
2003ல் சிகாகோவில் இருந்த போது ஒரு வாரயிறுதியில், இரவுணவிற்குப் பின் ஏழெட்டு நண்பர்களுடன் கிளம்பி விஸ்கான்சின் மாகாணத்தில் இருக்கும் மேடிசன் என்னும் நகருக்கு காரில் சென்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் பயணம். இரண்டு கார்களில் கிளம்பி நாங்கள் சென்றது, ஒரு நண்பரின் வீட்டிற்கு. நண்பர் என்றால் எங்களுடன் வந்த ஷங்கர் என்பவனின் நண்பர். ப்ரண்டோட ப்ரண்ட். வேறு யாரும் அவரை முன்பின் பார்த்தது கூட கிடையாது.
மேடிசன் போய் சேர்ந்த போது நள்ளிரவாயிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஷங்கரின் நண்பரும் அவரின் மனைவியும் மட்டுமே இருந்தார்கள். ஒரு டீயோ காபியோ போட்டுக் கொடுத்தார் நண்பரின் மனைவி. நாங்கள் யுனோ சீட்டாட்டம் விளையாட ஆரம்பித்தோம். நாங்கள் அங்கே போக காரணம் இரவெல்லாம் டீவி பார்ப்பதற்காக.
காலையில் எட்டு மணி அளவில் அரைகுறை தூக்கத்திலிருந்தோம். நண்பரும் அவரின் மனைவியும் சேர்ந்து சட்னியும் சாம்பாரும் முப்பது – நாற்பது இட்டிலிகளும் சமைத்தார்கள். தூக்கக் கலக்கத்திலிருந்த எங்களுக்கு அது தேவாம்ருதமாய் இருந்தது. சாப்பிட்ட பின் ஒரு பில்டர் காபி. சுமார் பத்து மணி அளவில் கிளம்பி சிகாகோ வந்து சேர்ந்தோம்.
போன ஞாயிறன்று காலை வீட்டின் அருகே இருக்கும் நண்பர்களின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் அன்று காலையுணவு கம்பங்கூழ், பின்பு மிகச் சுவையான ரவா உப்புமாவும் புதினா தொக்கும். பின்பு ஒரு சுடச்சுட பில்டர் காபி.
அந்த காலையுணவை முடித்த போது இருபது வருடங்களுக்கு முன் மேடிசனில் இருந்த அந்த நண்பரும், அவரது மனைவியும் அவர்கள் வீட்டில் சாப்பிட்ட சுவையான இட்லி சாம்பாரும் ஞாபகம் வந்தன. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்த இரண்டு காலை உணவுகளுக்கும் இடையே இருந்த பொதுவான விஷயம், கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
Leave a comment