கிறுக்கல் 2.0

ஆக ஒரு வழியாக மூவபிள் டைப்பிலிருந்து(MT) வேர்ட்ப்ரஸ்ஸுக்கு(WP) கிறுக்கலையும், அந்தப் பக்கத்தையும் ஜாகை மாற்றியாகிவிட்டது. கிறுக்கலுக்கு இது முதல் மாற்றம். அந்தப் பக்கத்திற்கு இது மூன்றாவது.

நான்கு வருடங்களாக பயன்படுத்திய மென்பொருளை அப்படியே தூக்கிப் போட முடியவில்லை. அதாவது, மூவபிள் டைப்பில் நான் நாளொரு மேனியாக கட்டிய டெம்பிளேடுகைள விட்டுவிட முடியாமல், அதற்காக மெனக்கெட்டு(மெனகட்டு ?) அதே look and feelலோடு வேர்ட்பிரஸ்ஸிலும் கட்ட கொஞ்ச நாளாகிவிட்டது.

மூவபிள் டைப்பில் வலைப்பதிவு செய்வது நன்றாகவே இருந்த போதிலும், சமீபத்திய வெளியிடான MT 4.0 இருந்த பிரச்சனைகளால், பல பதிவுகள் எழுதும் போதே காணாமல் போய் விட்டன. கிறுக்கலில் எழுதி வைத்திருந்த சில பதிவுகள் பூச்சி பூச்சியாக மாறின. அதனால் எழுதுவதை கிடப்பில் போட்டு விட்டு, ஒரு ரெண்டு வாரம் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேர்ட்பிரஸ் டெவலப்பராகி விட்டேன். இனி எல்லாம் சுகமே !!

~

2002ன் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த போது இதைப் போல வலைப்பதிவு மென்பொருள்கள் உபயோகத்தில் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் எழுத ஆள் இல்லை.

இணையத்திலேயே எழுதி அப்படியே பட்டனைத் தட்டி(one-button publishing) பதிவு செய்யலாம் என்கிற விஷயம் தான் ப்ளாகரில் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அதற்காகவே மட்டும் தான் எழுத தொடங்கினேன். முதலில் வைத்திருந்தது ரொம்பவும் காடியான கலர்கள் கொண்ட, ரொம்பவே கிரேஸியான டெம்பிளேட். அது பிடிக்காமல் முதல் மூன்று மாதத்தில் மாற்றி விட்டேன். அதற்குப் பிறகு வந்தது தான் இந்த டிஸைன். இது 2005ல் கொஞ்சம் தளுக்காக மாற்றப்பட்டது. பின்பு போன வருடம் வரை இது நிலைத்துப் போனது.

2006ல் கிறுக்கல் எழுதலாம் என்று ஆரம்பித்த போது, ஒரு எளிமையான டிஸைன் தேவலாம் என்று தோன்றியது. மூவபிள் டைப்பில் இருந்த minimalist என்ற டிஸைன் ரொம்பவும் பிடித்துப் போக, அதை எடுத்து இன்னமும் எளிமைப்படுத்தி உருவானது தான் இந்த டிஸைன். நண்பர்கள் சிலருக்கு பிடிக்காமல் போனாலும், இதை வைத்துக் கொண்டிருக்க காரணம், எளிமை.

தேவைக்கு அதிகமான சைட்பார் விஷயங்களுடன், தேவைக்கு மிக அதிகமான விளம்பரங்களுடன் இருக்கும் சில் வலைப்பதிவுகளில் எது பதிவு எது மற்றது என்று தெரியாமல் போய்விட்ட காலத்தில், ஒரு ideal blog எப்படி இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கோபத்தோடு நினைத்து கட்டியது தான் இந்த கிறுக்கல் டிஸைன்.

மேலும் தற்போது வலைப்பதிவுகளை படிப்பவர்கள், RSS செய்தியோடை மூலமாகத் தான் படிக்கிறார்கள். படிப்பவர்கள் இனி அந்தந்த தளங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. Content is the king. ஆக டிஸைன் எப்படி இருந்தால் என்ன.

~

இந்த தளத்திற்கு இது மூன்றாவது வருடம். போன இரண்டு வருடங்களில் ஒன்றும் பெரியதாக எழுதி கிழித்து விடாததால், இந்த வருடம் இந்தப் பக்கத்தில் எழுதினாலே போதும் என்பது தான் எண்ணம்.