இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள்

twitter

டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர்.

நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உலகுக்கு உரைப்பதே டுவிட்டர். ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனம். பல் தேய்க்கலாம், மூக்கை சிந்தலாம், ஐஸ் க்யூப்பை மெல்லலாம், படிக்கலாம், பந்தாடலாம், மோட்டு வளையை அளக்கலாம், ப்ளாகலாம் என்று என்ன ‘முக்கியமான’ விஷயமாயிருந்தாலும், உங்களை பின்தொடரும்(follow) நண்பர்களுக்கோ, விஷமிகளுக்கோ உரக்கச் சொல்லும் சாதனம். மிக முக்கியமான செய்தி, உங்களின் டுவிட்டர் எழுத்துக்கள் எல்லாம், உடனுக்குடன் உங்களை பின் தொடர்பவர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்ஸாக போய்விடும்.

Who the hells wants to follow to me , என்று கேட்பவர்களுக்கு ஒரு அரியசிறிய செய்தி. டுவிட்டரில் தற்போது இருப்பது சில மில்லியன் பயனர்கள். நாளொன்றுக்கு சில மில்லியன் டுவிட்ஸ்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரை சுற்றி ஒரு டுவிட்டர் ecosystemமே வந்து விட்டது. ஆகவே உங்களை பின்தொடர்வதற்கு நீங்கள் ஜார்ஜ் க்ளூனியாகவோ, ஜெனிபர் லோபஸாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு, ஒன்றில் நான் கோயம்புத்தூரில் பஸ்சில் சைட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் மற்றொன்றில் கோயம்பேட்டில் காய்கறி பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் டுவிட்டர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

140 எழுத்துக்களில் ஒரு விஷயத்தை பற்றி சொல்லுவது கிட்டத்தட்ட சாகசம்(சாகஸம் என்று சொல்வது பிடித்திருக்கிறது, தமிழ் காமிக்ஸ்களில் எழுதப்படுவது இப்படித்தான்). யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை என்று இரண்டு முறை தொடர்ந்து எழுதினாலே 166 எழுத்துக்கள் ஆகிவிடுகின்றன. ஆகவே சுருங்கச் சொல்வது என்பது கஷ்டமாயிருந்தாலும் கிட்டத்தட்ட பழக்க/வழக்கமாகிவிட்டது. Diminishing rate of attention spanஐ எற்படுத்திய வலைப்பதிவுகளுக்குப் போட்டியாக 140 எழுத்துக்களுக்கு மேல் படிக்கத் தேவையில்ல்லாத அவசரப் புரட்சியின் தற்கால கருவி தான் டுவிட்டர். டுவிட்டரின் தலைவர் ஜாக் டார்ஸி, டுவிட்டருக்கான் ஒரு பரிசை வாங்கும் போது சொன்னவை இவை, “We’d like to thank you in 140 characters or less. And we just did!”.

குழப்பங்கள் தான் சில/பலரை டுவிட்டரில் இருந்து ஓட வைக்கிறது. டுவிட்டரின் ஆதாரமான கேள்விகளுக்கு மக்கள் விடை எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. What are you doing ? என்பதற்கு யாரும் பதிலளிப்பதில்லை, என்னையும் சேர்த்து. Kangal Irandal is over-rated. Lack of good numbers in contemporary tamil cinema made this a hit. Raja should be back என்று நான் சமீபத்தில் ஒரு டுவிட் எழுதினேன். இதற்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் என்ன சம்பந்தம். கண்கள் இரண்டால் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி, இதை பின்னால் எழுதினால் 140 எழுத்துக்கள் முடிந்துவிடும் என்பதால், சுருங்கச் சொல்லப் போய், விளைவு டுவிட்டர் அதன் ஆரம்ப விஷயத்திலிருந்து தள்ளிப் போய் விட்டது. அடுத்த டுவிட் செய்வதற்கு முன், டுவிட்டரின் கேள்விக்குத் தான் பதிலளிக்கிறீர்களா என்று ஒருமுறை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

முன்னால் சொன்ன மாதிரி ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனமாகிப் போய், நீங்கள் எழுதுவதற்கு மற்றவர்கள் எழுதும் பதில் டுவிட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களேபரமாக ஆகி, அதைப் படிக்கும் உங்களின் பாசக்கார பின்தொடர்பவர்கள் குழம்பிப் போய் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள். மிகச் சமீபமாக தமிழ் வலைப்பதிவுலக ஆர்வலர்கள் எல்லோருமாக டுவிட்டருக்கு படையெடுத்து, யூனிகோடில் டுவிட்டரை சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மகா குழப்பம்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் டுவிட்டரில் என்னவெல்லாம் நடக்கும் என்று சற்றே யோசித்துப் பார்த்தால் –

லியோ தல்ஸ்தோயின் அன்னா கரினினா தலையணை சைஸ் புத்த்கத்தை, தினம் ஒரு டுவிட்டராக பிரித்து தரும் வலைத்தளங்கள் வரலாம். அதிலுள்ள 350,296 வார்த்தைகளை தினம் ஒரு டுவிட்டராக வருவதற்குள் உங்களின் பேரன் வெர்ஜின் ஸ்பேஸ்ஷிப்பேறி வீனஸ் கிரகத்திலிருந்து டாட்டா காட்டுவான்.

ஒரே டுவிட்டர் மெசேஜில் காதல் கடிதமெழுதுவதெப்படி என்று வலைதளங்கள் புழக்கத்திற்கு வரலாம். டுவிட்டரிலேயே மீட் செய்து திருமணம் செய்து கொண்ட்வர்கள் ஜாயிண்ட்-டுவிட்ஸ் செய்வார்கள்.

Watching Simran cry on Jaya Tv என்று தாய்க்குலங்கள் மெகாசீரியல் முன்னேறங்களை மினிடுவிட்டராக எழுதி பகிர்ந்து கொள்ளலாம்.

தினம் வரும் ஆயிரமாயிரம் டுவிட்டர்களிலிருந்து, டாப்-டென் டுவிட்டர்கள் என்று தேர்தெடுத்து நியுயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடும்.

அம்பயர் போங்கடிக்கிறார் என்று தோனி மைதானத்திலிருந்து டுவிட்ஸ் அனுப்பலாம்.

வட சென்னை மாமூக்கள், போட்டுத் தள்ளுவதற்கு முன், Approaching the target in the Royapettah T.stall. Wait for the next tweet என்று நகங்கடிக்க செய்கிற மாதிரி குற்ற-டுவிட்டுகள் அனுப்பலாம்.

ஆக இந்த டுவிட்டர் தொந்தரவுகள் அடங்குவதாக காணோம். முடிந்தவரையில் ஓதுங்கி நின்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதே சாலச் சிறந்தாக தோன்றுகிறது.

பி.கு – இந்த பதிவில் இருக்கும் எழுத்துக்கள் 4,806. டுவிட்டர் மெசேஜாக்கினால் மொத்தம் 34.5 டுவிட்டர்கள். உங்கள் இஷ்டம்.

One response to “இயந்திரா 4 – டுவிட்டர் குழப்பங்கள்”

  1. விமர்சனம் - கடிதம் | kirukkal .com Avatar

    […] பாராட்டினார். டுவிட்டரை பற்றி நான் எழுதிய பத்தியை ஆப்ரிக்காவின் பீலாயுவில் சர்சையை […]

    Like

Create a website or blog at WordPress.com