
எங்கள் வீட்டிலிருந்த காமுவும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் அல்பர்ட் காமுவும் நேரேதிர் துருவங்கள். எ.வீ.காமு வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன செய்கைகளுக்கும் காரணம் இருப்பதாகவும் அதை தான் உணர்ந்தது போலவும் பேசுவாள். அவள் வாழ்வில் பணத்தை உபயோகித்ததே இல்லை, ஆனாலும் கோவிலுக்குச் சென்றால் வாசலில் யாசிப்பவர்களுக்கு, “ அவாளுக்கு ஏதாவது போட்டுட்டு வந்தா தான் உனக்குப் பலன்” என்பாள். பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் பிஸ்கேட்டின் ஓரமெல்லாம் கடித்து விட்டு நடுவில் பிரிட்டானியா என்று எழுதியிருப்பதை உடைக்காமல் கடைசிவரை வைத்திருப்பது எப்படி என்று அவள் தான் எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாள். பிறந்தாள் பிடிக்கும் அதுவும் நட்சத்திர பிறந்தநாள் கண்டிப்பாய் கொண்டாட வேண்டும் என்பாள். எத்தனை மாதங்களானாலும் சரி, எல்லா புடவைகளுக்கும் ஃபால்ஸ் அடித்து, கொஞ்சம் கூட நிறம் மாறாமல் மாட்சிங் ரவிக்கைத் துணி வாங்கி தைத்து மட்டுமே போட்டுக் கொள்வாள்.
திருமண நிகழ்ச்சியென்றால் மகிழ்வான தருணம் என்று புரியும் வயது வருவதற்கு முன் எனக்கு சொல்லிக் கொடுத்தாள். “முன்னாடி போய் மாப்பிள பொண்ணு பக்கத்துல நின்னுக்கோ அப்பத்தான் எல்லா ஃபோட்டோலயும் நீ இருப்ப” என்று எனக்கு வேதமோதினாள். என் மாமாவின் திருமணத்தில் மணமக்களை விட, எல்லா நாத்தனார்களுடனும், மன்னிகளுடனும், ஐந்து வயது சிறுவனாக நான் அரை ட்ராயரும் டக்- இன் செய்த வெள்ளை சட்டையுடன் நின்று கொண்டு எல்லா புகைப்படங்களையும் நிறைத்துக் கொண்டுவிட்டேன். “பந்திக்கு முந்திக்கோ” என்பாள். சொன்ன சொல்லை மீறாத சீடனாக மூன்று வேளை பந்திக்கும் முண்டியடித்து முதலில் உண்பது என்பதெல்லாம் போய், நேராக சமையலறை சென்று காபியும், காசி அல்வாவும் வாங்கிச் சாப்பிடும் கைதேர்ந்த நிபுணன் ஆகினேன். ஆக்கியவள் காமு. ஊஞ்சலில் மணமக்கள் பக்கத்தில் நிற்க வைப்பாள், பச்சை சுத்தி போடும் போது, “கலர் சாதம் மேல படாம டக்குனு குனிஞ்சுக்கோ”, நலங்கின் போது அப்பளம் தலையில் உடையும் போது கலகல என்று சிரிப்பாள்.
காமு என்கிற காமகோடி என்னுடைய சித்தி, அம்மாவின் தங்கை. பிறந்ததிலிருந்து சில வருடங்களுக்கு நான் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்த போது, அங்கிருந்த மற்ற இரண்டு பேர் மாமாவும் சித்தியும். இருவருக்கும் அப்போது திருமணமாயிருக்கவில்லை. மாமா ப்ரிட்டானியாவில் வேலையிலிருந்தார். சித்தி அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி முடித்திருந்தாள். பார்ப்பதற்குக் கிழக்கே போகும் ரயில் ராதிகா போல் இருப்பாள். ராதிகா தமிழ்நாட்டின் சித்தியாவதற்கு முன் காமு என்னுடைய சித்தி ஆனாள். சீராக எண்ணையிட்டு அழுத்தி வாரி ரிப்பன் கட்டப்பட்டிருக்கும் தலை, நெற்றிக்குச் சற்றே பெரிய ஷ்ரிங்கார் சாந்துப் பொட்டு, பர்வின் பாபி போல voile saree.
எனக்கு வீட்டின் முதல் பேரன் என்பதால் ஏகப்பட்ட கவனிப்பு. அதனால் காமுவிற்கோ என்னுடன் sibling rivalry. இரவில் ஜமக்காளம் விரித்து நடு ஹாலில் படுக்கப்போகும் போது, ஃபேனுக்கு கீழே யார் தூங்குவது என்ற சண்டையில், அவள் தோற்றுப் போவாள். “குழந்தையோட என்ன சண்ட வேண்டிக் கிடக்கு” என்று பாட்டி சொல்ல, வேறு வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டே தள்ளிப்படுப்பாள். கொஞ்ச நேரத்தில் எல்லாம் என்னைத் தூங்க வைக்கக் கதை சொல்லுவாள்.
