குளோபல் வார்னிங்

al gore global warming

மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா ஆக்கிரமித்துவிட்டது. குளோபல் வார்மிங் பற்றி ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்க என்றால் பலர் எஸ்கேப். “என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகோன்(உலகம்) சூடாவுது சார் அவ்ளோதான்” என்பார்கள் மிச்ச சிலர். தவறு மீடியாவுடையது. எந்த காபி ஷாப்ல மீட் பண்ணலாம் என்று வருகிற டுவிட்டர் தொந்தரவுகளை சற்று நேரம் அணைத்துவிட்டு படித்தால் குளோபல் வார்மிங் வார்னிங் புரியும்.

ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், “நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என்று பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங். சத்தியமாக. அடிக்க வராதீர்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும் ரூம் போட்டு கோக் குடித்துக் கொண்டு விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம். காமெடியில்லை. ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.

உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.

சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.

ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.

இதோ இதை நான் டைப் செய்யும் போது, இதை நீங்கள் படிக்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, நீங்கள் பாட்டு கேட்கும் போதும், மெகா சீரியல் பார்க்கும் போதும், இவை ஏன் உச்சா போய் ப்ளஷ் செய்யும் போதும் குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். கரி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.

“I used to be the president of America”, என்று சில மணித்துளிகளே நீடித்த, மீடியாவின் தவறான ரிப்போர்டிங்கால் நிகழ்ந்த தேர்தல் குளறுபடியை நக்கலடித்து பேசியபடியே ஆரம்பித்து, அல் கோர்(Al Gore) க்ளோபல் வார்மிங் பற்றி, The Inconvenient Truth என்றொரு ஹாலிவுட் படமெடுத்திருக்கிறார். எதோ ஒரு ஆஸ்கர் வென்ற டாகுமெண்டரிப் படம்.

க்ளோபல்(அல்லது குளோபல்) வார்மிங் பற்றி சில பார்வையாளர்களுக்கு அல் கோர் விளக்குவதும் அதை பற்றி அறிய தான் செய்த பிரயாண பிரயத்தனங்களைப் பற்றித்தான் படம். நடுநடுவே கொஞ்சமாய் தலைக்காட்டும் அரசியல் நெடியைத் தவிர்த்துப் பார்த்தால் நல்ல படம். பிரகாஷ்ராஜின் மொழிக்குப் பிறகு குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அவர் சொல்லும் முக்கிய மெசேஜ்(தமிழ் ஹீரோ ரேஞ்ஜ்சுக்கு இல்லையென்றாலும்) குளோபல் வார்மிங் என்றாலும், 50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி சிந்திக்க வைத்தது. அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.

அல் கோர் வாஷிங்கடன்வாசி. இந்த அமெரிக்க தலைநகரத்தின் செயல்பாடறிந்தவர். என்ன சொன்னால் அரசாங்க மிஷினரி வேலை செய்யும் என்று தெரிந்திருக்கிறார். குளோபல் வார்மிங், ஆபத்து ஆபத்து என்று கத்தினால் கேட்க மாட்டார்கள். அதனால் இப்படி படமெடுத்து, மக்களிடம் கொண்டு செய்து இதை ஒரு மக்கள் இயக்கமாக்கி வருகிறார். ஆல் கோர் குளோபல் வார்மிங்கை invent செய்துள்ளார் என்றெல்லாம் சிலர் கிண்டலடித்தாலும், மக்கள் பேச ஆரம்பித்துள்ளது அவரது ஒரு வெற்றிக்கொடி கட்டல் தான்.

டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று கோனார் நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த முறை நுங்கம்பாக்கம் காப்பி ஷாப் வரச் சொல்லும் கேர்ள் பிரண்டிடம், லோக்கல் நாயர் கடையில் மசால் வடை தோய்த்து சிங்கிள் டீ அடித்தால், குளோபல் வார்மிங் அவேர்னஸ் கப்பிள்ஸ் என்று போற்றுவார்கள் என்று சொல்லிப் பார்க்கலாம். “ஒண்ணு பண்ணு நீ உங்க வீட்ல காபி குடி, விஷால் கூட நான் இஸ்பஹானி போறேன்” என்று பதில் வந்தால் அல் கோரை கோவிக்காதீர்கள்.

Create a website or blog at WordPress.com