படிப்பது – ஸ்லேட்

slate

நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட் மட்டும் தான். தினமும் படிக்க முடியாவிட்டாலும், நம்மூர் மாமாக்கள் சொல்வது போல, ஹெட்லைனாவது பார்த்து விடுவேன். இதைப் போலவே இன்னும் ஒன்றிரண்டு மின்னிதழ்கள்[Salon, Plastic] முன்பு படித்து கொண்டிருந்தேன். சுருக்கமாய், அமெரிக்காவின் ஒரே ஒரு no-nonsense மின்னிதழ் ஸ்லேட் தான்.

மின்னிதழ் என்றால் சி.என்.என் போலவோ என்.டி.டிவி மாதிரியோ, செய்திகளை உடனுக்குடன் தந்து காசு பார்க்கும் தளமல்ல. எந்த செய்தி நிறுவனத்துடன் இணையாமல் சுதந்திரமாக, சில எடிட்டர்களின் மேற்பார்வையுடன் பிரசுரிக்கப்படும் மின்னிதழ் அல்லது செய்தி சஞ்சிகை. இப்படி நிருபர்கள் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்படும் மின்னிதழ்களை படிக்கும் போது அறிமுகமான வலைப்பதிவுகள் வசீகரமான ஒரு யோசனையாக தெரிந்தன. இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

Slateல் வெறும் செய்தியாக எதை தேடினாலும் கிடைக்காது. ஒரு செய்தியை சார்ந்த காமெண்டரிகளால் ஆனதே ஸ்லேட். எந்த ஒரு செய்தியைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது. உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியோ, இந்தியாவின் பணவீக்கத்தை பற்றியோ அபிபிராயங்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் அதைப் பற்றி ஆராய்ந்து எழுதும் பத்திகள். கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் அதுவும் அல்ல. செய்திப் பத்திரிக்கைகளுக்கும் வலைப்பதிவுகளுக்கும் நடுவே எங்கேயோ இருக்கிறது ஸ்லேட்டின் ராஜ்ஜியம்.

ஸ்லேட்டில் ரொம்பவும் பிடித்தது அதீத பாசாங்குகள் இல்லாமல் எழுதப்படும் டெக்னாலஜி மற்றும் கலை விமர்சனங்கள். பயணக்கட்டுரைகளோ கடைத்தெரு சமாச்சாரங்களோ எல்லாவற்றையும் பற்றி ஸ்லேட்டில் விஷயமுண்டு. சில சமீபத்திய உதாரணங்கள் – 1 2, 3,4 & 5.

இவை எல்லாவற்றிகும் மேலாக ஸ்லேட்டின் கார்டூன்கள். ஒவ்வொரு பத்திக்கும் கிழே கொடுக்கப்படும் Related on the Web என்கிற சுவாரசியமான பத்தியும் படிக்கப்பட வேண்டியன. ஸ்லேட்டை RSS செய்தியோடை மூலம் உங்களின் RSS ரீடரில் படிக்கலாம்.

மைக்ரோசாப்ட்டிடம் இருந்து ஸ்லேட்டை சமீபத்தில் தான் வாஷிங்கடன் போஸ்டு வாங்கியது. அப்படி வாங்கியிருந்தாலும், எந்த குறுக்கீடும் இன்றி ஸ்லேட் சுதந்திரமாக செயல்பட காரணம், ஸ்லேட்டின் விளம்பரங்கள்.

தமிழில் மட்டும் ஸ்லேட் போல ஒரு மின்னிதழ் எழுதி காசு பார்க்க முடியாது.அதனால் இந்தியாவிற்கு ஸ்லேட்டை போல ஒரு மின்னிதழ் தேவை. சுதந்திரமாகவும் பிரபலமாகவும் இருக்கும் மின்னிதழ்கள் இந்தியாவில் இல்லவே இல்லை. ஸ்லேட்டை போல எதாவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன்.

பி.கு – தேடிப் பார்த்ததில் ஸ்லேட்டு.காம் – slatu.com இன்னமும் இருக்கிறது. தமிழில் எழுதலாம். slatulu.com கூட இருக்கிறது. தெலுங்கில்.

Create a website or blog at WordPress.com