கதை என்றால் சும்மா காமா சோமா கதை எல்லாம் இல்லை. முழு ராமாயணம் மகாபாரதத்தையும் சிறு கதைகளாகச் சொல்லியிருக்கிறாள். அதுவும் கிருஷ்ணரின் கதை என்றால் அவளுக்கு அலாதி ப்ரியம். காமு எனக்கு சொன்ன அக்ரூரரின் கதை பிறகு யாரும் அப்படி சொல்லிக் கேட்டதில்லை. கம்சன் அக்ரூரர் என்னும் தன் நண்பனை, கிருஷ்ணனை மதுரா நகருக்கு அழைத்து வருமாறு அனுப்பி வைக்கிறான். அக்ரூரும் அதே மாதிரி கிருஷ்ணர் பலராமரை அழைத்துக் கொண்டு தேரில் கிளம்புகிறார். வழியில் குளிக்க அக்ரூரர் யமுனையில் இறங்க, கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்றுகொண்டிருந்தார்கள். அதெப்படி முடியும், இப்போது தானே தேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்தபடி அக்ரூரர் நீரிலிருந்து வெளியேறி தேருக்குச் சென்று பார்த்தார். பார்த்தால் அங்கே இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் நீருக்குச் சென்றால் அங்கும் இருக்கிறார்கள். அப்போது தான் அக்ரூரருக்கு கிருஷ்ணர் யார் என்று தெரிய வருகிறது. இந்தக் கதையை ஒரு பிரமாதமான சிறுவர் சிரிப்புக் கதையாக மாற்றி, பக்தி மாறாமல் சொல்லுவாள். அதே மாதிரி தான் குசேலரின் கதையும். அவளுக்கு இந்த கதைகளை யார் சொன்னார்கள், எங்கே படித்தாள், எப்படி இப்படி ரசித்து ரசித்து சொல்கிறாள் என்பது வீட்டில் இருப்பவர்களுக்கே புரியவில்லை.
அதே மாதிரி கங்காதீஸ்வரர் கோவிலுக்கு போகும் போது, முருகர் கையில் இருக்கும் வேலைக் காட்டி காட்டி ”அம்மம்மா கிட்ட வாங்கிக் கொடு சொல்லு” என்று என்னிடம் ஒரு நாள் சொல்லி விட்டாள். நானும் வேல் கேட்டால் வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்று சொல்லி அடம் பிடிக்க, அதை மறக்கப் வைக்க பல மாதங்களாகியது. காமுவிற்கு கமல் படம் என்றால் பிடிக்கும், எனக்கு ரஜினி. அதனால் மீண்டும் சண்டை. நான் ரஜினி ஸ்டைலில் சண்டை போஸ் காண்பிக்க, காமுவோ “ கமல் தான் டாப் டக்கர்”.
காமுவிற்கு ஒரு நாள் திருமணமாகியது. உஸ்மான் ரோட்டில் இளையராஜா வீட்டின் அருகே இருந்த திருமண மண்டபத்தில். அவள் திரும்ப வீட்டிற்கு வராத போது அழுதேன் என்று பிறகு பாட்டி சொல்லியிருக்கிறாள். “இருக்கிற வரைக்கும் அவளோட சண்டை மண்டை, அப்புறம் சித்திய காணோம்னு ஒரே அழுகை”
திருமணத்திற்குப் பின் அவளுக்கு இரண்டு குழந்தைகளாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது எதாவது விசேஷங்களின் போது பார்த்துக் கொள்வது என்று ஆனது. ஆனாலும் பார்க்கிற போதெல்லாம், “ நீ என்ன படம் பார்த்த?” என்பாள். கமல் படம் எதாவது ரிலிஸாயிருந்தால், அதைப் பற்றிக் கேட்பாள்.
ஒரு கோடை விடுமுறையின் போது எல்லா பேரன் பேத்திகளும் சேர்ந்து ராமாபுரத்தில் இருந்த மாமா வீட்டிலிருந்தோம். மாடியில் வடாம் இட்டுக் கொண்டிருந்தார்கள். பல வேஷ்டிகளைப் பிரித்துப் போட்டு, அவை பறக்காமல் இருக்க செங்கல்லையும், காக்காவை ஓட்ட குடை கம்பிகளையும் வைத்திருந்தோம். ஜவ்வரிசி வடாம் போட்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த காமுவிற்கு தலைச் சுற்றல் வந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தாள். பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு தடதடவென்று எதோ இடிக்கிற சத்தம். ஓடி வந்து பார்த்தால், தரையில் தலை குப்புற விழுந்து கிடந்தாள் காமு. ஒரு நொடி எல்லாமே நின்ற மாதிரி இருந்தாலும், மேலாடை இல்லாமல் போட்டுக் கொண்டிருந்த லுங்கியோடு டாக்டரை கூட்டிக் கொண்டு வர ஓடினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு விதமான எஸ்கேப். விழுந்ததில் இறந்து விட்டாள் என்றெண்ணி அதை பார்பதற்குத் தவிர்க்கப் பார்த்தேனா?
