
இது செயற்கை நுண்ணறிவு (அதாவது சுருக்கமாக AI) மென்பொருள்களின் காலமிது என்பதை உங்கள் வீட்டுச் செல்ல பூனைக்குட்டி கூடச் சொல்லும். அந்த அளவுக்கு ChatGPT போன்ற மென்பொருள்கள் பெருகி அடுத்த கமல் படத்தை அவருக்குத் தெரியாமலே எடுத்து விடக்கூடிய அபாயம் வரை வந்துவிட்டது. இருக்கிற பிக்பாஸ் மும்முரத்தில் அவரும் அதை வரவேற்கலாம்.
இந்த வளர்ச்சி கணினி யுகத்தில் ஒரு அடுத்தகட்ட பாய்ச்சல். கடந்த எண்பதாண்டுகளில் நடந்த பல்வேறு கணினியுக பாய்ச்சல்கள் இவ்விவை –
- கணினிகள் ஒரு பெரும் சோதனைச்சாலையை அடைத்துக் கொள்ளும் சைஸில் மெயின்ஃப்ரேம்கள் என ஆரம்பித்தன
- ஒவ்வொரு வீட்டின் மேஜையிலும் ஒரு டெஸ்க்டாப் கணினி என்று பில் கேட்ஸ் போட்ட சபதத்தில் சிறிதாகி மேஜைக்கணினியாய் உட்கார்ந்தன
- எல்லா கணினிகளையும் கம்பிகள், கேபிள்கள், ரேடியோ அலைகள் மற்றும் இன்னபிற வகையான நெட்வொர்க்கிங் கட்டமைப்பு வழியாக இணைத்ததால் என்னாகும் என்று ARPANETல் இருந்த இரு விஞ்ஞானிகள் நினைத்ததால் கணினிகள் இணையமாகின.
- பின்பு ஸ்டீவ் ஜாப்ஸின் தயவால் கையடக்க ஸ்மார்ட்ஃபோனாகின.
தற்போது நாம் பிரவேசித்துக் கொண்டிருப்பது அடுத்த யுகத்தில். அதாவது கலியுகத்தின் ஒரு உப-யுகம், செயற்கை நுண்ணறிவுயுகம்.
இதில் அடுத்து வரப்போவது Ambient Computing. தாயுமானவர் சொன்ன அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் போல நீங்கள் எங்கு பிரவேசித்தாலும் அங்குத் தங்கு தடையின்றி உங்களைப் பின்தொடரும் நுண்ணறிவு கொண்ட ஒரு கணினி. அதை உங்கள் கைப்பேசியைப் போல ஆன்/ஆஃப் செய்ய வேண்டாம், உங்கள் முகத்தைக் காட்டியோ, கைநாட்டு வைத்தோ , சம்பந்தா சம்பந்தமில்லாத எண்களை அழுத்தியோ உள்ளே நுழைந்து ஒவ்வொரு appஆகச் செயல்படுத்தி நடந்தது என்ன என்றெல்லாம் அறிய வேண்டியதே இல்லை.
எங்கெங்கும் நிறைந்த அடுத்த கணினியுகத்தில் இவையெல்லாவற்றையும் தானாகப் புரிந்து கொண்டு உங்களுக்கு வேண்டிய போது, உங்களுக்கு வேண்டிய மாதிரி, எதை வேண்டுமானாலும் ஆறிவுரைக்கக்கூடிய கணினி வரப்போகிறது. இதைக் கணினி என்றே சொல்லலாமா என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் – தேர்தல் வாக்குச் சேர்க்கப் போகும் அரசியல் தலைவருடனேயே பவனி வரும் அவரின் சிலபல உதவியாளர்களைப் போல, வேண்டிய நேரத்தில் உணவளித்தும் , இளநீர்-கூல்ட்ரிங் தந்தும், தேவைப்படும் போது எதிர்க்கட்சியின் அன்றைய செய்தியை அவ்வப்போது காது கடித்தும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எடுத்து போடுபவரை மாதிரி.
உங்களை முற்றிலும் புரிந்த, அறிந்த ஒரு நுண்ணறிவு இயந்திரம். ஆம் ஒரு ஹார்ட்ஃவேர் சாதனம். அதனுள் இருப்பது ChatGPT போன்ற ஒரு நுண்ணறிவு மென்பொருள். இதை எப்படி வடிவமைப்பது என்பது தற்போதுள்ள ஒரு சவால். அது அவரவர் காதில் மாட்டிக் கொள்ளும் சாதனமாகவும், வீட்டில் ஆங்காங்கே சுவற்றுபல்லியாய் தொங்கிக் கொண்டும், காரிலும், போனிலும், அலுவலகத்திலும் எங்கெங்கும் தொடரும் இயந்திரம். இதை இயக்க வேண்டியதில்லை, பாஸ்வோர்ட் தேவையில்லை, சார்ஜ் கூடச் செய்ய தேவையிராது(கொஞ்சம் காதில் பூ) என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
இதில் மிக முக்கியமான அம்சம், அந்த இயந்திரத்துக்கு இருக்கக்கூடிய contextual awareness, தமிழில் சூழ்நிலை விழிப்புணர்வு என்று விரித்துச் சொல்லலாம். உங்களுடைய தேவை என்ன என்பதை அறிந்து அருளும் கண்ணுக்குத் தெரியாத உதவியாளர். சுருக்கமாய் கடவுள்.
பி.கு: இயந்திராவின் போன பகுதி வெளிவந்தது 15 வருடங்களுக்கு முன் – இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள். இன்னமும் டுவிட்டர் குழப்பம் விட்டபாடில்லை.
Leave a comment