13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!).
யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது தான் ரொம்பவும் பிடித்திருந்தது. சுவாரசியமாய் இருந்தது. திகில் படங்களை எப்பவும் கொஞ்சம் ரசித்துப் பார்ப்பேன். காரணம் அனாவசியமாக லவ் டூயட் இல்லாமல், ஹீரோயினுக்கு பதில் பேயை வைத்து பயமுறுத்துவார்கள். ஹாலிவுட்டின் ஹாரர் ஜானரில் வந்த அனேக முக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். திகில் படத்தில் பேய் ஆவி ஆகியன இருப்பது முக்கியமில்லை. ஸ்டான்லி க்யூப்ரிக்கின் The Shining போல, பார்வையாளன் மேல் பச்சாதாபமே இல்லாத ஒரு திகில் படம் வேறில்லை. இதே மாதிரி The blair witch projectஐ சொல்லலாம்.
ஒரு மெகா சிரியலுடன் கதை கலக்கும் இடத்தில் சற்றே காதில் பூவாக தெரிந்தாலும் அதை கடைசிவரையில் நம்பும் படியாக செய்த திரைக்கதையும், திகிலூட்டக்கூடிய பிசி ஸ்ரீராமின் காமிரா கோணங்களும் தான். மாதவன் ரொம்ப நாளைக்கு பிறகு மனிதர் நடித்திருக்கிறார். திகில் படங்களுக்கு முக்கியமானது படத்தில் வரும் கதாபாத்திரங்களை தவிர அதில் வரக்கூடிய செட்டுகள் தான். எக்மோரில் போடப்பட்டதாக சொல்லப்படும் அந்த ப்ளாட் செட்டும் கலக்கல்.
கடைசியில் வரும் சில காட்சிகள், அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆகியவைகளில் ஹாலிவுட் வாடை. எழுபதிகளில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளில், அலட்சியம் தெரிகிறது. சட்டென செத்துப் போகும் அந்த அப்பாவி தம்பியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தற்போதைய க்ராப் வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் டிசைன் சட்டை போட்டிருக்கிறார்கள்.
மற்றபடி படத்தில் ஆவி உட்பட யாவரும் நலம்.
One response to “நலம். நலமறிய ஆவி.”
[…] யாவரும் நலம் விமர்சனம் படித்தேன். படித்தேன் […]
LikeLike