Uncategorized

He gets it !!

writer sujatha

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.

எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.

கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.

சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.

ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!

எழுத்தாளர்கள் · சுஜாதா · மனிதர்கள்

சுஜாதாட்ஸ் – 6

பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடிவைத்துவிட்டுப் போய்விட்டார்.

மாமி நடுராத்திரியில் எழுந்து துணி தோய்ப்பாள்…அதுவும் தோய்க்கிற கல்லைக் கணவன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து ’ஸ்…ஸ்’ என்று பி.ஜி.எம் கொடுத்துக் கொண்டு. இது ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி ‘என்’ ப்ளாக்கில் களீக் ஒருத்தரின் மாமனார் வீடு வாடகைக்கு வந்தது – அதற்கு மாறினோம். ’உன்னைப் போல் ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை’ என்று கண்ணால் தண்ணீர்விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.

– கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2002.

இலக்கியம் · எழுத்தாளர்கள் · சுஜாதா

சுஜாதாட்ஸ் – 5

அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் –

‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல,
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
‘வார்முலைகள்’, ‘தமிழன்னை’ எதுவும் இன்றி
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்ட முடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பினீரேல்,
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகின்றேன்.’

– கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2000.

எழுத்தாளர்கள் · சுஜாதா · மனிதர்கள்

சுஜாதாட்ஸ் – 4

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…

அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம்.

மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…

அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள்.

அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.

– எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.