சுஜாதாட்ஸ் – 6

பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடிவைத்துவிட்டுப் போய்விட்டார்.

மாமி நடுராத்திரியில் எழுந்து துணி தோய்ப்பாள்…அதுவும் தோய்க்கிற கல்லைக் கணவன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து ’ஸ்…ஸ்’ என்று பி.ஜி.எம் கொடுத்துக் கொண்டு. இது ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி ‘என்’ ப்ளாக்கில் களீக் ஒருத்தரின் மாமனார் வீடு வாடகைக்கு வந்தது – அதற்கு மாறினோம். ’உன்னைப் போல் ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை’ என்று கண்ணால் தண்ணீர்விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.

– கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2002.

Create a website or blog at WordPress.com