ப்ளாகிங் என்பது முடிந்து விட்டது என்கிறார்கள். What do you mean முடிந்துவிட்டது ? என்று கேட்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.
இரண்டாயிரத்துக்கு மிக அருகில், இணையத்தில் யார் வேண்டுமானலும் தினமும் எழுதும்படியான content management மென்பொருள் கொண்டுவரப்பட்டு, சிலர் தனக்கே தனக்கென ஒரு வளைதளம் தொடங்கி, அதை வெப்ப்ளாக்(weblog) எனப் பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எழுதி வளர்த்து வந்தனர். வெப்ப்ளாக் என்பது பிறகு ப்ளாக்(blog) (தமிழில் வலைப்பதிவு) என்றாயிற்று.
2002ல் scribbles of a lazy geek 😉 என்று ஒரு நீண்ட பெயரிட்டு, என் முதல் ஆங்கில வலைப்பதிவை எழுத அரம்பித்த பொழுது, இந்திய ப்ளாகர்(blogger)கள் கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தார்கள். அப்போதிருந்த வலைப்பதிவின் வடிவமும், இப்போது நாற்பது adblockகளுக்கு நடுவே எழுதப்படுகிற ரெண்டு வரி வலைப்பதிவும் மிக மிக வித்தியாசமானவை.
2002ல் ஒரு நாளைக்கு ஒரு பதிவை எழுதினார்கள். அந்த வலைப்பதிவையறிந்த ஒரு பத்து பதினைந்து பேர், அந்த பதிவிற்கு கமெண்ட் எழுதினார்கள். சண்டை போட்டார்கள். கண்ணீர் விட்டார்கள். சந்தோஷப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பேர் எழுத வர, சீனியர்களுக்கு கடுப்பாகி, தினமும் இரண்டு மூன்று என்று பதிவுகள் எழுதி தன் சீனியாரிட்டியை காட்டிக் கொள்ள, பிறந்தது மெயின்ஸ்ட்ரீம் ப்ளாகிங்(mainstream blogging). இது ஆரம்பித்தது 2004ல் தான்.
அதுவரை வலைப்பதிவு என்பது ஒரு தனி இயக்கமாக, பொதுஜன ஊடகங்களில் இருக்கும் ரெட்டேப்பிஸ்த்தை(red tape) தாண்டி யாரும் இந்த ஜனநாயக இணையத்தில் எழுதலாம் என்னும் ஒருவிதமான கிளர்ச்சியைத் தரும் ஊடகமாக விளங்கியது. எடிட்டர் என்று யாரும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் எழுதலாம் என்னும் சுதந்திரமும் கிடைத்தது.
பலரும் எழுத வந்த 2004ல் தான், மக்களின் பேராதவு பெற்ற வலைப்பதிவுகளை, பொதுஜன ஊடகங்கள் திரும்பிப் பார்த்தன. அதற்கு காரணங்கள் பல, இன்று அவையெல்லாம் வரலாற்றுப் பாடங்கள்.
நான்காண்டுகளுக்கு பின்பு இந்த 2008ல் சுதந்திர இயக்கம் என அறியப்பட்ட ப்ளாகிங் என்னும் ஒரு மாய உலகம் மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இன்றைக்கும் ஏராளமான வலைப்பதிவாளர்கள் தனது சொந்த வலைப்பதிவுகளை நடத்திக் கொண்டிருந்த்தாலும், இன்று ப்ளாகிங் என்பது ஒரு content management/deployment software மட்டுமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இன்று எல்லா பொதுஜன எழுத்து ஊடகத்திலும் ப்ளாகிங் வந்துவிட்டது. நியுயார்க் டைம்ஸ் போன்ற புத்திசாலித்தனமான பத்திரிக்கைகளில் செய்தியும் ப்ளாக் பதிவுகளும் ஒன்றோடொன்று இணைத்து பிரிக்க முடியாத அளவுக்கு, ப்ளாகிங்கை தனதாக்கிக் கொண்டுள்ளன பொதுஜன ஊடகங்கள்.
இப்படி வலைப்பதிவுகளாக் எழுதப்படும் செய்தி ஊடகங்களில் எடிட்டர்த்தனம் இல்லாமல் இல்லை. எடிட்டர்கள் இருந்தாலும் முன்பு இருந்ததைப் போல கட்டுப்பெட்டித்தனமாக எழுதினால் மக்கள் படிக்க மாட்டார்கள் என்பதால், கொஞ்சம் வெளிப்படையாக எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள். ப்ளாக் என்னும் தனி மனித சுதந்திர உலகோடு போட்டியிட்ட செய்தி ஊடகங்களுக்கு கிட்டத்தட்ட வெற்றி தான்.
அதாவது வலைப்பதிவு என்னும் உலகில் இருந்த அத்தனை நல்ல விஷயங்களையும் செய்தி ஊடகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. சில வலைப்பதிவுகளும் செய்தி ஊடகத்தின் அளவுக்கு வளர்ந்து விட்டன. உதாரணம், என்காட்ஜெட்(endgadget) என்னும் டெக்னாலஜி வலைப்பதிவுக்கு உட்கர்ந்து பேட்டி அளித்திருக்கிறார் மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ். அதைபோலவே, வலைப்பதிவுகளுக்கு முன்னால் டெக்னாலஜி பற்றி செய்தியளித்த சிநெட்.காம் என்னும் வலைத்தளம், கிட்டத்தட்ட மூடும் நிலைக்கு வந்ததற்கும் வலைப்பதிவுகளே காரணம்.
இப்படியே க்ளாசிக் செய்தி ஊடகமும், வலைப்பதிவுலமும் ஒன்றோடொன்று இணைந்து கொண்டிருக்கின்றன. வலைப்பதிவு உலகம் என்றிருந்த ஒன்று கிட்டத்தட்ட செய்தி ஊடகமாக மறைந்து கொண்டிருக்கிறது.
எழுத ஆளில்லாத நிலை போய் இன்று படிக்க ஆளில்லாத வலைப்பதிவுகள் நிறைய வந்து விட்டன. இதனால் ப்ளாகிங் வழக்கொழிந்து போய்விடும் என்று சொல்வதற்கில்லை. 2002ல் இருந்த அந்த ப்ளாக் என்னும் ஒரு தனி நபர் சுதந்திர ஊடகம் என்னும் வசீகரம் இன்று சற்றே மாறிவிட்டது. அவ்வளவுதான். இதெல்லாம் சுத்த அம்பக், இன்று உள்ளதும் அதே 2000தின் வலைப்பதிவு உலகம் தான் என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும்.