இன்ன பிற – 3

us unemp chart

மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.

சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.

——–

இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.

——–
JUNOT DIAZ

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.

டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.

ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.

Create a website or blog at WordPress.com