அருணாசலம் டாக்டர் க்ளினிக்கின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களைப் பொருட்படுத்தாமல் உள்ளே ஓடினேன். “சார், சித்தி கிழே விழுந்துட்டாங்க, கொஞ்சம் வரமுடியுமா”. டாக்டரின் கைனடிக் ஹோண்டாவில் பில்லியன் சீட்டில் உட்கார்ந்த படி வீட்டிற்குச் சென்றோம். அதற்குள் காமுவை எழுப்பி உட்கார வைத்திருந்தார்கள். முகத்தில் நல்ல அடி, ரத்தம் தெரிந்தது. கை உடைந்திருந்தது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது வந்த மயக்கம் என்று புரிந்தது. பிறகு அவ்வப்போது மயக்கம் வர ஆரம்பித்தது.
காமுவிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் மிகத் துல்லியமாகச் செய்வாள். அதைச் செய்வதற்காகவே பிறவி எடுத்தால் போல். ஆனால் நேரம் எடுத்துக் கொள்வாள். அரை கிலோ கேரட்டை அரை மணி நேரம் நறுக்குவாள். நறுக்கியதைப் பார்த்தால், மிஷின் கூட அப்படி நறுக்கியிருக்க முடியாது என்பது போல சீரான சதுர வடிவில் இருக்கும். பூ கட்டினால் பூக்கார பெண்மணி தோற்றுவிடுவாள். காய வைத்த துணி மடித்தால் கடையில் இருந்து வாங்கி வந்த புது துணி போல இருக்கும். குழந்தைகளுக்கு தலை வாரினால் ஒரு தலைமயிர் கூட மேலே தூக்கியிருக்காது. அதே மாதிரி அவள் சாப்பிட உட்கார்ந்தால் ஒரு மணி நேரமாகலாம். சாதத்தைச் சரியாகப் பிசைந்து, ரசம் ஊற்றி கத்தரிக்காய் கறி சாப்பிட்டால், சாப்பிட்டு முடித்த நமக்கும் மீண்டும் சாப்பிடத் தோன்றுகிற அளவுக்கு அழகாய் சாப்பிடுவாள்.
நான் அமெரிக்கா வந்தவுடன் அவ்வப்போது ஃபோனில் பேசுவது என்றாகியது. என்றாவது என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி, “குரு எப்படி இருக்கான். அவன் ஞாபகம் வந்தது, எனக்கு ஒரு நாள் ஃபோன் பண்ண சொல்லு”. அம்மாவோ ”அவன் பிஸியா இருக்கான், ஆனா சொல்றேன்” என்றால், “நீ அவன் கிட்ட சொல்லு சித்தி கேட்டான்னு”. ஓரிரு வாரங்களுக்குப் பின் ஃபோன் செய்தால், “எப்படி இருக்கே?” என்று கேட்டு விட்டு பிறகு எதுவுமே பேச மாட்டாள். “அவளுக்கு நீ பேசினா ஒரு சந்தோஷம், அப்பப்போ முடிஞ்சா பேசேன்” என்பாள் அம்மா.
இந்தியா செல்லும் போது, “ எப்படியிருக்கா காமு?” என்று அம்மாவிடம் விசாரித்தால், “அவ ரெண்டு மூணு நாளாவே கேட்டுண்டு தான் இருக்கா. ஆட்டோ வச்சுண்டு அவளைப் போய் பார்த்துட்டு வாடா”. சூளைமேட்டின் குறுகிய தெருக்களின் வழியாக ஆட்டோவில் சென்றால், அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பாள். நானா உன்ன வரச்சொன்னேன் என்ற மாதிரி. சித்தப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்புகிற போது, “இன்னிக்கு என்ன புரோக்ராம், புரசைவாக்கத்தில மணிகண்டனைப் பாக்க போறியா” என்பாள். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்தும் என் பால்ய சினேகிதனை அவள் அனாயாசமாக ஞாபகம் வைத்திருப்பது ஆச்சரியமாயிருக்கும்.
போன ஜூன் மாதம் அப்பாவின் வருஷாப்திகத்திற்குப் போன போது காமு வந்திருந்தாள். என் மனைவியைக் காட்டி, “சித்தி இது யாரு?” என்று கிண்டலாய் கேட்டேன். உன்னோட பெட்டர் ஹாஃப் என்பதைத் தலையை ஆட்டி ஆட்டி ஒரு வார்த்தை பேசாமல் சொல்லி விட்டாள். மீண்டும் அனாயாசம். ”அவளுக்கு எல்லாம் தெரியும், அவளுக்கு தெரியாதது என்ன இருக்கமுடியும் சொல்லு” என்றாள் அம்மா.
காமுவுக்கு அரசியல் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, நியூக்ளியர் பிசிக்ஸ் தெரியாது, எக்ஸிஸ்டென்ஷியலிசம் தெரியாது. மற்றபடி எல்லாம் தெரியும். போன மாதம் அவள் இறந்த அன்றிரவு அவளின் நட்சத்திர பிறந்தநாள்.
Leave a reply to ஸ்பரிசன் Cancel reply