பயாஸ்கோப்

மருதநாயகம், சத்தமில்லாமல்

எடுத்த முப்பது நிமிடத்தில், மூன்று அற்புத நிமிடங்கள். சத்தமில்லாத இந்த டிரய்லருக்கு யாரவது வேட்டையாடு விளையாடு டைட்டில் பாடலை டப் செய்தால் சரியாக இருக்கும்.

என்ன தான் ராஜ் கமல் என்றெல்லாம் பெயர் போட்டாலும், உண்மையான டிரைலராக தெரியவில்லை. அல்லது தெரிகிறது.

முதல் முப்பது செகண்டில் உள்ளது சண்டியர் காட்சிகளானாலும், சில பகிரங்க மருதநாயக காட்சிகளும் தெரிகிறது. படம் வந்தால் சின்னப் பசங்களெல்லாம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில், நமக்கே பார்க்க கிடைக்குமா என்பது ஒரு தசாவதார கேள்வி !!

அமெரிக்கா · இயந்திரா · மீடியா

இணையமும் தேர்தலும்

1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு வந்த ஓபாமாவின் பேச்சை கேட்க மக்கள் ஆயிரம் டாலருக்கு எல்லாம் டிக்கெட் வாங்கினார்கள். இவ்விதமான முக்கிய போட்டியாளர்களாலேயே 2008 தேர்தல் கலை கட்ட துவங்கி விட்டது.

2008ல் வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இணையத்தின் தேர்தல் என்றும் சொல்கிறார்கள். என்ன தான் போன இரண்டு தேர்தல்களிலும் இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்த முறை தான் இணையத்தின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படும் என்பது கணிப்பு.

2000த்தின் தேர்தலில் இணையம் தேர்தல் நிதி வசூலிக்க பயன்பட்டது. 2004ல் ப்ளாக்ஸ் என்னும் வலைப்பதிவுகளின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இப்போதுள்ள நிலையில் இணைய பாண்ட்வித் என்பது தூசாகிவிட்டதால், அமெரிக்காவின் அடுத்த தேர்தலில், வீடியோ கான்பரன்ஸ் என்பது தான் தாரக மந்திரம். இதன் மூலம் online campaigning என்னும் விஷயம் பிரபலமாகியிருக்கிறது.

2008 தேர்தல் கோதாவில் குதிப்பதாக, போன வாரம், ஹில்லாரி கிளிட்டன் முதலில் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் தான். நேற்றிரவு அவரின் வலைதளத்தின் மூலம் வீடியோ சாட்டில் பொதுஜனத்திடம் பேசினார். இவர் போலவே பாரக் ஓபாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தது இணையத்தின் மூலம் தான்.

நம்மூரிலும் இன்னும் இரண்டொரு தேர்தலில், இணையத்தின் மூலம் வாக்கு சேகரிப்பு வரக்கூடும். அதற்கு பிறகு தேர்தல் கமிஷன் இரவு 11 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த கூடாது என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. அவரவர் வீட்டில், போடுங்கம்மாஓட்டு.காமில் எல்லா கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சோடா பாட்டில் பேச்சுக்களை பார்க்கலாம்.

இப்போது போல 5 நிமிட ஆட்சியின் வெற்றி விளம்பரங்கள் குறுக்கிடாமல் இல்லத்தரசிகள், மெகா சிரியலில் மூக்கு சிந்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கும் அரசியல்வாதிகள் தொகுதிக்கு போய் சாக்கடையில் கால் நனைத்து, இளவஞ்சி குறவஞ்சி என்று குழந்தைகளுக்கு பெயரிடாமல், துடைப்பம், முறம், முட்டை, தக்காளி இத்தியாதிகளால் தொகுதியிலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் வாக்கு சேர்க்கலாம். சில நூறு ஆட்டோக்களில் கரகர குரல் கத்தும் ஸ்பீக்கர் கேட்காமல் மக்கள் தத்தம் வீட்டில் ரேடியோ மிர்ச்சி கேட்கலாம், சூப்பர் ஜோடி பார்க்கலாம்.

ஓட்டுப்போடும் ஜனமோ உழுது கொண்டும், ரேஷன் வாசலில் நின்று கொண்டும் வியர்வை சிந்துவதால், அடுத்த தேர்தலில் யாராவது அவர்களுக்கு இலவச கணினியும், இணைய இணைப்பும் குடுப்பாராயின் நலம். அப்படியே தேர்தல் சம்பந்தமான் டாட்காம்யையும் வாங்கினால் சரி.

2008 அமெரிக்க தேர்தல் இணைய மார்க்கெட் கிட்டத்தட்ட $9.8 பில்லியன் என்று எதிர்பார்கிறார்கள். electionmall.com போன்ற நிறுவனங்கள் எற்கனவே இதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த வலைதளத்தின் CEO ஒரு இந்தியர், ரவி சிங். இன்று துட்டு கொடுத்தால் நாளை முதல் வாக்கு சேர்க்கலாம் என்கிறார்கள்.

யூ டியூப் போன்ற வீடியோ பரிமாற்ற வலைதளங்களுக்கு ஏக மவுசு. 2008: The Year of the YouTube Presidency என்று கலாய்கிறார்கள். சமிபத்தில் யூ டியூப்பை 1.6 பில்லியனுக்கு வாங்கிய கூகிள் கம்பெனிக்காரர்கள் ஓரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலக்கியம் · பத்திரிக்கை · புத்தகம்

எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை?

jeyamohan.jpg

கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார்.

நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும் என்பது நான் தனது சினிமா கனவு என்று தமிழ் மிடியாவில் மலையாள தூது விடுகிறார். அசோகவனம் என்னும் தனது அடுத்த நாவல் தன் அம்மா, பாட்டிகளைப் பற்றியது என்கிறார்.

பேட்டியிலிருந்து –

எழுதித் தள்ளியாச்சு, போதுமேன்னும் ஒரு எண்ணம்; நுட்பமான நாவலை யார் கூர்ந்து படிப்பாங் கன்னு கூடவே ஒரு அவநம்பிக்கை. ஒரு பெரிய நாவலை எழுதினதும் வர்ற நிறைவும் சலிப்பும் ஒரு காரணம். அப்புறம் சில தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மரணம். அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், இனிமேல் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று தோன்றியது. எழுதுவதை நான் நிறுத்தினாலும், இன்டர்நெட்டில் என் எதிரிகள் என்னைத் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க!
..
..
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செய்கிற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமா வேலை பல மடங்கு மேல்! அவ்வளவுதான். என் செயல் களுக்கோ, என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப் பார்த்தால் தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூட்டோட சம்பந்தமே இல்லாம ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதில் இருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க் கதைகளா எழுதினேன். ‘நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது. நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுதக்கூடும். துப்பறியும் நாவல் எழுதலாம். ‘டிக்ஷனரி’ ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்படி!’’