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் சில, outright boring. பலவற்றில் எதாவது எழுத வேண்டிய கட்டாயத்தில் எழுத வேண்டியது தெரிந்தது. தமிழக முதல்வரைப் பற்றிய கட்டுரை கூட சற்றே உண்மையின் விளிம்பில் இருப்பதாக் தோன்றினாலும், கொஞ்சம் அவசரமாக யோசிக்காமல் எழுதியதோ என்று தோன்றியது.
ஓ பக்கங்களை, குமுதத்தில் இனி தொடரப்போகிறார். படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.
அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.