He gets it !!

writer sujatha

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.

எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.

கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.

சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.

ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!